தமிழ் வளர்த்த நகரங்கள்/இலக்கியங்களில் தில்லை
இறைவன் திருவருள் வெள்ளத்தில் திளைத்த அருளாளர்களால் பாடிப் பரவப் பெற்ற பழம்பதி களைப் ‘பாடல் பெற்ற தலங்கள்’ என்று பாராட்டுவர். அத்தகைய பாடல் பெற்ற தலங்களுள் பழமையும் பெருமையும் வாய்ந்த தலம் தில்லையாகும். சைவ நன்மக்களின் தெய்வத் திருக்கோவிலாகத் திகழும் தில்லைப்பதியினைப் புகழ்ந்து சொல்லாத சைவக் கவிஞர் இலராவர்.
திருவாசகத்தில் தில்லை
இறை மணத்தாலும் கலைகலத்தாலும் அன்றும் இன்றும் தலைசிறந்த தலமாக விளங்கும் தில்லைக்கு மாணிக்கவாசகரை வாவென்று வண்ணப் பணித்து வான்கருணை செய்தருளினான் இறைவன். அங்கு மாணிக்கவாசகர், சிவபெருமானது அருட்கோலத்தைக் கண்ணுரக் கண்டு களித்தார். அந்த உண்மையைத் தாம் பாடிய திருவாசகத்தில் ‘கண்ட பத்து’ என்னும் பதிகத்தில் ‘கண்டேன்! கண்டேன்!’ என்று கூறி இன்புறுகின்றார். ‘ஐம்பொறிகளின் வயப்பட்டு அழிவதற்குக் காரணமாகி மீளமுடியாத நரகில் வீழவிருந்த என்னைத் தில்லைக்கு வருமாறு இறைவன் பணித்தான்: அவண் சென்றதும் அவ்இறைவன் என் சிங்தையைத்’ தெளிவித்துச் சிவமயமாக்கினன் , என்னை அடிய கைவும் ஏற்றுக்கொண்டான் ; இந்த நிலை, எனக்கு அந்தமிலா ஆனந்தத்தைத் தந்தது ; இத்தகைய ஆனந்தத்தை நான் அணிகொள் தில்லையில் கண்டேன் : அனைத்துலகும் தொழும் அருமைவாய்ந்த தில்லை அம்பலத்தே கண்டேன், வேதங்கள் தொமுதேத்தும் விளக்கமான தில்லையில் கண்டேன்’ என்று கரடிப் பாடிப் பரவசமெய்துகிறார்.
திருக்கோவையாரில் தில்லை
தில்லைக்கூத்தனைத் தரிசித்துத் தென்பால் திரும்பிய மாணிக்கவாசகரின் கண்களில் தில்லைக்கோவிந்தன் பள்ளி கொண்டிருக்கும் காட்சி தென்பட்டது. இத் திருமாலுக்கு இங்கென்ன வேலை தில்லைமுற்றத்திலேயே பாயலை விரித்துப் படுத்துவிட்டானே, என்ன காரணம்? என்று சிறிதே சிந்தித்தார். காரணம் கருத்தில் உதித்து விட்டது. உடனே அதனை எல்லோரும் அறியச் சொல்லிப் போக்தார். ‘ஒருகால் திருமால் சிவபெருமான் திருவடியினைக் காணுதற்காகப் பன்றியுருவெடுத்து நிலத்தைப் பிளந்து கெடுந்துாரம் சென்றான்; அவன் திருவடியைக் கண்டுகொள்ள முடிய வில்லை ; பின் தன் செருக்கழிந்து சிவனை, அருளுக என்று பணிந்து வேண்டினன்; அப்போது சிவன் ஒரடியை மட்டுமே காட்டினான் ; மற்றாென்றைக் காட்டாது மறைத்துவிட்டான்; காணாத மற்றாென்றையும் கண்டு செல்ல வேண்டும் என்ற கருத்தினால் தில்லை முற்றத்திலே கடுந்தவம் புரிந்துகொண்டிருக்கிறான்’ என்றார்.
‘புரங்கடங் தான்அடி காண்பான்
புவிவிண்டு புக்கறியா(து)
இரங்கிடெக் தாய் ! என் றிரப்பத்தன்
ஈரடிக்(கு) என்னிரண்டு
கரங்கள்தந் தான் ஒன்று காட்ட, மற்
றங்கதும் காட்டிடென்று
வரங்கிடங் தான்தில்லை யம்பல
முன்றில்அம் மாயவனே!’
என்பது மாணிக்கவாசகரின் திருக்கோவையார்ப் பாடலாகும்.
தில்லையில் திருஞானசம்பந்தர்
சீர்காழிச் செல்வராகிய திருஞானசம்பந்தர் தில்லைக்கு எழுந்தருளினர். நகருள் நுழையும் போது எங்கும் புகைப்படலம் பொங்கிவருவதை நோக்கினார். மூவாயிரம் அந்தணர்கள் முன்னவனை எங்காளும் பிரியாது பணிபுரியும் பெருமை வாய்ந்த திருநகரம் என்பதைத் தெரிந்தார். அவ் அந்தணாளர்கள், தாம் கற்றாங்கு எரியோம்பும் காட்சியைக் கண்டு வியந்தார். உலகில் துயரம் உருதவாறு, பொதுநலம் பேணும் புனிதவுள்ளத்தால் அவர்கள் வேள்வி செய்யும் விதத்தை மதித்துப் பாராட்டினார். இத்தகைய தில்லையில் அமைந்த திருச்சிற்றம்பலத் தலைவன் பாதத்தைப் பற்றியவர்களைப் பாவங்கள் என்றும் பற்றா என்று உறுதி கூறினர். பொதுநலத் தொண்டர்களாகிய அந் தணர்களே ‘உயர்ந்தார்’ என்று உவந்தேத்தினார். ‘அவர்கள் உறையும் தில்லையில் உள்ள சிற்றம்பலம் தொல்புகழ் பெற்றது; அப்புகழ் மேன்மேலும் பெருகி ஏறிக்கொண்டும் இருக்கிறது ; ஆதலால் யான் தேனூறும் தீந்தமிழால் தில்லையைப் பாடினேன்’ என்றார்.
‘ஊறும் இன் தமிழால் உயர்ந்தார் உறை தில்லைதன்னுள்
ஏறு தொல்புகழ் ஏந்துசிற்றம்பலத்(து) ஈசனை
இசையால் சொன்ன பத்து’
என்பது ஞானசம்பந்தரின் திருவாக்காகும்.
தில்லையில் திருநாவுக்கரசர்
சோற்று வளத்தால் ஏற்றம் பெற்ற சோழ நாட்டில் தலைமை வாய்ந்த தெய்வத் தலமாகிய தில்லை எங்காளும் அன்னம் பாலிக்கும் ஆற்றலுடையது. தில்லையில் உள்ள தெருவெல்லாம் திருமடங்கள். நிலவு கின்றன. கூத்தப்பெருமானைக் கும்பிட வரும் அடியார் குழாத்திற்கெல்லாம் சோறுட்டும் திருமடங்கள் அவை. அத்தகைய சோறு மணக்கும் மடங்களைக் கண்ட திருநாவுக்கரசர், ‘அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்’ என்று வாயார வாழ்த்தினர். திருக் கோவிலுட் புகுந்து கூத்தப்பெருமானே வழிபட்டார். ‘அத்தா! உன் ஆடல் காண்பான் இங்கு வந்தேன்: பத்தனாய் நின்று பாடும் பாவன்மை எளியேனுக்கு இல்லையாயினும் என்னை இகழ்ந்து ஒதுக்கிவிடாதே!’ என்று உளங்கரைந்துருகி வேண்டினர். அவருக்குக் கூத்தப்பெருமானது புன்முறுவல் பூத்த திருமுகம், ‘அன்பனே! வருக! என்று வந்தாய்? எப்போது இங்கு வந்தாய்?’ என்று அருளோடு வினவுவது போன்று திருக்குறிப்புக் காட்டியது. உடனே அக் கருத்தை யமைத்து அழகான பாடல் ஒன்று பாடினார். அப்பெருமானுடைய குனித்த புருவத்தையும், கொவ்வைக்கனி போன்ற செவ்வாயினையும், அதில் மெல்லென அரும்பும் புன்சிரிப்பையும், பனித்த சடை யினையும், பவளம் போன்ற மேனியையும், அம் மேனியிற் பூசிய பாலனைய வெண்ணிற்றையும், இன்பந்தரும் எடுத்த பாதத்தையும் காணும் பேறு பெற்றால் இம் மனிதப்பிறவியை எத்தனமுறையானாலும் பெற்றுக்கொள்ளலாம் என்றனர்.
‘குனித்த புருவமும் கொவ்வைச்செவ்
வாயில் குமிண்சிரிப்பும்
பணித்த சடையும் பவளம்போல்
மேனியிற் பால்வெண்ணிறும்
இனித்த முடைய எடுத்தபொம்
பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ
தேயிந்த மாநிலத்தே’
என்பது நாவுக்கரசரின் தேவாரமாகும்.
தில்லையில் சுந்தரர்
சைவசமய குரவர் நால்வருள் இறுதியாகத் தில்லையைக் கண்டவர் சுந்தரர். இவர் தில்லைப் பொன்னம்பலத்தின் முன்னர்ச் சென்று நின்று திருக்கூத்தன் கோலத்தைக் கண்டார். உடனே இவருக்கு ஐந்து புலன்களின் வழியாகப் பிரிந்து காணும் ஐந்து அறிவுகளும் கண்ணிந்திரியம் ஒன்றேயாகக் கொள்ளை கொண்டன. ஏனைய நான்கு அறிவுகளும் செயலற்றன. இவற்றை உள்ளிருந்து செலுத்தும் உட்கருவிகளாகிய அந்தக்கரணங்கள் நான்கனுள் சிங்தை ஒன்றே தொழில் செய்தது. ஏனைய மூன்றும் செயலற்றன.
இவற்றை ஊக்கி நிற்கும் மூன்று குணங்களுள் சாத்துவிகம் ஒன்றுமே தொழில் செய்தது. ஏனைய இரண்டும் ஒடுங்கிவிட்டன. இவ்வாறு கூத்தனது காட்சியாகிய எல்லையில்லாத. பேரின்ப வெள்ளத்தில் இணையற்ற மகிழ்ச்சியால் மலர்ந்து நின்றார். பின்னர், “பெருமானே! நின் திருகடம் கும்பிடப்பெற்ற பெரும் பேற்றால் எளியேனுக்கு மண்ணிலே வந்த இந்தப் பிறவியே தூயதும் இன்பம் மேயதும் ஆயிற்று” என்று முறையிட்டார். இவ்வாறு சுந்தரர் தில்லையை வழிபட்ட சிறப்பினைச் சேக்கிழார் திருவாக்கால் அறியலாம்.
தில்லையில் சேக்கிழார்
சேக்கிழார் ஒராண்டிற்கு மேல் தில்லையிலேயே தங்கியிருக்கும் தனிப்பேறு பெற்றவர். ஆதலின் தில்லையின் சிறப்பையெல்லாம் நேரில் காணும் பேறுற்றவர். அவர் அத்தில்லையின்கண் இடையறாது எழுந்து முழங்கும் ஒலிகளைக் குறிப்பிடுகின்றார்.
‘நரம்புடை யாழ்ஒலி முழவின் காதஒலி வேதஒலி
அரம்பையர்தம் கீதஒலி அருத்தில்லை.’
யாழொலியும், முழவொலியும், வேதவொலியும், தேவ மாதர் பாடும் கீதவொலியும் நீங்காது ஒலிக்கும் பாங்குடையது தில்லையென்றார். இது காண முத்தி தரும் தலமாதலின், தொழுவார்தம் மும்மலங்கள் கழுவப்பெற்றுச் செம்மையான வீடருளும் செல்வப் பதி தில்லை’ என்று சொல்லியருளினார்.
தில்லையில் குமரகுருபரர்
இத்தகைய தில்லைக்குத் தென்பாண்டிக் கவிஞராகிய குமரகுருபரர் ஒருகால் சென்றார். அதன் சிறப்பைக் கண்டார். உலகிலேயே உயர்ந்த தலம் தில்லையே சிறந்த தீர்த்தம் அங்குள்ள சிவகங்கையே; இறைவன் உருவங்களுள் அம்பலக்கூத்தன் உருவே அழகும் உயர்வும் உடையது என்று பாடினார். பொன்னம்பலத்தைக் கண்டார். அது ஒரு பொற்றாமரை போன்று அவருக்குத் தோன்றியது. அப்பொன் மன்றில் ஆடும் திருக்கூத்தன் அருள்மேனி, தாமரையில் ஊறும் தேகைக் காணப்பட்டது. அப்பெருமான் அருகில் நின்று காணும் அன்னை சிவகாமியின் கரு விழிகள், தாமரையின் தேனை உண்டு களிக்கும் கரு வண்டுகளாகத் தோன்றின. அந்தக் காட்சியை அழகிய பாவாக நமக்குக் குழைத்துாட்டினார்.
‘பொன்மன்றம் பொற்றா மரையொக்கும் அம்மன்றில்
செம்மல் திருமேனி தேனெக்கும் அத்தேனை
உண்டு களிக்கும் களிவண்டை ஒக்குமே
எம்பெரு மாட்டி விழி’
என்பது குமரகுருபரரின் பாடலாகும்.
தில்லையில் கவிமணி
இவ் இருபதாம் நூற்றாண்டில் விளங்கிய இனிய செந்தமிழ்க் கவிஞராகிய கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தில்லையைச் சென்று கண்டார். அங்குள்ள சிற்றம்பலத்தில் கூத்தன் களிகடம் புரிவதையும் கண்டு மகிழ்ந்தார், அப்பெருமான் அல்லும் பகலும் ஒயாது நின்று ஆடுவதற்குக் காரணம் யாதாகலாம் என்று ஆராய்ந்தார். அத்தில்லையின் கிழக்கு எல்லையில் அண்ணாமலை மன்னர் அமைத்துள்ள பல்கலைக் கழகத்தைக் கண்டுதான் கழிபேருவகை கொண்டு இவ்வாறு ஆடுகின்றான் என்று பாடினர்.
‘தில்லைப் பதியுடையான் சிற்றம் பலமதனில்
அல்லும் பகலும்கின்(று) ஆடுகின்றான்-எல்லைக்கண்
அண்ணா மலைமன் அமைத்த கலைக்கழகம்
கண்ணாரக் கண்டு களித்து’
என்பது கவிமணியின் மணியான பாடலாகும்.