தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குருபக்தி
கடிதம்: 31
குருபக்தி
*அமைச்சர் சுப்பிரமணியமும் ஆச்சாரியாரும்—நேருவும் மொழிவழி அரசும்–ம. பொ. சி–யின் குருபக்தி.
தம்பி,
இந்தப் பழைய பாடத்தைப் பற்றிப் புதிதாக இப்போது சொல்ல வேண்டியது என்ன இருக்கிறது—என்ன அவசியம் வந்தது—எத்தனையோ பிரச்சினைகள் நெஞ்சைக் குலுக்கும் வகையினதாக உள்ளனவே—அண்ணன் ஏன் இந்தப் பழசுக்குப் போகிறார் என்று எண்ணுகிறாய், தெரியும் எனக்கு. எனக்கும் ‘பழசு’ பிடிக்காதுதான் தெரியுமே உனக்கும்; என்றாலும் எனக்கு ஏனோ இன்று இங்கு வந்தவுடன் (சென்னைக்கு) ‘பழசு’ மீது நினைவு சென்றது—அதற்கும் காரணம் இருக்கிறது— ‘அறிவகத்தில்’ சிறுகுன்று போல, பழைய துணிகள் உள்ளன, சிறுசிறு மூட்டைகளாக—நமது தோழர்கள் இங்கு திரட்டியவை. மிகமிகத் தேவையான காரியத்துக்கு இவை பயன்படப் போவதால், பழைய துணிகள் மீது ஒரு பாசமும், அதைத் தொடர்ந்து பொதுவாகவே ‘பழசு’ மீது எண்ணமும் சென்றது—அதன் விளைவுதான், தம்பி, பழைய பிரச்சினையாகிய ‘குருபக்தி’ மீது என் நினைவு சென்றது.
பிரச்சினை ‘பழசு’; ஆனால் இந்தப் புதிய காலத்திற்கு முற்றிலும் தேவையற்றது என்று தள்ளிவிடக் கூடியதல்ல—பொருளும், பொருள் அறியும் முறையும், பயனும், பயன்காணும் வகையும் புதுப்பிக்கப்பட வேண்டியதாகவோ, பழுதுபார்க்கப் பட வேண்டியதாகவோ இருக்கலாம்; ஆனால், அந்த ‘எண்ணமே’ தேவை இல்லை என்று விரட்டிவிட முடியாதல்லவா? எனவே இன்று ‘குருபக்தி’யைக் குறித்து நீயும் நானும் எண்ணிப் பார்ப்பது தேவையற்றதுமல்ல, பயனற்றதுமல்ல—உண்மையிலேயே, இந்தப் பிரச்சினையை ஆராய்வதன் மூலம் பயன் தரத்தக்க சிலபல கருத்துக்களைப் பெறவும் முடியும்.
தம்பி ! குரு என்றவுடன் பழைமையில் மூழ்கிக் கிடப்போரின் மனக்கண்முன், ஜடையும் தாடியும் கொண்ட, வளைந்து தைலம் தீர்ந்து போன உடலுடன் காட்சிதரும் வயோதிகர், மரத்தடியில் ஓர் ஆசனத்தில் அமர்ந்திருப்பதும், அவர் எதிரே ‘சிறுசும் பொடிசு’மாகச் சீடர்கள் பயபக்தியுடன் வீற்றிருப்பதுமான காட்சிதான் தெரியும். அந்தக் காலம் மலையேறிவிட்டது—எனினும் அந்தக் காலம் மீண்டும் வராதா என்று ஆவலுடன் காத்துக் கிடக்கும் ஆச்சாரிய ஸ்வாமிகள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பழைய நாட்களிலே, ‘குரு’மார்கள் ‘பலரகம்’ இருந்திருக்கிறார்கள்; அனைவரும் அறிவர்.
கட்டை விரலை வெட்டிக்கொடு காணிக்கையாக என்று கேட்டவரும் இருந்திருக்கிறார், கட்டழகியைச் சீடன் கொட்டிவிட்டதைக் கண்டு மட்டற்ற துயருற்ற குருவும் இருந்திருக்கிறார்.
கைகால் பிடித்துவிடவும் கட்டைகள் வெட்டி வரவும், கால் நடைகளை ஓட்டிச் செல்லவும், கறிகாய் நறுக்கித் தரவும் மட்டுமே பயிற்சி பெற்று, பாடம் கிடைத்ததெனப் பர்ண சாலையைவிட்டு வெளியேறிய சீடரும் இருந்திருக்கிறார்கள்— குரு, பாடம் சொல்லிக் கொடுக்கும் போதே ‘வெட்டிவா என்றால் கட்டிக் கொண்டு வருகிற’ வகையில், அறிவுத் தெளிவு பெற்று விளங்கிய சீடர்களும் இருந்திருக்கிறார்கள்.
‘பழைய’ நாட்களிலே இருந்த ‘ரகம்’ கிடக்கட்டும், இப்போது உள்ளவர்பற்றி எண்ணிப் பார்ப்பது, உடனடிப் பலனளிக்க உதவுமல்லவா, தம்பி, அதற்குச் சிறிது சிந்தனையைச் செலவிடு.
இப்போது, நிதி அமைச்சராக இருக்கும் கனம். சுப்பிரமணியம் காமராஜர் முதலமைச்சராக இருக்கும் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்—ஆனால் அவர் காமராஜைத் தலைவராகவோ, குருவாகவோ, கொள்பவரல்ல—அவருடைய ‘குருநாதர்’ ஆச்சாரியார்தான்! அவர் அரியாசனத்தில் அமர்ந்திருந்தாலும் சரி, அரிகதா காலட்சேபம் நடத்திக் கொண்டிருந்தாலும் சரி, சுப்பிரமணியனாருக்கு ஆச்சாரியார் மீதுதான் குருபக்தி; அதை வெளியிட வேண்டிய நேரத்தில், தவறாது செய்கிறார்—சில வேளைகளில் பொருத்தம்கூட இருப்பதில்லை, ஆனால் ‘பக்தி’க்குத்தான் பொருத்தம்கூடப் பார்க்க வேண்டியதில்லையாமே, அதனால் எந்தச் சமயம் கிடைத்தாலும், தமது குருபக்தியைக் கொட்டிக்காட்ட, கனம், தவறுவதில்லை.
நாடே குமுறிடத்தக்க கேடொன்று நேரிட்டது—புயற் கொடுமை: கேள்விப்பட்டதும் ஓடோடிச் சென்றார் முதல் அமைச்சர்—வெறுங்கையுடன் அல்ல—விதவிதமான பண்டங்களை மூட்டை மூட்டையாக ஏற்றிக் கொண்டும் உயர்தர அதிகாரிகளை உடன் அழைத்துக் கொண்டும் சென்றார்—கண்ணீரைக் கண்டார், கண்ணீர் சொரிந்தார்—வேகவேகமாக ‘நிவாரண’ வேலைகளைத் தொடங்கினார்; புயற்கொடுமைக்கு ஆளாகியுள்ள மக்கள் புண்ணியவானே என்று அவரை வாழ்த்துகிறார்கள். இதுகண்டு, நாமெல்லாம், எதிர்க் கட்சியினர், எனினும் நல்ல இதயம் கொண்டோரை, நற்பணியாற்றுவோரைப் பாராட்டும் பண்பு அறிந்தவர்கள் என்ற முறையில், காமராஜரையும் அவர் நடத்திச் செல்லும் துரைத்தனத்தையும் மனதாரப் பாராட்டுகிறோம். ஆனால் உடனிருந்து பதவி பெற்று வாழ்ந்து வரும் கனம் சுப்பிரமணியனாருக்கு, யார்மீது ‘நினைவு’ செல்கிறது என்கிறாய் ? யாரிடம் பாசம், பரிவு, பக்தி, பீறிட்டுக்கொண்டு கிளம்புகிறது என்கிறாய்? முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்றவர் மீதல்ல, எப்புரியில் எது நேரிடினும், ‘முப்புரி’க்கு ஆபத்தேதும் வராமலிருக்கும் வகையில், ஆயாசப்பட வேண்டியதில்லை என்று எண்ணும் ஞானவான் இருக்கிறாரே, ஆச்சாரியார், அவர் மீதுதான் செல்கிறது அமைச்சரின் நினைவு !!
தம்பி! குருபக்தி—தலைக்கு அவ்வளவு ஏறி இருக்கிறது.
நந்தவனத்திலே, உலவிக் கொண்டிருந்த நாரீமணியை ஒரு ‘பூதம்’ சிறையெடுத்துச் சென்று யாரும் நுழைய முடியாத காட்டிலே இருந்த மாய மாளிகையில் சிறைவைத்துப் பொன்னும் பொருளும் கொட்டிக் காட்டி, புன்னகை தந்தால் போதுமென்று கேட்க, நவநிதி கொடுத்தாலும், என் நாதனை நான் மறவேன் என்று அந்த நாரீமணி சொன்னாள்—என்று கதைகளில் படிக்கிறோமல்லவா, அதுபோல, நிதிக்கும் மதிக்கும் அமைச்சரே ! என்ன மாறுதல் நேரிடினும், எவர் போனாலும் எவர் புதிதாக வந்தாலும் உமக்கு ஓர் இடம் உண்டு ! என்று சொல்லி அமைச்சரவையில், இவருக்குக் காமராஜர் இடமளித்திருந்த போதிலும் இருந்திருந்து,
“வள்ளிக் கணவன் பேரை
வழிப்போக்கர் சொன்னாலும்
உள்ளம் குளிருதடி, சகியே !”
என்று உருகிப் பாடுகிறார், நிதியமைச்சர், குருபக்தி, தம்பி, குருபக்தி!
இவருடைய குருநாதர் ஆச்சாரியார் ஆட்சிக் காலத்திலேயும் புயல் கொடுமை விளைவித்தது—என்ன செய்தார் குரு நாதர்? பகவத்சோதனை என்று கூறிவிட்டு, மற்றக்காரியங்களைக் கவனிக்கலானார். இரவு பகலென்று பாராமல், வெள்ளம் வெடிப்பு என்று அஞ்சாமல், அந்தஸ்து பற்றித் துளியும் கவனிக்காமல், அவதியுறும் மக்களைக் கண்டு, இன்னலைத் துடைத்திட வேண்டும் என்று காமராஜர் சென்றார்—ஆச்சாரியாரோ—கோட்டையில் கொலுவிருந்தார் ! அவருக்கு, இப்போதும், சீடர் நன்றி கூறுகிறார்—குருபக்தி என்றால் இஃதல்லவா குருபக்தி!
வெள்ளம் விளைவித்த பெரு நஷ்டத்தால், வேதனைப்பட்டுக் கிடக்கும் மக்களுக்கு மீண்டும் வாழ்வளிக்கும் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமானால், இதற்குப் பெரும் பொருள் செலவாகும்—இதற்கு மத்திய சர்க்கார்—டில்லி தேவர்கள்—பெருந் தொகை உதவ வேண்டுமென்பதை, நேருவுக்கு உணர்த்தினார் காமராஜர்—நாட்டிலே காமராஜர் ஆட்சி எத்தகைய அமைதியை (ஆனந்தத்தை அல்ல) ஏற்படுத்தி இருக்கிறது, எதிர்ப்புகள் எந்த அளவுக்குச் சுருங்கிப் போயுள்ளன என்பதை எல்லாம் கண்ட நேருவும், நிவாரணத்துக்காகச் செலவிடப்படும் தொகையில் ‘பாதி’ அளவு மத்திய சர்க்கார் அளிக்கும் என்று தெரிவித்தார்.
இதற்கு யாருக்கு நன்றிகூற வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய் தம்பி !
நம் போன்ற செய்நன்றி மறவாதார் டில்லியின் மனமும் இந்தப் பிரச்சினை சம்பந்தமாக ஓரளவுக்கு இளகும்படி செய்தார் என்பதற்காகக் காமராஜருக்குத்தானே நன்றிகூற வேண்டும் என்று எண்ணுவோம். நிதி அமைச்சர் அப்படி எண்ணவில்லை — அவருடைய மனம், குருநாதன் மீது சென்றது. ஐயனே! போற்றி! மெய்யனே போற்றி, போற்றி ! உமது ஆசியால், அருளால்தான், இந்தப் பேறு பெற்றோம் ! என்று கூறிக் குருவைத்தான் பூஜிக்கிறார். “டைம்ஸ் ஆப் இந்தியா” பத்திரிகை நிருபரிடம் இந்தத் திங்கள் பத்தாம் தேதி,
“மத்திய சர்க்கார் மனமுவந்து செலவுத் தொகையில் பாதியளவு தர முன்வந்ததற்கு, நாம் ராஜ கோபாலாச்சாரியாருக்குத்தான் நன்றி கூற வேண்டும்— ஏனெனில் 1952—இல், இப்படி ஏதேனும் ஒரு விபத்து நேரிட்டால், மத்திய சர்க்கார் பணஉதவி தரவேண்டும் என்று, ஆச்சாரியார் தான், நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் பேசினார்— அதற்கு இணங்கியே, மத்திய சர்க்கார் இந்த உதவி செய்கிறது”
என்று கூறியிருக்கிறார்.
பார்த்தாயா, தம்பி ! குருபக்தியை !!
வெள்ளமென்றும் வெடிப்பென்றும் பாராமல் சுற்றிச் சுற்றிவந்தாரே காமராஜர்—வீழ்ந்து பட்ட மக்களுக்காக வெந்த மனதுடன் வாடிக்கிடக்கும் மக்களிடம் ஆறுதல் கூறிக்கொண்டிருந்தாரே, காமராஜர் — அவருக்கல்ல நன்றி! இராஜகோபலாச் சாரியாருக்கு நன்றி ! ஏன் ? 1952—லேயே அவர் இந்த அரிய யோசனையைக் கூறிவிட்டாராம், அதனால். இதுதான் தம்பி கடைந்தெடுத்த குருபக்தி !!‘குருபக்தி’ யைக் கொட்டிக் காட்டியதோடு விட்டுவிடவில்லை, இந்த வீரர். இரண்டு இலாக்காவுக்கல்லவா அமைச்சர். அதுபோலவே இரண்டு சீரியதொண்டு புரிவதை அல்லவா அவர் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்— ஒன்று குருநாதரையும் அவருடைய கூடாரத்தினரையும் குதூகலப்படச் செய்வது, மற்றொன்று இன எழுச்சியூட்டும் நம்மைக் குத்திக் குதூகலிப்பது. எனவே, குருபக்தியைக் காணிக்கையாக்கியதும், நம்மைக் குத்தி மகிழ்கிறார்—குத்துவதால் மகிழ்ச்சி எப்படிப் பிறக்கும் என்கிறாயா, தம்பி! சிலருக்கு அப்படி ஒரு நினைப்பு. தாங்கள் குத்துவதால், நமக்கு வலிக்கும், வேதனை அடைவோம், அதைக் கண்டு மகிழவேண்டும் என்பது. அமைச்சர் சுப்பிரமணியம் அந்த ரகம்.
வடக்கு—தெற்கு என்று வம்பு பேசுகிறவர்கள், வடக்கு தெற்கைப் புறக்கணிக்கிறது என்று கண்டனம் கிளப்புகிறவர்கள் இருக்கிறார்களே, அவர்களுடைய வாயடைத்துப்போகும்—ஏனெனில் தெற்கே நேரிட்ட கொடுமைக்கு, வடக்கு வாரி வாரிக் கொடுக்கிறது—என்கிறார் நிதியார், பாபம் ! நமது வாயடைத்துப் போகவேண்டும் என்பது அவருடைய நீண்ட நாள் ஆசை. அந்த ஆசை மேலிட்டு இப்படிப் பேசுகிறார்— ஆனால், நிலைமையை அவர் அறிய முயற்சிக்கவில்லை ஒரு வேளை முயன்றும் முடியவில்லையோ ! மதிக்கும் அவர் அமைச்சராக்கப்பட்டிருப்பதால் உண்மை நிலையை அறிய அவர் முயற்சித்துப் பார்க்கலாம். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்றோர் முதுமொழி உண்டல்லவா !
தெற்கிலே அவதி, அதற்கு வடக்கு வாரி வழங்குகிறது! இது தேனாக இருக்கிறது அமைச்சருக்கு; தெற்கே எழுந்த அவதி துடைக்கப்படுகிறது என்பதால் அல்ல, நமது வாய் அடைக்கப்படும் என்பதால். எவ்வளவு சிறுபிள்ளைத்தனமான எண்ணம் என்று சொல்லத் தோன்றுகின்றது. ஆனால் நான் வயதில் அவ்வளவு பெரியவன் அல்ல என்பதால் சொல்லக் கூசுகிறது.
வடக்கு வாரி வழங்குகிறது என்றால், வடக்கே உள்ளவர்கள் பதைத்து எழுந்து பல முனைகளிலும் நிதி திரட்டிக் குவித்து இங்கு அனுப்பியுள்ளனர் என்று எண்ணிவிடச் சொல்கிறார் போலும்!!
இன்றுவரை அதுபோன்ற முயற்சியில், வடக்கே உள்ள பெருந்தலைகளும் ஈடுபடவில்லை. மக்கள் மனமும் உருகிடக் காணோம். உருகாதது கண்டு நாம் யாரும் ஆச்சரியப்படவுமில்லை.தமிழகத்தில் இந்தத் தத்தளிப்பு என்று கண்டதும், கடல் கடந்து சென்றுள்ள தமிழர்களுக்குக் கண்ணீர் கொப்பளிக்கிறது. மலாயாவில் நிதி திரட்டுகிறார்கள்.
காபூலிலும் கராச்சியிலும் எந்த அளவுக்குக் கருணை பிறக்குமோ, அதே அளவிலேதான் கல்கத்தாவிலும் டில்லியிலும் பிறந்திடக் காண்கிறோமே அன்றிப் பீகார் பூகம்பம் அசாம் வெள்ளம் ஆகியவற்றின்போது, தெற்கேயுள்ள மக்கள், ‘குடும்ப பாசம்’ கொண்டோர் போலாகிப் பணத்தைத் திரட்டி அனுப்பினார்களே, அதுபோல இதுபோது வடக்கே, யாரும் கிளம்பிடக் காணோம்.
வடக்கே அமைந்திருக்கிற சர்க்கார், பண உதவி தருகிறது என்றால், அது கருணையுமல்ல, கனிவுமாகாது, கடமை வேறென்ன? நமக்கும் துரைத்தனமாக இருக்கிறது, நமது வரிப்பணத்தையும், தோலை நீக்கிச் சுளையாகக்கொண்டு செல்கிறது. வாழ்விலே வளம் பிறக்கத்தக்க வழியை எல்லாம் தன் கரத்தில் வைத்துக்கொண்டிருக்கிறது. செல்வப் பெருக்கத்துக்கான வாய்ப்பு அவ்வளவும் தன்னிடம் வைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இயற்கையாய் விளைந்துள்ள கோரம் மிகுந்த இடர்ப்பாட்டிலே சிக்கி நாம் சீரழியும்போது பணம் தரவேண்டிய பொறுப்புக் கூடவா கிடையாது? இதைச் செய்வதால் வடக்கு தெற்கு என்ற பிரச்சினை எப்படி நின்று விடும்? வாயடைத்துப் போகுமோ !! என்ன மந்த மதி ? கூர்ந்து பார்க்கும்போது, வடக்கு—தெற்கு என்பது பற்றிய பிரச்சினையின் உண்மையல்லவா, மேலும் பளிச்செனத் தெரிகிறது.
நமது தமிழகத்தில் ஒரு பெரும் விபத்து நேரிட்டிருக்கிறது, இலட்சக்கணக்கான மக்கள் துயருற்றுக் கிடக்கின்றனர், கோடிக் கணக்கில பொருள் நஷ்டம், உயிர்ச் சேதம் உள்ளத்தை வேகவைக்கும் நிலையில், ஐயோ ! என்று அலறும் மக்களுக்கு ஆறுதலளிக்க, எல்லாம் இழந்தோமே, ஏதும் அற்றவர் ஆனோமே என்று கதறும் மக்களைத் தேற்ற, பிணக்காடா கிப் போன நஞ்சையை மீட்டிட, ஊர்களை வெள்ளக் காடுகளி லிருந்து வெளியே கொண்டுவர, வீடிழந்தோருக்கு ஒரு குடில் அமைத்துத் தர,
இவைகளுக்கான பெரும் செலவுக்கான பணம் நம்மிடம் இல்லையே! தங்கம் விளையும் நாட்டிலே, இதற்குப் பணம் இல்லையே ! ஏன் ? செல்வம் கொழிக்கும் நாடுதானே, இயற்கையமைப்பின்படி. இங்குள்ள நாம், கையேந்தி நிற்கிறோம். கண்ணீரைப் பொழிகிறோம், கருணை நிதி நிறைந்தோரே ! எமக்கு வந்துற்ற கொடுமையைக் கண்ணால் பாரும், உதவி புரிந்திட முன்வாரும்! என்று இறைஞ்சி நிற்கிறோம், விளைந்துள்ள பெரு நஷ்டத்தைக் கண்டு, நிலைமையை மீண்டும் சீராக்கப் பல கோடி தேவைப்படுமே, என்ன செய்வது, பேழையோ கல்லார் மனம் போலக் காலியாகக் கிடக்கிறது என்றெண்ணி அமைச்சர்கள் திகைக்கிறார்கள். ஏன் இந்த நிலைமை ? வடக்குக்கு அடிமைப்பட்டுக் கிடப்பதாலல்லவா? தெற்குத் தேய்ந்து போனதாலல்லவா?
வடக்கு ஆதிக்கம் செலுத்தாமல், இங்குள்ள செல்வத்தைச் சுரண்டாமல், தொழிலைப் பாழ்படுத்தாமல், தெற்கு வளர வழி செய்திருந்தால், நாம் ஏன் இன்று பிச்சைப் பாத்திரத்தை ஏந்தும் இழிநிலையில் இருக்கப் போகிறோம் ? இங்குள்ள மக்களின் உழைப்பு உடலும் உயிரும் ஒன்றியிருக்க மட்டுமே பயன்படுகிறது—துரைத்தனத்துக்கு உள்ள அதிகாரமோ, மக்கள் பசியால், போதாமையால், இல்லாமையால், இப்படி ஏதேனும் ஒரு வகையில் சாவதற்கு முன்பு ‘தற்கொலை’ செய்து கொள்ளாமல் தடுத்து நிறுத்திவைக்க மட்டுமே பயன்படும் வகையில் அமைந்திருக்கிறது. எனவேதான், கையேந்தி நிற்கிறோம். இந்தக் கேவலம் தெரியத்தானே செய்கிறது! தமிழகத்திற்கு வந்துற்ற விபத்து உண்டாக்கியுள்ள வடுக்களைப் போக்கும் அக்கறை இருந்தும், இங்குள்ள சர்க்காருக்கு ஆற்றல் இல்லையே! வாஞ்சனை இருக்கிறது, வசதி இல்லை ! கருணை பிறக்கிறது, காசு இல்லை ! பேரன்பு கொண்டோரிடம் பேழையில் பணம் இல்லை ! ஏன்? எல்லாம் டில்லியில் ஒப்படைக்கப்பட்டிருப்பதால் தானே?
பசியால் துடிக்கும் குழந்தை, பால்வேண்டி, தாயின் மார்பினைச் சுவைத்து, பால் காணாது கதற, சேய் அழக்கண்டு தாய் அழுவது போல, குடில் இழந்து குடும்ப மணிகள் இழந்து கதறும் மக்கள் காமராஜரைக் கண்டு கையேந்தி நிற்கிறார்கள்—அவர் கண்களைத் துடைத்துக்கொண்டு, நேருவிடம் கையேந்தி நிற்கிறார் ! இதுதானே நிலைமை ? இது, வேதனைக் கிடையிலும், நமது இழி நிலைமையைத்தானே காட்டுகிறது. வடக்குக்கு உள்ள ஆதக்கம் விளக்கமாகிறதே! யார் அறிந்து கொள்ளமாட்டார்கள் இதனை. எனினும் இந்த நேரத்திலும் நம்மைக் குத்துவதிலே, அமைச்சர் சுப்பிரமணியனாருக்கு ஒரு அலாதி மகிழ்ச்சி ! திருவல்லிக்கேணியும் திருமயிலையும், ‘நம்ம சுப்பிரமணியம்’ என்று அணைத்துக்கொள்ள வேண்டுமே, ஆச்சாரியார் என் குருநாதர் என்று கூறிப் பூஜித்தால் மட்டும் போதுமா, ‘அதுகளை’யும் சாடினேன் என்று காட்டினால் தானே, ‘என்னதான் சொல்லுங்கோ, நம்ம சுப்ரமணியத்துக்கு உள்ள புத்தி தீட்சணியம், இந்தக் காமராஜுக்குக், கிடையாது’ என்று அக்கார வடிசல் கிடைக்கும். அதற்காக அவர் அர்த்தமற்றதைப் பேசுகிறார்.
வடக்கு தெற்கு என்ற பிரச்சினை, வெள்ளம், விபத்து, அவதி, அல்லல், இவைகளுக்காகத் தரப்படும் உதவி, இவற்றுடன் நின்று போவதல்ல. அரசியல் என்பது அன்னதான சமாஜமுமல்ல. உரிமைக் கிளர்ச்சி என்பது உண்டிப் பெட்டி நிரம்பிவிட்டால் கருகிப்போவதுமல்ல. காட்கில் என்னும் மாவீரர் முழக்கமிடுவதுபோல தன்மானத்தை இழந்துவிட எந்த ஆண்மகனும் சம்மதியான், கற்பை இழந்திட எந்தக் காரிகையும் சம்மதிக்க முடியாது. அதுபோன்றே உரிமையை இழந்திட எந்த நாடும் ஒருப்படாது.
சப்ரமஞ்சக் கூடம், சல்லாத் துணி, ஜரிகை வேலைப்பாடு, சந்தனம் பன்னீர்—என்று காட்டி, கற்பைச் சூறையாடுபவன் பேசுவதாகக் கதைகளில் படிக்கிறோம். கனம் சுப்பிரமணியமோ, சவக்குழி தோண்ட மண்வெட்டி உதவினானே மகானுபாவன், அவன் பாதம் போற்றுதும் என்று பேசிடும் பேதைமை போல, ஆதிக்கம் செலுத்தும் வடக்கு, நம்முடைய செல்வத்தைச் சுரண்டி வைத்துக்கொண்டு, கொடுமையில் சிக்கித் தவித்திடும் வேளையில் கொஞ்சம் தாராளம் காட்டுகிறதே, அதுவே போதும் என்கிறார்; அதனால் நாம் வாயடைத்துப் போவோம் என்று வேறு எண்ணுகிறார்—சொல்லவும் துணிவு கொள்கிறார்.
தனக்கென்று ஓர் இலட்சியம் கொண்டோர் எவரும், அதற்கான பணியாற்றுகையிலே, குறுக்குப் பாதைகள் கண்டால் அதிலே நுழைந்து, இலட்சியத்தை இழந்துவிடச் சம்மதிக்கமாட்டார்கள். இலட்சியத்தை நோக்கிச் செல்வோருக்கு, அதற்கான ஆக்கமும் ஊக்கமும் அளிப்போரே தலைவர்கள், நண்பர்கள், வழிகாட்டிகள், ஞானாசிரியர்கள் இடையில் இளநீர் கொடுப்போர் நன்றிக்கு உரியோர், இதயம் நோகப் பேசுவோர் பரிதாபத்துக்குரியோர், உடனிருந்து கெடுப்போர் கண்டனத்துக்கு உரியோர், பாதையில் பயணத்தின் கடுமை தாங்கமாட்டாமல் பட்டுப்போவோர், அனுதாபத்துக்குரியோர். அமைச்சர் சுப்பிரமணியனாருக்குச் சிலபல அலுவல்கள் உள்ளன—தரப்பட்டுள்ளன ! அவ்வளவே தவிர, அவர் ஓர் இலட்சியத்துக்காகப் பணியாற்றும் பொறுப்பில் ஈடுபட்டவரல்ல. எனவேதான் அவர் குருபக்தியைக் கொட்டுவதிலும், நம்மைக் குத்துவதிலும் குதூகலம் காண்கிறார். காணட்டும், களிப்பூட்டப்படட்டும். நமக்கேதும் நட்டமில்லை. தமக்கென்று ஓர் குறிக்கோள், அது குறையுடையதோ நிறை மிகுந்ததோ, நாடு கொண்டாடுவதோ அல்லவோ, தன் நெஞ்சார நம்பும் ஓர் குறிக்கோளுக்காகப் பணியாற்றும் எந்தத் தலைவரும், அதற்குக் குந்தகம் விளைவிப்போர் எவ்வளவு பெரியவராயினும், பெருநிலையைப் பிடித்துக் கொண்டவராகவே இருப்பினும் குருபீடத்தில் அமர்ந்திருப்பவராகவே இருப்பினும்கூட, அவரைவிட்டு விலகவும், வேறு பாதை தேடவும், அவர் மூலம் இழிவும் பழியும் கிடைப்பதாயினும் ஏற்றுக்கொள்ளவும், தாங்கிக் கொள்ளவும் இடுப்பொடிந்ததுகளும், ஆசை அலைமோதுவதால் அங்கலாய்ப் போரும் அடிவருடிகளாகி ஏசலை வீசினும் பொருட்படுத்தாமல், எடுத்த காரியத்தை முடித்திடும் நோக்குடன் பணியாற்றுவர்.
நேரு பண்டிதருடன் அமைச்சர் சுப்பிரமணியனாருக்கு. உள்ள தொடர்பு, நாடு அறிந்ததுதான். நேரு பண்டிதரின் தர்பார்களிலே உள்ள பத்துப் பதினாறு தலையாட்டும் துரைமகனார்களிலே இவர் ஒருவர் என்ற அளவிலே உள்ள தொடர்புதான்!
மராட்டிய மண்டலத்து காட்கில் அப்படி அல்ல.
நேரு பண்டிதருடைய எழுச்சி மிக்க வரலாற்றிலே, காட்கில் ஒரு சிறப்பான இடம் பெற்றவர்; உடனிருந்து பணியாற்றியவர்; விடுதலைக் கிளர்ச்சியில் முன்னணியில் நின்றவர்.
அவருக்கு அமைச்சர் அலுவல் இல்லை; எனவே ஆசாபாசத்துக்கு ஆட்பட வேண்டிய கேவலம் ஏற்படவில்லை; அவருக்கு ஓர் குறிக்கோள் இருக்கிறது; எனவே அவர் பூஜித்துக்கிடக்க மறுக்கிறார், இலட்சிய முழக்கமிடுகிறார்—குருபக்தி—கட்சிப் பாசம் — பதவியில் பற்று—அதிகாரத்தைக் கண்டு அச்சம்— இவைகள் தலைகாட்ட மறுக்கின்றன. டில்லி ஆட்சி மன்றத்திலே அஞ்சா நெஞ்சுடன் பேசுகிறார். நேசம் மறக்கவில்லை, பாசம் பட்டுப் போகவில்லை. எனினும், இவைகளுக்காகக குறிக்கோளை இழக்க முடியாது என்று முழக்கமிடுகிறார்.
அவ்வளவு பெரியவர் தொட்டிழுத்த போது, நான் என்ன செய்ய முடியும் என்று வாதாடுபவளைப் பத்தினியாகவா கொள்ள முடியும்?
நாளைக்கு அவர் எவ்வளவு பெரியவராவாரோ, யார் கண்டார்கள்? இன்றே எனக்கு அவர் நெஞ்சம் கிடைத்து விட்டது என்றெண்ணிப் பூரித்திடுவாள், கண்டாரைக் கொல்லும் காரிகை.
காட்கில், எவ்வளவு பெரியவரானால் என்ன, உரிமை எல்லாவற்றிலும் பெரிது என்கிறார். அமைச்சர் சுப்பிரமணியம் இப்படிப்பட்டவர்கள் வாயடைத்துப் போக வேண்டும் என்று தவமிருக்கிறார்.
காட்கில் கேட்கிறார், தன்மானம், கற்பு, உரிமை இவை. தமை இழக்க எப்படி முடியும் என்று.
வெள்ளத்துக்கு உதவி செய்கிறது வடக்கு, எனவே அதற்கு வெள்ளாட்டியாக இருப்பதிலே வெறுப்படைவதோ, வெண்சாமரம் வீசுவதைக் கண்டிப்பதோ கூடாது; அப்படி எல்லாம் பேசுபவர்களின் வாய் இனி அடைத்துப் போகும் என்கிறார், சுப்பிரமணியனார்.
தேசீய உணர்ச்சி இல்லையா, மராட்டியருக்கு மராட்டிய மண்டலம் என்று பேசுகிறீரே, என்று இங்கு நம்மைச் சுப்பிரமணியர்கள் கேட்பது போல, காட்கிலைக் கேட்கிறார்கள். சந்தனமே! மணமாக இரு ! என்று சொல்வாருண்டா? மராட்டியர்களைப் பார்த்து, தேசீய உணர்ச்சி கொள்ளுங்கள் என்று கூறுகிறீர்களே, என்று காட்கில் கேலியால் அவர்களைக் கொல்கிறார்.
வெட்டும் குத்தும், கலகமும் குழப்பமும், இரத்தக்களரியும் கூட நடத்த முடியும்— இவை போன்ற முறைகளிலெல்லாம் ஈடுபட வேண்டிய அளவுதான், நிலைமை மோசமாகிக் கொண்டு வருகிறது, என்று எச்சரிக்கையே செய்கிறார், காட்கில்.
“இராஜ்யப் புனரமைப்புக் கமிஷன் மராட்டியர்களைக் குறித்துக் கூறியுள்ள கருத்து, மராட்டிய இனத்தை இழிவுபடுத்துவதாக இருக்கிறது. கடந்த 600 ஆண்டுக் காலத்தில் இப்படிப்பட்ட இழிமொழியை மராட்டியர் மீது யாரும் வீசியதில்லை. இந்த இழிவைத் துடைத்திட, பதிலளித்திட எமக்குத் தெரியும்—ஆனால் அந்த முறைகள் இன்று சரியானவை என்று ஏற்றுக் கொள்ளப் படாதனவாக உள்ளன— குடி அரசுக் கோட்பாட்டுக்கு முரணானவைகளாகவும் உள்ளன,” என்று மனம் குமுறிப் பேசுகிறார் காட்கில்.
பதிலளிக்கத் தெரியும்—பதிலளிக்கும் முறைகள் உள்ளன—என்று காட்கில் கூறினாரே, தம்பி! அதிலேதான், கொலை கொள்ளை, குத்து வெட்டு, இரத்தக்களரியாவும் அடங்கியுள்ளன.
மராட்டியரை மட்ட நிலையில் வைத்திடவும், அவர்களின் உரிமைக்கு உலைவைக்கவும், இன்று டில்லியில் ஓர் அரசு முயற்சிக்கும் போது அதே இடத்திலிருந்து பாதுஷாக்கள் முயன்ற காலமும், அந்த ஆதிக்கத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டமும், மாவீரன் சிவாஜியின் பரம்பரையில் வந்த காட்கில் அறிவாரல்லவா ? அமைச்சர் சுப்பிரமணியம் அவ்விதமல்லவே, அவர் இராமனுக்குத் தாசனான அனுமனின் பிரபாவம் பற்றிய பெருங்கதையைப் பயபக்தியுடன் கேட்டு இரசிப்பவர் தானே ! எனவேதான், குருபக்தியையும், குருவின் மனம் மகிழும் என்ற எண்ணத்தில் நம்மைத் தாக்கிப் பேசுவதையும் செய்து காட்டியிருக்கிறார்.குறிக்கோள் கெடுகிறது என்று தெரிந்தால், சிலருக்குக் குருபக்திகூட மெள்ள மெள்ளக் குறைந்துவிடத் தொடங்குகிறது என்பதை விளக்கும் வகையில், நண்பர் ம. பொ. சிவஞானம் அவர்கள் இப்போது எழுதுகிறார்.
அவருடைய குறிக்கோள் ‘மொழிவழி அரசு’ என்கிறார்.
இதுதான் சாலச் சிறந்தது, மற்ற குறிக்கோள்கள் யாவும் போலி என்கிறார்.
மற்றக் குறிக்கோள்கள் யாவும் போலி என்று தன்னைத் தானே நம்ப வைத்துக் கொண்டால்தான், தான் மேற்கொண்டுள்ள குறிக்கோளிடம் தமக்கே ஒரு அச்சம் கலந்த ஆர்வம் பிறக்கும் என்று எண்ணுகிறார் போலும். எப்படியோ இருக்கட்டும்—அவர், மொழிவழி அரசு கிடைத்திடப் பணியாற்றுவதைத் தமது கழகத்தின் தலையாய கொள்கையாகக் கொண்டிருக்கிறார். அதேபோது அவருக்கு நேரு பண்டிதரிடம் ‘பக்தி’ உண்டு; காங்கிரஸ் கட்சியிடம் ‘பாசம்’ நிரம்ப.
நேரு பண்டிதரை யாராவது—கண்டித்தால்—ம. பொ. சி.க்கு எரிச்சல் எழுகிறது. பண்டிதரைப் பதட்டமாகக் கண்டிக்கும் பதர்களை விட்டு வைக்கமாட்டேன் என்பார். தாய்—சேய்—உறவு, எனக்கும் காங்கிரசுக்கும் என்று அனாதைப் பிள்ளை ஆக்கப்பட்ட பிறகுங்கூடக் கூறுகிறார்.
நேரு பண்டிதரின் அமோகமான அறிவாற்றல்தான் என்னே ! அவருக்கு உலக அரங்கிலே கிடைத்துள்ள பெரும் புகழ்தான் என்னே ! என்னே ! என்று வியந்து கூறுகிறார்.
தமிழர்களை மிக மிகத் தாழ்வாக நேரு பண்டிதர் கண்டித்த போது தம்பி ! சீறி எழுந்து, கிளர்ச்சி நடத்தி, கடும் தண்டனைகளை ஏற்றுக் கொண்டவர்கள் நாம்—அவரல்ல. அவர், நேரு பண்டிதரைக் கண்டிக்காதது மட்டுமல்ல, முட்டாள்கள்! சிறுபிள்ளைத் தனம் ! என்று நேரு பண்டிதர் இவர்களையா ஏசிப் பேசினார், எங்களையன்றோ அது போல் பேசினார், அற்காக இவர்கள் ஏன் கிளர்ச்சி செய்தனர்? அடாது ! அடாது! ! என்று பேசவே செய்தார். அவ்வளவு குருபக்தி அவருக்கு. ஆனால் இப்போது, நேரு பண்டிதரின் போக்கு, மொழிவழி அரசுக் கொள்கையைப் போற்றுவோரைப் புல்லர்கள் என்று கண்டிக்கும் வகையினதாகவும் இருந்திடக் காண்கிறோம்—குருபக்தியின் வேகம் குறைகிறது! !
ஆவேசமாடுவார் ! குப்புற விழுந்தார்!
‘பிறர் தகுந்த காரணத்துக்காக’ தடியடி சிறை என்று அஞ்சாமல் நேருவை எதிர்த்து நியாயமான முறையில் கிளர்ச்சி நடத்திய போது, எங்கள் நேருவுக்கா கண்டனம்? எற்றுக்கு? பாரத நாட்டின் அந்தஸ்தைப் பாரெல்லாம் உயர்த்தி விட்டாரே, அதற்கா ? பஞ்சமும் நோயும் பாரத நாட்டிலா என்று கேட்டுப் போரிட்டு அவைதமை விரட்டி அடித்தாரே, அதற்கா? எதன் பொருட்டய்யா, எம்மானை, நேரு பெம்மானைக் கண்டிக்கிறீர் ? என்று காய்ந்து கேட்டாரல்லவா, அதே ம. பொ. சி.க்கு, ‘மொழிவழி அரசு’ என்பது வெறும் வறட்டுக் கூச்சல், வகை கெட்ட திட்டம், பொருளற்ற வாதம், புத்தி கெட்ட பேச்சு என்றெல்லாம் பொருள்படும்படி நேரு பேசுகிறார் என்றதும், கோபம் கோபமாக வருகிறது. கொதிக்கிறார், குமுறுகிறார், கோல் எடுக்கிறார், நேருவைத் தாக்க ! குருபக்தி குறைகிறது, குலைகிறது ! !
தனக்கு வரும்போதுதான் தெரிகிறது, தலைவலியும் காய்ச்சலும்.
பொய்யர் — புரட்டர்—ஆவேசக்காரர் என்றெல்லாம் ஒருபோதும் எமது ம. பொ. சி. கூறமாட்டார் என்று கூறும் சிலர் உளர், தம்பி! மிகச் சிலர். எனினும் அவர்களுக்கும் நாம் விளக்கமளிப்பதுதான் கண்ணியம்.
தமது அந்தஸ்து தாக்கப்படும் போது, தம்முடைய கருத்திலே காலூன்றி நிற்க முடியாத போது, தோல்வி மனப்பான்மை கொண்டு மற்றவர்களுக்குச் சவால் விட்டுப் பேசுவது நேருஜீயின் சுபாவமாகி விட்டது.
ம.பொ.சி. தமது ஏட்டில் தீட்டுகிறார் இதனை :
சவால் விடுவது நேருவின் சுபாவம்.
தோல்வி மனப்பான்மை கொள்ளும் போது இவ்விதம் நேரு சவால் விடுவார்.
தமது அந்தஸ்து தாக்கப்படும் போது, இவ்விதம் சவால் விடுவார்.
தம்முடைய கருத்து நிலைக்காத போது சவால் விடுவார்.
இவ்வளவு கண்டனங்களையும் மணிகளாக்கித் தமது சொற்சிலம்புக்குள் போடுகிறார் ம. பொ. சி. இம்மட்டோ ! இதோ மேலும்:
பெரிய பதவியிலிருக்கும் நேரு உண்மைக்கு மாறாகப் பேசியிருக்கிறார்.
ராஜ்யங்களைத் திருத்தி அமைப்பதில் மொழிக்கு முக்யத்துவம் கொடுக்கத் தாம் தயாராக இல்லை யென்றும் நேரு ஆவேசத்துடன் கூறியிருக்கிறார்.
மொழிவாரி இனங்களிடையே எழுந்த உரிமைக் கிளர்ச்சி, அவருடைய முதுகுக்கு மண் காட்டி விட்டது ! அந்தத் தோல்வியை மறைக்க என்னென்னவோ பேசுகிறார்.
குருபக்தி, ம.பொ. சி. யை, நேருஜீ, தலைவர் நேரு என்றெல்லாம் அர்ச்சிக்கச் சொல்கிறது; கொள்கையோ, நேரு பண்டிதரை, வீணுரை பேசுவோர், குப்புற விழுந்த பிறகும் வீரம் பேசுவோர், பொய்யர் என்றெல்லாம் கூறச் சொல்கிறது.
அடக்கமாகத் துவக்க வேண்டும், இல்லையானால் அவர்கள் போலாகி விடும் என்று கவலை குடைகிறது. கண்டிக்காமல் இருக்கக் கூடாது, கண்டிக்காது விட்டோமாயின் கொள்கை புதைகுழி செல்லும் என்று அச்சமும் துளைக்கிறது. எனவே, நேருஜீ என்ற மரியாதையும், உண்மைக்கு மாறாகப் பேசுகிறார் என்ற கண்டனமும் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு வெளிவருகின்றன.
“மேன்மை தங்கிய ஐயனே ! தங்கள் மீது சிறுதூசும் வீசும் நோக்க முடையேனல்லேன். எனினும், என் துப்பாக்கிக் குண்டு பாய வேண்டிய இடத்தில் தாங்கள் இருப்பதால் தங்கள் மீது சுட வேண்டி இருக்கிறது,” என்று கூறினானாம், கைத்துப்பாக்கியால் ஒருவனைக் கொல்லக் கிளம்பியவன். அது போல், உண்மைக்கு மாறாகப் பேசுகிறாரே, என்று எழுதுகிறார், ம. பொ. சி., குருபக்தி குலைகிறது என்பதுதானே பொருள் ? கொள்கையின் வழி பணியாற்றப் புகும்போது, குருபக்தி குறுக்கிட்டாலும் அதனைச் சமாளிக்கத்தான் வேண்டும். அந்த நிலைமை, ம. பொ. சி. க்களுக்கும் வந்தே தீரும் என்பதை இச் சம்பவம் விளக்குகிறது.
சுப்ரமணியனார், தமக்கு அந்தச் சங்கடத்தை வைத்துக் கொள்ளவில்லை.
மொழி, இனம், உரிமை, இவைகளெல்லாம் அவருக்குச் சொற்றொடர்கள்! !
பதவி, பவிசு, இவை அவருக்குப் பொருளுள்ளவை.
இவை தாக்கப்படாதிருக்கும் வரையில், அவரால் நிம்மதியாகக் குருபக்தி காட்டிக் கொண்டிருக்க முடிகிறது.
காட்கில் போன்றோர் கடும் கோபம் கொள்வது போலவோ, ம. பொ. சி, போன்றோர் சிந்தாகுலராவது போலவோ, சுப்ரமணியனாருக்குச் சங்கடம் நேரிடுவதில்லை. அவருக்கு அதனால், ‘குருபக்தி’யை வெளியிட்டுக் கொண்டிருக்க முடிகிறது; செய்கிறார்; செய்யட்டும், பாவம், இதையேனும்.“என்ன புத்திக் குறைவடா, சீடா ! கீழே விழுந்த பொருளைக் கண்டெடுக்காமல் விட்டுவிட்டு வந்தனையே. ஈதோ உன் குருபக்தி?” என்று கேட்டார், குருநாதர்; பயணத்தில் அவருடைய பீதாம்பரம் தவறி கீழே விழுந்து விட்டதைச் சீடன் கவனியாமலிருந்ததால். சீடன், “புத்தி! குருதேவா! புத்தி புத்தி”, என்று கூறிவிட்டு, பிறகு மிகக் கவனமாக, கண்ணுங் கருத்துமாகப் பணிபுரிந்து வந்தான். முடிவு என்ன தெரியுமா தம்பி ? மடம் போய்ச் சேர்ந்ததும் ஒரு பெரிய ‘மூட்டை’யைக் கொண்டு போய், குருவின் முன் வைத்து, சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தான் சீடன். “என்னடா இது ?” என்று கேட்டார் குரு.
“ஒன்று விடாமல் எடுத்து வந்தேன். கீழே விழுந்ததையெல்லாம் எடுத்து மூட்டை கட்டிக் கொண்டு வந்தேன்” என்று கூறி, மூட்டையைப் பிரித்துக் காட்டினான் சீடன். அவ்வளவும் குதிரையின் லத்தி. (மலம்)
குரு—சீட தொடர்பில் இப்படியெல்லாம் ‘ரகம்’ இருந்திருக்கிறது. கனம் சுப்பிரமணியம் இதில் ஒரு ரகம். பாவம்!
25—12—1955
அன்புள்ள,
அண்ணாதுரை