தம்ம பதம்/மக்க வக்கம்
இயல் இருபது
மார்க்கம்
271. மார்க்கங்களின் அஷ்டாங்க மார்க்கமே [1] சிறந்தது. வாய்மைகளில் நான்கு வாய்மைகளே [2] . சிறந்தவை; சீலங்களில் வைராக்கியமே [3] சிறந்தது; மக்களில் ஞானக்கண் [4] உடையவனே சிறந்தவன். (1)
272 . இதுதான் மார்க்கம், அறிவைப் புனிதமாக்க வேறு வழியில்லை. இதையே பின்பற்றுக; மாரனை வெல்ல இதுவே , ஏற்றது. (2)
273. இந்த மார்க்கத்தில் சென்றால், உன் துக்கங்கள் தொலையும். சதையில் தைத்துள்ள முட்களை (துன்பங்களை ) நீக்கும் வழியை அறிந்ததும்,நான் இந்த மார்க்கத்தை உபதேசிக்க நேர்ந்தது. (3)
274. நீயேதான் முயற்சி செய்ய வேண்டும். ததாகதர் உபதேசம் மட்டுமே செய்வர். இந்த மார்க்கத்தில் இறங்கி, தியானத்தில் ஆழ்ந்தவர்களுக்கு மாரனுடைய பந்தங்கள் [5] விலகும். (4) 275. ‘படைக்கப் பெற்ற யாவும் அநித்யம்-நிலையற்றவை’ இதை அறிவால் உணர்ந்தவன் துக்கத்தில் அழுங்குவதில்லை; இதுவே விசுத்தி மார்க்கம்.[6] (5)
276. ‘படைக்கப் பெற்ற யாவும் துக்கமானவை.’ இதை அறிவால் உணர்ந்தவன் துக்கத்தின் அழுங்குவதில்லை; இதுவே விசுத்தி மார்க்கம். (6)
277. படைக்கப் பெற்ற யாவும் அநாத்மம்.[7] இதை அறிவால் உணர்ந்தவன் துக்கத்தில் அழுங்குவதில்லை, இதுவே விசுத்தி மார்க்கம். (7) 278. எவன் உரிய வேளையில் விழித்து எழாமலுள்ளானோ, எவன் பலமுள்ள வாலிபனாயிருந்தும், சோம்பரில் ஆழந்து கருத்திலும் சிந்தனையிலும் உறுதியற்றுள்ளானோ, அந்த மந்த புத்தியுள்ள சோம்பேறி ஞான மார்க்கத்தை அடைய முடியாது. (8)
279. ஒருவன் தன் நாவைக் காத்து, மனத்தை அடக்கி உடலால் தீமை எதையும் செய்யாது இருப்பானாக. செயல் புரிவதற்கு ஏற்பட்ட இந்த மூன்று வழிகளையும் பரிசுத்தமாக வைத்திருப்பவன் பெரியோர் அருளிய நன்னெறியை அடைவான். (9)
280. தியானத்திலிருந்து ஞானம் உதயமாகிறது; தியானமில்லாவிடில் ஞானம் குறைகிறது; ஆக்கமும் கேடும் வரக்கூடிய இந்த இரு வழிகளையும் அறிந்து, அறிவு பெருகும் வழியை மனிதன் மேற் கொள்வானாக. (10)
281. ஒபிக்குக்களே! ஒரு மரத்தை மட்டும் வெட்டினால் போதாது, ஆசைக் காட்டையே அரிந்து தள்ளுங்கள்! ஆசைக் காட்டிலிருந்தே அபாயம் வருகிறது. காட்டையும் புதர்களையும் வெட்டி வீழ்த்திய பிறகு, நீங்கள் விடுதலை பெறுவீர்கள். (11)
282. ஆடவன் பெண்களிடம் கொள்ளும் காம ஆசை எதுவரை அழிக்கப்படாமல் அணுவளவேனும் இருக்கிறதோ, அதுவரை, பால்குடி மறவாத பசுங் கன்று தன் தாயிடம் ஒட்டிக் கொள்வது போல், அவன் மனம் (வாழ்வைப்) பற்றிக் கொண்டேயிருக்கும். (12) 283. சடரத்காலத்தில் தோன்றும் குமுத புஷ்பத்தைக் கையால் பறித்தெடுப்பதுபோல், ஆன்ம நேயத்தை [8] அறுத்தெறிக. புத்தர் போதித்த நிருவாண முக்திக்குரிய சாந்தி மார்க்கத்தைப் போற்றி நடக்கவும். (13)
284. முடனாயிருப்பவன், ‘கார் காலத்தில் இங்கே வசிப்பேன்!’ என்றும், ‘குளிர் காலத்திலும், கோடை காலத்திலும் அங்கே வசிப்பேன்?’ என்றும் கருதுகிறான்; (இடையிலே வரக்கூடிய மரணம் என்ற) இடையூற்றைப் பற்றி அவன் எண்ணுவதில்லை. (14)
285. (மக்கள்) உறங்கிக் கொண்டிருக்கையில் பெரு வெள்ளம் வந்து கிராமத்தையே அடித்துக் கொண்டு போய்விடுகிறது; அதுபோல், தன் மக்கள் பசுக்கள் முதலிய செல்வங்களில் மகிழ்ந்து மயக்கத்திலுள்ள மனிதனை எமன் வந்து அடித்துக் கொண்டு போகிறான். (15)
286. எமனால் பிடிக்கப்பட்ட ஒருவனை அவன் பெற்ற மக்கள் காக்க முடியாது; தந்தையும் தமர்களும் காக்க முடியாது; உற்றாரை நம்பியும் பயனில்லை. (16)
287. இதன் உண்மையை உணர்ந்து , நற்குணமுள்ள ஞானி நிருவான முக்திக்குரிய வழியிலேயுள்ள தடைகளை உடனே நீக்கிக் கொள்ளட்டும். (17)
- ↑ அஷ்டாங்க மார்க்கம் நற்காட்சி, நல்லுாற்றம், நல்வாய்மை,நற்செய்கை , நல்வாழ்க்கை, நல்லுாக்கம், நற்கடைப்பிடி, நல்லமைதி என்ற எட்டுப்பிரிவுகளுள்ள மார்க்கம். இவை பற்றிய விளக்கத்தை அனுபந்தம் ஒன்றில் காணலாம்.
- ↑ நான்கு வாய்மைகள்-துக்கம், துக்க காரணம், துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என்ற உண்மைகள்
- ↑ வைராக்கியம்-வெறுப்பு. ஆசைகளை வெறுத்து ஒதுக்கல்.
- ↑ ஞானக்கண்-உண்மையை ஊடுருவிப் பார்க்கும் சக்தி.
- ↑ மாரனுடைய பந்தங்கள்-பாவம், மரணம். முதலியவை.
- ↑ விசுத்தி மார்க்கம்-மிகவும் பரிசுத்தமான வழி.
- ↑ அநாத்மம் - ஆன்மா அற்றவை. இந்தச் சூத்திரத்திற்குப் பலவாறு பொருள் உரைக்கப் படுகிறது. மூலத்தில் ‘ஸப்போ தம்மா அநந்தா’ - அதாவது ‘ஸ்ர்வ தர்மம் அநாத்மம்’ என்று கூறப்பட்டுள்ளது. ‘தர்மம்’ என்பதற்கு என்ன பொருள் கொள்வது என்பதே முக்கியம். ‘ஒருவர் உருவங்கள் யாவும் மாயை’ என்றும் மற்றொருவர், ‘ஐந்துக்களின் குணம் செயல்கள் ஆன்மா இல்லாதவை’ என்றும், ‘உயிர் வாழ்தலுக்குக் காரணமான தாதுக்கள் (ஸ்கந்தங்கள்) யாவும் ஆன்மா அற்றவை’ என்று வேறு ஒருவரும் குறிப்பிடுகின்றனர். இந்தச் சூத்திரத்திற்கு முந்திய இரண்டு சூத்திரங்களையும் தொடர்ந்து பொருளுரைத்தலே பொருத்தமாகும். பெளத்த தருமப்படி பிரபஞ்சத்தில் தோன்றின யாவும் (பொருள்களும் ஐந்துக்களும்) அநித்தியமானவை, துக்கமானவை, ஆன்மா அற்றவை. முந்திய 277 278 சூத்திரங்களில் அநித்தியமும் துக்கமும் உணர்த்தப்பட்டன. இதில் அநாத்மம் விளக்கப்படுகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் அழிவில்லாத தனி ஆன்மா ஒன்று இல்லை. உயிர் ஏகம். அந்த உயிர் வெள்ளத்தில் எழும் அலைகளே மனிதர்கள். ஒவ்வோர் அலைக்கும் தனித் தன்மை இல்லை என்பதை உதாரணமாய்க் கூறலாம்.
- ↑ ஆன்ம நேயம் - தன்னை நேசித்தல், சுயநலம்