தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)/தமிழ்மொழியின் பழமையும் சிறப்பும்


1. தமிழ் மொழியின்
பழமையும் சிறப்பும்


தமிழ் நாடு

தமிழகம் வடக்கே வேங்கடமும், தெற்கே குமரி முனையும் கொண்ட தனிப்பெரும் நாடாகும். இதனை ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்’ எனத் தொல்காப்பியப் பாயிரம் வகுத்துக் கூறுகிறது.

தமிழ் மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்தி அன்புற்று இன்புற்று வாழ்ந்தனர். உயர்ந்த மலைகளும், செறிந்த காடுகளும், பரந்த வயல்களும், விரிந்த கடற்கரையும் அவர்கள் வாழ்ந்த இடங்களாகும். பொருள் தேடச் சென்ற வழிகள் காடும் மலையும் நிறைந்த பாலை நிலங்களாக விளங்கின. இவற்றை முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனக் குறிப்பிட்டனர்.

தென்னிந்தியாவில் குமரி முதல் வேங்கடம் வரை தமிழ் பேசப்படுகிறது. கடல் கடந்த வடஈழத்திலும் தென் ஆப்பிரிக்காவிலும், மலேயா, சிங்கப்பூர்ப் பகுதிகளிலும் தமிழ் பேசப்படுகிறது.

தமிழ்மொழி

மிகப் பழங்காலத்தில் இந்தியநாடு முழுவதிலும் ஒரு மொழி பேசப்பட்டு வந்தது. அதனைப் பழந்திராவிட மொழி என்பர்; வடகிழக்குக் கணவாய் வழியாகத் துரானியரும், வடமேற்குக் கணவாய் வழியாக ஆரியரும் வந்து புகுந்தனர். அவர்களின் கலப்பால் பிராகிருதம், பாலி முதலிய புதிய மொழிகள் தோன்றின; அந்நிலையிலும் பழந்திராவிடச் சிலர் அவர்களோடு கலவாமல் தனித்து ஒதுங்கி வாழ்ந்தனர், அவர்கள் மொழி இன்றும் திராவிடத்தின் திரிபுகளாக வழங்குகின்றன. மலை நாட்டு மக்கள் பலர் திராவிடத்தின் இனமொழிகளை இன்றும் பேசி வருகின்றனர். அவற்றைத் திருந்தா மொழிகள் என்பர்; அவை ஏட்டு வழக்குப் பெறாமல் பேச்சு வழக்கு மட்டும் பெற்றுள்ளன. அவை துதம், கோதம், கோண்ட், கூ, ஒரோஒன், ராஜ்மகால் முதலியனவாம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு முதலியனவற்றைத் திருந்திய மொழி என்பர். இவை ஏட்டு வழக்கும் பெற்றுள்ளன. இவற்றுள் தமிழ் மொழியே பழந்திராவிடக் கூறுகளை மிகுதியாய்ப் பெற்றுள்ளது.

சிறப்புக் கூறுகள்

தமிழ் மொழியும் அதன் இலக்கியமும் பிறமொழித் தாக்குதலின்றித் தனித்து வளர்ந்தன. தமிழ் தனக்கென ஓர் இலக்கிய மரபையும், இலக்கண அமைப்பையும் கொண்டு விளங்குகிறது. கிரேக்கம், இலத்தீன், வடமொழி முதலியவற்றைப் போலத் தமிழ் பழம்பெரும் மொழியாகும், ஆனால் அவற்றைப் போலத் தமிழ் இலக்கிய வளத்தோடு மட்டும் நிற்கவில்லை; பேச்சு வழக்கும், இலக்கியச் சிறப்பும் கொண்டு இன்றும் உயர் தனிச்செம்மொழியாக விளங்குகிறது.

தமிழிலக்கியம் ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்டது. தென்னிந்தியாவில் ஏனைய திராவிட இலக்கியங்கள் கி.பி. 8 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே தோன்றின. தமிழோ, கி.மு. 5 ஆம் நூற்றாண்டிலேயே செப்பம் பெற்ற இலக்கிய இலக்கணங்களைப் பெற்றிருந்தது. ஏனைய திராவிட மொழிகள் வடமொழியின் தாக்குதலுக்கு ஆட்பட்டுத் தம் தனித் தன்மையைப் பெரும்பாலும் இழந்துவிட்டன. தமிழ் ஒன்றே அதன் ஆதிக்கத்துக்கு உட்படாமல் தனித்து வளர்ந்து வந்துள்ளது எனலாம். எழுத்துக்கும். சொல்லுக்கும் மட்டுமன்றிப் பொருளுக்கும் இலக்கணம் பெற்றுத் திகழ்கிறது. தமிழ் பண்டைக் காலத்துக் குமரி முனைக்குத் தெற்கே லெமூரியா என்ற பகுதியும் தமிழ் நாட்டோடு இணைந்த பெரு நிலப்பரப்பாக இருந்து வந்தது. கடற்கோளால் அப்பகுதி அழிந்தபோது பல நூல்களும் அழிந்து விட்டன. இன்று கிடைக்கும் இலக்கியங்கள், எட்டுத் தொகையும், பத்துப்பாட்டுமேயாகும். தொல்காப்பியம் அவற்றுக்கு முன் தோன்றியதாகும். இவற்றைச் சங்க இலக்கியம் என்பர். சங்ககாலமே இலக்கிய வரலாற்றின் பொற்காலமாகும்.