தமிழ் இலக்கியக் கதைகள்/திருமண விருந்து

50. திருமண விருந்து

புங்கனூர் முழுவதும் அந்தத் திருமணத்தின் சிறப்பைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். ஊரிலேயே பெரிய செல்வர் வீட்டுத் திருமணம் அது. புங்கனூர்க் கிழவன் என்றால் அந்தச் சுற்றுப்புறத்து ஊர்களில் ஈடில்லாத செல்வாக்கு இருந்தது. செல்வமும் செல்வாக்கும் ஒருங்கே பெற்ற ஒருவர் வீட்டில் நடைபெறும் திருமணம் எவ்வளவு பிரமாதமாக நடக்குமோ, அவ்வளவு பிரமாதம் புங்கனூர்க் கிழவன் வீட்டுத்திருமணத்திலும் இருந்தது.

வீட்டு வாயிலில் தெருவையெல்லாம் அடைத்தாற்போல் பெரிய பந்தல். வாழை மரங்கள், மாவிலைத் தோரணங்கள், உட்காரத் துய்மையாகப் புதுமணல் தூவிய தரை, புதுப் பாய்கள் விரித்த திண்ணை. எல்லா ஏற்பாடுகளும், நண்பர்களும் பழகினவர்களுமாகத் திருமண வீட்டில் ஒரே அமர்க்கள மாயிருந்தன. இரட்டை மேளம், இரட்டை நாகசுரம் இன்னொலி பரப்பிக் கொண்டிருந்தன. உறவினர் கூட்டம் திருவிழா போலக் கூடியிருந்தது. வந்தோர்க்கெல்லாம். வரையாமல் வழங்கும் வள்ளலாகையால் திருமண விருந்தை உண்பதற்குப் பந்தலிலும் திண்ணையிலுமாகப் பெருங்கூட்டம் காத்திருந்தது.

திண்ணையில் விரித்திருந்த பாயில் உட்கார்ந்திருந்தவர் களில் ஒர் ஏழைப் புலவரும் இருந்தார். அவர் திருமணத்துக்கு வந்திருந்தாலும் யாரும் கவனிப்பாரின்றிப் பசியோடு இருந்தார்.எல்லோரும்தான் பசியோடு இருந்தார்கள்.ஆனால் புலவருக்கு எல்லோரைக் காட்டிலும் அதிகமான பசி. காலையில் எதுவும் உண்ணாமல் வந்திருந்தார். பார்த்த அளவிலேயே புலவர் என்று சொல்லிவிடத் தக்க தோற்றம் அவருக்கு. கையில் ஏடும் எழுத்தாணியும் சேர்த்துக்கட்டி வைத்துக் கொண்டிருக்கும் சுவடிக் கட்டைப் பார்த்தாலே, இவர் புலவராகத்தான் இருக்க வேண்டுமென்று கூறிவிட முடியும்.

பசியோடும் சிந்தனையோடும் சோர்ந்து போய் உட்கார்ந் திருந்த புலவரை ஏனென்று கேட்க ஆளில்லை. ஆரவாரம், கோலாகலம், சிரிப்பு, கேலிப் பேச்சுக்கள், கும்மாளம் எல்லாம் சுற்றியிருந்தன. சந்தனமும் அகிற்புகையும் மணந்தன. புலவருடைய மனம் மணக்கவில்லை. வயிறு மணக்கவில்லை. திருமணத்துக்கு வந்திருந்த எல்லோரும் வீட்டிலிருந்தவர்களால் வரவேற்கப் பட்டார்கள். “சாப்பிட்டீர்களா? சாப்பிடுகிறீர்களா? தாம்பூலம் வாங்கிக்கொண்டீர்களா?” என்றெல்லாம் தணிவான குரல்களால் வந்தவர்கள் அன்போடு விசாரிக்கப்பட்டார்கள்.

திண்ணையில் பாயில் உட்கார்ந்திருந்த அந்தப் புலவரை மட்டும் யாரும் விசாரிக்கவில்லை. அழையா விருந்து போல் அநாதைபோல் உட்கார்ந்து கொண்டிருந்தார் அவர்.

காதை அடைக்கிற பசி, கண்கள் பஞ்சடைகிறார் போன்ற நிலை. ‘கொஞ்சம் தண்ணீரையாவது கேட்டு வாங்கிக் குடிப்போம்’ என்ற எண்ணத்துடன் சந்தன்மும் தாம்பூலமும் கொடுத்துக் கொண்டிருந்த ஓர் இளைஞனைக் கூப்பிட்டு, “தம்பி! குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் கொடு. தாகம் நாவை வறட்டுகிறது” எனக் கேட்டார் புலவர்.அந்த இளைஞனுக்கு அவர் அவ்வளவு கூட்டத்துக்கு நடுவில் ‘தம்பீ’ என்று கூப்பிட்டது பிடிக்கவில்லை. அவன் புலவரைப் பார்த்து அலட்சியமாக முகத்தைச் சுளித்தான். ஏழையைக் கண்டால்தான் மோழையும் பாயுமே! புலமை உள்ளம் கொதித்தது.தன் அறிவு வேண்டுமென்றே புறக்கணிக்கப் படுவதாகத் தெரிந்தால் எந்த அறிவாளியும் உலகத்தின் முகத்தில் கரி பூசத் தயங்க மாட்டான். வயிற்றுக்கு இல்லையே என்பதுகூடப் பெரிய கவலை இல்லை புலவருக்கு. வள்ளல்,குபேரன்,கருணைக்கடல் என்று புகழ் பெற்ற புங்கனூர்க் கிழவன் வீட்டில் ஒரு தமிழ்ப் புலவனை ‘வா’ வென்று வரவேற்க ஆளில்லை. அவன் வாய் விட்டு, மனம் விட்டுக் கேட்ட பின்னும் இலட்சியம் செய்து ஒரு குவளைப் பச்சைத் தண்ணீர் கொடுக்க அங்கு ஆளில்லை.

ஆத்திரத்தோடு புலவன் நினைத்தான்:

என்னுடைய வெறும் வார்த்தையை இங்கே கேட்பாரில்லை; கவனிப்பாரில்லை. இந்தத் திருமண வீட்டில் கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான விருந்தினர்களும், வீட்டுக்குரியவனும் என்னையே நினைத்துப் பதறும்படி செய்ய என் வார்த்தைகளுக்கு ஆற்றல் உண்டா, இல்லையா என்று பார்க்கிறேன். என்னை ஒரு மனிதனாகவே நினைத்துப் பொருட்படுத்தாமல் இருக்கும் இவர்களை நான் போகுமிடத்துக்குத் தேடிக்கொண்டு ஓடிவரச் செய்கிறேன்.

அவன் மனத்தில் வைரம் எழுந்தது. ‘அழகான புங்கனூர் வெண்ணெயைத் திருடியுண்ட குற்றத்துக்காக யசோதையிடம் அடி வாங்கிக்கொண்டு, கையிலிருக்கும் திருட்டு வெண்ணெயையும், தாயின் சினம் மிக்க கண்களையும், தன் உடம்பில் அடிபட்ட புண்களையும் மாறி மாறி மருண்டு நோக்கும் கண்ணன் (திருமால்) கோவில் கொண்டிருக்கும் ஊர். அதற்கெல்லாம் ஒன்றும் குறைவில்லை. அப்படிப்பட்ட இந்த ஊரில் புங்கனுார்க் கிழவனின் வயல்களில் சேல் மீனும் கயல் மீனும் துள்ளிக் குதிக்கும் அத்தனை நீர் வளம் இருக்கிறது. ஆமாம்! நீர் வளம் வயலிலும், குளத்திலும் தான். இங்கே ஒரு குவளை நீர் கொடுக்க மனிதர் இல்லை.திண்ணை இருக்கிறது; விரித்த பாய் இருக்கிறது. பிறரைக் கவனிக்காத அலட்சிய மனம் நிறைந்த மனிதர்கள் இருக்கிறார்கள். கல்யாணத்துக்கென்று வந்த என் போன்ற ஏழைப் புலவனுக்குப் பசி வயிற்றைப் புரட்டுகிறது. உடம்பு குரங்கு வாதம் பிடித்தது போல் வசம் இழக்கிறது. பிரமாதமான இந்தத் திருமணத்தின் சிறப்பான அம்சம் ஒரு புலவனின் வயிற்றுப் பசி.

சிந்தித்த பின் முகத்தில் உறுதி ஒளிர, உடலில் தெம்பு பாயக் கையிலிருந்த சுவடியைப் பிரித்து ஏடும் எழுத்தானியும் எடுத்தான் புலவன். சிரித்துக் கொண்டே எழுத்தாணியால் ஏட்டில் எதையோ எழுதினான். திண்ணையில் இருந்த மாடப்பிறையில் எல்லோர் கண்களிலும் படும்படியாக அந்த ஏட்டை வைத்தான். யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தெருவில் இறங்கி நடந்து விட்டான்.

அவன் போன கால் நாழிகைக்கெல்லாம் கலியான வீடு அமளி துமளிபட்டது. மூலைக்கு மூலை கூட்டம் கூடிப் பேசிக் கொண்டு நின்றார்கள்.

“எவனோ புலவனாம். கோபத்தில் ஏதோ வசை பாடல் எழுதி வைத்து விட்டுப் போய் விட்டானாம். புலவன் வாக்குப் பலிக்காமற் போகாதாம் அமங்கலமாக ஏதாவது நடந்து விடக் கூடாதே” என்று எல்லோரும் பயந்தார்கள். சிறிது நேரத்துக்கு முன் எந்த மனிதனுடைய வார்த்தை ஒரு குவளைத் தண்ணிருக்காக அலட்சியப்படுத்தப்பட்டதோ அந்த மனிதனுடைய பாட்டில் இருந்த வார்த்தைகள் கலியான வீட்டிலேயே கலவரத்தை உண்டாக்கி விட்டிருந்தன. வீட்டுக்குத் தலைவனான புங்கனூர்க் கிழவனே அந்த ஒலையை வைத்துக்கொண்டு பயந்துபோய் நின்றான். -

“ஐயோ! யாராவது ஒருவர் அந்தப் புலவரைக் கவனித்து உபசாரம் செய்திருக்கக் கூடாதா? இப்படி அமங்கலச் சொல் அமையப் பாடி வைத்து விட்டாரே. இதன் விளைவு என்ன ஆகுமோ? அறிவாளியின் கண்ணிர் உலகத்தை அழிக்கும் பிரளய வெள்ளமாயிற்றே! என் வீட்டிலா இப்படி நடக்க வேண்டும்? ‘புங்கனூர்க் கிழவன் திருமணத்தில் தமிழ்ப் புலவரை அவமதித்தான்’ என்று தலைமுறை தலைமுறையாக இலக்கியத்தில் நிலைத்து நின்றுவிடுமே, இந்தப் பழி’ என்று கிழவன் மனம் நொந்து பரிதாபமாகக் கதறினான்.

கதறி என்ன செய்ய? அந்த வள்ளல் கதறிக் கொண்டிருந்த அதே சமயத்தில் அப் புலவன் ஆற்றங்கரையில் தண்ணீர் குடித்துவிட்டு உடலின் தாகத்தைத் தணித்துக் கொண்டும் அவமானப்பட்டு வெந்த நெஞ்சின் தாகம் தணியாமல் நடந்து கொண்டிருந்தான். வயிற்றில் பசியிருந்தாலும், கண்களில் ஒளி பஞ்சடைந்திருந்தாலும், கால்கள் நடக்க முடியாமல் தள்ளாடினாலும் அவன் உள்ளத்தில் ஒரு பெருமிதம் ஏற்பட்டது! "நான் புலவன்! என் துன்பங்களை இலக்கியமாக்க என்னால் முடியும். நான் வயிற்றுக்காக வாய் திறந்து கேட்டால் அவமானம். ஆனால் பாடுவதற்காக வாய் திறந்தால் உலகத்தையே கட்டி வைத்து உதைக்கிற தெம்பு உண்டு எனக்கு”.

அந்தத் தெம்பில் புங்கனூர் வள்ளல் வீட்டில், ஒலையில் எழுதி வைத்த பாட்டை மறுபடியும் வாய்விட்டுப் பாடிக் கொண்டே நடந்தான் அவன்.

'வெண்ணெயும் பார்த்து அன்னை கண்ணையும் தன் மெய்யிற்பட்ட
புண்ணையும் பார்த்திடு நெடுமால் புங்கனூர்க் கிழவன்
பண்ணையும் சேலுகளுந் தடநீள் கயல்பாயு நெடுந்
திண்ணையும் கெண்டைபுரட்டுங் கல்யாணத்திற் சென்றவர்க்கே.”

(பெருந்தொகை 1620)

கெண்டை புரட்டுதலாவது = பசி மயக்கத்தில் வயிற்றில் ஏற்படும் குரக்கு வலிப்பு போன்றதோர் வேதனை.