தமிழ் வளர்த்த நகரங்கள்/நெல்லையின் அமைப்பும் சிறப்பும்

நெல்லை மாநகரம்
7. நெல்லையின் அமைப்பும் சிறப்பும்

திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலி

தென்பாண்டி நாட்டிலுள்ள பழமையான திரு நகரங்களுள் ஒன்று திருநெல்வேலி. இதன் நெல்லை யென்றும் சொல்லுவர். திருநெல்வேலியென்ற பெயரே நெல்லை என்று மருவி வழங்குகிறது. நகரைச் சுற்றிலும் நெற்பயிர் நிறைந்த வயல்கள் வேலியெனச் சூழ்ந்திருப்பதால் நெல்வேலியென்று பெயர்பெற்றது. சிவபெருமான் எழுந்தருளிய சிறந்த தலமாதலின் திருநெல்வேலி யென்று சிறப்பிக்கப்பெற்றது. தென்பாண்டி நாட்டிலுள்ள பாடல்பெற்ற பழம்பதிகளுள் இதுவும் ஒன்றாகும். ‘திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலி’ என்று திருஞானசம்பந்தர் இந் நகரைப் பாராட்டி யருளினர்.

கோவிலும் விழாவும்

பாண்டிய நாட்டை மதுரைமாநகரிலிருந்து அரசாண்ட கூன் பாண்டியன் காலமாகிய ஏழாம் நூற்றாண்டிலேயே திருநெல்வேலி பெருமையுற்று விளங்கிய திருநகரமாகும். அதனலேயே திருஞானசம்பந்தர் இக் நகருக்கு எழுந்தருளிய நாளில் அப் பாண்டியன் தன் தேவியாகிய மங்கையர்க்கரசியாருடன் இங்குப் போந்து நெல்வேலியுறை செல்வராகிய சிவபெருமானை வழிபட்டேத்தினான். அப் பெருமான் திருக்கோவிலைக் கோபுரங் களுடன் அணிபெற அமைத்தான்; தன் தலைநகரமாகிய மதுரைமாநகர்த் திருக்கோயில் விழாக்களைப் போன்றே திங்கள்தோறும் திருவிழாக்கள் நிகழுமாறு: செய்தான். அதனாலயே திருஞானசம்பந்தர் தம் பதிகத்தில் ‘திங்கள்நாள். விழாமல்கு திருநெல்வேலி’ என்று குறித்தருளினர்.

சிந்துபூந்துறை

இந்நகர் பொன்திணிந்த புனல் பெருகும் பொருகை யெனும் திருநதியின் கரையில் கவினுற விளங்குகிறது. நெல்லையப்பர் திருக்கோவிலுக்கு நேராக விளங்கும் பொருநையாற்றுத் துறை சிந்துபூந்துறை என்று வழங்குகின்றது. அதுவே பழமையான நீர்த்துறை யாகும். அப் பகுதியில்தான் நெல்லமாநகரில் வாழும் மக்கள் சென்று நீராடி வருவர். இத்துறை, சோலைகள் நிறைந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. ஆதலின் மரங்களிலுள்ள மலரிலிருந்து தேன் துளித் துளியாக நீரில் சிநதிக்கொண்டிருக்கும் சிறப்புடையது. அதனாலயே சிந்துபூந்துறையென வழங்கலுற்றது. இப்பெயர் ஆதியில் பூந்துறையென்றே வழங்கியிருக்க வேண்டும். பொழில் சூழ்ந்து எழில் வாய்ந்த துறை யினைப் பூந்துறையெனப் போற்றியிருப்பர்.

சம்பந்தர் பாராட்டு

இத் துறையினை நெல்லைமாநகருக்கு எழுந்தருளிய திருஞானசம்பந்தர் கண்டார். இங்குள்ள சோலைகளில் மந்திகள் நிறைந்து காணப்பட்டன. அவைகள் ஒரு மரத்திலிருந்து மற்றாெரு மரத்திற்குத் தாவிக் குதித்து விளையாடிக்கொண்டிருந்தன. அவைகள் மரக்கிளைகளைப் பற்றிக்கொண்டு தாவுங் காலத்து அக் கிளைகளி லுள்ள மலர்களிலிருந்து தேன் திவலைகள் சிந்தக் கண்டார். அதனால் தாம் பாடிய நெல்வேலிப் பதிகத்தில்,

“கங்தமார் தருபொழில் மந்திகள் பாய்தர மதுத்திவலை
சிந்துபூங் துறைகமழ் திருநெல்வே லியுறை செல்வர்தாமே”

என்று பொருநையாற்றின் பூந்துறையினைப் போற்றி யருளினர். அன்றுமுதல் ‘மதுத்திவலை சிந்துபூந்துறை’ என்ற பெயர் வழங்கப்பெற்றுப், பின்னாளில் அது சிந்துபூந்துறையெனக் குறுகியிருக்கவேண்டும். நெல்லை யப்பரது தீர்த்தத் துறையாக இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கும் பூந்துறை, திருஞானசம்பந்தர் அருளிய தேவாரத்தால் பெருமையுற்ற பழந்துறையாகும்.

குறுக்குத்துறை

கெல்லேமாககரின் மற்றாெரு துறை குறுக்குத்துறை யாகும். நெல்லையப்பர் கோவிலுக்கு நேராக அமைந்த பூந்துறை சற்று நெடுந்துாரத்தில் இருந்தமையால் மக்கள் ஆற்றிற்குச் செல்லக் குறுக்குவழியொன்று கண்டனர். வயல்களின் வழியாகச் சென்று பொருநையில் புதுத்துறை யொன்றை உண்டுபண்ணினர். அது குறுக்குவழியில் சுருக்கமான நேரத்தில் செல்லுதற்கு ஏற்றதா யிருந்ததால் குறுக்குத்துறையெனப் பெயர் பெற்றது. அத் துறையின் முன்துறையினே முன்னடித் துறையென்றும் மொழிவர்.

நெல்லையின் கல்லமைப்பு

பொருநைக் கரையில் அமைந்த வளங்கராகிய நெல்லைமாநகரின் அமைப்பு மிகவும் அழகு வாய்ந்தது. நகரின் நடுவே நெல்லையப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. கோவிலைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் மாடவீதிகள் அமைந்துள்ளன. மாடம் என்பது கோவிலைக் குறிக்கும் சொல்லாகும். மாடத்தை அடுத் துள்ள வீதிகளாதலின் அவை மாட வீதியெனப் பட்டன. மாட வீதியைச் சுற்றித் தேரோடும் திரு வீதிகள் மிகவும் அகலமாக அமைந்துள்ளன. நகரின் மேற்கிலும் கிழக்கிலும் தேர் வீதிகளைச் சார்ந்து அணியணியாகத் தெருக்கள் பெருக்கமடைந்துள்ளன. வடக்கில் நயினர் குளம் நகரின் விரிவைத் தடை செய்தது. தெற்கில் பசும்பயிர் வயல்கள் நகரம் பரவத் தடையாயின.

பழமையான தெருக்கள்

இந் நகரின் நான்கு மாடவீதிகளிலும் நான்கு தேர் வீதிகளிலும் பலவகையான கடைகள் அமைக் துள்ளன. தேரோடும் வீதிகளைச் சார்ந்து, பலவகைப் பணியாளர்கள் வாழும் வீதிகள் பாங்குற அமைக் துள்ளன. அவற்றுள் சில இந்நகரின் பழம்பெருமையை உணர்த்தும் வரலாற்றுச் சிறப்புடையன. கீழைத் தேர் வீதியை அடுத்துக் கல்லத்தித்தெரு என்றாெரு தெரு உள்ளது. அது மதுரையிலுள்ள சிம்மக்கல் வீதியையும் யானைக்கல் வீதியையும் நினைவூட்டி நிற்பது. கின்றசீர் நெடுமாறனுகிய கூன்.பாண்டியன் இந் நகருக்கு வந்த நாளில் இப் பகுதியில் தங்கியிருக்க வேண்டும். அதனாலேயே இத்தெரு மதுரையிலுள்ள யானைக்கல் வீதியை நினைவூட்டுவதாக அமைந்திருக்கலாம்

காவற்புரை

கீழைத் தேர் வீதியையடுத்துக் காவற்புரைத்தெரு என்னும் சிறு தெரு அமைந்துள்ளது. காவற்புரை என்பது சிறைச்சாலை. மதுரையிலிருந்து தென்னட்டை யாண்ட பாண்டியருக்கும் நாயக்க மன்னருக்கும் உரிய வரிகளைச் செலுத்தத் தவறினோர் இக் காவற் புரைகளில் அடைக்கப்பட்டனர். அத்தகைய காவற் புரைகள் பல அமைந்த தெரு, காவற்புரைத் தெரு என்று இன்றும் வழங்கிக்கொண்டிருக்கிறது. இன்று அத் தெருவில் காவற்புரைகள் இல்லை.

கூலக்கடை

மேலேத் தேர்வீதியை யடுத்துக் கூழைக் கடைத் தெரு என்று ஒரு சிறு தெரு அமைந்துள்ளது. இது குறுகிய தெருவாய் இருப்பதால் கூழைக் கடைத் தெரு என்று கூறப்பெற்றதென மக்கள் கருதுவர். ஆனால் அத் தெருவின் பழம்பெயர் கூலக் கடைத்தெரு என்பதாகும். கூலம் என்பது தானியம். உணவுத் தானியங் களே விற்கும் கடை கூலக்கடை யெனப்படும். கூலம் குவித்த கூல வீதி மதுரைமாககளில் இருந்ததைச் சிலப் பதிகாரம் குறிப்பிடும். மணிமேகலை ஆசிரியராகிய சித்தலைச் சாத்தனர் கூலவாணிகம் நடாத்திய பெரு வணிகர். திருநெல்வேலியில் பண்டை நாளில் கூலக் கடைகள் கிறைந்த வீதியாக இத்தெரு இருந்தது. அது இன்று பொன்வாணிகம் நடைபெறும் காசுக்கடைத் தெருவாகத் தேசுபெற்றுத் திகழ்கிறது.

அக்கசாலை

வடக்குத் தேர்வீதியை யடுத்து அக்கசாலை விநாயகர் தெரு அழைத்துள்ளது. அத்தெருவில் பொற் கொல்லர் என்னும் ப்னித்தட்டார்கள் வாழ்கின்றனர். அக்கசாலை யென்பது நாணயங்களை அடிக்கும் இட மாகும். பாண்டிகாட்டு அக்கசாலை, பழைய துறைமுக நகரமாகிய கொற்கையில் அமைந்திருந்தது. அங்ககரம் கடலுக்கு இரையான பின்னர், ஆங்கு வாழ்ந்த அக்க சாலைப் பணியாளர்கள் நெல்லைமாநகரில் குடியேறினர். அவர்கள் தாம் பணிசெய்த அக்கசாலையிலிருந்த விநாயகரைப் பழைய நினைவுக்குறியாகத் தாம் வாழப் புகுந்த நெல்லைப்பகுதியில் கொணர்ந்து கோவிலமைத்து. வழிபட்டனர். அத்தெருவே அக்கசாலை விநாயகர் தெரு எனப்பட்டது.

சம்பந்தர் திருக்கோவில்

இனி, இந்நகரின் மேல்பால் சம்பந்தர் தெரு அமைந்துள்ளது. அத் தெருவின் முகப்பில் திருஞான சம்பந்தர் திருக்கோவில் விளங்குகிறது. இந் நகருக்குச் சம்பந்தர் எழுந்தருளிய நாளில் இப்பகுதியில்தான் தங்கியிருக்க வேண்டும். அதனுலேயே அவ்விடித்தில் அப்பெருமானுக்குத் திருக்கோவில் அமைத்து நெல்லை மக்கள் வழிபடலாயினர்.

நெல்லையைச் சூழ்ந்துள்ள ஊர்கள்

நெல்லைமாநகரைச் சுற்றிலும் பலப்பல சிற்றுார்கள் அமைந்துள்ளன. இந்நகரின் மேல்பால் அமைந்த பேட்டை யென்னும் பகுதி முன்னாளில் பெருத்த வாணிகம் நடைபெற்ற இடமாகும். வாணிகம் நடைபெறும் பகுதிகளைப் பேட்டையென வழங்குதல் பண்டை மரபு. இப் பேட்டையின் ஒரு பகுதியினைப் பாண்டியபுரம் என்றும், மற்றாெரு பகுதியினைத் திருமங்கை நகர் என்றும் வழங்குவதுண்டு. நின்றசீர் நெடுமாறனாகிய பாண்டிய மன்னன் நெல்வேலியைக் காணுதற்கு வந்த நாளில் அவனை நெல்லை நன்மக்கள் எதிர்கொண்டு வரவேற்ற இடம் பாண்டியபுரமாயிற்று. அவன் தேவியாகிய மங்கையர்க்கரசியாரை நெல்லைமா நகரத்து மகளிர்நல்லார் திரளாக வந்து எதிர்கொண்டு வரவேற்று உபசரித்த இடம் திருமங்கை நகர் என்னும் பெயர்பெற்றது என்பர். இந்நகரின் கிழக்கெல்லையில் அமைந்த வீரராகவ புரம், வீரராகவ முதலியார் என்பாரின் நினைவுக் குறியாக விளங்கி வருகிறது. நாயக்கர் ஆட்சியில் நெல்லைப்பகுதியை அவர் அதிகாரம் பெற்று ஆண்டு வந்த தளவாய் அரியநாயக முதலியாரின் வழித்தோன்றலாகிய வீரராகவ முதலியாரின் பெயரால் அப்பகுதி அமைந்துள்ளது. அவர் மனைவியாராகிய மீனாட்சி யம்மையாரின் பெயரால் அதனை யடுத்து மீனாட்சிபுரம் என்னும் பகுதி அமைந்துள்ளது. வீரராகவபுரத்தில் தான் திருநெல்வேலிச் சந்திப்புப் புகைவண்டி கிலேயம் அமைந்துள்ளது. இதன் வடபால் அமைந்த பகுதி சிந்துபூந்துறை யென வழங்குகிறது.

நெல்லையின் வடக்கு எல்லையாக அமைந்த சிற்றுார் தச்சனல்லூர் என்பதாகும். நின்றசீர்நெடுமாறனுகிய பாண்டியன் நெல்லைத் திருக்கோவிலை அமைக்கும் நாளில் அதனை உருவாக்க வந்த தச்சர்கள் இப்பகுதியில் குடியேறினர். அவர்கள் தெய்வத் திருப்பணி செய்து வந்த பணியாளர்களாதலின் அவர்கள் வாழ்ந்த பகுதி நல்லூர் என்று சொல்லப்பெற்றது. இங்நகரின் தெற்கு எல்லையாக விளங்கும் திருவேங்கடநாதபுரம், நாயக்கரது பிரதிநிதியாக நெல்லைநாட்டை யாண்ட திருவேங்கட நாதன் என்பார் பெயரால் திகழ்கின்றது.