தமிழ் இலக்கியக் கதைகள்/என் பெருமை
41. என் பெருமை
தம்முடைய சொந்த வாழ்க்கையின் துன்பங்களைப் பிறருக்கு எடுத்துரைத்து உதவி கேட்பது எளிமையான செயல் அன்று. கொடுத்து உதவுகின்ற குண இயல்பைப் பொறுத்தோ வள்ளன்மையைப் பொறுத்தோ ஏற்படுவதில்லை இந்தச் செயலருமை.
கேட்கின்றவனின் உள்ளத்தைப் பொறுத்து அது பண்பட்டிருக்கும் அளவைப் பொறுத்துத்தான் ஏற்படுகிறது. கற்றுத் தேர்ந்த கவிபாட வல்ல கவிஞர்கள் உள்ளத்தை இந்த நிலையிலே வைத்து நினைக்கவும் முடிவதில்லை. பிறருக்குப் பணிய விரும்பாதது கவியுள்ளம். தன் சொந்த உணர்ச்சிகளையும், இன்ப துன்பங்களையும் கூடத் தன்னோடு அமைத்துக் கொள்வது. அது பொறுத்துக் கொள்ள முடியாத நிலைமையில் மட்டும் வெளியிடத் தகுதி வாய்ந்தவர்களிடம் குறிப்பாக வெளியிடுமே அன்றித் தன் துயரத்தை விவரிக்க அது துணிவதில்லை. பிறர் கைபடாத மலரைப் போன்றது கவி நெஞ்சம். அது தானாக மலரும். அதை மலர்த்த முடியாது. மலர்ந்த பிறகும் ‘எடுப்பார் கைப்பிள்ளை’ ஆக அது வருவதில்லை.
குடும்ப வாழ்க்கையின் கொடுந் தொல்லைகள் அனுபவத்திற்கு வருவதன் முன் கவி சொக்கநாதருடைய உள்ளமும் இப்படி ஒரு தனி மலராகத்தான் இருந்தது. மனைவி, மக்கள் என்று இவ்வாறு குடும்பம் பெருகியபோது வறுமையும் அழையா விருந்தாகத் தானே வலுவில் வந்து பெருகியது. வறுமை வெயிலின் காய்கதிர்களின் வெம்மையால் அந்த மலர் உள்ளம் அப்போது தான் முதன் முதலாக வாட்டங்காணத் தொடங்கியது.
கவிதைகளைப் பரிசில் பெறும் கருவிகளாக மாற்றிக் கொள்ளவேண்டிய அவசியம் இப்போது அவருக்கும் நேர்ந்தது. பழுத்த மரங்களை நாடிச்செல்லும் பறவைகளைப் போல அவரும் வள்ளல்களைத் தேடிக் கால் தேய நடக்கலானார். ஏடும் எழுத்தாணியும் சுமந்து அலைந்ததற்குத் தகுந்த பயன்தான் கிடைக்கவில்லை. சாளுவ வம்சம் விஜய நகரத்து அரசர் மரபில் வந்தது.அந்த மரபில் வந்த சிற்றரசர்கள் சிலர் சொக்கநாதப் புலவர் காலத்தில் சிறந்து விளங்கி வந்தனர். அவர்களில் கோப்பைய ராயன் மகனாகிய திப்பைய ராயன் என்பவன் புலவர்களைப் போற்றும் வள்ளலாக இருந்தான். கவிச்சுவையும் கலையார்வமும் இளகிய நெஞ்சமும் படைத்தவன் திப்பைய ராயன். கலைஞர்கள். துன்பங்களையோ, வறுமையையோ தனக்குற்றவை போல எண்ணி உடனே உதவும் நல்ல இயல்பினன்.
இத்தகைய நற்பண்புகள் அமையப் பெற்ற திப்பைய ராயனிடம் போனால் தம் துயரங்களைக் குறிப்பாகக் கூறி உதவி பெறலாம் என்று கருதினார் சொக்கநாதர். திப்பைய ராயன் புலவர்கள் என்றால் வண்டுக்கு விரியும் மலர் போன்று நடந்து கொள்வான் என்று அவர் கேள்விப்பட்டிருந்ததனால் ‘அவனிடம் பழகுவது கடினமோ?’ என்ற அச்சம் அவருக்கு ஏற்படவில்லை. மற்றவர்களிடம் செய்ய வேண்டியிருந்தது போலத் தன் மதிப்பு இன்றி வெளிப்படையாகத் தமது வீட்டுத் துன்பங்களை எல்லாம் விவரிக்க வேண்டிய நிலை திப்பைய ராயனிடம் இல்லை என்ற நம்பிக்கை வேறு அவருக்கு ஊக்கமளித்தது. புலவர் புறப்பட்டார்.
சொக்கநாதரைப் பற்றிப் பொதுவான செய்திகளை அவரே கூற அறிந்து கொண்ட திப்பையராயன் அவரை மகிழ்ச்சியுடனே வரவேற்றுக் கனிந்த சொற்களால் உரையாடினான். உயர்ந்த முறையில் போற்றிப் பேணினான். சில நாட்கள் தன்னோடு தங்கியிருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். புலவரும் மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டார். அவனோடு உரையாடிப் பழகிய அந்தச் சற்று நேரத்திலேயே அவனைத் தாம் கேள்விப்பட்டு அறிந்திருந்ததை விட உயர்ந்த நிலையிற் கண்டார் அவர். திப்பைய ராயன் தம்மைக் கொண்டாடிப் பேசும் போதெல்லாம் அவனுடைய ஒவ்வொரு சொல்லும் குபேர சம்பத்தாகத் தோன்றும் அவருக்கு. தெய்வத் தன்மை வாய்ந்த தமிழ்க் காவியம் ஒன்றைத் திரும்பத் திரும்பப் படித்து நயங்காண்பது போல இருந்தது அவனோடு பழகுவது. பணிந்த உள்ளம். இனிய சொற்கள். கவிதையையும் அது பிறக்கும் நெஞ்சத்தையும் எப்படி நடத்தி மதிப்புக் கொடுக்க வேண்டுமென்று அறிந்து நடந்து கொள்கின்ற பண்பாடு. இவ்வளவும் திப்பையராயனிடம் இருக்கக் கண்டார் அவர்.
நாள் ஆகஆக அவனுக்கும் அவருக்கும் ஏற்பட்ட நட்புப் போல வேறோர் உணர்ச்சிக்கும் அவர் மனம் இடங்கொடுக்க வேண்டிய நிலை அவருக்குப்புரிந்தது. அதுதான் ஊரில் மனைவி மக்களைப் பற்றிய கவலை. “இங்கே திப்பைய ராயன் குபேரசம்பத்துப் போன்ற சொற்களால் தம்மைப் பாராட்டிப் போற்றுவதனால் அங்கே அவர்களுடைய வறுமை தீர்ந்து விடப் போகிறதா என்ன? இல்லையே” இப்படி எண்ணிப் பார்த்தபின், தாம் வந்த காரணத்தையும் தம் குடும்ப நிலையையும் எப்படியாவது குறிப்பாகத் திப்பைய ராயனுக்குச் சொல்லி விட வேண்டும் என்று அவர் நினைத்தார். மறைத்துப் பேசத் தமிழில் வார்த்தைகளா இல்லை? ஒரு நாள் வாய்ப்பு நேர்ந்தபோது தம் நிலையைக் குறிப்பாக அமைத்து ஒரு பாட்டாகவே திப்பைய ராயனிடம் அவர் பாடிக் காட்டிவிட்டார்.
“இந்திரன் கலையா யென்மருங் கிருந்தான் அக்கினி
உதரம் விட்டகலான் இயமன் எனைக்கருதான்
நானெனக் கருதி நிருதிவந்தென்னை என் செய்வான்
அந்தமாம் வருண னிருகண் விட்டகலான் அகத்தினில்
மக்களும் யானும் அநிலமதாகும் அமுதினைக்
கொள்வோம் யார்எதிர் எமக்குளார் உலகில்
சந்ததம் இந்த வரிசையைப் பெற்றுத் தரித்திர ராசனை
வணங்கித் தலை செய்யும் எம்மை நிலை செய்
சற்கீர்த்திச் சாளுவக் கோப்பைய னுதவும்
மந்தர புயத்தான் திப்பைய ராயன் மகிழ்வொடு விலையிலா
அன்னோன் வாக்கினாற் குபேரன் ஆக்கினான்
அவனே மாசில் ஈசான் பூதியே”
கலை = ஆடை, உதரம் = வயிறு, நிருதி = திசையசுரன், அநிலம் = காற்று, சந்ததம் = எப்போது, அந்தம் = அழகு இந்திரன், கலையாயிருப்பது = ஆடையில் ஆயிரம் கிழிசல்கள் இந்திரனின் ஆயிரம் கண்கள்போல் இருப்பது.
திப்பைய ராயனைப் பற்றி வேறொருவரிடம் சொல்லுவது போல அவனிடமே கூறுகிறார் இந்தப்பாட்டை!
“இந்திரன் உடலில் ஆயிரங்கண்கள் போலக் கிழிந்த ஆடை அணிந்தேன். பசியோ வயிற்றை நெருப்புப் போல வாட்டுவது. வறுமைப்பட்ட மனிதன்தானே என்றெண்ணி எமன் கூட என்னை ஒரு பொருட்டாக மதித்து என்பக்கம் வரக் கருதவில்லை.நிருதியும் என்னை அவ்வாறே அவமதித்து ஒதுங்கியிருக்க வேண்டும். துன்பங்களை எண்ணிக் கலங்கிய என் கண்களில் வருணன் கண்ணீராக இடைவிடாமல் வடிந்து கொண்டிருந்தான். யானும் என் மக்களும் உண்ணுவதோ காற்றாகிய அமுதம்தான்.அதுதான் எங்களுக்கு உணவாகக் கிடைத்தது. நாங்கள் கையெடுத்துக் கும்பிடக் கொடுத்து வைத்தவன் தரித்திரராசன் ஒருவன்தான். இப்படி அமைந்த என் பெருமையை எண்ணினால் எனக்கு ‘நிகர்’ உலகம் முழுவதும் இல்லை.இவ்வாறு அஷ்டதிக்குப் பாலர்களில் (இந்திரன் முதல் குபேரன் ஈறாக எண்மரும் அஷ்டதிக்குப் பாலகர்களாவர்) இருவர் குறைய மற்ற ஆறு பேரும் நிறைந்த என் வறுமை வாழ்வைத் தீர்த்துக் கொள்ள நினைந்து திப்பைய ராயனிடம் சென்றேன். அவனோ, தன் வாக்கினால் என்னைக் குபேரனாக்கினான். தானே ஈசானன் போல் விளங்கினான். இப்பொழுது திசைப் பாலகர் எண் மரும் நிறைந்ததாகி விட்டது என் பெருமை. அஷ்டத்திக்குப் பாலகர்களும் ஒவ்வொரு வகையில் எனக்கு உதவ வேண்டுமென்றால் உலகிலேயே பிறருக்கு இல்லாத நிகரற்ற பெருமை அல்லவா அது எனக்கு” என்ற கருத்துக்களைப் பொருள் பொதிய வெளிப்படையாக அந்தப் பாட்டிலமைத்துத் திப்பைய ராயனிடம் பாடினார் சொக்கநாதப் புலவர்.
மலருக்கு அடியில் முள் இருப்பது போல இந்த வெளிப்படையான கவிதை மலருக்குள் பொதிந்திருக்கும் புலவரின் வறுமை முட்கள் (அவர் ‘என் பெருமை’ என்று வேடிக்கையாகச் சொன்ன அந்த வறுமை முட்கள்) திப்பைய ராயனுக்கு நன்றாகத் தெரிந்தன. வறுமையை எடுத்துக் கூறுவதில் கூடக் கவிதையும் அழகும் சாமர்த்தியமும் குறும்புத் தனமும் நிறைந்திருப்பது கண்டு வியந்தான் அவன். “என் ஆடை கிழிந்தது. பசிக்கு அடிக்கடி இலக்காகின்றவன், சாகமாட்டாமல் கண்ணிர் விட்டுக்கொண்டே வாழ்வைக் கழிக்கிறேன். காற்றை அமுதாக உண்டு காலத்தைக் கடத்தும்படி தாழ்ந்துள்ளது வறுமை நிறைந்த என் குடும்பம். வந்த இடத்திலோ திப்பைய ராயன் என்னுடன் பேசிப் பேசி நாளைக் கழிக்கின்றானே ஒழிய, என் மனைவி மக்களின் வறுமை நிலையை எண்ணி நான் படும் வேதனையை அறிந்து நிரம்பிய பொருளோடு விரைவில் என்னை ஊருக்கு அனுப்புகின்றான் இல்லை” என்று தன்னிடம் நேரில் சொல்ல வேண்டிய துயரங்களை மேற்கண்ட பாட்டாக அவர் பாடியதை உணர்ந்து கொண்ட திப்பைய ராயன் அவர் பாடியபடி வாக்கினால் மட்டுமின்றிச் செல்வத்தினாலேயே அவரைக் குபேரனாக்கி மரியாதையுடன் அனுப்பி வைத்தான்.
பல வகையாலும் தாமும் தம் மனைவி மக்களும் துன்புறு வதை வேதனைக் கதையாகக் கண்ணீருக்கிடையே கூறவேண்டிய புலவர், அதை நயமாக, “எனக்கு இவற்றில் எவருமே நிகரில்லை” என்று உரைப்பது விசித்திரமான ஒரு மனோபாவம்.