தம்ம பதம்/ஸுக வக்கம்
இயல் பதினைந்து
களிப்பு
195. பகை கொள்ளும் மனிதரிடையே பகையில்லாது நாம் இன்பமாக வாழ்கிறோம்; பகைக்கும் மனிதரிடையே நாம் பகையின்றித் திரிகிறோம். (1)
196. துயர்களால் வருந்துவோர் நடுவே துயரின்றி நாம் இன்பமாக வாழ்கிறோம்; துயரப்படுவோர் நடுவே நாம் துயரின்றித் திரிகிறோம். (2)
197. கவலையால் நலிந்தவரிடையே நாம் கவலையின்றி இன்பமாய் வாழ்கிறோம்; கவலைப்படுவோர் நடுவே நாம் கவலையின்றித் திரிகிறோம். (3)
198. எமது என்று எதுவுமில்லாத நாம் இன்பமாக வாழ்கிறோம்; தேசு மிகுந்த தேவர்களைப்போல் நாம் இன்பத்தைப் பருகிக்கொண்டே வாழ்வோம். (4)
199. வெற்றி வெறுப்பை வளர்க்கும்; தோல்வியுற்றார் துக்கத்தில் வாழ்பவர். வெற்றியும் தோல்வியும் விரும்பாதவன் சுகமும் சாந்தியும் பெறுகிறான். (5)
200. ஆசைகளுக்கு நிகரான அனல் வேறில்லை;
- துவேஷத்திற்கு நிகரான நோய் வேறில்லை;
- உடலோடு வாழ்வதற்கு நிகரான துயர் வேறில்லை;
- சாந்திக்கு மேலான சந்தோஷமும் வேறில்லை.
(6)
201. பேராசையே பரம ரோகம்;
- ஐம்புல ஆசைகள் பரமரோகம்;
- இதை உண்மையாக உணர்ந்தவனுக்கு
- நிருவாணமே பரம சுகம்.
(7) 202. ஆரோக்யகே பரம லாபம்;
- திருப்தியே பரமதனம்;
- விசுவாசமே பரம பந்து;
- நிருவாணமே பரம சுகம்.
(8)
203. ஏகாந்தத்தின் இன்பத்தையும், அமைதியின் இன்பத்தையும் நுகர்ந்த பிறகு, ஒருவன் தர்மத்தின் இன்பத்தைப் பருகும்போது, பயமும் பாவமும் விலகுகின்றன. (9)
204. நல்லாரைக் காண்பது நன்று; அவரோடு இணங்கியிருப்பது எப்போதும் இன்பம். மூடர்களைப் பாராமலே யிருப்பவன் எப்போதும் இன்பமாயிருப்பான். (10)
205. மூடனுடன் குலாவுவோன் நெடுங்காலம் துன்புறுவான். மூடரோடு குலாவுதல் பகைவருடன் பழகுவதைப்போல, எப்போதும் துக்கந்தான். அறிவாளரின் இணக்கம் சுற்றத்தாரோடு பழகுவதைப் போல் இன்பமே பயக்கும். (11)
206. ஆதலால் நட்சத்திர மண்டலத்தின் வழியைச் சந்திரன் பின்பற்றுவதுபோல, ஞானியாயும், பேரறிவாளனாயும், கல்விமானாயும், பொறுமையுடையோனாயும், கடமை உணர்ந்தோனாயும், மேலோனாயும் உள்ள மகானையே ஒருவன் பின்பற்ற வேண்டும். (12)