தான்பிரீன் தொடரும் பயணம்/ஒரு வார்த்தை

ஒரு வார்த்தை


தான்பிரீன் என்ற ஐரிஷ் விடுதலைப் போராளி பற்றித் தமிழில் எழுதப்பட்ட வரலாற்றினை சிறையில் நண்பர்கள் யாவரும் நாவல்களைப் படிப்பதுபோல் ஆர்வத்தோடு படித்தார்கள். பலர் அதனைப் பிரதி எடுத்து வைத்துக் கொண்டார்கள். காகிதம், பேனா, மை எதுவும் கிடையாது. எங்களைப் போலவே இந்தப் பொருள்களும் சட்டத்தை மீறி ஜெயிலுக்குள் வந்தன.

தான்பிரீன் தானே ஒரு நூல் எழுதியிருந்தான். அயர்லாந்தின் விடுதலைக்காக எனது போர் என்பது அதன் பெயர். அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டிருந்தும் அந்த நூல் எப்படியோ கடல்களையெல்லாம் தாண்டித் தானும் சட்டத்தை மீறி, திருச்சிச் சிறைக்குள் எங்களிடம் வந்து சேர்ந்தது. அதை ஆதாரமாக வைத்துக்கொண்டே இந்த நூலை எழுதினேன்.

நான் எழுதின தாள்களையெல்லாம் ஒன்று சேர்த்து என் உயிர் நண்பர் திரு. வை. சிவராமன் என்ற சைவப்பிள்ளை, முத்துப் போன்ற தம் கையெழுத்தில் ஒரு நல்ல பிரதி எடுத்திருந்தார். அதைப்போல் வேறு சில நூல்களிற்கும் அவர் பிரதி எடுத்திருந்தார். சட்டவிரோதமான இந்தச் சரக்குகள் எல்லாம் சிறையில் நான் அடைபட்டிருந்த சிறு அறைக்குள் இருந்தன. சிறைக்காவலர்களோ (Warder) அதிகாரிகளோ கண்டால் அவைகள் யாவும் கூண்டோடு கைலாசம் போய்விடும்!

எப்படியோ பல மாதங்களாக என் புத்தக கட்டுகள் 'கான்விக்ட் வார்டர்'களும் (Convict Warder - சிறைக்காவலருக்கு உதவியாக நியமிக்கப்பட்ட, கடுங்காவற் தண்டனை மேற்கொண்டுள்ள கைதி) சிறை முழுவதும் சோதனைபோட ஆரம்பித்து விட்டார்கள். விசில்களின் ஓசை போலிஸ் தடல்புடல் வேறு. கைதிகள் இருந்த இடங்களை விட்டு வெளியே வரமுடியாமல் அறைகளில் தள்ளிவிடப்பட்டனர். நானும் என் அறைக்குள்ளே இருந்து கதவுகளின் இரும்புக் கம்பிகளைச்சரிபார்த்துக் கொண்டிருந்தேன். கதவுகளிலுள்ள கம்பிகளின் வழியாகக் கைகளை வெளியே நீட்டி வரந்தாவிலிருந்த விளக்கின் ஒளியில் நள்ளிரவுகளில், நான் எழுதி முடித்த அநேகம் நோட்டுப் புத்தங்கள் எல்லாம் அன்று ஒரு நொடியில் பறி முதலாகும் நிலை.

எனக்கு அடுத்த அறையில் சைவப்பிள்ளை இருந்தார். என் அறையில் இருந்தபடியே சப்தம் கொடுத்தேன். 'நோட்டுப் புத்தகங்களை என்ன செய்ய' என்று கேட்டேன். நானும் அதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். எவனாவது வருகிறானா என்று பார்ப்போம் என்றார். சிறிது நேரத்தில் அவருக்குத் தெரிந்த ஒரு கான்விக்ட் வார்டர் வராந்தாவழியே வந்தான். நண்பர் அவனிடம் விபரம் சொல்லி எப்படியாவது எங்கள் சொத்தைப் பாதுகாத்துச் சோதனை முடிந்த பிறகு திரும்பத் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவன் தயாராயிருந்தான். ஆனால் அதிகாரிகள் எங்கும் அலைந்து திரிந்துக் கொண்டிருந்ததால் அதிகமாய் பயந்து நடுங்கினான். என் அறைவாசலுக்கு வந்து, 'சாமி கட்டு, கட்டு; சீக்கிரம் கட்டு' என்றான்.

நான் கட்டவேண்டியது ஒன்றுமில்லை. கட்டியிருந்தவைகளை அவிழ்க்கத்தான் வேண்டிருந்தது. எப்படியோ மிக விரைவாக எல்லாம் வெளியேறிவிட்டன. அவன் எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு ஒரே ஓட்டமாகப் போய் விட்டான். என் அறைக்கு நேராக வெகுதூரத்தில் ஒரு பெரிய கிணறு உண்டு. அவன் அதை நோக்கியே ஒடினான். என் எழுத்துக்கள் சிறைக்காவலர் வீடுகளிலே அடுப்பின் நெருப்புக்கு இரையாகும் என்று இதுவரை பயந்திருந்தேன். இப்போது அவை வருணபகவானுக்கு இரையாகும் போலக் காணப்பட்டது.

கான்விக்ட் வார்டர் ஒரு பெரிய கயிற்றை எடுத்து எல்லா நூல்களையும் ஒன்றாகக் கட்டி, அந்தக் கட்டைக் கிணற்றின் நடுவிலிருந்த கல்லோடு சேர்த்துக் கட்டித் தொங்கவிட்டான். நூல்கள் கிணற்றுக்குள் தொங்கிக் கொண்டிருந்தன. வேறு எங்கு வைத்திருந்தாலும் அன்று நடந்த சோதனையில் அவை அகப்பட்டிருக்கும். சோதனை முடிந்ததும் எல்லாநூல்களும் ஒழுங்காக என் அறையில், முன் இருந்த இடத்திலே திரும்பி வந்து அமர்ந்துவிட்டன.

- ப. ராமஸ்வாமி