தம்ம பதம்/பால வக்கம்

இயல் ஐந்து

பேதை

60. விழித்திருப்பவனுக்கு இரவு நெடிதாகும்; களைத்திருப்பவனுக்கு வழி நெடுந் தூரமாகும்; நால்லறத்தை அறியாத மூடருக்கு (ஜனன-மரணமாகிய) ஸம்ஸாரத்தொடர் எல்லையற்றதாகும். (1)

61. (ஸம்ஸார) யாத்திரையில், ஒருவன், தனக்கு நிகரான அல்லது மேலான நண்பன் துணைக்குக் கிடைக்கா விட்டால், தன்னந்தனியே தொடர்ந்து செல்வானாக; மூடனுடைய துணை உதவியாகாது. (2)

62. ‘என் பிள்ளைகள், என் செல்வம்' என்ற சிந்தனையால் மூடன் துயரப்படுகிறான். அவனே அவனுக்குச் சொந்தமில்லை! பிள்ளைகளும் தனமும் எப்படிச் சொந்தமாகும்? (8)

63. பேதை தன் மடமையை உணர்ந்தால், அந்த அளவுக்கு அவன் அறிவுள்ளவன்; தன்னைப் பண்டிதனாக எண்ணிக்கொள்ளும் பேதை முழு மூடனேயாவான். (4)

64. அகப்பை குழம்பின் சுவையை அறியாது; அது போல் வாழ்நாள் முழுவதும் பேதை ஞானியோடு பழகி வந்தாலும், தருமத்தை அவன் அறிவதில்லை. (5)

65. நாக்கு குழம்பின் சுவை அறிகிறது; அதுபோல் கருத்துள்ளவன் சிறிது நேரம் ஞானியோடு பழகினாலும், அவன் தருமத்தின் இயல்பைத் தெரிந்து கொள்கிறான். (6) 66. புல்லறிவுள்ள மூடர்கள் தாமே தமக்குப் பகைவர்; அவர்கள் பாவ கருமங்களைச் செய்து கொண்டு திரிகின்றனர்; அவை கசப்பான (துன்பக்) கனிகளையே அளிக்கின்றன. (7)

67. எந்தக் கருமத்தைச் செய்தால் பின்னால் மனம் நோகுமோ, எதன் பயனை அழுதுகொண்டே அநுபவிக்க வேண்டியிருக்குமோ, அது நற்செயல் ஆகாது. (8)

68. எந்தக் காரியத்தைச் செய்தால் பின்னால் மனம் இன்பமடையுமோ, எதன் பயனை உள்ளக்களிப்போடு அநுபவிக்க வேண்டியிருக்குமோ, அதுவே நற்செயல், (9)

69. பாவம் பழுத்துப் பயனளிக்காத வரையில் மூடன் அதைத் தேன் என்று விரும்புகிறான்; ஆனால் அது பழுத்துப் பயனளிக்கையில் அவன் (ஆறாத்) துயரை அடைகிறான். (10)

70. மாதக்கணக்காக மூடன் தர்ப்பைப் புல்லின் முனையினால் (துளித்துளியாக) உணவெடுத்து உண்டு வந்தாலும், தருமத்தை நன்கு அறிந்தவர்களின் பதினாறில் ஒருபகுதிக்குக்கூட அவன் ஈடாகமாட்டான். (11)

71. புதிதாய்க் கறந்த பால்போலே, பாவச் செயல் உடனே புளிப்பாக மாறுவதில்லை ; நீறு பூத்த நெருப்பைப் போல் கனன்றுகொண்டேயிருந்து அது மூடனைத் தொடர்கிறது. (12)

72. (பாவ கருமத்தின் தன்மையை ) மூடன் அறியும் போது அவ்வறிவு அவனுக்கு நன்மையா யில்லாததோடு அவனுக்கு இருக்கிற இன்பத்தையும் அழித்து, அவன் தலையையும் பிளக்கிறது. (13

78. மூடனான பிக்கு போலியான புகழை விரும்புகிறான்; பிக்குகளிடையே முதன்மையாயிருக்கவும் பெளத்த மடங்களில் தலைமையாயிருக்கவும் இல்லறத்தார் தன்னை வணங்கவேண்டுமென்றும் விரும்புகிறான். (14)

74. மூடன், ‘இல்வாழ்வாரும் துறவிகளும் இது என்னால் செய்யப்பெற்றது என்று நினைக்கட்டும். நல்லவை தீயவை, ஆகிய காரியங்களில் அவர்கள் என் விருப்பப்படியே நடந்து வரட்டும்', என்று விரும்புகிறான். எனவே அவனுடைய இச்சையும் இறுமாப்பும் அதிகமாகின்றன. (15)

75. செல்வத்தை அடையும் வழி வேறு, நிருவாணத்தை அடையும் வழிவேறு. புத்தருடைய சீடனான பிக்கு, அதை அறிந்துகொண்டு, மக்களுடைய மரியாதையை விரும்பாமல், விவேகத்தை நாடி உழைத்து வர வேண்டும். (16)

"https://ta.wikisource.org/w/index.php?title=தம்ம_பதம்/பால_வக்கம்&oldid=1381528" இருந்து மீள்விக்கப்பட்டது