தமிழ் மருத்துவம் – தொ.மு – தொ.பி.
தொல்காப்பியம் தொன்னூல் மட்டுமல்லாமல் பண்டைத் தமிழ் நாகரிகத்தைப் பண்பாட்டைத் தாங்கி நிற்கும் பெருந்தூணாகும்.
சிறப்பு வாய்ந்த தமிழின் முக மண்டபமும் கூட கோபுரமும் மணிமாடமும் மாளிகை அரணும் ஆழ்கடலுள் ஆழ்ந்து போயின. அந்நிலையில் தமிழினத்தின் சிறப்பினைக் கூறும் கலைக் கூறுகளைக் கண்டெடுத்துக் கட்டிய சிற்றில், தொல்காப்பியம்.
- ‘செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
- முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
- புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்’ - சிறப்புப் பாயிரம்.
என்னும் சூத்திரத்தால், தொன்னூல்களைக் கண்டெடுத்தவர் தொல்காப்பியர் எனலாம்.
தொல்காப்பியம் நெடுகலும் ‘என்மனார்ப் புலவர்’ ‘நுண்ணிதின் உணர்ந்தோர்’ ‘மொழிப’ ‘என்றிசினோரே’ ‘நுனித்தகு புலவர் கூறிய நூலே’ என்று முடித்திருப்பதால், தொல்காப்பியம் கூறும் இலக்கணச் செய்திகளெல்லாம் முந்து நூல்களில் கண்டவையே என்பது தெளிவு. (பாவாணர். தமிழர் வரலாறு,2. பக். 40-41)
தொல்காப்பியம் தமிழின் தொன்மையை அறிவுறுத்துவதைப் போலத் தமிழ் மருத்துவத்தின் தொன்மையும் அறிவுறுத்துகிறது. அதனால், தமிழ் மொழியைப் போலவே தமிழ் மருத்துவமும் தொன்மையானது என்பது தெளிவு.
திட்டமிடுதல்
தொகுஒரு செயலைச் செய்வதற்குப் பொருள்கள் (திருக்.675) தேவைப்படுவதைப் போலத் தொல்காப்பியம் இயற்றுவதற்குத் தேவையாயிருந்த ‘பொருள்கள்’ தமிழ் மருத்துவத்தின் மூலப்பொருளாக அமைந்துள்ளன.
தமிழ் மருத்துவம் மருந்து, வாதம், ஓகம், ஞானம் ஆகிய நான்கு உறுதிப்பொருள்களை உணர்த்தும் எண்களைக் குறியீடுகளாகப் பயன்படுத்துகின்றன.
- போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
- ஆகிப் படைத்தன ஒன்பது வாய்தலும்
- நாகமும் எட்டொடு நாலு புரவியும்
- பாகன் விடாவிடிற் பன்றியு மாமே - திருமந். ஒன்பதாந். 61.
தமிழ் மருத்துவத்தின் குறியீட்டு எண்கள் உடலியலைச் சுட்டுவதைப் போல, தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களை அதிகாரம் ஒன்றுக்கு ஒன்பது இயல்கள் என இருபத்தேழு இயல்களைக் கொண்டுள்ளது.
- ‘மூன்றே பொருளாய் முடிந்தது அண்டம்
- மூன்றே பொருளாய் முடிந்தது பிண்டம்
- மூன்றே பொருளாய் முடிந்தது மருந்து
- மூன்றே பொருளாய் முடிந்த்து வாதமே’ - திருமந்திரம்.
தமிழ் மருத்துவம் அண்டம், பிண்டம், மருந்து, வாதம் ஆகிய நான்கும் மூன்று பொருளாய் முடிந்தது என்கிறது. அந்த மூன்றே தொல்காப்பியத்தில் அதிகாரங்களாக அமைந்துள்ளன.
- ‘மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்
- துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை’. களவியல் - 45.
களவியலில் அமைந்திருக்கும் இந்நூற்பா, காதலன் காதலி சந்திக்கும் போது நாளும் கிழமையும் பார்த்துக் கொண்டிருப்பதில்லை என்று வானியல் செய்தியைக் குறிப்பதால், தொல்காப்பியக் காலத்திற்கும் முன், வானியல் கணியர்கள் இருந்துள்ளனர். இக்கணியர்களால் உருவாக்கப்பட்டதே கலியாண்டு ஆகும். இக்கலியாண்டு கி.மு.3102 இல் தொடங்குகிறது.
மனித உடற்பகுதிகளில் விண்மீன்களின் தொடர்பு இருப்பதைக் குறிக்கிறது தமிழ் மருத்துவம். அதைப்போல, தொல்காப்பியத்தின் இயல்கள் விண்மீன்களின் எண்ணிக்கையாக அமைந்துள்ளன.
இந்திய அணு உலைக்கூடத்தில் நடைபெறும் அணுச்செயலுக்கும் தொல்காப்பியத்தின் இயல் அமைப்புக்கும் ஒரு தொடர்பு இருப்பது தெரிகிறது. அதாவது, ஒரு நூட்ரானைக் கொண்டு ஒரு யுரோனியம் இடிக்கப்படுகிறது. அவ்வாறு இடிக்கப்படும் யுரோனியம்,
என்று நூட்ரானை உருவாக்கிக் கொண்டே செல்கிறது. இந்த அணுச்செயலைப் போலவே தொல்காப்பியத்திலும் 1 > 3 > 9 > 27 என்று அதிகாரமும் இயலும் அமைந்துள்ளன.
எழுத்துகள்
தொகுஎழுத்துகள் தோன்றுமிடமே உயிர் இயங்குமிடமாகும். மூலாதாரத்திலிருந்து எழுகின்ற எழுத்தின் ஒலி இசை என்றும் பண் என்று பஞ்சமரபு கூறுகிறது.1 எழுத்தும் இசையும் தோன்றுமிடம் ஒன்றேயாகும்.
உயிரெழுத்துகள்
தொகுச ரி க ப த என்னும் ஐந்து ஒலிகளையும் ச ரி க ம ப த நி என்னும் ஏழு ஒலிகளையும் சேர்த்து பன்னிரண்டு ஒலிகளை இசையொலிகளாகக் கொள்ளப்படுகின்றன.
அதைப்போலவே (அ இ உ எ ஒ ஆகிய) ஐந்து குற்றொலிகளையும் (ஆ ஈ ஊ ஏ ஓ ஐ ஔ ஆகிய) ஏழு நெட்டொலிகளையும் சேர்த்து பன்னிரண்டு உயிரொலிகள் எனத் தொல்காப்பியம் கூறுகின்றது.
உயிரெழுத்துகளில் (அ இ உ எ ஒ ஆகிய) ஐந்து குற்றெழுத்தாகும் போது நெட்டெழுத்துகள் ஐந்தாகவே இருந்திருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் ஏழாகக் கொண்டது ஏன்? உயிரும் மெய்யும் சேர்ந்து உருவாக்கும் எழுத்தை உயிர்மெய் என்றுரைப்பது போல, உயிரும் உயிரும் சேர்ந்து உருவாக்கும் எழுத்தை உயிர் உயிர் என்று கூறியிருக்கலாமே! அவ்வாறு கூறாமல் உயிர் எழுத்தாகவே கொண்டதற்குக் காரணம், உயிரெழுத்தின் எண்ணிக்கை பன்னிரண்டு என்றுரைப்பதற்காகவே யாகும்.
உயிர் என்றாலே பன்னிரண்டு தான். அதாவது, உடம்பில் உயிர் நிலைத்திருக்க வேண்டுமென்றால், சுவாசத்தின் அளவு பன்னிரண்டாக அமைய வேண்டும். அவ்வாறில்லாமல் கூடினாலும் குறைந்தாலும் உயிர் ஓடிவிடும். இதனைக் கருத்திற்கொண்டே உயிர் எழுத்துகள் பன்னிரண்டு என்கிறது தொல்காப்பியம். 2
சூரிய கலையின் அளவைக் கருதியே உயிரெழுத்து பன்னிரண்டாக அமைக்கப்பட்டுள்ளன. உடம்பினுள் இயங்குகின்ற சந்திரன், சூரியன், அக்கினி ஆகிய மூன்றும் பதினாறு, பன்னிரண்டு, பத்து எனக் கலைகளை அளவாகக் கொண்டிருக்கின்றன. இவை நடுநாடி எனும் சுழுமுனையை அறிந்த ஓகியர் பெற்ற அறிவாகும். 3
உயிரும் மெய்யும்
தொகுஉயிரெழுத்து பன்னிரண்டும் மெய்யெழுத்து பதினெட்டும் சேர்ந்து பெருகினால் (பூரணமானால்) நாளொன்றுக்கு மனிதன் விடுகின்ற உயிர் மூச்சின் எண்ணிக்கை வரும்.
மனித உடல் இயக்கத்தை அறிந்த பின்பே தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை இவ்வாறு தோன்றியிருக்க வேண்டும் எனக் கருதலாம்.
சார்பெழுத்து
தொகுஎழுத்துகள் உயிர், மெய், சார்பு என மூன்று வகை. உயிரையும் மெய்யையும் சார்ந்து வருவதால் அவை சார்பெழுத்து என்றாகிறது. அம்மூன்றும் உயிரையும் உடம்பையும் சார்ந்து இயங்குகின்ற வாதம், பித்தம், ஐயம் ஆகிய மூன்று வளி இயக்கங்களைக் குறிப்பதாகும்.
அதேபோல், மெய்யெழுத்துகள் ஆறு ஆறாக வல்லினம், மெல்லினம், இடையினம் எனப் பிரிக்கப்படுகின்றன. அவை உடம்பில் உள்ள ஆறு ஆதாரங்களையும் அவற்றின் இடையே ஊர்ந்து செல்லும் மூன்று நாடிகளையும் குறிக்கின்றன.
எட்டு
தொகுவனப்பு, மெய்ப்பாடு, உணவுப்பொருள் ஆகியவற்றை எட்டு எட்டு எனக் கூறப்பட்டுள்ளது. எட்டு எட்டு என்று கூறுவதன் காரணம் என்ன? மெய் படும் பாடே மெய்ப்பாடு என்பதால், இவை அனைத்தும் உடலைச் சார்ந்து உரைக்கப் பட்டவை.
உடலின் அளவு எட்டு. அதன் விருப்பும் வெறுப்பும் எட்டு.4 உடலோடு தொடர்புடைய எல்லாம் எட்டு என்பதால் வனப்பும் மெய்ப்பாடும் உணவும் எட்டாகக் கூறப்பட்டன.
தமிழ் மருத்துவத்தில் எட்டு என்பது ஓர் அடிப்படைக் கணக்காகும். மருந்துப் பொருள்களை எட்டுக்கு ஒன்றாகக் காய்ச்சினால் மருந்தாகும். இல்லாவிட்டால் விருந்தாகும்.
- சொல்லிய நாழி கொண்டு
- தூணியில் எட்டொன் றாக்கி
- நன்னீர் விட்டே எட்டொன்றாய்
- நாடிக் காய்ச்சிக் கொள்வீரே. - மேகநோய் நிதானம். 16-17
- சொல்லிய நாழி கொண்டு
உலகப் பொருள் அனைத்தும் ஒரே மூலப் பொருளிலிருந்து தோன்றியது. ஒளியை உமிழ்ந்து கொண்டிருக்கும் ஒளிப்பொருள் ஒன்று தானாகவே உணர்வுற்றுச் சிதறிச் சிறு சிறு அணுக்களாகப் பரவி வானில் ஒளியாகத் திகழ்கிறது என்பதை, ‘இந்திய அறிவியல் Big Bang theory என்கிறது. இங்ஙனம் சிதறிய அணுவும் ஓர் உயிர்ப்பொருளாகும். இதனைக் கருவென்றும் விண்பொருள் என்றும் ஒளிக்கரு என்றும் சொல்லப்படும்.
இந்த ஒளிக்கரு அமைதி நிலையில் சதுரமாகவும், செயல்படும் நிலையில் ஒரே அளவான 64 சிறிய சதுரங்களாகவும் அமைத்துக் கொள்கிறது. இதனை Energy grid என்பர்.
இந்த சதுரத்தின் 8 ˣ 8 = 64 எண்னும் கணக்கில் நுண்ணணுக்களின் சேர்க்கை நிகழ்வதாக (Indian atomic Science) இந்திய விஞ்ஞான அணுக்கொள்கை கூறுகிறது. அணுக்கள் கருவாக இருக்கும் வரை 8 ˣ 8 = 64 அளவிலும் உருவாகும் போது 9 ˣ 9 = 81 ஆக அமையும் என்கிறது, அணுக்கொள்கை.
பழந்தமிழ் வாய்பாடுகள் எட்டை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளன.5 இதன் அடிப்படையிலேயே அறுபத்து நான்கு கலைகளும் தொண்ணூற்றாறு தத்துவமும் உருவாயின.
இம்முறைதான் இன்றைய அறிவியலாளர்களால் விதந்து பேசப்படுகின்ற Nano Technology என்பதாகும். பேரணுவை நுண்ணணுவாக மாற்றவும் பேருடம்பை நுண்ணுடம்பாக மாற்றவும் திறனுடையவை தமிழ் மருத்துவமுறையாகவும் ஓகமுறையாகவும் இருக்கின்றன.
பதினெட்டு
தொகுமெய்யெழுத்துகள் பதினெட்டு. மெய்யெழுத்துகள் பதினெட்டு என ஏன் அமைய வேண்டும்? மெய் என்னுஞ்சொல் உடலையே குறிக்கும். உடலுக்கும் பதினெட்டு என்ற எண்ணுக்கும் ஏதேனும் ஒரு தொடர்பு இருக்க வேண்டும்.
பதினெட்டின் சிறப்பைக் கருதியே சித்தர்கள், கீழ்கணக்கு, மேற்கணக்கு, புராணம், ஐயனார், ஐயப்பன் கோயில் படிக்கட்டு, தேவர் அசுரர், பாண்டவர், இராமன் இராவணன் ஆகியோரின் போர்கள் எல்லாம் பதினெட்டைக் குறிக்கின்றன.
- ‘போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
- ஆகிப் படைத்தன ஒன்பது வாய்தலும்
- நாகமும் எட்டொடு நாலு புரவியும்
- பாகன் விடாவிடிற் பன்றியுமா’ - திருமந்.ஒன்பதாந். 61
என, தமிழ் மருத்துவத்தில் பதினெட்டு எனும் எண் ஒரு கமுக்கமாகக் கூறப்பட்டுள்ளது. உடலை ஓம்புதற்காகச் செய்ய கருதிய தாந்திரீக ஓகமும், மாறணக்கலை (Alchemy) என்னும் வகார வித்தையும் பதினெட்டு வகையான செயலையும் பொருளையும் கொண்டவை. இவை மரபுவழியாகக் கற்பிக்கப் படுபவை என்பதால் பதினெட்டின் செய்தி என்பதாலும் அது குழூஉக்குறியாகவும் இருந்து வருகிறது. இத்தொழிலைச் செய்தவர்கள் சித்தர்கள். என்பதனால் சித்தர்கள் பதினெட்டு எனும் எண் குறியீட்டினால் குறிக்கப்பட்டனர்.
தொகாப்பியத்தில் பதினெட்டு வகையான மெய்யெழுத்துகள் அமைந்துள்ளதால், தொல்காப்பியக் காலத்துக்கும் முன், தமிழகத்தில் வகாரவித்தையும் தாந்திரீக ஓகமும் இருந்தன என்பது உறுதியாவதால், அக்காலத்தில் மெய்யறிஞர்கள் இருந்தனர் எனலாம்.
தமிழ் நூல்கள்
தொகு- ‘ஈர் ஐங் குற்றமும் இன்றி நேரிதின்
- முப்பத் திருவகை உத்தியெடு புணரின்
- நூல் என மொழிப நுணங்கு மொழிப்புலவர்’ - தொல்.மரபியல். 1598.
தமிழ் நூல்கள், பத்துவகைக் குற்றமுமின்றி முப்பத்திரண்டு வகை உத்தியொடு இயற்றப் பெற வேண்டும் என்கிறது.
மனித உடல் பத்து வகைக் குற்றங்களைக் கொண்டுள்ளன. அவற்றை நீக்கினால் மட்டுமே உடல் தூய்மையாகும்.
அதேபோல், உடலில் 32 வகை உறுப்புகள், 32 பற்கள், முதுகுத்தண்டில் 32 வகை எலும்புத் துண்டுகள் இருக்கின்றன.
மனித உடலின் அமைப்பைப் போலவெ தமிழகத்தின் கோயில்கள் அமைந்துள்ளன. (தில்லை, திருவானைக்காவல் கோயில்கள்) அதைப்போலவே நல்ல நூல்களும் மனித உடலைப் போல அமைய வேண்டும் எனக் கருதியிருக்கலாம். அதனால், 10 வகைக் குற்றங்களையும் 32 வகை உத்திகளையும் கூறியிருக்கலாம்.
பழந்தமிழ் அறிஞர்கள்
தொகுதொல்காப்பியக் காலத்துக்கு முன் தாபத முனிவர், அந்தணர், புலவர், ஐயர், அறவோர், சான்றோர், நோய்மருங்கு அறிநர் எனும் அறிவு மரபினர் வாழ்ந்துள்ளனர்.6 ( சூடாமணி. செய்.2)
முனிவர்கள் புரிந்த ஓகம் இயமம், நியமம், ஆசனம், வளிநிலை, தொகைநிலை, பொறைநிலை, நினைதல், சமாதி என்னும் எண்வகை வழக்கங்களை உடையது.7(திருமந். 552)
என்று, ஓக முனிவர் வழக்கங்களை குறிப்பிடுகிறது.
வளியிசை
தொகுஓக முறையினை மேற்கொள்ளும் முனிவர்கள் உணரக்கூடிய ஒலி அதிர்வுகளை ‘வளியிசை’ என்று கூறுவர். இந்த நுண்ணதிர்வுகள் ஓகம் புரிகின்றவர்களால் மட்டுமே உணர முடியும்.8(திருமந். 606) என்பதால், தொல்காப்பிய ஆசிரியரும் ஓகம் புரிந்தவர் எனலாம்.
கி.மு. ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சமயப்பணி அமைப்பு ஒன்று தோன்றியது. இந்த அமைப்பிலிருந்த அறிஞர்கள் மெய்யறிவுத் தேடலில் ஈடுபட்டனர்.9 என்பதால் தொல்காப்பியக் காலத்திற்குமுன் ஓக முறைகள் இருந்தன என்பது தெளிவு.
ஐம்பூதக் கோட்பாடு
தொகுஇயற்கையின் இயக்கமே தமிழர் தம் வாழ்க்கை. இயற்கையாகிய தமிழ் மருத்துவம் வானியல், பூதவியல், எண்ணியல், மெய்யியல், உடலியல், உயிரியல், மருந்து, மருத்துவம், தாவரவியல், ஓகவியல், மாறணவியல் ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழ் மருத்துவத்தின் ஐம்பூதக்கோட்டினைப் போலவே
- ‘நிலம் தீ நீர் வளி விசும்போ டைந்தும்
- கலந்த மயக்கம் உலகம் ஆதலின்’ - தொல்.மரபியல். 1589.
என்று கூறுவதால் தொல்காப்பியத்துக்கு முன்பே ஐம்பூதக் கோட்பாடு அறியப்பட்டுள்ளது.
ஐந்திணையும் ஆறு பொழுதும்
தொகுதொல்காப்பியம் கூறும் பெரும்பொழுதும் சிறுபொழுதும் ஐந்திணைக் கோட்பாடும், சிறப்பு வாய்ந்தவை. ஏனெனில் நோய்களைக் கணிப்பதற்குச் சிறுபொழுதுகளும், மருந்துகளைச் செய்வதற்கும் நோய்பரவுதலை அறிவதற்குப் பெரும்பொழுதுகளும், நோயாளர் வாழும் பகுதியைக் கொண்டு அவருக்கு வந்துற்ற நோயை அறியும் முறைகளும் தமிழ் மருத்துவத்தில் காணக்கூடியவை.
ஐந்திரம்
தொகு- ‘மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி
- மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
- தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றி’ (தொல்.சிறப். பாயிரம்)
என்பதால், தொல்காப்பியரும் ஐம்பூதவியல் அறிஞராகத் திகழ்கிறார்.
- ‘கப்பத்து இந்திரன் காட்டிய நூலின்’ - சிலப்பதி. 2:11:154
ஐந்திரம் என்னும் நூலை, இயற்றிய இந்திரன், உடலைக்காக்கும் கற்பங்களை உடையவன் என்று இளங்கோவடிகள் கூறுகிறார். { இந்திரன் இயற்றியது ஐந்திரம் என்பதற்கு எந்த இந்திய இலக்கியத்திலும் சான்றில்லை. நூலாசிரியரின் பெயரே நூலின் பெயராவதைப் போல, ஐந்திரன் என்பது இந்திரன் என மறுவியிருக்கலாம். }
இந்திய மருத்துவ முறைகளில் தமிழ் மருத்துவத்தில் மட்டுமே கற்ப மருந்துகள் காணப்படுகின்றன.
- ‘அஞ்சு யுகத்தில் அழியாமல் காயந்தான்
- மிஞ்சிய கற்பம் விளம்பினோம் நூற்றெட்டு’ - திருமந்.
உடல் அழியாதவாறு உடலைக்காக்கும் கற்பங்கள் – 108 கூறப்பட்டுள்ளன. கற்பங்கள் என்றால் ஒன்று இரண்டு போதுமே. ஏன் நூற்றெட்டுக் கற்பங்கள் கூறப்பட்டுள்ளன என்றால், மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விண்மீன் நாளில் பிறப்பர். அம்மீன்கள் ஒவ்வொன்றும் நான்கு கால்களைக் கொண்டுள்ளன. அவை {27 x 4 = 108} 108 கால்கள் ஆகின்றன. மனிதர்கள் 108 பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு பிரிவினர்க்கும் ஒவ்வொரு கற்பம் என நூற்றெட்டுக் கற்பங்கள் கூறப் பட்டுள்ளன.
இது அண்டம் பிண்டம் ஆகிய இரண்டிற்கும் உள்ள தொடர்பைக் குறிப்பதாகும்.
காலக்கணியர்கள்
தொகு- ‘மறுவில் செய்தி மூவகைக் காலமும்
- நெறியின் ஆற்றிய அறிவன்’ - தொல்.புறத்.20
என்பதால், தொல்காப்பியக் காலத்துக்கு முன் மூவகைக் காலத்தையும் ஆய்ந்து கூறும் காலக் கணிதர்கள் இருந்துள்ளனர். அறிவன் என்னும் சொல்லுக்குக் கணியன் என்றும் சித்தன் என்றும் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் பொருள் கூறுகின்றனர்.
காலத்தை அறிவது தமிழ் மருத்துவத்தின் சிறப்புகளில் ஒன்றாகும். காலத்தை அறிந்த பின்பே மருத்துவம் பார்க்க வேண்டுமென்று விதியும் வகுத்துள்ளது.
- ஆரப்பா நாலுலட் சணமும் பாரு
- ‘ஆள்பாரு நாள்பாரு குணமும் பாரு
- நோய்பாரு தேசபேதங்கள் பாரு
- நிலைபாரு கிரக வுச்சம் நீச்சம் பாரு
- பேர்பாரு இவனை நீ பிறகு பாரு’ - அகத்தியர்.பி.80. செய்.36
என்றும்,
- ‘உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
- கற்றான் கருதிச் செயல்’ திருக். 949
என்றும் உரைக்கின்றன.
உணவு
தொகுஉணவு உடலைப் பேணிப் பாதுகாக்கும். உணவு இன்றேல் உடம்பு இல்லை.10 (புறநா. 18;19-20)
உணவின் சுவையையும் அதன் அளவையும் அறிந்தே ஆறு சுவை உணவை ‘அடிசில்’ (கற்பியல். 1092) என்கிறது. அவ்வகை உணவுப்பொருள்கள் எட்டுவகை என்றும் குறிப்பிடுகிறது.11 (தொல்.பொருள். 1579)
உணவுப்பொருள் உடலைக் காக்கும் என்றாலும் அதுவே நோயையும் வருவிக்கும். உணவுப்பொருளின் சுவையையும் அதன் குணத்தையும் அவற்றின் அளவையும் உணர்ந்தே அறுசுவை உணவை உட்கொண்டுள்ளனர்.12 (சிலப்ப. உரை.பக்.102-103) எனத் தெரிகிறது.
தமிழ் மருத்துவம் உணவின் சுவையை மட்டும் அறிந்திராமல் மருத்துவத்தில் பயன்படுகின்ற மூலிகை, சரக்கு, பாடாணம், மணிகள் ஆகியவற்றின் சுவையையும் நோயின் சுவையையும் அறிந்திருக்கிறது.
மாறணக்கலை (Alchemy)
தொகு- ‘அகரம் முதல் னகரம் இறுவாய்’ தொல். எழுத்து. 1.
அகரம் என்னுஞ் சொல்லுக்கு இதள் (Mercury) என்று பொருள். தமிழ் மருத்துவர்கள் அறிந்த மாறணக்கலையில் அகரம் இன்றியமையாதது.
சித்தர்கள் அகரமாகிய பாதரசத்தைப் பயன் படுத்தி வகார வித்தை (Alchemy) செய்வதில் வல்லவர்கள் என்று உலக மருத்துவ வரலாறு குறிப்பிடுகிறது. அவர்கள் செய்த செயற்கைப் பொன் உயர்ந்த வகையைச் சார்ந்தது.
நான்மணிக் கடிகை என்பது புல்லன் (சாதரூபம் – 708 ), கிளிச்சிறை (108), ஆடகம் (500), நாவல் (சாம்பூநதம் – 1008)) என்னும் நான்கு வகைப் பொன்மணிகளாலான கடிகையாகும்.13 (செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் Vol. II: part II )
- ‘சாத ரூபங் கிளிச்சிறை யாடகம்
- சாம்பூ நதமென வோங்கிய கொள்கையிற்’ (சிலப்ப. 2:14:201 – 202)
தற்காலத்தில் வழங்கி வருகின்ற பொன் பத்தரை மாற்று பொன் என்பது குறிப்பிடத்தக்கது.
அகர ஒலியும் உகர ஒலியும் ஒன்று கூடினால் ஓகாரமாகும். அந்த ஓகாரம் உலகம் முழுவதும் பரவி உள்ளத்தினின்று எழுகின்ற எல்லா எழுத்துகளுமாய் ஒலிக்கும் என்று மந்திரம் கூறுகிறது.
- ‘அகர உகரம் ஔகாரம் ஆகும்’ தொல்.எழுத்.55
என்று தொல்காப்பியம் உரைக்கக் காணலாம்.
அகரத்தைச் சிவன் என்றும் உகரத்தைச் சத்தி என்றும் குழூஉக்குறியால் குறிப்பிடுவர். சிவனைப் பாதரசம் என்றும், சத்தியை உப்பு என்றும் மருத்துவம் மறைபொருளாகக் குறிக்கிறது.14 (திருமந்.1728)
- ‘வெறிகமழ் தண்புறவின் வீங்கி யுகளும்
- மறிமுலை யுண்ணாமை வேண்டிப் – பறிமுன்கை
- அ உ அறியா அறிவில் இடைமகனே
- நொஅலையல் நின்னாட்டை நீ’. - யா.கா.37 மேற்கோள்.
என்று இடைக்காடர் சுட்டுகின்றார்.
அகரம் எட்டாகவும் உகரம் இரண்டாகவும் எண்ணப்படுகின்றன.15
எட்டும் இரண்டும் பத்தாகும். பத்து என்பது முத்தி நிலையைக் குறிக்கும் குறியீடாகும்.
அகரம் உகரம் ஆகிய இரண்டும் மருந்து, வாதம், ஓகம், ஞானம் ஆகிய நான்கு நிலைகளிலும் முதன்மையாகத் திகழ்கின்றன.
கொடிநிலை, கந்தழி, வள்ளி
தொகு- ‘கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
- வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
- கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே’ - தொல்.புறத். 1034
சிந்துவெளி அகழாய்வில் கண்டெடுக்கப் பெற்ற முத்திரைகளில், தொல்காப்பியம் குறிப்பிடும் கொடிநிலையும் ஒன்றாகும். அம்முத்திரையைச் ‘சகம்பரி’ என அழைக்கப்படும் என்றும் அதுவே ‘லதா சாதானம்’ என்றும் கூறப்படுகிறது.
தந்திர வழிபாட்டின் குறியீடாகிய ‘லதா சாதனத்தின்’ அடையாளமே சகம்பரி எனத் தேவி பிரசாத் (lbid.,pp, 301-302 ) உறுதி படுத்துகிறார்.
லதா – கொடி; சாதானம் – நிலை = கொடிநிலை.
தொகுதந்திர வழிபாட்டின் தொன்மைக்கால அடையாளமாகிய கொடிநிலையைத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றதால், தொல்காப்பியக் காலத்துக்கு முன், தந்திர வழிபாட்டு மரபினராகிய தமிழ் மருத்துவச் சித்தர்கள் வாழ்ந்தனர் என்பது உறுதி.
கந்தழி
தொகு‘கந்தழி; என்பது அண்டத்தின் தோற்றம் குறித்த குறியீடாகும். இக்குறியீடும் தந்திரச் சடங்கு முறையின் குழூஉக் குறியீடாகப் பயன் பட்டுள்ளது.16 (சங்க காலத்தில் ஆசீவகமும் ஐயனார் வழிபாடும். பக்.321)
திருமாலவனின் வலக்கரத்தில் அமைந்த சின்னம் கந்தழியைக் குறிக்கிறது. இது அண்ட வெளித் தோற்றாத்தைக் குறிக்கும்.
கொடிநிலை – கீழ்த்திசையில் நிலைபெற்றுத் தோன்றும் வெண்சுடர். கந்தழி - பற்றுக் கோடின்றி அருவாகித் தானே நிற்கும் தத்துவம் கடந்த பொருள். வள்ளி - தண்கதிர் மண்டலம்
என்று நச்சினார்க்கினியர் உரைக்கின்றார்.
நோய் பற்றிய சொற்குறிப்புகள்
தொகுநோயின் குணத்தைக் கண்களால் காண முடியாது. கருத்தினால் மட்டுமே அறிய முடியும் என்னும் செய்தியைப் பதிவு செய்கிறது.
- “நோயும் வேட்கையும் நுகர்வும் என்றாங்கு
- ஆவயின் வரூஉங் கிளவி யெல்லாம்
- நாட்டிய மரபின் நெஞ்சுகொளின் அல்லது
- காட்ட லாகாப் பொருள என்ப’ - பொருளியல். 53.
‘நோய்மருங்கு அறிநர்’ என்று மருத்துவரைக் குறிப்பால் உணர்த்துகிறது.
- வாயுறை’ தொல்.பொருள். 417.
வாயுறை என்பது வாய் வழியே அருந்துகின்ற மருந்து என்னும் பொருள் தரும். உறை என்பது மருந்தைக் குறிக்கும். ‘உறுநோய் தீர்க்கும் மருந்துறை யென்ப’ – (பிங்கல நிகண்டு. 2788)
ஒப்புறை, எதிருறை, கலப்புறை ஆகிய மூன்றும் தமிழ் மருத்துவத்தில் மருத்துவ முறைகளாகும்.
- ‘அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி’ (தொல்.சொல். உயிரி. 794.)
- ‘பேஏய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும்’ (தொல்.பொருள்.புறத்.77.)
தெருமரல் என்பது உள்ளத்தின் சுழற்சியை, மன இறுக்கத்தைக் குறிக்கிறது. போய் ஓம்பிய என்பதும் மன நோயின் குறிப்பாகும். மன நோய் மதுத்துவம் தமிழ் மருத்துவத்தில் சிறப்பு மருத்துவம் குறிப்பிடத்தக்கது.
- ‘பையுள் சிறுமையும் நோயின் பொருள’ தொல்.சொல்.உயிரி. 824.
பையுள் என்பது வலியைத் தருகின்ற நோயைக் குறிக்கும் சொல்லாகும்.
- ‘வயா என்கிளவி வேட்கைப் பெருக்கம்’ தொல்.சொல்.உயிரி. 854.
வயா என்பது கருவுற்றிருக்கும் வேளையில் வரும் நோயைக் குறிக்கிறது. இந்நோய் விலங்கு, தாவரம், பெண் ஆகியோருக்கு ஏற்படும் நோயாகும்.
- ‘மூப்பே பிணியே வருத்தம் மென்மையொடு
- யாப்புற வந்த இளிவரல் நான்கே’ தொல்.மெய்ப். 6.
இளிவரல் நான்கும் நோயின் குறிப்பாகும்.
பெருந்திணை
தொகுபெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகளாகக் கூறப்படுகின்றவை இருபதும் நோயுற்றவருக்கு ஏற்படும் மனநிலையைக் குறிப்பவையாக இருக்கின்றன.17
வீட்டு விலக்கம்
தொகுவீட்டு விலக்கம் என்னும் மூன்று நாளில் ஆண் பெண் இருவரும் கூடி கருவமைந்தால் அந்தக்கரு கூன், குருடு, செவிடு, பேடு போன்றவற்றில் ஒன்றாகப் பிறக்கும் பிறக்கும் குழந்தை அமையும் என்பதால்,
- ‘பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்
- நீத்தகன் றுரையார் என்மனார் புலவர்’ - தொல்.பொருள்.1133 (46)
வீட்டு விலக்குடைய மூன்று நாளும் விலகி இரு என்பதும் மருத்துவச் செய்தியே ஆகும்.
இக்காலத்தில் உயிர்க்கொல்லி மருந்தாகப் பயன்படுத்தப் படுகின்ற வேம்பு சிந்துவெளி நதிக்கரை நாகரிக மக்களிடத்திலும் காணப்பட்டுள்ளது. வேப்பிலையைச் சிறந்த மருந்தாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர் என்று அறிஞர் தீட்சிதர் கூறுகிறார்.18 (சிந்துவெளி தரும் ஒளி. பக்.84)
- ‘வேம்பும் கருவும் போல வெஞ்சொல்’ தொல்.செய்யுளியல். 111.
தமிழகத்தில் வேம்பும் கடுக்காயும் பயன்படுத்தப்பட்டிருந்ததைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறதைக் காணலாம்.
போர்க்கள மருந்து
தொகுபோருக்குப் போகும் வேந்தர்கள் பூச்சூடிச் செல்வார்களாம். (தொல்.புறம்.5) சேரர் பனம்பூவும் சோழர் ஆத்திப்பூவும் பாண்டியர் வேப்பம்பூவும் போர் மறவர்கள் வெட்சி, வஞ்சி, தும்பை, வாகை, காஞ்சி ஆகிய பூக்களைச் சூடிச் சென்றதன் காரணம் என்ன?
இக்காலத்தில், தொழிற்கூடங்களில் முதலுதவிப் பெட்டி இருப்பதைப்போல வேந்தர்களும் மறவர்களும் சூடிச் செல்லும் பூக்கள் போர்க்களத்தில் அவசர சிகிச்சைக்காகப் பயன்படுத்தப் படுபவை யாகும்.19
இராவணன்
தொகுஇராவணன் பெயரிலுள்ள மருத்துவ நூல்களில் சில சிங்கள மொழியின் வழக்கில் இருந்து வருகின்றன. பதினைந்தாம் நூற்றாண்டளவில் சிங்களத்தில் எழுதப்பட்ட வைத்திய சிந்தாமணி பைசாஜ்ஜ சங்கிரகம் ( Vaidya cintamani Bhaisadya sangrahava ) என்னும் நூல் வைத்திய சிந்தாமணி என்னும் தமிழ் மருத்துவ நூலைத் தழுவி எழுதப் பட்டதாகும்.
இராவணனின் நாடிப் பரிட்சை (Nadi Pariksha), அர்க்கப் பிரகாசம்(Arka Prakashata ), ஒடிஷா சிகிட்ஷா (Uddisa Chiktsaya ), ஒடியா சிகிட்ஷா (Oddiya Chikitsa), குமார தந்த்ரயா (Kumara Tantraya ), வாடின பிரகாரனயா (Vatina Prakaranaya ) என்னும் நூல்கள் சிங்கள மொழியில் இயற்றப்பட்டு பின்னர் சமஸ்கிருத மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டன என்று (சிங்) கள எனும் இயக்கத்தைத் தோற்றுவித்த முனிதாச குமாரதுங்க கூறியுள்ளார்.
தாஸிஸ் இராவணன் என்னும் பெயருடையவன் அரசனாக, இராவணன் ‘அங்கவெட்டு’ எனப்படும் வர்மக்கலை, மருத்துவக்கலை, இசைக்கலை போன்ற பல கலைகளில் சிறந்து விளங்கியவனாக விளங்கினான் என்று சிங்கள மொழியின் தொன்மை நூலாகிய இராஜவலியா மற்றும் இராவண வலியா என்னும் நூல்கள் புகழ்ந்துரைக்கின்றன.
இராவணன் என்று பதினோரு பேர் இருந்துள்ளனர். அவர்களில் நள இராவணன், மனு இராவணன், புனு இராவணன், தாஸிஸ் இராவணன் என்பவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்களில் தாஸிஸ் இராவணன் என்பவனுக்குப் பத்துவகையான ஆற்றல்களுடன் பத்து நாடுகளை ஆண்டான். அதனால் அவன் பத்துதலை இராவணன் என்று அழைக்கப்பட்டான் என்று குறிப்பிடுகிறது.
மன்னன் தாஸிஸ் இராவணன் கி.மு. 2554 – 2517 என்னும் காலத்துக்கு உரியவன். இவன் சிங்கள இனத்தின் பழங்குடி இனத்தவன். அங்கவெட்டு வீரன். மண்டோதரியின் கணவன் என்று சிங்கள வரலாறு கூறுகிறது.
இந்திய – ஆரியர்களின் கலப்பினத்தவர்களான சிங்களவர்கள் வட இந்தியாவிலிருந்து (ஒரிசா) இலங்கைக்குக் குடிபெயர்ந்ததே கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் தான். அவ்வாறிருக்கும் போது சுமார் 5000 ஆண்டுக்கு முன் வாழ்ந்ததாகக் கூறப்படும் இராவணன் சிங்களன் என்றும் அவன் சிங்கள மொழியில் நூல் இயற்றினான் என்றும் சிங்கள இனத்தின் பழங்குடியைச் சார்ந்தவன் என்றும் கூறுகின்ற சிங்களர் வரலாறு, வரலாற்றுப் புரட்டு என்பது தெளிவாகிறது.
இரச சாஸ்திரம் என்னும் தமிழ் மருத்துவ நூலை சமஸ்கிருத்த்தில் எழுதி வைத்துக் கொண்டு இரச சாஸ்திரம் தங்கள் சாஸ்திரம் என்று கூறிக் கொள்கின்ற ஆயுர் வேதர்களுக்கும் சிங்களவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. ஏனென்றால், இந்திய – ஆரியக் கலப்பினால் தோன்றியவர்கள் சிங்களர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரியர்களும் சிங்களர்களும் இலங்கைக்குச் செல்லுமுன்பே ஆயுர்வேதம் இலங்கைக்கு எப்படி வந்தது? 5000 ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையில் இருந்த மருத்துவம் ஆயுள்வேதம். அதுவே தமிழ் மருத்துவத்தைக் குறிக்கும் பழஞ்சொல் என்பதற்குச் சிலப்பதிகாரம் சான்றாகிறது.
சிகண்டியார்
தொகுஇடைச் சங்கப் புலவர்களி சிகண்டியாரும் ஒருவர். சிகண்டியாரும் தொல்காப்பியர் காலத்தவர் என்பர். இவரை, ‘இசை நுணுக்கமுடைய சிகண்டியார்’ என்று அடியார்க்கு நல்லார் குறிப்பிடுவதால் ‘இசை நுணுக்கம்’ சிகண்டியார் இயற்றிய நூல் என்பது தெளிவு. மறைந்த சங்க நூல்களில் இசை நுணுக்கமும் ஒன்றாகும். சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார் உரைமேற்கோள்களில் (சிலப்ப. 1: 3: 26) இசை நுணுக்கச் செய்யுட்கள் காணப்படுகின்றன. இச்செய்யுட்கள் தமிழ் மருத்துவம் கூறுகின்ற உடலியல் கருத்துகளைக் கொண்டிருக்கின்றன.
இடைச் சங்க காலத்து நூல்களாகிய தொல்காப்பியம் இசை நுணுக்கம் ஆகிய இரண்டு நூல்களிலும் காணக்கூடிய மருத்துவக் குறிப்புகளால், இடைச் சங்க காலத்திலேயே தமிழ் மருத்துவம் வளர்ந்த நிலையைக் கொண்டிருந்தது எனலாம்.
இசை நுணுக்கம் கூறும் கருத்துகள் வருமாறு:
தொகு- 1. உடம்புக்கு முதலாக உடையவை பூதங்கள். அவை மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியன என்பதைப் பாண்டிய மன்னனே அறிந்து கொள். அ
- 2. மண் ஐந்து பயனையும் நீர் ஐந்து பயனையும் தீ மூன்று பயனையும் காற்று இரண்டு பயனையும் வான் ஒரு பயனையும் கொண்டுள்ளன. ஆ
- 3. ஐந்து பூதங்களின் கூட்டமே உடம்பாகும். பூதங்கள் ஐந்தும் தத்தம் தன்மை நீங்கி மண் உடம்பாகவும் நீர் வாயாகவும் தீக் கண்ணாகவும் காற்று மூக்காகவும் ஆகாயம் செவியாகவும் நின்று உடம்பாகும். இ
- 4. பசி, சோம்பு, மைதுனம், காட்சி, நீர், வேட்கை என்பன தீயின் குணங்களாகும். ஈ
- 5. வெகுளி, மதம், மானம், ஆங்காரம், உலோபம் என்பன ஆகாயத்தின் குணங்களாகும். உ
- 6. வாயுக்கள் பத்து : பிரான்ன், உதான்ன், வியான்ன், சமான்ன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தன்ஞ்செயன் என்பன. ஊ
- 7. நாடிகள் பத்து: இடை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, அத்தி, சிங்குவை, சங்கினி, பூடா, குகு, கன்னி, அலம்புடை என்பன. எ
- 8. பூதம்-5, பொறி- 5, புலன் – 5, வாதனை – 25, வாயு – 10, நாடி – 10 ஆகிய 60 உம் உடம்புக்கு வித்தாகும். இவ்வுடற்கருவிகள் முத்தியை அடைவதற்கு ஏதுவாக அமையும். ஏ
- 9. இடைகலை, பிங்கலை ஆகிய இரண்டும் மேனோக்கி யேறி இரண்டு மூக்கின் வழியே வெளியாகும். இதனைப் பிராண வாயு எனவறிக. அபானம் மல மூத்திரத்தைப் போக்குவிக்கும். உதானம் கண்டத்தானத்தில் நிற்கும். சமான வாயு அறுவகைச் சுவையையும் அன்னத்தையும் பிரித்து எழுவகைத் தாதுவின் கண்ணும் கலப்பிக்கும். ஐ
- 10. கூர்மம், இமைப்பும் விழிப்பும் உறக்கமும் உணர்ச்சியும் உண்டாக்கும். நாகன், விக்கல் இடுவிக்கும். கிருகரன் கோபத்தை ஏற்படுத்தும். தேவதத்தன் உடம்பு எரிப்பைச் செய்யும். ஒ
- 11. தனஞ்செயன் பிராணன் போன பின்னும் உடம்பை விடாதே நின்று மூன்று நாள் உதிப்பித்து உச்சந்தலையின் பின்புறத்தில் மூன்று நெற்கிடை அளவி வெடித்து அவ்வழியே வெளியே போகும். ஓ
- 12. உடம்பின் அளவு தன் கையால் தொண்ணூற்றாறு அங்குலம். இதனுள் மேலே நாற்பத்தேழரை அங்குலமும் கீழே நாற்பத்தேழரை அங்குலமும் வொட்டு நடுநின்ற ஓரங்குலம் மூலாதாரம் இருக்குமிடமாகும். இதன் மேல் நால்விரல் விட்டுப் பின்னாதாரம் நின்றியங்குமிடமாகும். ஔ
என உடம்பின் இயல்புகள் உரைக்கப் படுகின்றன.
இடைச் சங்க காலத்தில் தோன்றிய மற்றுமொரு இலக்கண நூல் அவிநயனார் எழுதிய அவிநயம் ஆகும். இந்நூலும் முழுமையாகக் கிடைக்கவில்லை. சிற்சில நூற்பாக்கள் மட்டும் கிடைக்கின்றன.
அவிநயம் என்பது நாடக மாந்தர் குறிப்பால் உணர்த்தும் முகக்குறிப்பாகும். இது இருபத்து நான்கு வகைப்படும். அவை வெகுண்டோன் அவிநயம், ஐயமுற்றோன் அவிநயம், சோம்பினோன் அவிநயம், களித்தோன் அவிநயம், உவந்தோன் அவிநயம், அழுக்காறுடையோன் அவிநயம், இன்பமுற்றோன் அவிநயம், தெய்வமுற்றோன் அவிநயம், ஞஞ்ஞையுற்றோன் அவிநயம், உடன்பட்டோன் அவிநயம், உறங்கினோன் அவிநயம், துயிலுணர்ந்தோன் அவிநயம், செத்தோன் அவிநயம், மழைபெய்யப்பட்டோன் அவிநயம், பனித்தலைப்பட்டோன் அவிநயம், வெயிற்றலைப்பட்டோன் அவிநயம், நாணமுற்றோன் அவிநயம், வருத்தமுற்றோன் அவிநயம், கண்ணோவுற்றோன் அவிநயம், தலைநோவுற்றோன் அவிநயம், அழற்றிறம்பட்டோன் அவிநயம், சீதமுற்றோன் அவிநயம், வெப்பமுற்றோன் அவிநயம், நஞ்சுண்டோன் அவிநயம் என்பன நோயுற்றோரின் குறிப்பை உணர்த்தும் இலக்கணமாக அமைகின்றன. நோயாளர்கள் இவ்வகையாகத் தோன்றுவர் என்றுரைக்கப் பட்டிருப்பதனால் அவிநயனார்க்கு மருத்துவ அறிவு இருந்திருக்க வேண்டும் என்பது வெளிப்படை. ஃ
‘கலைக்கோட்டுத் தண்டார்’ என்னும் சங்க காலத்து முனிவர் இயற்றிய நூல்கள் ஜெர்மனி நாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், தமிழ் மருத்துவ இலக்கியச் சுவடிகள் சுமார் 87 நாடுகளின் நூலகங்களில் இருப்பதற்கான சான்றுகளை உலக நாடுகளின் நூலக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புலிப்பாணிச் சித்தர்
தொகுகலியாண்டு தமிழரின் தொடராண்டு முறையாக விளங்கியது. கலியாண்டு கி.மு.3102 இல் தொடங்குகிறது. இக்கலியாண்டு 205 இல் புலிப்பாணிச் சித்தர் வாழ்ந்தார் என்னும் குறிப்பு (புலிப்பாணி வைத்தியம் – 500. பா.145) காணப்படுவதால் இவர் கி.மு.2897 இல் வாழ்ந்தார் எனலாம். புலிப்பாணியின் ஆசிரியர் போகர், பழனியில் முருகனின் நவபாடாணச் சிலையை நிறுவியவர். இக்காலத்தைப் பழனியிலுள்ள முருகள் சிலையை நிறுவிய காலமாகவும் கருதலாம்.
கோரக்கர் சித்தர்
தொகுசோழநாட்டில் காவிரி நதிக்கரைக்கு அருகில் அமைந்துள்ள பரூர்ப்பட்டியில், பரிவிருத்தி நானூற்றெட்டு, ஐப்பசித் திங்கள், தசமி திதி, பரணி நாளில் சமாதி அடைந்ததாகக் குறிப்பிடப்படுகிறார். இவ்வாண்டைக் கலியாண்டாகக் கொண்டால் கி.மு. 2674 உம், கொல்லம் ஆண்டாகக் கொண்டால் கி.பி. 1233 ஆகிறது. கோரக்கர் திருமூலரையும் அகத்தியரையும் குறிப்பிடுவதால் கொல்லம் ஆண்டாகக் கருத முடியாது. எனவே, கோரக்கர் கி.மு. 2694 ஆம் ஆண்டு என்று கொள்வதே சரியாக இருக்கும்.
மயன்
தொகுஇலங்கை வேந்தன் இராவணனின் மனைவி மண்தோதரியின் தந்தை மயன். இவனின் சீடர்கள் பன்னிருவர். அவர்களில் ஒருவரே மூலர் என்று ‘வைசம்பாயணம்’ (பக்.118) கூறுகிறது. மேலும், மயன் மூலிகைச் செந்நூல் என்னும் நூலுக்கு ஆசிரியர் என்றும் கூறுகிறது. காவிரிப்பூம் பட்டினத்தில் தொடிதோட் செம்பியனால் நடத்தப் பெற்ற இந்திர விழாவில் பொன்னாலும் மணியாலும் நியமிக்கப் பெற்ற தோரணவாயில் பட்டிமண்டபம் ஆகியவை மயனால் நியமித்துக் கொடுக்கப்பட்டவை என்று சிலப்பதிகாரம் கூறக்காணலாம். (சிலப்ப.1: 5: 100 - 110)
அகத்தியர் ரிக் வேதத்திலும் (C.1200 – 900 B.C.E) மணிமேகலையிலும் சிலப்பதிகாரத்திலும் (500 C.E) குறிப்பிடப்படுகிறார். அகத்தியர் முப்பு, செந்தூரம், பற்பம் போன்ற மருந்துகளைச் செய்தார் என்று குறிப்பிடப்படுகிறது. (Centūram is a red chemical preparation, and paŸpa is a white powder of metallic oxides. Sambasivam Pillai, Tamil-English Dictionary of Medicine..)
திருமூலர்
தொகுதென்னகத்தில் சித்தர் மரபைத் தோற்றுவித்தவர். கிடைக்கப் பெற்ற தமிழ் மருத்துவ நூல்களில் திருமூலர் பெயரால் வழங்குகின்ற நூலே தமிழ் மருத்துவத்தை முழுமையாகக் கூறும் நூல்களாக விளங்குகின்றன. திருமந்திரம் கி.மு. முதல் நூற்றாண்டைச் சார்ந்த்து என்று T.V.சாம்பசிவம் பிள்ளை கருதுகிறார். (Sambasivam Pillai, Tamil-English Dictionary of Medicine, 4: 1116.)
ஆனால், தமிழ் மருத்துவ முறைகள் 10000 முதல் 4400 B.C.E ஆகிய காலங்களில் தோன்றியதாக T.V.சாம்பசிவம் பிள்ளை குறிப்பிடுகிறார். (Sambasivam Pillai, Tamil-English Dictionary of Medicine, 3: 2089..)
தொல்காப்பியத்துக்கு முன் தமிழ் மருத்துவம் சிறந்த நிலையில் இருந்துள்ளது என்பதற்கு தொல்காப்பியமே சான்றாக விளங்குகின்றது.
தொல்காப்பியத்துக்குப் பின்
தொகுதமிழ் இலக்கிய நூல்களின் அளவைவிடவும் இரு மடங்குக்கும் அதிகமான நூல்கள் தமிழ் மருத்துவ நூலாகக் கிடைக்கின்றன.
தமிழ் இலக்கியத்தைப் போலவே காப்பியம், காவியம், சிந்தாமணி, சூடாமணி, கல்லாடம், திருமந்திரம், சதகம், கரிசல், உலா, பிள்ளைத் தமிழ், பாரதம், நிகண்டு, திருப்புகழ், கோவை, தண்டகம், கற்பம், சூத்திரம், வைசூரி, நயனவிதி, கிறுக்குகள், பாலவாகடம், தலைநோய், கண்நோய், வல்லாதி, பரிபூரணம், வாதநூல், வர்மநூல், திறவுகோல், பரிபாஷை, சரக்குவைப்பு, கலைஞானம், பஞ்சமித்திரம், பஞ்ச ரத்தினம், சேகரப்பா, ஞானவெட்டியான், மாட்டுவாகடம், யானை வாகடம், குதிரை வாகடம், தரு, குடிநீர், வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, நொண்டி, சிந்து, கும்மி, பள்ளு போன்ற பல நூல்கள் காணக் கிடைக்கின்றன.
துணை நூல்கள்.
தொகு- 1. தொல்காப்பியம்
- 2. பஞ்சமரபு
- 3. திருமந்திரம்
- 4. மேகநோய் நிதானம்
- 5. சிலப்பதிகாரம்
- 6. அகத்தியர் பின். 80
- 7. திருக்குறள்
- 8. யாப்பருங்கலம் / காரிகை
- 9. சங்க காலத்தில் ஆசீவகமும் ஐயனார் வழிபாடும்
- 10. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்
- 11. சாம்பவிவம் பிள்ளை மருத்துவக் கலைக்களஞ்சியம்
- 12. திராவிடக் கட்டிடச் செந்நூல்
- 13.சிற்பச் செந்நூல்
- 14.தமிழில் மருத்துவ இலக்கியங்கள்
- 15.தமிழ் மருத்துவ வரலாறு
குறிப்புகள்:
- 1. ‘துய்ய வுடம்பு தொண்ணூற்றா றங்குலியா
- மெய்யெழுத்து நின்றியங்கு மெல்லத்தான் – வையத்
- திருபாலு நாற்பதோ டேழ்பாதி நீக்கிக்
- கருவாகும் ஆதாரம் காண். - பஞ்சமரபு. 42.
- 2. ‘பத்தும் இரண்டும் பகலோன் உயிர்கலை’
- பத்தினோடு ஆறும் உயர்கலை பான்மதி
- ஒத்தநல் அங்கியது எட்டெட்டு உயிர்கலை
- 3. ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள்
- ஆகின்ற ஈரெட்டொடு ஆறுஇரண்டு ஈர் ஐந்துள்
- ஏகின்ற அக்கலை யெல்லாம் இடைவழி
- ஆகின்ற யோகி அறிந்த அறிவே - திருமந். 852.
- 4. உடம்பின் விருப்பும் வெறுப்பும்:
- வசனம், கவனம், தானம், ஆனந்தம், விசர்க்கம், தாரஏடணை,
- புத்திர ஏடணை, தன ஏடணை ஆகியவை
- 5. இட வாய்பாடு
- 8 அணு கொண்டது 1 தேர்த்துகள்
- 8 தேர்த்துகள் கொண்டது 1 இம்மி
- 8 இம்மி கொண்டது 1 எள்ளு
- 8 எள்ளு கொண்டது 1 நெல்
- 8 நெல் கொண்டது 1 விரல்
- கால வாய்பாடு
- 8 கணம் கொண்டது 1 லவம்
- 8 லவம் கொண்டது 1 காஷ்டம்
- 8 காஷ்டம் கொண்டது 1 நிமிடம்
- 8 நிமிடம் கொண்டது 1 துடி
- 8 துடி கொண்டது 1 குரு
- 6. ‘துறவர்சார் பில்லோர் நீத்தோர் துய்த்தோர் முனைவர் மெய்யர்
- அறவர் மாதவர் கடிந்தோர் அந்தணர் அடிகள் ஐயர்
- உறுவர் தாபதர் விளங்கும் இருடிகள் உயர்ந்தோர் யோகர்
- அறிஞர் பண்ணவர் சிறந்த அருந்தவர் முனிவராமே’ - சூடாமணி. செய்.2
- 7. (திருமந்திரம். 552)
- 8. மணிகடல் யானை வார்குழல் மேகம்
- அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்
- தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்
- பணிந்தவர்க் கல்லது பார்க்க வொண்ணாதே - திருமந்திரம். 606
- 9. A.R.Hornle. Ajivika, Encyclopaedea on Religion and Ethics. On Ajivika. P.260
- 10. ‘உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
- உண்டி முதற்றே உணவின் பிண்டம்’ - புறநா. 18;19-20
- 11. ‘மெய்தெரி வகையின் எண்வகை உணவின்
- செய்தியும் வரையார் அப்பாலான’ - தொல்.பொருள். 1579
- 12. ‘உவர்ப்பின் கலக்கமாம் கைப்பின் வருங்கேடு
- துவர்ப்பின் பயமாம் சுவைகள் – அவற்றில்
- புளிநோய் பசிகார்ப்புப் பூங்கொடியே தித்திப்பு
- அளிபெருகு மாவ தரங்கு’ - சிலப்ப. உரை.பக்.102-103
- 13. புல்லன் (சாதரூபம்) 708 மாற்றினைக் கொண்ட பொன்.
- கிளிச்சிறை 108 மாற்றினைக் கொண்ட பொன்.
- நாவல் (சம்புநதம்) 1008 மாற்றினைக் கொண்ட பொன்.
- ஆடகம் 500 மாற்றினைக் கொண்ட பொன். - (செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் Vol. II: part II)
- 14. ‘ஆரும் அறியார் அகாரம் அவன் என்று
- பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி
- தாரம் இரண்டும் தரணி முழுதுமாய்
- ஊறி எழுந்திடும் ஓசைய தாகும்’ திருமந். 1728
- ‘அறைகுவேன் அகரமது சிவமதாச்சு
- ஆச்சரியம் உகரமது சத்தியாச்சு’ சுந்தரானந்தர் ஞானம்.
- 15. ‘எட்டும் இரண்டும் இனிது அறிகின்றிலர்
- எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
- எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப்
- பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே - திருமந்.73
- 16. சங்க காலத்தில் ஆசீவகமும் ஐயனார் வழிபாடும். பக்.321
- 17. இன்பத்தை வெறுத்தல், துன்பத்துப் புலம்பல்,
- எதிர்பெய்து பரிதல், ஏதம் ஆய்தல்,
- பசியட நிற்றல், பசலை பாய்தல்,
- உண்டியிற் குறைதல், உடம்பு நனிசுருங்கல்,
- கண்துயில் மறுத்தல், கனவொடு மயங்கல்,
- பொய்யாக் கோடல், மெய்யே என்றல்,
- ஐயம் செய்தல், அவந்தமர் உவத்தல்,
- அறன் அழித்துரைத்தல், ஆங்கு நெஞ்சழிதல்,
- எம்மொழியாயினும் ஒப்புமை கோடல்,
- ஒப்புவழி உவத்தல், உறுபெயர் கேட்டல்,
- நலத்தக நாடின் கலக்கமும் அதுவே -தொல்.பொருள்.1216.
- 18. சிந்துவெளி தரும் ஒளி. பக்.84
- 19. வெட்சி – குருதியை அடக்கும்.
- வஞ்சி - களைப்பைப் போக்கி இடுப்பை உறுதிப்படுத்தும்
- தும்பை - மயக்கத்தைத் தெளிவிக்கும்
- வாகை - புண்களை ஆற்றி காமத்தைப் பெருக்கும்
- காஞ்சி - காமத்தை அடக்கும்
- பனை - சுரத்தையும் நீர்க்கட்டையும் போக்கும்
- ஆத்தி - வேள், வாள், ஈட்டி புண்ணைக் குணப்படுத்தும்
- வேம்பூ - மூர்ச்சையைப் போக்கும்.
- 20. இராவணன் இயற்றிய நூல்கள் என அறியப்பட்டுள்ள நூல்கள் விபரம் வருமாறு:-
- 1. உடற்கூறு நூல்
- 2. மலை வாகடம்
- 3. மாதர் மருத்துவம்
- 4. இராவணன் – 12000
- 5. நாடி, எண்வகை பரிசோதனை நூல்
- 6. இராவணன் வைத்திய சிந்தாமணி
- 7. இராவணன் மருந்துகள் - 12000
- 8. இராவணன் நோய் நிதானம் - 72 000
- 9. இராவணன் – கியாழங்கள் – 7000
- 10. இராவணன் வாலை வாகடம் – 40000
- 11. இராவணன் வர்ம ஆதி நூல்
- 12. வர்ம திறவுகோல் நூல்கள்
- 13. யாழ்பாணம் – மூலிகை அகராதி
- 14. யாழ்பாணன் – பொது அகராதி
- 15. பெரிய மாட்டு வாகடம்
- 16. நச்சு மருத்துவம்
- 17. அகால மரண நூல்
- 18. உடல் தொழில் நூல்
- 19. தத்துவ விளக்க நூல்
- 20. இராவணன் பொது மருத்துவம்
- 21. இராவணன் சுகாதார மருத்துவம்
- 22. இராவணன் திராவக தீநீர் நூல் – அர்க்க பிரகாசம்
- 23. இராவணன் அறுவை மருத்துவம் – 6000
- 24. இராவணன் பொருட்பண்பு நூல்
- 25. பாண்ட புதையல் முறைகள் – 600
- 26. இராவணன் வில்லை வாகடம்
- 27. இராவணன் மெழுகு வாகடம்
என்பன.
இசை நுணுக்கம் – அடியார்க்கு நல்லார் உரைக் குறிப்புகள்.
தொகு- ஐம்பூதம்
- அ. மண்ணுட னீர்நெருப்புக் கால்வான மென்றிவைதாம்
- எண்ணிய பூதங்க ளென்றறிந்து – நண்ணிய
- மன்னர்க்கு மண்கொடுத்து மாற்றார்க்கு விண்கொடுத்த
- தென்னவர்கோ மானே தெளி
- ஆ. செப்பிய பூதங்கள் சேர்ந்தோர் குறியன்றே
- அப்பரிசு மண்ணைந்து நீர்நாலாம் - ஒப்பரிய
- தீயாகின் மூன்றிரண்டு காற்றம் பரமொன்று
- வேயாரும் தோளி விளம்பு
- இ. மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
- ஐவாயு மாயவற்றின் மீதடுத்துத் – துய்ய
- சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தால்
- அவைமுதற் புற்கல மாம்.
- ஈ. பசிசோம்பு மைதுனங் காட்சிநீர் வேட்கை
- தெசிகின்ற தீக்குண மோரைந்து – மொசிகின்ற
- போக்கு வரவுநோய் கும்பித்தன் மெய்ப்பரிசம்
- வாக்குடைய காற்றின் குணம்.
- உ. ஓங்கும் வெகுளி மதமான மாங்காரம்
- நீங்கா வுலோபமுட னிவ்வைந்தும் – பாங்காய
- வண்ண முலைமடவாய் வானகத்தின் கூறென்றார்
- எண்ணிமிக நூலுணர்ந்தோ ரெண்.
- ஊ. ஒப்பார் பிராண னபான னுதானனுடன்
- தப்பா வியானன் சமானனே - இப்பாலும்
- நாகன் றனஞ்சயன் கூர்மன் கிருகரன்
- தீதிலாத் தேவதத்த னே.
- எ. இடைபிங் கலைசுழுனை காந்தாரி யத்தி
- புடைநின்ற சிங்குவை சங்கினி பூடாவோ
- டங்குகு கன்னி யலம்புடை யென்றுரைத்தார்
- தங்குதச நாடிக தாம்.
- ஏ. பூத வகைகளோ ரைந்தாய்ப் பொறியைந்தாய்
- வாதனையோ ரையைந்தாய் மாருதமும் – மேதகுசீர்ப்
- பத்தாகு நாடிகளும் பத்தாகும் பாரிடத்தே
- முத்திக்கு வித்தா முடம்பு.
- ஐ. இடைபிங் கலையிரண்டு மேறும் பிராணன்
- புடைநின்ற பானன் மலம்போக்கும் – தடையின்றி
- உண்டனகீ ழாக்கு முதானன் சமனனெங்கும்
- கொண்டெறிவு மாறிரதக் கூறு
- ஒ. கூர்மனி மைப்புவிழி கோணாகன் விக்கலாம்
- பேர்வில் வியானன் பெரிதியங்கும் – போர்மலியும்
- கோபங் கிருகரனாங் கோப்பி னுடம்பெரிப்புத்
- தேவதத்த னாகுமென்று தேர்.
- ஓ. ஒழிந்த தனஞ்சயன்பே ரோதி லுயிர்போய்க்
- கழிந்தாலும் பின்னிடலைக் கட்டி – அழிந்தழிய
- முந்நா ளுதிப்பித்து முன்னியவான் மாவின்றிப்
- பின்னா வெடித்துவிடும் பேர்ந்து.
- ஔ. துய்ய வுடம்பளவு தொண்ணூற்றா றங்குலியா
- மெய்யெழுத்து நின்றியங்கு மெல்லத்தான் – வையத்
- திருபாலு நாற்பதோ டேழ்பாதி நீக்கிக்
- கருவாகு மாதாரங் காண்.
- ஃ. சிலப்ப: 1:3:12-25