தான்பிரீன் தொடரும் பயணம்/அயர்லாந்து மண்ணில் உள்ள பிரிட்டிஷ் படைவீரனுக்கு ஓர் கடிதம்
அயர்லாந்து
மண்ணில் உள்ள
பிரிட்டிஷ் படைவீரனுக்கு
ஓர் கடிதம்
- பேட்ரிக் கால்வின்
படைவீரனே
இங்கு வரவேண்டும் என்று
நீ யாரையும் கேட்கவில்லை
அது எங்களுக்குத் தெரியும்.
நீ ஆணைகளுக்கு அடிபணிகிறாய்
அது எங்களுக்குத் தெரியும்.
உனக்கு ஒரு மனைவி
ஒரு காதலி
ஒரு தாய் உண்டு
அது எங்களுக்குத் தெரியும்.
உனக்குக் குழந்தைகள் உண்டு
அதுவும் எங்களுக்குத் தெரியும்.
ஆனால் படைவீரனே
எங்கு நீ நிற்கிறாயோ
அங்கே உனக்கு மரணம் நிச்சயம்.
எங்கு நீ நடக்கிறாயோ
அங்கே ஏற்படும் உனக்கொரு
எரிகின்ற காயம்.
எங்கு நீ உறங்குகிறாயோ
அங்கு உனக்கு அமைதியே இல்லை.
ரத்த வெள்ளத் தீய கனவினூடே
விம்மித் தணிகிறது பூமி
படை வீரனே
நீ மடிந்தால்
நாய்கள்தான் உன்னைப் புதைக்கும்.
இந்த மண்ணிற்கு நீ வந்தபோது
புரிந்துகொள்ள வந்ததாகக் கூறினாய் நீ. படைவீரனே, உனது புரிதல்
எங்களுக்குச்
சலிப்பூட்டியிருக்கிறது.
ஐரிஷ் மண்ணில் உள்ள
பிரிட்டிஷ் துருப்புகளும்
கதவுகளை நீங்கள் தட்டுவதும்
தலைகளில் இடிக்கும்
துப்பாக்கிக்கட்டையும்
சிறைகளும் விஷவாயுவும்
இருண்ட மூலைகளில் எங்கள்மீது
விழும் அடி உதைகளும்
எங்களுக்குச் சலிப்பூட்டியிருக்கின்றன.
படை வீரனே
ஐரிஷ் மக்களின் எலும்புகளுக்கு
நீ கொண்டு வரும் சமாதானம்
எங்களுக்குச் சலிப்பூட்டியிருக்கிறது.
எங்கள் இல்லங்களில்
வெடிக்கும் குண்டுகள்
தெருக்களில் குவிந்து வரும் இடிபாடுகள்
நெடுங்கால நண்பர்களின் மரணங்கள்
கண்ணீர்கள், ஈமச் சடங்குகள்
முடிவேயில்லாத ஈமச் சடங்குகள்
எங்களுக்குச் சலிப்பூட்டியுள்ளன.
படைவீரனே
இந்த மண்ணிற்கு நீ வந்தபோது
புரிந்துகொள்ள வந்ததாகக் கூறினாய்.
இதுதானா உன் புரிதல்?
நாங்கள் இங்கு கனவு காண்கிறோம்.
இந்த பூமி எங்கள் பூமி எனக்
கனவு காண்கிறோம்.
கத்தோலிக்கரும் புராடஸ்டண்டுகளும்
கடவுள் நம்பிக்கையுள்ளவரும் இல்லாதவரும்
ஒரு நாள் இங்கு கூடி
ஐரிஷ் ஆண்களாய்
ஐரிஷ் பெண்களாய்
கனவு காண்பர்.
மரணமே இல்லாத
பசுமையானதொரு பூமியை
இறங்கிவரும் ஒரு நிசப்தத்தை
சமாதானம் என்றொரு நிசப்தத்தை
நாங்கள் கனவு காண்கிறோம்
இந்தக் கனவை நாங்கள் காண்பதற்கு
படை வீரனே
நீ வேண்டியதில்லை.
அதுதான் எங்களது புரிதல்
வீட்டுக்குப் போ படை வீரனே
நீ இங்கிருப்பது
காற்றை நாசப்படுத்துகிறது.
உனது புன்முறுவல்
எங்களை அலங்கோலப்படுத்துகிறது.
வீட்டுக்குப் போ படைவீரனே
உன்னைப் பிணமாக நாங்கள்
உன் வீட்டுக்கு அனுப்புவதற்கு முன்.
தமிழாக்கம்: எஸ். வி. ராஜதுரை, வ. கீதா