தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்/அணிந்துரை

அணிந்துரை
நாடகக் காவலர் R.S. மனோகர்.

அ.ச. ஞானசம்பந்தன் என்ற பெயர் தமிழிலக்கிய வரலாற்றில் என்றென்றும் நிலை பெற்றிருக்கக் கூடிய உன்னதமான பெயராகும். எண்ணற்ற இலக்கியங்களை ஆய்வு செய்திருக்கும் அப்பெருமகனாரை ஒளவை தி.க.சண்முகம் அறக்கட்டளையின் சார்பாகச் சொற்பொழிவு செய்வித்ததின் மூலம் நாடகத் தமிழுக்கும் - சங்கரதாஸ் சுவாமிகளுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள் அறக்கட்டளை அமைப்பாளர்கள்.

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலன்ெறி வழக்கம்

என்ற தொல்காப்பிய சூத்திரத்திலிருந்து தமிழ்நாடக வரலாற்றைத் தொடங்கும் பேராசிரியர், அதற்கு உரைகண்டவர்கள் எங்கெல்லாம் - எப்படியெல்லாம் தவறு செய்திருக்கிறார்கள் என்பதை மிகவும் தெளிவாக ஆதாரத்தோடு விளக்குகிறார். இப்படிச் சுட்டிக்காட்டும் நக்கீரத் துணிவு அ.ச.ஞா. வைத்தவிர வேறு யாருக்கு வரும் ?

சிலம்பின் நாடகக் கூறுகளை விரிவாக ஆராயும் அவர் திருக்குறள், பட்டினப்பாலை, சிந்தாமணி முதலானவற்றுள் நாடகம் பற்றி வரும் குறிப்புகளை மிகநுணுக்கமாக ஆய்ந்து கண்டு கூறியிருக்கிறார். சங்கரதாஸ் சுவாமிகள் பற்றிச் சொல்லும் போது துறவு நெறியில் நின்ற ஒருவர் உலகியல் சார்ந்த கலையில் - அதுவும் நாடகத் துறையில் ஈடுபட்டதனால் எத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேர்ந்தது என்பதை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார்.

சுவாமிகளைப் பற்றி சொல்ல ஆரம்பித்தவுடனேயே அவரது அருமை மாணாக்கரும். அறக்கட்டளையின் பெயருக்குரியவருமான ஒளவை தி.க சண்முகத்தின் நினைவு அவருக்கு வந்துவிடுகிறது. இவருக்காக அவர் எழுதிய அபிமன்யு நாடகம் உருவான சூழல் தோன்றுகிறது. தன்னை மறந்து அந்த நாடகத்தைப் பற்றி விரிவாகச் சொல்லத் தொடங்கி விடுகிறார்.

வியப்பு, சினம், துயரம் மூன்றும் நிறைந்ததாக அமைந்த ஒரு பாடலை எடுத்துக் கொள்கிறார்.

காட்டில் வந்தனை தோள்வலி மாமனைக்
கண்டதுண்டம் செய்தின்று வதைத்தனை
தாட்டி கத்துடன் போர்புரிந் தென்னோடு
தர்க்க மாடிச் சளைக்காது நின்றனை

மேட்டிமைத் தொழில் கண்டு மகிழ்ந்தனன்
வில்லிலே மிகவல்லவ னுன்குலம்
கேட்டறிந்திட இச்சை கொண்டேனதால்
கிட்டிவந் துரைப்பாயிது வேளையே

என்ற பாட்டினை எடுத்துக்கொண்டு அதில் நெடில் எத்தனை - குறில் எத்தனை. ஏன் அவை அப்படி அமைந்தன என்றெல்லாம் மிக விரிவாக விளக்கும் போது பேராசிரியரைத் தவிர வேறு யாரால் இந்தப் பாடலின் சிறப்பை இவ்வளவு ஆழமாகக் கூறமுடியும் என்று தோன்றுகிறது. பல பாடல்களைக் கம்பனின் சந்தங்களோடு ஒப்பிட்டுச் சொல்லும்போது சுவாமிகளின் தமிழாற்றலை நினைத்து வியக்கத் தோன்றுகிறது.

திருக்குறள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட சுவாமிகள் அதனை நீதிவசனம், வேதமொழி என்றெல்லாம் மிக அருமையாகக் குறிப்பிடுகிறார். எங்கெல்லாம் பயன்படுத்த முடியுமோ அங்கெல்லாம் பயன்படுத்துகிறார் என்பதைக் குறிப்பிடும் நம் அ.ச.ஞா. அதற்குச் சில எடுத்துக்காட்டுகளும் காண்பிக்கிறார்.

அவாவே பிறப்பினும் பித்தென்று வள்ளுவர்
ஆராய்ந்து சொல்லினர் அன்றோ?
பற்றற்றான் பற்றினைப் பற்றென்று சொன்னதும்
பாவனை உண்மையின் மார்க்கம்

சுவாமிகளிடமிருந்த நகைச்சுவை உணர்வு, நிந்தாஸ்துதியாகப் பாடும் கவிநயம், பொருத்தமான இடத்தில் பழமொழிகளைப் பயன்படுத்தும் சாதுர்யம், பழைய இலக்கியங்களில் இருந்த ஆழ்ந்த பயிற்சி, சைவசித்தாந்த ஈடுபாடு அனைத்தையும் தனித்தனியே பட்டியலிட்டுக் காட்டியிருக்கும் அ.ச. ஞானசம்பந்தனாரின் ஆய்வுச் சொற்பொழிவுகள் சுவாமிகளின் பெயரை என்றென்றும் நிலைநிறுத்தும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. வாழ்க சங்கரதாஸ் சுவாமிகள் புகழ்! வாழ்க அ.ச. ஞானசம்பந்தனாரின் அரிய ஆய்வு!

அன்பு
ஆர்.எஸ். மனோகர்.