தமிழ் இலக்கியக் கதைகள்/ஒரு வாயும் நால் வாயும்
19. ஒரு வாயும் நால் வாயும்
சாதுரியமாக மற்றவர்களைப் புகழ்வதும் ஒரு கலையைப் போன்றது. அது நூல் ஏணியில் ஆற்று வெள்ளத்தைக் கடப்பது போன்ற கடினமான வேலை. அதைப் பிழைபடாமல் செய்வதற்கு உயரிய கலைத்திறன் வேண்டும். ஒருவரைப் பழிப்பது போலவும் புகழலாம், புகழ்வது போலவும் பழிக்கலாம். ஆனால் இரண்டுமே வரையறை பிறழாத பொருளமைப்பும் அதைச் சொல்லும் விதமும் அமையப் பெற்றவையாக இருக்கவேண்டும். தனிப்பாடல்களில் மன்னர்களையும் வள்ளல்களையும் பிறரையும் புகழ்ந்து பாடப்பெற்ற பாடல்கள் அத்தகைய அமைப்பு குன்றாத பொருள்திறன் பெற்று விளங்குகின்றன.
இலங்கை அரசன் பரராசசிங்கன் வள்ளல். கொடுக்கத் தயங்கி அறியாத கொடைஞன். பாடி வந்தாலும் சரி, எந்தவிதத் திறமையுமின்றிக் கை நீட்டியே வாழ்வோராயினும் சரிகொடுத்து மகிழ்கின்றவன். தன்னுடைய பொருளைப் பிறர்க்குக் கொடுத்து அதை அவர்கள் நுகர்கின்றபோது தானும் கண்டு மகிழும் அனுபவம் இன்பம் மிக்கது. செல்வர்களாக இருந்தாலும் எல்லோருக்கும் அந்த அனுபவத்தின் மேன்மை தெரிவதில்லை. அதில் கிடைக்கும் இன்பத்தில் தியாகமும் திருப்தியும் கலந்த ஒரு வகையான மனச்சந்துஷ்டி உண்டு. அதை அறிந்து தெளிந்தவன் பரராசசிங்கன்.
தமிழ்க் கவி வீரராகவருக்கு இவனைக் கண்டு பாடி வேண்டுவன பெற்று வரவேண்டு மென்ற ஆசை இருந்தது. பரராசசிங்கன் கொடுக்கும் கொடையால் வாழ்க்கை வறுமையைப் போக்கிக் கொள்ளலாம் என்று கருதிச் சென்றார். எதிர்பார்த்தது போலவே மனம் மகிழ வரவேற்று, உபசரித்தான். மதுரமயமான பாடல்களைக் கேட்டுச் சுவைத்தான். நாடாளும் அரசன் பாடல்களை அனுபவிக்கும்போது கவிதை மன்னராகிய வீரராகவருக்கு அடியாள்போல நடந்து கொண்டது அவருக்கே வியப்பளித்தது. இரசிகன் கவிக்கு முன்னால் குழந்தையுள்ளம் பெற்று ஈடுபாடு கொண்டால்தான் சுவையுணர்ந்து கவிதைகளை அறியமுடியும் என்பது பரராசசிங்கனுக்கு நன்றாகத் தெரியும். அதுவே அவன் கலையுணர்ச்சிக்கு அடிப்படையான கொள்கையுமாகும். புலவருக்கோ மகிழ்ச்சி வெறி பிடித்துவிட்டது. குழந்தையோடு விளையாடும் தாய்போல அரசனோடு கவிதை விளக்கத்தில் ஈடுபட்டார்.
பரிசு பெற வேண்டிய போதும் வந்தது. ஒரு பெரிய யானையையும் அதை வைத்துக் காப்பாற்றுவதற்குரிய பெரிய செல்வத்தையும் கொடுத்தான் பரராசசிங்கன். முதலில் யானையைப் பரிசிலாக அளிக்க இருப்பது அறிந்த புலவர் நடுங்கிப்போனார். “ஒரு வாய்க்குச் சோறு கிடையாமல் திண்டாடும் நான் நால் வாயைக் (நால் வாய் = யானை) கட்டி மேய்க்க முடியுமா?” என்றுதான் அவர் அஞ்சினார். அரசன்மேல் அதே கருத்தமைய ஒரு பாடல் பாடினார். அந்தப் பாடல் பழிப்பதுபோலப் பரராசசிங்கனைப் புகழ்கிறது. ‘அப்பாவிப் புலவன் யானையிடம் அகப்பட்டுக் கொண்டு சாகட்டுமே என்று கருதிக் கொடுத்துவிட்டானோ?’ என்ற எண்ணம், அச்சந் தொனிக்க எழுகின்றது பாடலில். “சோறும் துணியும் வேண்டி வந்தால் யானையைக் கொடுத்துத் தொல்லைப் படுத்துவதுதான் அரசருக்கு அழகோ” என்ற கூற்றும் நயமாகப் புகழ்கிறது.
“பல்லை விரித்து
இரந்தக்கால் வெண் சோறும்
பழந்துரசும் பாலியாமல்
கொல்ல நினைந்தே
தனது நால் வாயைப்
பரிசென்று கொடுத்தான்
பார்க்குள் தொல்லை எனது
ஒரு வாய்க்கும் நால்வாய்க்கும்
இரை எங்கே துரப்புவேனே.”
இரத்தல் = பணிவாக வேண்டல், தூசு = ஆடை பாலியாமல் = கொடுக்காமல், பார்க்குள் = உலகத்தில், இரை = உணவு, துரப்பல் = தேடுதல்.
யானையின் வாய் தொங்கிக் கொண்டிருப்பதனால் தமிழில் யானைக்கு நால்வாய் என்றொரு பெயருண்டு. “இனிமேல் நான் என்னுடைய ஒரு வாய்க்கும் நால்வாய்க்கும் இரை தேட வேண்டும்” என்று முடியாது போல மலைத்து வருந்துவதாகக் கவி வீரராகவர் பேசும் கவிப்பேச்சில் பரராச சிங்கனைப் புகழ்கின்ற புகழ்ச்சி பழிப்பது போன்ற பிறிதோர் உருவில்வெளிப்படுகின்றது. “ஒரு வாய்’ ‘நால் வாய்’ என்ற சொற்கள் பாடலின் பொருளுக்குச் சுவையூட்டுகின்றன.
மேலாடையோடு கைவீசிக்கொண்டு பரராசசிங்கனிடம் வந்த புலவர் யானைமேல் ஏறி அலங்காரமாக மீண்டு சென்ற காட்சி பெருமிதத்தோடு விளங்கிற்று. “ஒரு வாயையும், நால் வாயையும் எவ்வாறு காப்பேன்?’ என்றவர் அதற்குரிய செல்வமும் பெற்றுவிட்டோம் என்ற கவலை கலவாத மகிழ்ச்சியை இப்போது அடைந்துவிட்டார். ஒரு வாயும் நால்வாயும் உண்ணப்போதியது கிடைத்து விட்டது அல்லவா?