தமிழ் இலக்கியக் கதைகள்/சந்திப்பு
9. சந்திப்பு
கலைகளிலே சிருங்காரம் நிகரற்றது. கவிஞனோ, ரஸிகனோ அந்தச் சுவையில் ஈடுபடுவது நுணுக்கமான ஒரு கலையைப் போன்றது. அதை எடுத்துச் சொல்லும் முறையும் அதிலே ரசனை படிந்திருக்குமாறு செய்வதும் மிகப் பெரிய காவிய சாகஸம். மென்மையை நிலைக்களனாகக் கொண்ட சிருங்கார ரசப் பயிற்சியை முற்றும் பெற்ற கவிஞர்களை விரல்விட்டு எண்ணி விட முடியும். வடமொழியிலோ, தென் மொழியிலோ சிலரே அதில் தேர்ந்து பழுத்தவராகத் தெரிகின்றனர். காவியங்களில் சந்தேச நூல்களில், சிருங்காரச் சுவையை அமைத்து வெற்றி பெற்றவர்கள் அவர்கள். ஆனால், தனிப்பாடல்களில் அந்தச் சுவையை வரம்பு கட்டி வடித்துக் கொடுக்கும் அழகை நாம் கண்டால் ஆச்சரியப்பட நேரிடும். அத்தகைய தனிப்பாடல் ஒன்றைக் காண்போம்.
மறுநாள் காலை திருமணம் செய்துகொள்ள இருக்கும் நம்பியும் ஒரு நங்கையும் தற்செயலாக ஒரு நிலைப்படிக்கு அருகே நேர் எதிர் எதிரே சந்திக்கின்றார்கள். தனக்குக் கணவனாகப் போகின்றவன் அவன் என்பது அவளுக்கும், தன்னுடைய மனைவியாகப் போகின்றவள் அவள் என்பது அவனுக்கும் தெரியும். வேறு முன்னோ பின்னோ எந்தவிதமான பழக்கமுமில்லை. நிலைப்படியிலோ ஒரு சமயத்தில் ஒருவர்தான் துழைய முடியும். எனவே இருவரில் யாராவது ஒருவர் வழியை விட்டுக் கொடுத்தே தீரவேண்டும். அவன் தன்னையே வைத்த கண் வாங்காமல் ஊடுருவி நோக்குதல் கண்டு அவள் நாணத்தோடு தலைகுனிந்தாள்.தன்னுடைய பார்வையின் அழுத்தம் தாங்காமல் அவள் கூச்சமும் நாணமும் அடைவது கண்ட அவன் தன் நிலையைப் புரிந்து வெட்கித் தலை சாய்த்துக் கொண்டான்.இதே நிலை நீடித்தால் தமக்கும் காண்பவர்களுக்கும் சங்கடம் என்ற அளவிற்கு இருவரும் வந்து சேர்ந்தனர்.
‘சரி அவள்தான் முதலில் போய்விடட்டுமே’ என்று அவன் வழி விட்டு ஒதுங்கிக் கொண்டான். கீழே தரையைப் பார்த்த வண்ணமிருந்த அவள் அவன் வரப் போகிறான்’ என்றெண்ணித் தானும் வழியை விட்டு ஒதுங்கினாள். கடைசியில் இரண்டு பேருமே போகவில்லை. வழி காலியாக இருந்தது. ஒருவர் மற்றொருவருக்கு வழிவிட வேண்டுமென்று ஒதுங்க, மற்றொரு வரும் அதே கருத்துடன் ஒதுங்கி விட்டால் அப்புறம் வழி வெறுமனே இருக்க வேண்டிய தானே? ‘நாம் வழிவிட்டோம்! அவள் போகவில்லை. அவளும் ஒதுங்கிக் கொண்டாள். நாம்தான் முன்னால்போய் விடுவோமே’ என்று அவன் முன் வந்தான்! அதே தீர்மானத்துடன் அவளும் முன்வந்தாள்!. இரண்டு பேரும் மிகவும் நெருங்கி விட்டனர். முட்டிக் கொள்ளாத குறைதான். பின்னால் எப்பொழுதும் முட்டிக்கொள்ளும் தம்பதிகளாக ஆகப்போகும் அவர்களுக்கு அப்போது நெருங்கவே நாணம். கடைசியில் ஒரு வழியாக விலகி ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளாமல் நிலைப்படியைக் கடந்து போய்ச் சேர்ந்தனர். பாட்டில் சிருங்கார ரசத்தின் ஒளி, பட்டை தீட்டிய வைரம் போல மின்னுகின்றது.
"புதுமணத்த காதலனும் பூவையும்புன் வாயில்
எதிருற்று நாண்தமர்கண்டு எய்திக்-கதுமென்று
ஒருவர்க்கொருவர் வழிவிடப்பல் காற்பின்
இருவரும் போய் மீள்வர் எதிர்”
பூவை = காதலி, புள்வாயில் = சிறியவாயில்,தமர் = நம்மவர், எதிர் = நேருக்கு நேர்.
காட்சி, மானசீக உருவிற் கண்முன்னே தோற்றுவது போன்ற சித்திரத் தன்மையை இதிற் காண்கின்றோம். வழி விடுவதும் விலகுவதுமாகத் தங்களை அறியாமல் நாணத்தாலும் வெட்கத்தாலும் அவர்கள் விளையாடும் இந்தக் காதல் விளையாட்டைப் பாடிய கவி, சிருங்கார ரசத்தில் கை தேர்ந்தவன் போலும். எதைச் செய்துவிடக் கூடாது என்று அவர்கள் நாணி ஒதுங்குகிறார்களோ அந்த ‘மோதல்’ இயற்கையாக எதிர்பாராத வகையில் நடந்தேவிடுகிறது!