தான்பிரீன் தொடரும் பயணம்/ஜெனரல் லூகாஸ்
17
ஜெனரல் லூகாஸ்
லூகாஸ் என்பவர் ஆங்கிலப்படையில் பிரிகேடியர் ஜெனரல் பதவியிலிருந்தார். அவரையும் வேறு இரண்டு தளகர்த்தாக்களையும் புரட்சித்தலைவரான லியாம் லிஞ்ச் 1920ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் தேதி கைது செய்தார். அப்பொழுது லூகாஸ் கொன்னாவில் தம்முடைய நண்பர்களுடன் தங்கியிருந்தார். திடீரென்று லிஞ்ச் தமது படையுடன் அங்கே சென்று அவர்களைப் பிடித்துக் கொண்டார். லூகாஸுடன் கர்னல்ஸ் டான்போர்டும், கர்னல் டிரெல்லும் இருந்தனர். லிஞ்ச் அம்மூவரையும் அழைத்துக் கொண்டு சமீபத்தில் தயாராய்க்காத் திருந்த ஒரு மோட்டார்காருக்குச் சென்றார்.
பார்ட்டன் என்ற ஐரிஷ் தேசாபிமானி ஒருவர் ஆங்கிலயரின் சிறையிலிருந்தார். அரசாங்கத்தார் அவர்மீது ராஜத்துவேஷக் குற்றஞ்சாட்டிப் பத்து வருடத் தண்டனை விதித்தனர். சிறையில் கொலை, களவு செய்த குற்றவாளியைப் போல் அவரை மிகவும் கேவலமாக நடத்தி வந்தனர். அவரை விடுதலை செய்து வெளியே கொண்டுவருவதற்காகத்தான் லூகாஸ் கைது செய்யப்பட்டார். லியாம் லிஞ்ச், லூகாஸைப் பிடித்து வைத்துக் கொண்டு தங்களுடைய அன்பரான பார்ட்டனை விடுதலை செய்தால்தான் அவரை விடுதலை செய்யமுடியும் என்று சர்க்காருக்கு அறிவிக்கலாம் என்று கருதியிருந்தார்.
லிஞ்ச் தம்முடைய கைதிகள் மூவரையும் அழைத்துக்கொண்டு செல்லும் பொழுது அவர்கள் அரபி பாஷையில் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் லிஞ்சையும் அவருடைய தொண்டர்களையும் திடீரென்று எதிர்த்துப் போராடித் தப்பிவிட வேண்டுமென்றே இரகசியாகப் பேசிக் கொண்டனர். சில நிமிஷங்களுக்குள் அவர்கள் பேசியபடியே தொண்ர்கள் மீது பாய்ந்தனர். இரு கட்சியாருக்கும் போராட்டம் முற்றியது. கர்னல் டான் போர்டுக்குக் காயம் பட்டது. தொண்டர்களே வெற்றி பெற்றனர். அதன் மேல் லிஞ்ச் காயமடைந்த கனையும், டிரெல்லையும் கொளரவமாக விடுதலை செய்து, பெர்மாயிலிருந்த பட்டாளப்படை வீடுகளுக்குப் போகும்படி அவர்களை ஒரு காரில் அனுப்பி வைத்தார். லூகாஸை மட்டும் கைதியாக வைத்துக் கொண்டு பந்தோபஸ்தான ஓரிடத்தில் அவரையடைத்து வைக்கும்படி அனுப்பினார். இரு தளகர்த்தாக்களை விடுதலை செய்ததிலிருந்து லிஞ்சின் தாராள சிந்தையும் தொண்டர்களுடைய கண்ணியமும் விளங்குகின்றன. ஆனால் இந்த உதவிக்குப் பட்டாளத்தார் என்ன கைம்மாறு செய்தனர்? மறுநாள் இரவில் பெர்மாய் நகரையே தீவைத்து எரித்தனர் ஸியாம் வெற்றியடைந்து விட்டார் என்ற கோபமே இதற்கெல்லாம் காரணம்.
ஜெனரல் லூகாஸ் கண்ணியமான போர் வீரர். அவர் தொண்டர்களிடம் ஐந்து வாரம் கைதியாயிருந்தார். தொண்டர்கள் அவரை மிக்க மரியாதையாக நடத்திவந்து வேண்டிய உணவு, உடை முதலிய சௌகரியங்களும் செய்து கொடுத்தனர். அருவடைய பந்துக்களுக்கு அடிக்கடி கடிதம் எழுதுவதற்கு வசதிகள் அளித்தனர். லூகாஸ் பின்னால் தப்பியோடிய காலத்திலும் தொண்டர்களுடைய உதவிகளை நன்றியறிதலுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
கடைசியாக அவர் சிறை வைக்கப்பட்டிருந்த இடம் கீழ் லிமெரிக்கிலிருந்த ஒரு வீடு. ஜூலை மாதம் முதல் இரவு அவர் மிகவும் சாமர்த்தியமாக அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த விஷயம் முக்கியமான தொண்டர்களுக்கெல்லாம் பத்திரிகையைப் பார்த்த பின்பே தெரிய வந்தது.
ஜூலை மாதம் 30ஆம் தேதி லின்டிரீஸி, தான்பிரீன் முதலானவர்கள் லிமெரிக் நகருக்கும் திப்பெரரிக்கும் மத்தியிலுள்ள ரஸ்தாவில் ஆயுதபாணிகளாகக் காத்துக் கொண்டிருந்தனர். அக்காலத்தில் தொண்டர்கள் சர்க்காருக்கு மிகுந்த தொந்தரவு கொடுத்து வந்தனர். ரயில்களையும் தபால்களைக் கொண்டு செல்லும் கார்களையும் மறித்து நிறுத்தினார்கள். அவற்றிலிருந்த கடிதங்களையும், பட்டாளத்தாரின் இரகசிய தஸ்தாவேஜுகளையும் கைப்பற்றிவந்தனர். இதனால் அவர்களுக்கு எதிரிகளுடைய உடவடிக்கைகளை முன்கூட்டியே தெரிந்துக் கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆங்காங்கேயிருந்த ஒற்றர்களில் எவர்கள் மிகவும் அயோக்கியர்கள் என்பதை அறிந்து கொண்டு அவர்களைத் தண்டிப்பதற்கும் அரசாங்க கடிதங்கள் உபயோகமாயிருந்தன. சர்க்கார், தொண்டர்களுடைய தொல்லை பொறுக்கமாட்டாமல் தபாலைக் கொண்டு செல்லும் கார்களுடன் பட்டாளங்களையும் பாதுகாப்புக்காக அனுப்பிவர ஆரம்பித்தது. லிமெரிக் வீதியில் இத்தகைய பட்டாளம் ஒன்று தபால் பாதுகாப்புக்காக வந்து கொண்டிருந்ததால் அதை எதிர்த்துப் போராடவே தொண்டர்கள் மேலே கூறிய முறையில் மறைவாகக் காத்துக் கொண்டு நின்றனர். அவர்கள் நின்ற இடம் ஊலா கிராமத்திலிருந்து அரை மைல் தூரத்திலிருந்தது. அங்கிருந்து திப்பெரரி ஆறுமைல்; லிமெரிக் பதினைந்து மைல்; ஸாஹெட்பக் நான்குமைல். இவ்விடங்களைச் சுற்றிலும் சமவெளிகள் இருந்தமையால் தப்பியோடுவதற்குப் போதிய செளகரியங்கள் இருந்தன. ராணுவக் கார் காலை 10.30 மணிக்கு வரக் கூடும் என்று தொண்டர்கள் எதிர்பார்த்து, அதற்கு முன்னதாகவே சென்று ஒரு பெரியமரத்தை வெட்டி அதனால் சாலையை அடைத்து விட்டுப் புதர்களில் மறைந்திருந்தனர். ஊலாவில் ஒரு பீலர் படையும் அதற்கு இரண்டு மைலுக்கு அப்பால், லிமெரீக் சந்திப்பில் ஒரு பீலர்படையும் இருந்தன. ஆதலால் எந்த நிமிஷத்தில் என்ன நேருமென்று தெரியாமலிருந்தது.
குறித்த நேரத்தில் பட்டாளத்தாருடைய கார் மிக வேகமாக ஓடிவந்தது. தொண்டர்கள் அதைக் குறிவைத்துச்சுட்டனர். உடனே காருக்குள்ளேயிருந்த சிப்பாய்கள் அனைவரும் கீழே குதித்து மறைவாக நின்று கொண்டு பதிலுக்குச் சுட ஆரம்பித்தனர். அதுவரை அமைதியாயிருந்த அந்த நாட்டுப் புறத்தில் திடீரென்று குண்டுகள் இடி இடித்தது போல முழங்க ஆரம்பித்தன. முதல் நிமிடத்திலேயே இரண்டு ஆங்கிலேயர்கள் குண்டுபட்டுத் தங்கள் துப்பாக்கிகளை எறிந்து விட்டுக் கீழே சாய்ந்து மடிந்தனர். பட்டாளத்தார் தொண்டர்களுடைய குண்டு வந்த திசையைப் பார்த்துச் சுட்டுக்கொண்டேயிருந்தனர். தொண்டர்கள் மொத்தம் பத்துப் பேரேயிருந்தனர்; அவர்கள் ஒவ்வொருவரிடமும் பத்துமுறை கடுவதற்குத்தான் மருந்து இருந்தது. அந்நிலையில் திடீரென்று லிமெரிக் பக்கத்திலிருந்து மற்றொரு ராணுவக் காரும் வந்து கொண்டிருந்தததை அவர்கள் கண்ணுற்றுனர். இவ்வாறு ஏற்படுமென்று அவர்கள் எதிர்ப்பார்க்கவில்லை. தற்செயலாக எதிரிகளுக்கு உதவியாட்கள் வந்துவிட்டனர் தொண்டர்கள் திகைத்தனர். அவர்கள் பின்வாங்கி மெதுவாக வேறிடத்திற்குச் சென்றுவிடத் தீர்மானித்துப் புறப்பட்டனர்.
தொண்டர் மறையும் பொழுதும் சிப்பாய்களைப் பார்த்துச் சுட்டுக் கொண்டே பின்வாங்கி வந்தனர். அந்நேரத்தில் சிப்பாய்களுக்கு உதவியாக ஊலாவிலிருந்தும் ஆறு பீலர்கள் வந்து கொண்டிருந்தனர். தொணடர்களிடம் போதிய குண்டுகளிருந்திருந்தால் அவர்கள் ஊலா போலிஸ் நிலையப் பக்கமாகச் சிலரை அனுப்பிச் சுடக் கொல்லியிருப்பார்கள். குண்டோசைகேட்டால் பீலர்களில் எவனும் சிப்பாய்களின் உதவிக்காக வெளியே வந்திருக்கமாட்டான். அதற்கும் வழியில்லாமற் போயிற்று. எனவே அவர்கள் யாருக்கும் காயப் படாமலும் உயிர்ச் சேதமில்லாமலும் போராட்டத்தில் இருந்து விலகிச் சென்று மறைந்துவிட்டனர். எதிரிகளில் மூவர் இறந்தனர்; மற்றும் மூவர் காயமடைந்தனர். அங்கு போராடிய சிப்பாய்களுடன் ஜெனரல் லூகாஸும் நின்று கொண்டிருந்தார். இவ்விஷயம் தொண்டர்களுக்கு மறுநாள் காலையில்தான் தெரியவந்தது. அவர் 29ஆம் தேதி இரவே தப்பியோடி பல பல வயல்களையும் மைதானங்களையும் தாண்டி தொண்டர்களுடைய கையில் சிக்காமல், மிக்க எச்சரிக்கையுடன் மறைவாக லிமரிக் வீதிக்கு வந்து சேர்ந்தார். அதன் வழியே நடந்துசெல்லுகையில் தற்செயலாய் அங்கு வந்து கொண்டிருந்த ராணுவக் கார் அவரைக் கண்டதும் அதிலிருந்த சிப்பாய்கள் அவரைக் காரில் ஏற்றிக்கொண்டு வந்தனர்.
தொண்டர்கள், சண்டையின்போது அவரை அடையான, கண்டு பிடிக்கவில்லை. மறுநாள் பத்திரிகைகளில் 'ஜெனரலை மீண்டும் பிடிக்க முயற்சி' என்று பெரிய எழுத்துகளிற் செய்தி வந்த பின்பே அவர்களுக்கு லூகாஸ் தப்பியோடிய விவரம் தெரிய வந்தது. அவர்கள் சிப்பாய்களை வழிமறித்துப் போராடச் சென்றிருந்த போதிலும் பத்திரிகைகள் லூகாஸை மீண்டும் பிடிக்கவே அவர்கள் போராடியதாக கற்பனை செய்து எழுதின.
ஊலாச் சண்டை நடந்து சென்று சில தினங்களுக்குப் பின்பு தான்பிரீன் டப்ளினுக்குச் சென்று பாக்கியிருந்த பல சில்லறை வேலைகளை, முடித்துவிட்டான். ரீயர் கிராஸ் படை வீடுகளைத் தாக்கிய பொழுது அவனுடைய உடம்பில் தைத்திருந்த வெனிகுண்டுகளின் கண்ணாடித்துண்டுகளையும் ஆணிகளையும் எடுத்தெறிந்து உடம்பைக் குணப்படுத்திக் கொள்வதற்கு அவனுக்குத்தக்க சந்தர்ப்பம் கிடைத்தால் அவன் அதை அவன் உபயோகித்துக் கொண்டான்.
மேற்சொன்ன சம்பவங்கள் நடந்து 1920ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் அக்காலத்தில் தேசியயப் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வந்தது. மக்கள் கடைசி வலை போராடியே தீர வேண்டும் என்று உறுதி கொண்டனர். 'பிளாக் அண்டு டான்' பட்டாளத்தாருடைய கொடுமைகள் சகிக்க முடியாமல் இருந்தன. அவர்கள் வடுகளையும் தெருக்களையும் பயிர்களையும் கொளுத்திப் பல உயிர்களையும் வதைத்து வந்தார்கள். அரசியல்வாதிகளைக் கைதுசெய்து கொண்டு போகும் பொழுது சுட்டுத்தள்ளி வந்தனர். நித்திரை செய்துகொண்டிருந்த மக்கள் துப்பாக்கிகளுக்குப் பலியாகி வந்தனர். யாருக்கும் உயிரும் சொத்தும் உரிமையாக இருக்கவில்லை. ஆதலால் மக்கள் ஒன்றும் செய்யாமல் வீடுகளிலிருந்து மடிவதைக் காட்டிலும புரட்சிப்படையிலே சேர்ந்து வீரமரணம் அடைவது மேலென்று கருதினார்கள். அவர்கள் தொண்டர்களுக்கு உணவும் உடையும் கொடுத்ததோடு அவசியமான செய்திகளையும் துப்புகளையும் அறிந்து கூறி உதவி செய்து வந்தார்கள்.
ஆங்கிலப் பட்டாளத்தார் அயர்லாந்தில் எத்தனை கோடிபவுண்டு பெறுமானமுள்ள சொத்துக்களை அழித்தனர் என்பதையும் எத்தனை ஆயிரம் உயிர்களைப் பலிவாங்கினர் என்பதையும் பிற்காலச் சரித்திர ஆசிரியர்களே கணக்கிட்டுக் கூற முடியும். இந்தக் கொடுமைகளைச் செய்துவந்த 'பிளாக் அன்டு டான்' பட்டாளத்தாரிற் பலர் பின்னால் தாங்கள் செய்த கொடுமைகளை மறக்க முடியாமற் பைத்தியம் பிடித்து அலைந்தனர். தற்கொலை செய்து கொண்டு மடிந்தனர் என்றால் ஐரிஷ் மக்கள் அந்தப் பாதகர்களிடம் எவ்வளவு துன்பப்பட்டிருப்பார்கள் என்பதை நாமே யூகித்துக் கொள்ளலாம்.
அதேசமயத்தில் தொண்டர் படையும் வலிமையடைந்து தீரமான பட்டாளமாகி விட்டது. அது ஐரீஷ் குடியரசுப் படை என்ற பெயருக்குப் பொருத்தமாயிருந்தது. 1918ஆம் ஆண்டு தான்பிரின், டிரீஸிடம் கூறிய வாக்கு இரண்டு வருடங்களில் பலித்து விட்டது. முதலில் போராட்டத்தை ஆரம்பித்துவிட்டால் அது பின்னால் நாடெங்கும் பரவிவிடும் என்று அவன் கூறியிருந்தான். அதன்படி தேசத்து வாலிபர்கள் சுதந்திரப்படையில் ஆயிரக்கணக்காய்ச் சேர்த்து வந்தனர். ஐரிஷ் மக்கள் எவ்வளவு துன்பப்பட்டாயினும் சுதந்திரம் பெற்றே தீரவேண்டும் என்று விரதம் பூண்டனர். அயர்லாந்தின் சுதந்திரத்தைக் கடைசிவரை நசுக்கியே தீரவேண்டும் என்று இங்கிலாந்தும் கண்மூடித்தனமாக வெறிகொண்ட செயல்களில் இறங்கி நின்றது.