தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/முத்தான வாய் திறந்து...

கடிதம்: 35

முத்தான வாய் திறந்து...


★ பொதுக் குழுவில் உறுப்பினர் கருத்துக்கள்—
    ஜஸ்டிஸ் கட்சியில் அண்ணா—பொது
    வேலை நிறுத்தம்.

தம்பி,

பொதுக் குழு, நமது பொதுச் செயலாளர் ஈடுபட்டுள்ள சர்வகட்சிக் கூட்டணி முயற்சிக்கு ஆதரவளித்துத் தீர்மானம் நிறைவேற்றி விட்டது—எனவே நாம் அனைவரும் சர்வகட்சிக் கூட்டணி மேற்கொண்டுள்ள ‘பொது வேலை நிறுத்த’ நடவடிக்கையை வெற்றிகரமானதாக்கிக் காட்டும் பெரும் பொறுப்பை மேற்கொண்டு விட்டோம் என்பது பொருளாகிறது.

பொதுக்குழுவில், இது பற்றிய விளக்க உரையாற்றினார் நமது நாவலர்; பிற அமைப்புகளிலே வாய்பிளந்து கொண்டு கேட்பவர்கள், கொட்டாவி விட்டபடி கேட்பவர்கள், இருக்கிறார்கள்; இவ்வளவு என்ன, மாதாமாதம் சுளைசுளையாகப் பணம் பெற்றுக்கொண்டு பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றுள்ள சட்டசபை உறுப்பினர்களிலேயே பலபேர், முக்கியமான விவாதம் நடைபெறும்போது, மன்றத்தில் இருப்பதில்லை, வெளியே மரத்தடியில் நின்று கொண்டு, காணவந்தவர்களிடம் கதை பேசிக்கொண்டும் ‘காபி’ விடுதியில் உட்கார்ந்து கொண்டும் இருப்பதாக அவவப்போது ‘தகவல்’ வெளி வருகிறதே! உள்ளே, பலகோடி மக்களின் வாழ்வினைப் பாதிக்கக் கூடிய ‘பிரச்சினை’ பேசப்பட்டு வருகிறபோது, நில உடைமையின் உரிமை எந்த வகையிலே கட்டுப்படுத்தப்படுவது, எவ்வளவு அளவு இருக்கலாம், என்பது பற்றிப் பேசப்பட்டு வருகிறபோது, ஆட்சி மன்றத்தில் அமர்ந்திருந்து அக்கறையுடன் பிரச்சினையை அலசிப் பார்த்து அறிவுரை அளித்திட வேண்டியவர்கள், அந்தக் காரியம் செய்வதாக மக்களிடம் வாக்களித்து ‘ஓட்டுப்’ பெற்றவர்கள், காப்பிக்கொட்டை கணேசர் மார்க்கா, காளி மார்க்கா, பவுடரா பசுவின் பாலா என்பன போன்றவை பற்றிப் பேசிச் சுவை காணுகின்றனர்; மணி அடிக்குமாம் ‘ஓட்’ எடுக்கிறார்கள் என்பதை அறிவிக்க ; இவர்கள் அப்போதுதான், அவசர அவசரமாக ஓடுகிறார்களாம் உள்ளே ! இந்த இலட்சணத்தில் நடைபெறுகிறது. சட்டசபைகளிலே இது ! கட்சிக் கூட்டங்களிலோ, சொல்லத் தேவையில்லை.

இந்த இழவெல்லாம் நமக்கென்ன புரிகிறது!—என்ற போக்கினரே அதிகம்.

நமது பொதுக் குழுவில் அங்ஙனமில்லை.

காரம் சற்று அதிகம்—எப்போதும் எனக்கு இனிப்பு அதிகமாக இருப்பதைவிடக் காரம் சற்று அதிகம் இருப்பது பிடித்தம்தான்—எனவே நமது பொதுக் குழுவில் ‘காரம்’ சிறிதளவு அதிகமாக இருப்பது காணும்போது களிப்பாகவே இருக்கிறது. ஆனால் காரம் புளிப்பு கசப்பு உவர்ப்பு எனும் எதுவும் அளவுடன் இருந்தால், சுவை கெடாது, பண்டம் பாழாகாது, பக்குவம் இருக்கும், பயனும் மிகுதி! எனினும் இவை சிறிதளவு அதிகமானாலும் பரவாயில்லை, உப்பு மட்டும் அதிகமாகி விடாமல் பார்த்துக் கொண்டால் போதும்!

நமது பொதுக் குழுவில் பணியாற்றும் வாய்ப்புப் பெற்றவர்கள் அனைவரும், பிரச்சினைகள் குறித்து அதிகமான அளவு அக்கறை காட்டுவது, உள்ளபடி ஜனநாயக வளர்ச்சிக்குத் தேவையாகிறது; நமக்கென்ன? அது என்னவோ? புரியவில்லையே !— என்ற அலட்சியப் போக்குத்தான், ஜனநாயகத்துக்குப் பேராபத்து விளைவிக்கும் ; வேண்டிய அளவைவிடச் சிறிது அதிகமாகவே காரம் கூட்டப்பட்டாலுங்கூடப் பரவாயில்லை, அக்கறை கொள்கிறார்கள் என்றால், அது வரவேற்கத்தக்கது.

எந்தப் பிரச்சினையிலும், நமது ‘பொதுக் குழு’ உறுப்பினர்கள் மிகுந்த அளவு அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகிறது என்று நான் எண்ணுவதற்குக் காரணம், பொதுக் குழுவில் நிறைவேற்றப்படும் எந்தத் தீர்மானமும் நம் அனைவரையும் கட்டுப்படுத்துவதால், பொதுக் குழு காட்டும் வழியில் நாட்டை நடத்திச்செல்லும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருப்பதால், பேசப்படும் பிரச்சினைகள் குறித்தும், எடுத்துக் கொள்ளப்படும் நடவடிக்கை பற்றியும், தீட்டிடும் தீர்மானங்கள் குறித்தும், அளித்திடும் தீர்ப்புப் பற்றியும், நடத்தப்படும் ஆய்வுரைகள் பற்றியும், மிகமிக அக்கறை காட்டியாக வேண்டும்— பிரச்சினையின் சகல கோணங்களையும் கண்டறிய வேண்டும். ‘எல்லாம் அவருக்குத் தெரியும்’ என்ற எண்ணமும் கூடாது, “எதுதான் நமக்குப் புரிகிறது ?” என்ற மனப்போக்கும் ஆகாது; பொதுக் குழுவில் மேற்கொள்ளப்படுகிற எல்லா நடவடிக்கைகளும், நமது பொறுப்பையும் ஆற்றலையும் நம்பியே விடப்பட்டுள்ளன என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்; ஜனநாயகத்தில் அப்போதுதான், தரம், திறம், பக்குவம், பலன் கிடைக்கிறது!

நமது வயலிலே விளையும் செந்நெல்லாயினும் நாமே அல்லவா புடைத்து எடுக்கிறோம்—பதர் போகவும், மணி கிடைக்கவும்! நாம் பெற்ற செல்வமாயினும் நாமே அல்லவா. குளிப்பாட்டி அழுக்கு நீக்கி, ஆடை அணி புனைந்து பிறகு கொஞ்சுகிறோம். அதுபோலத்தான், தம்பி, நமது பொதுக் குழுவில் காரியமாற்றுவதற்கான வேலை முறை பற்றிக் கலந்துரையாடும்போது நாம் அக்கறை காட்டவேண்டும்.

தம்பி! நான் ஜஸ்டிஸ் கட்சிக் காலத்திலிருந்து, இப்படிப்பட்ட குழுக்களில் அமர்ந்திருக்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன்— பெருந்தலைவர்கள், அருகே நெருங்கவே முடியாத நிலையினர், அரண்மனைவாசிகள் ஆகியோர் அமர்ந்து அரசோச்சிய அவைகளிலே, ஒப்பி என்னையும் உடனிருக்கச் செய்திருக்கிறார்கள்—பொப்பிலியும் செட்டிநாட்டுக் (அப்போது) குமாரராசாவும், சர் முகமது உஸ்மானும் அவர் போன்ற வேறு பல கனவான்களும் வீற்றிருந்த குழுக்களில், (அப்போது) அரும்பு மீசையும், கல்லூரி முலாமும் கொண்ட நான் அமர்ந்திருக்கிறேன்—அப்போதெல்லாம், கூடத்தில் நடைபெறும் நிகழ்ச்சி, மறு அறையில் உள்ளவர்களுக்குக்கூடத் தெரியாது— கேட்காது—அவ்வளவு மெல்லிய குரலில், விட்டு விட்டு வார்த்தைகள் வெளிவரும், அதுவும் ஒருவர் இருவரிடமிருந்து; மற்றையோரெல்லாம், இவ்வளவு செல்வவான்கள் நமது முகாமில் இருக்கும் போது தேர்தலைப்பற்றிய பயமென்ன என்று எண்ணிக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.

உறுப்பினர்களிலே பலருக்கு, அந்தக் குழுவிலே இடம் பெற்றது, அந்தஸ்தின் அறிகுறியே தவிர, பணியாற்றும் வாய்ப்பு என்றோ, பொறுப்பான செயலென்றோ, எண்ணம் இருந்ததில்லை.

போடியும் போலாவரமும், வெங்கிடகிரியும் வடபாதியும், காளஹஸ்தியும் கார்வேட்டியும், சிங்கம்பட்டியும் உத்தம பாளையமும், பொப்பிலியும் பிறவுமாக வீற்றிருக்கும் இடத்தில், பணியாற்றும் வாய்ப்பு, பொறுப்பேற்கும் பேறு என்றா எண்ணம் இருக்க முடியும் ! நான், தம்பி ! அப்போது ஜஸ்டிஸ் கட்சிக்குப் புகுத்தப்பட்ட ‘புது இரத்தம்’—இளவெட்டு—ஜஸ்டிஸ் கட்சி அந்தஸ்தை இழந்து வருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு என்ற அளவிலே, அங்குச் சீமான்களால் அனுமதிக்கப் பட்டிருந்தேன் ; அந்த நிலை கிடைத்ததற்கும் காரணம், ஜஸ்டிஸ் கட்சிக்குச் சுயமரியாதை இயக்கம் துணை புரிந்தாக வேண்டிய கட்டம் பிறந்ததுதான்.

தம்பி! அந்தப் பழைய நாளை நான் நினைவுபடுத்திக் கொண்டதற்குக் காரணம், அந்த நாட்களிலே, கட்சியின் கனவான்கள், கட்சிக்கு நீங்காத் தொடர்பு கொண்ட பிரச்சினைகளிலே எந்த அளவுக்கு அக்கறை கொண்டவர்கள் என்ற வேதனை தரும் வேடிக்கையை உனக்குக் கூறுவதற்குத்தான்!

அப்போது, அரசியலில் மிகச் சூடான பிரச்சினை, திலகர் சுயராஜ்ய நிதி என்ற பேரால் திரட்டப்பட்ட ஒரு கோடி ரூபாய், காங்கிரஸ்காரர்களால் பாழாக்கப்பட்ட பயங்கரச் சம்பவம்தான்.

டி. ஏ. வி. நாதன் எனும் எனது நண்பரும், ‘சண்டே அப்சர்வர்’ ஆசிரியரும் என்னை ‘ஜஸ்டிஸ் கட்சிக்கு’ இழுத்துச் சென்றவருமான பி. பாலசுப்பிரமணியமும், ‘ஜஸ்டிஸ்’ இதழில், வெளுத்து வாங்கினார்கள், திலகர் சுயராஜ்ய நிதி மோசடிபற்றி.

கடப்பையில், ஜஸ்டிஸ் மாநாடு! நான் அதிலே பேசினேன்— திலகர் நிதி மோசடி குறித்து—அப்போது, நான்தான் சொன்னேனே, ‘அரும்பு மீசை’ என்று—அதற்கேற்ற வகையில், ஆங்கிலத்தில்! பெருந்தலைவர்கள், வழக்கப்படி கைக்கடியாரத்தை அடிக்கடி பார்த்துக்கொண்டனர்—முகம் சுளித்தபடி அல்ல ; ஆங்கிலத்துக்கு மதிப்பளிக்க வேண்டுமல்லவா, அதனால், கேட்டுக் கொண்டிருந்தனர்.

ஒரு மணி நேரம்—ஆத்திரம் தீரப் பேசி முடித்தேன்— அங்கே கூடியிருந்தவர்கள் அவ்வளவு பேரும், என் எதிரிகள் போலவும், அவர்கள் யாவரும் திலகர் நிதி மோசடியே நடைபெறவில்லை, என்று என்னிடம் வாதாடக் கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு நிற்பது போலவும், எண்ணிக் கொண்டு பேசுகிறேன்—பழுப்பேறாத மிளகாய், அப்போது, நான், அதனால் !

தேனீர் விருந்துக்காகக் கலைந்து சென்றோம்— நான் கற்பனைக் காற்றில் மிதக்கிறேன்—இனிப் பரவாயில்லை—திலகர் நிதி மோசடிபற்றி நாடே சீறி எழும் என்று எண்ணியபடி— ஒரு தலைவர், என் நன்மதிப்பினைப் பெற்றவர்— முதுகில் என்னைத் தட்டிக் கொடுத்தபடி, தனியே அழைத்துச் சென்று, “அண்ணாத்துரை! இதென்ன ஏதேதோ பேசிவிட்டாயே! உன் ஆங்கில நடை அழகை நான் ஒப்புக்கொள்ள முடியும். ஆனால் நீ பேசிய அண்டப் புளுகுகளை எப்படி ஏற்றுக் கொள்ளுவேன்? இப்படி எதற்காகப் பேசினாய் ?” என்று கேட்டார்.

நானோ, தம்பி! நாட்டு மக்களுக்கு ஒரு பேருண்மையை விளக்கி விட்டோம், காங்கிரஸ் கட்சியினர் செய்த ஒரு கயமைத்தனத்தை அம்பலப்படுத்தி விட்டோம் என்ற பூரிப்பில் ‘ராஜ நடை’ போட்டுக் கொண்டு செல்கிறேன். இந்தப் பெரியவரோ, அண்டப்புளுகு பேசுவது அழகா என்று என்னைக் கேட்கிறார். என் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை எண்ணிப் பார்.

நான், கூச்சத்துடன், ஆனால் துணிவினைத் தருவித்தபடி, திலகர் நிதி மோசடிபற்றி அவரிடம் விளக்கலானேன்.

நான், அவருக்கு! சாமான்யன்—பிரமுகருக்கு ! ! தொண்டன்—தலைவருக்கு !!

அப்படியா? உண்மையாகவா? ஒரு கோடியா? பாழாகிவிட்டதா ? என்று மேலும் மேலும் ஆச்சரியத்தால் தாக்குண்ட நிலையில் கேட்டார் அவர்—நான் திகைத்துப் போனேன். ஆனால், தம்பி! கடைசியாக என்னைத் திணற வைத்தது அது அல்ல.

“அதென்ன பெரியவரே ! இதெல்லாம் தெரியாது என்கிறீரே ? பத்துக் கட்டுரைகள் வெளிவந்தனவே இது குறித்து, நம் ‘ஜஸ்டிஸ்’ பத்திரிகையில் என்றேன் நான். அமைதியாக அந்த அருந்தலைவர் சொன்னார், “நான் ஜஸ்டிஸ் படிப்பதில்லை” என்று!

தம்பி ! அவர் ஜஸ்டிஸ் கட்சியிலே முக்கியஸ்தர்—மற்றோர் முறை ஜஸ்டிஸ் கட்சி மந்திரி சபை அமைத்திருந்தால், அவர் நிச்சயம் மந்திரியாகி இருப்பார் ! அவர், ‘ஜஸ்டிஸ்’ படித்திடும் வழக்கமில்லை என்பதை, பதறாமல், கூறுகிறார்!!

கேட்டுக்கொண்டேன், தம்பி, கேட்டுக்கொண்டேன் ! இப்படி எத்தனையோ!!

எதற்குக் கூறுகிறேன் என்றால், ஒரு கட்சியின் முக்கியஸ்தர் அதன் நிர்வாகக் குழுவிலே இடம் பெற்றவருக்கு இந்த அளவுக்குத்தான் ‘அக்கறை’ இருந்தது!! அதை எல்லாம் பார்த்துப் பார்த்து, கசப்பும் கிலியும் கொண்டிருந்த எனக்கு, இப்போது, நமது பொதுக் குழுவில் உறுப்பினர்கள் காட்டும் அக்கறையும், அளித்திடும் ஆய்வுரையும், பெற்றுள்ள தெளிவும், காட்டும் துணிவும், உள்ளபடி, தெம்பு தருவதுடன், தென்னகத்தில் நாம் நடத்திக் கொண்டு வரும் ஜனநாயகப் பரீட்சையில் நிச்சயம் வெற்றி பெற்றுவிடுவோம், என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

தம்பி! பொதுக் குழு கூடி, பிப்ரவரி–20 பொது வேலை நிறுத்தம் நடத்திக் காட்டுவது, தாயகத்தின் தன்மானத்தை அழித்திட எண்ணும் தருக்கரின் அகந்தையை எதிர்த்து அறப்போர் நடத்திக் காட்டுவது என்று முடிவு செய்துவிட்டது. இனி, உனக்கும் எனக்கும், பெரியதோர் பொறுப்பு ஏற்பட்டு விட்டது. நீயும் நானும், இந்தப் பெரும் பொறுப்பை எந்த அளவில், வகையில் நிறைவேற்றி வெற்றி காணப்போகிறோம், என்பதைக் காண, நாடு தயாராகி விட்டது.

பொது வேலை நிறுத்தம் என்றால் தமிழகமெங்கும் ஒரே நாளில், ஒரே முறையில் வெற்றியுடன் நடத்தப்பட வேண்டிய மகத்தானதோர் செயல்!! சாமான்யமானது என்று எண்ணிவிடப் போகிறார்கள், தம்பி! இதனுடைய முக்கியத்துவத்தைத் தயவு செய்து நன்றாக விளக்கிச் சொல்லு.

இதென்ன பிரமாதம்? அடைக்கச் சொன்னால் அடைக்கிறார்கள் ! அமளிக்குப் பயந்து அங்காடி மூடப்படும்!—என்றும் அலட்சியம் காட்டலாகாது; “இது ஒரு தீவிரமான திட்டமா? அங்கங்கே நடைபெறுகிற காரியத்தைப் பார்க்கும் போது இது உருசியற்ற, பசையற்ற காரியம்!”—என்றும் கவலையற்று இருந்து விடக்கூடாது.

இது வெற்றிகரமாக நடத்த விடக்கூடாது என்று இப்போதே நாட்டை ஆளும் ‘நல்லவர்கள்’ நானாவிதமான காரியத்திலும் ஈடுபட்டு விட்டார்கள்—அதனைக் கவனித்தால், தம்பி ! நாம் மேற்கொண்டுள்ள காரியம் எத்தகையது என்பது தெரியும்.

குதிரை பறிபோன பிறகும் கொட்டிலைப் பூட்டாத குணவான் ஒருவரை முதலமைச்சராகப் பெற்றிருக்கிறோம். அவர் காதில் இடியோசை விழாது, மின்வெட்டு கண்ணில் படாது, பெருங்காற்று அவர் மேலாடையையும் அப்புறப்படுத்தாது ! அவ்வளவு இறுகிப் போன மனம் !

எதிலும் ஓர் அலட்சியம், அக்கறையற்ற தன்மை ! அதது தானாக உருவாகட்டும் என்று இருக்கும் போக்கு !

மீன் பிடிப்போன்கூட, ‘தக்கை’ தண்ணீருக்குள் போகிறதா என்று கவனித்தபடிதான், அரைத்தூக்க நிலையில் கரையில் உட்கார்ந்திருக்கிறான். இவரோ, மீன் தானாகத் தூண்டிலைப் பிடித்து ஆட்டினாலும், என்ன தொல்லை இது ! மீன் நேராகத் துள்ளி ஓலைக் கூடைக்குள்ளேயே குதித்துத் தொலைக்கக் கூடாதா என்று கருதும் போக்கினராக இருக்கிறார்!

எந்த ஒரு பிரச்சினைக்காக நாடே இன்று கொந்தளித்துக் கிடக்கிறதோ, அது இவருடைய உள்ளத்தைத் தொட்டதாகக் கூடத் தெரியக் காணோம், அபாரமான நம்பிக்கையே இந்தப் போக்குக்குக் காரணம் என்கிறார்கள் ஆதரவாளர்கள்; திகைப்பால் செயலற்று மட்டுமல்ல, சிந்தனையற்றும் போய் விட்டார் என்று செப்புகிறார்கள், ஆய்வுரை வல்லோர்.

அப்படிப்பட்ட ‘அசமந்த’ப் போக்கினரே, ‘பொதுவேலை நிறுத்தம்’ என்று கூறப்பட்டதும், பேசுகிறார் ! ஆமாம், தம்பி ! வழக்கமாக ‘இரத்தினச் சுருக்க’மாகப் பேசும் முதலமைச்சர், ‘வேலை நிறுத்தம்’ என்று கேள்விப்பட்டதும் ‘நீண்ட பிரசங்கம்’ செய்திருக்கிறார்—‘சுதேசமித்திரன்’ கூறுகிறது.

செஞ்சியில், முதலமைச்சர் போர்வையைக் கிழித்துக் கொண்டு, மெள்ள மெள்ளப் பழைய காமராஜர் வெளி வருகிறார்!!

சர்வ கட்சி மாநாடு கூடி, வேலை நிறுத்தம், கடை அடைப்பு, இதெல்லாம் செய்யப்போவதாகத் தீர்மானம் செய்திருக்கிறார்களாம். ஏன் இதெல்லாம் என்னிடம் வந்து சொல்லலாமே!—என்று துவக்கி, இறுதியில், ‘கபர்தார்’ கூறுகிறார்.

பம்பாயைப் பார்த்துமா புத்தி வரவில்லை !—என்று கேட்டிருக்கிறார்.

தம்பி ! பொருள் தெரிகிறதல்லவா ? பம்பாயில், என்ன செய்தோம் தெரியுமா ? தடியால் தாக்கினோம், துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினோம், 71—பேர் பிணமானார்கள், நூற்றுக் கணக்கிலே படுகாயமடைந்தனர், ஆயிரக்கணக்கானவர்களைச் சிறையிலே அடைத்து விட்டோம், புதிய புதிய போலீஸ் படை கொண்டு வந்தோம்—பட்டாளத்தையே ஏவினோம்—தெரியுமல்லவா—ஜாக்கிரதை !— நீங்கள் ஏதேனும் கண்டனம் தெரிவித்தால், சுட்டுத் தள்ளுவோம்! என்கிறார்.

பாழாய்ப் போன பதவிக்காக, மெத்தச் சிரமப்பட்டு, சமரசவாதி, எதிர்க்கட்சிகளை அணைத்துச் செல்பவர், எதையும் ஆத்திரப்படாமல் கவனிப்பவர், என்றெல்லாம் ‘ராஜதந்திர’ ‘பட்டுப் பட்டாடை’ போர்த்திக் கொண்டு, புது மனிதராகத் தோற்றமளித்து வந்தார், இத்தனை நாளாக ! வேலை நிறுத்தம் — நாடெங்கும் — எல்லாக் கட்சியும் கூட்டாகி நடவடிக்கையில் ஈடுபடும் என்று தெரிந்ததும், பழைய காமராஜர், பட்டாடையைக் கிழித்துக் கொண்டு வெளியே வருகிறார். பார் ! பம்பாய் நகரை ! என்று கூறிப் பயமுறுத்தப் பார்க்கிறார்! துப்பாக்கி இருக்கிறதாம்! அதனால் நாம் பயந்து சாக வேண்டுமாம்!! தம்பி ! துப்பாக்கியின் பெயர் கேட்டுப் பயந்து சாவதைவிட, துப்பாக்கியின் குண்டுபட்டே இறந்து படுவோமே! தமிழனால் இதுகூடவா முடியாது!! குடியாத்தம் தேர்தலில் குடும்பம் குடும்பமாக இவருக்குப் பணியாற்றியதற்கு, அவரும் ஏதாவது ஒருவகையில் நன்றி காட்ட வேண்டாமா ! அதனால்தான் பம்பாய் ! என்று பேசுகிறார்.

இவர், ‘நம்மவர்’ என்று நாம் நாத்தழும்பேறப் பேசியதும், ‘நல்லவர்’ என்று நாடெங்கும் பறை அறைந்ததும். உள்ளபடி இவரை நம்மவராகவும் நல்லவராகவும ஆக்கியிருந்தால், “பண்டிதரே! உமது பேச்சுக்கு நான் மறுபேச்சுப் பேசாதவன், அறிவீர் !! ஆனால் இதோ, நாடு உள்ள நிலைமையைப் பாரும்! கொதித்தெழுகிறது, போர்க்கோலம் கொள்கிறது! என்னைக் குணாளனே ! குலக் கொழுந்தே ! என்றெல்லாம் கூறி மகிழ்ந்த மக்கள், இன்று தாயகத்துக்கு வந்துற்ற கேட்டினைக் கண்டு மனம் பதறி, என்னையும் மீறி, எழுச்சி பெற்றுள்ளனர். இதனை ‘ஏதோ’ என்று எண்ணி விடாதீர், பதவி பெறும் சூதல்ல, துவேச மனப்பான்மையல்ல, இப்போது எழுந்துள்ளது, விழிப்புற்ற தமிழகத்தின் வேதனைக் குரலொலி, தன்மானம் காத்திடத் தாயகம் எழுந்துள்ள காட்சி. இதிலே சகலரும் முனைந்து நிற்கிறார்கள்—சட்டத்தை மதித்திடும் பி. டி. ராஜன் தலைமை வகிக்கிறார்.

தமிழரசுக் கழகம்
திராவிட முன்னேற்றக் கழகம்
கம்யூனிஸ்டுக் கட்சி
பிரஜா சோஷியலிஸ்டுக் கட்சி
சோஷியலிஸ்ட் கட்சி
ஜஸ்டிஸ் கட்சி
எல்லைப் பாதுகாப்புக் கமிட்டி
இணைப்புக் கமிட்டி

எனும் எல்லாம் ஈடுபடுகின்றன. ஏதோ என்னிடம் கொண்டுள்ள ‘சபலம்’ பெரியாரை ஓரளவு தடுத்து நிறுத்தியிருக்கிறது அதுவும் நிரந்தரம் என்று கூறிவிட முடியாது; தமிழகத்தில் இதற்கு முன் எப்போதும் இது போன்றதோர் கூட்டு முயற்சி உருவானதில்லை—இதனை அலட்சியப் படுத்துவதோ, அடக்கப் பார்ப்பதோ, பெரும் ஆபத்தாக முடியும் — எனவே—தீது பயக்கும் தீர்ப்பை மாற்றுக.

தமிழக எல்லைகளைத் தருக !
சென்னைக்குத் தமிழ் நாடு என்ற பெயரிடுக !
தட்சிணப் பிரதேச யோசனையைக் கை விடுக ! எதற்கும் நானிருக்கிறேன், எந்த நிலைமையையும் நான் சமாளித்து விடுவேன், என்று நான் ஆச்சாரியார் போலக் கூறி உம்மை ஏமாற்ற விரும்பவில்லை, அமைந்துள்ள கூட்டணியை எதிர்த்து நான் அடக்கு முறை ஏவினால், நாடு காடாகும் எதிர்காலம் இருள் சூழும்—என்று காமராஜர் டில்லிக்குக் கூறுவார்!

ஆனால், அவரோ, நம்மைப் பயமுறுத்துகிறார்!

தம்பி ! பொது வேலை நிறுத்தம், நீண்டகாலப் போர்த் திட்டத்துக்கான முதல் முழக்கமாக அமையப்போகிறது ! எனவேதான், முதலிலேயே இதனை முறியடித்திடக் காமராசர் சர்க்கார் முயற்சிக்கிறது.

டாக்டர் வரதராஜுலு, ‘முட்பொறுக்கி’ ஆழ்வாராகி, நமக்குப் புத்திமதி கூறுகிறார்—வேலை நிறுத்தம் வேண்டாம் என்று பேசுகிறார்.

பம்பாய்என்ற உடன், தம்பி இவர்கள் சுட்டுக் கொன்ற மக்களின் தொகையும், அடித்து நொறுக்கியவர்களின் எண்ணிக்கையும் மட்டும்தானா தெரிகிறது? பாபம்! அடக்கு முறையிடம் அழுத்தமான நம்பிக்கை வைத்திருக்கும் அன்பருக்கு, இதுதான் தெரிகிறது, நமக்கோ, நாட்டின் தன்மானத்தை, இனத்தின் எதிர்காலத்தை, மொழிவழி அரசுகோருபவரின் உரிமையை அழித்திட, எவ்வளவு உச்சகட்டத்தில் வீற்றிருந்து அரசோச்சுபவர் முயற்சித்தாலும், நாடு, எவ்வளவு சீறி எழுகிறது, கோழையும் வீரனாகி, கோட்டைகள் மண்கூடுளாகி, வாழ்வுக்கும் சாவுக்கும், வீட்டுக்கும் சிறைக்கும் வித்தியாசம் தெரியாத மனநிலையை மக்கள் பெற்று, புதியதோர் ஒற்றுமை, அசைக்க முடியாத நம்பிக்கை பெறுகிறார்கள், என்பதல்லவா தெரிகிறது !

பதவியைக் கால் தூசு என்று உதறித் தள்ளும் வீரர் களைக் காண்கிறோம்!
மேலிடத்துக்குக் காவடி தூக்க, கட்டியங் கூற, மறுக்கும் தீரர்களைக் காண்கிறோம்!
கொடி கட்டி ஆள்பவர்கள் கொடுங்கோலராகி விட்டதால், இன்று குலைநடுங்கிப் பதுங்கும் நிலையைக் காண்கிறோம்.
மராட்டிய இன எழுச்சி கொழுந்துவிட்டெரியக் காண்கிறோம்.
மாவீரன் சிவாஜியின் மரபினர் நாங்கள்—மமதையாளர்கள் முன் மண்டியிட மாட்டோம் வேண்டு- மானால் — எம்மை வெட்டி வீழ்த்துங்கள்—கழுகு தின்னட்டும், கயவர்களின் காலடியில் வீழ்ந்து கிடப்பதைவிட அது எவ்வளவோ மேலானதாகும் என்று கனலும் புனலும் ஒரு சேரச் சோரும் விழியுடன் கூறிடக் காண்கிறோம்.
நகரமும் குக்கிராமமும், ஆலையும் அங்காடியும், பள்ளியும் பண்டக சாலையும். துறைமுகமும் பிறவும்,பாசறைக் கோலம் அடைந்தது காண்கிறோம்.

பம்பாயைப் பார்த்துமா புத்திவரவில்லை, என்று நாமும் கேட்கிறோம்; அகந்தையுடன் அக்ரமத்தைத் திணிக்கும் போக்கினரைக் கேட்கிறோம்.

எந்தப் பம்பாயில் நேரு பண்டிதர் வந்தால் ‘ஜன சமுத்திரம்’ கூடுகிறதோ, அங்கு இன்று, நேரு படத்துக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறதே !

துப்பாக்கி தெரிகிறதா என்று காமராசர் கேட்கிறார் அதற்கு அஞ்சாமல் மார் காட்டி நின்ற மாவீரர்களை நாம் காட்டுகிறோம்.

தம்பி ! துப்பாக்கிகளைத் தாண்டித்தான், தூய விடுதலைப் போர் வெற்றிகளைக் கண்டிருக்கிறது ! ! எந்தக் கொடுங்கோலனிடம் துப்பாக்கி இல்லை—எந்தக் கொடுங்கோலாட்சி துப்பாக்கியினால் காப்பாற்றப்பட்டிருக்கிறது?

எனினும், காமராஜர் இதுபோல் பேசினதற்குக் காரணம், அவருக்கு ஏற்பட்டு விட்ட பீதி! ஆமாம்! வெற்றிகரமான பொது வேலை நிறுத்தம் என்பது, ஆட்சியாளர்களுக்கு ஓர் அவமானச் சின்னம் !! அதை அறிந்துதான், முத்தான வாய் திறந்து முதலமைச்சர் பேசுகிறார்—சத்தான பேச்சல்ல, எனினும் அவருக்குச் சுவையான பேச்சு அது !

துப்பாக்கியைத் துரைத்தன மூலம் பெறுவதற்கு முன்பே, அவர், நம்முடைய ‘கட்டை விரல்களை’ ஒட்ட வெட்டி விடுவேன் என்று பேசியவர் தான் ! !

தட்சிணப் பிரதேச யோசனையை வீழ்த்த
தமிழகம் மொழிவழி அரசாக
தமிழ்ப் பகுதிகள் அனைத்தும் தமிழ்நாட்டில் சேர
சென்னைக்குத் தமிழ் நாடு என்று பெயர் கிடைக்க
இத்தனைக்கும் சேர்த்தே பிப்ரவரி 20 ! !

பொதுக் குழு, வாக்களித்துவிட்டது—நம்மை நம்பி, நாம் கடமையறிந்து, கண்ணியம் தவறாமல், அமைதி குலையாமல், பலாத்காரத்துக்குத் துளியும் இடமளிக்காமல், பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவோம் என்ற நம்பிக்கையுடன், பொதுச் செயலாளர், எல்லாக் கட்சியினருக்கும் வாக்களித்து விட்டார்—சகல கட்சியினரும் கூடிய அந்த அவையில், சூள் உரைத்து விட்டார்—உடன் இருந்து ஒப்பமளிக்கும் வாய்ப்பினை நானும் பெற்றேன்—பொதுக் குழுவும் ஏற்றுக் கொண்டது—எனவே, தம்பி ! பொறுப்பு இனி உனக்கும் எனக்கும் ! புறப்படு! புறப்படு ! பிப்ரவரி–20 வெற்றிகாண, பணியாற்றப் புறப்படு!! இதோ நானும் புறப்படுகிறேன்! !

இந்தத் திங்கள் 12–லிருந்து 15–வரையில், தமிழகமெங்கும் உள்ள தம்பிமார்களை (பொதுக் கூட்டத்தில் அல்ல) சந்தித்துப் பேச, வரக்கூடும் திட்டம், ‘நம் நாடு’ வெளியிடும் ! தம்பி ! நான் நேரில் வந்தால்தானா ? இதோ என் வேண்டுகோள் ! எனக்குத்தான் வீறுகொண்டெழுந்து ஏறுநடை போட்டுப் பணியாற்றக் கிளம்பும், உன் உருவமே தெரிகிறதே, மனக்கண் முன்! பம்பாய்! பார்! பார்! என்றல்லவோ பயம் காட்டுகிறார் காமராஜர்!

நாம் யார்? என்பதைக் காட்ட வேண்டாமா? நாமென்ன, அடக்கு முறை கண்டஞ்சும் கோழைகளா ? சாகத் துணியாத சடங்களா ? உரிமையின் மாண்பறியா மரக்கட்டைகளா ? தமிழரல்லவா நாம் ! பிப்ரவரி 20–ல் அது தெரியட்டும், தம்பி ! நன்றாக, ஆனால் அமைதியாக ! பளிச்சென்று, ஆனால் பலாத்காரமற்ற வகையில் !


5—2—1956

அன்புள்ள,
அண்ணாதுரை