தான்பிரீன் தொடரும் பயணம்/டிராம்கொண்டரா சண்டை

19
டிராம்கொண்டரா சண்டை


அன்றிரவு 11 மணிக்கு தான்பிரீனும், டிரீஸியும் பிளெமிங் குடும்பத்தாருடைய வீட்டிலிருந்து புறப்பட்டனர். வாயில் வழியாகச் சென்றால் போலிஸ் ஒற்றர்கள் ஒரு வேளை கவனித்து விடக்கூடும் என்று அவர்கள் கொல்லைப் புறமாகவே வெளியேறினர். அருகேயிருந்த ஒரு தோட்டத்திற்குள்ளே சென்று அவர்கள் மேற்கொண்டு எங்கு போகலாம் என்பதைப் பற்றி யோசித்தனர். திருமதி பிட்ஜெரால்டின் வீடும், கரோலன் என்ற நண்பருடைய வீடுமே அவர்கள் அன்றிரவு தங்குவதற்கு ஏற்ற இடங்கள். முடிவாகக் கரோலனுடைய வீட்டை நோக்கியே அவர்கள் புறப்பட்டனர். வழியில் டோல்கா நதியின் மேல் கட்டப்பட்டிருந்த ஒரு பாலத்தைக் கடக்க வேண்டியிருந்தது. அப்பாலத்தின் மேல் செல்லும் பொழுது அவர்கள் வெகுதூரத்தில் ராணுவ லாரிகள் ஓடிக்கொண்டிருந்த ஓசையைச் செவியுற்றனர். அப்பொழுது ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்ததால் 12 மணிக்கு மேல் யாராவது தெருவில் வருகிறார்களா என்று பார்ப்பதற்கு ராணுவத்தார்சுற்றிக் கொண்டிந்தனர். அதற்கு வெகுநேரத்திற்கு முன்பே தெருக்களில் ஜனநடமாட்டம் நின்று போய்விட்டது.

தான்பிரீன் எப்பொழுதும் கரோலனுடைய வீட்டுக்கு இரவு 11மணிக்கு முன்பே போய்விடுவது வழக்கம். ஆனால் இந்தத் தடவை அங்கு சேரும்பொழுது 11.30 ஆகிவிட்டது. வீட்டில் வெளிச்சமொன்றும் காணப்படாமையால் வீட்டிலுள்ளவர்கள் உறங்கிவிட்டனர் என்று தெரிந்தது. தான்பிரீனும் டீரீஸியும் சந்தடி செய்யாமல் மெதுவாகக் கதவைத் திறந்து உள்ளே புகுந்தனர். அவர்கள் எந்த நேரமும் தங்குவதற்காக மேல்மாடியின் பின்புறத்தில் நாற்றுக்கூட்டத்தின் பக்கம் ஓர் அறையில் படுக்கை முதலானவை போடப்பட்டிருந்தன. அவர்கள் வீட்டிலுள்ளவர் எவரும் அறியாமலே அங்கே சென்று படுத்துக்கொண்டனர்.

இரண்டு பேர்களும் ஒரே படுக்கையில் படுத்துக் கண்களை மூடிக்கொண்டு உறங்க முயன்றனர். ஆனால் உறக்கம் வரவில்லை. பிற்கால வேலைத்திட்டத்தைப் பற்றியும், திப்பெரரிக்குத் திரும்பவேண்டியதைப் பற்றியும் பேச ஆரம்பித்தனர். கொஞ்ச நேரத்திற்குப் பின்னால் பேச்சுச் சுருங்கிவிட்டது.

இதன் பின்னால் இருவரும் சிறிது கண்ணயர்ந்தனர். சில நிமிஷங்கள் கழிவதற்கு முன்னால் இருவரும் திடீரென்று விழித்தெழுந்து படுக்கையில் உட்கார்ந்தனர். வெளியே தெருவில் சிப்பாய்கள் பலர் 'பூட்ஸ்' காலுடன் அணிவகுத்து நடக்கும் சப்தம் கேட்டது. பின் பக்கத்து ஜன்னல் வழியாக அவர்கள் இருந்த அறைக்குள் ஒரு மின்சார விளக்கைக் காட்டியதாலேயே அவ்வெளிச்சம் தெரிந்தது. அப்போழுது ஒரு மணி இருக்கும்.

முன் கதவில் ஏதோ கண்ணாடி சட சட' வென்று உடைந்தது! ஒரு கதவு திறக்கப்பட்டது. படிகளின் வழியே சிப்பாய்கள் ஏறிவந்த காலோசையும் கேட்டது!

உடனே தான்பிரீனும் டிரீஸியும் படுக்கையிலிருந்து ஏககாலத்தில் துள்ளி ஏழுந்தனர். இருவரும் ரிவால்வர்களைக் கையில் எடுத்துக் கொண்டார்கள். தான்பிரீன் இரண்டு கைகளிலும் இரண்டு ரிவால்வர்களைப் பிடித்துக்கொண்டான். அவர்களுடைய அறைக்கதவை யாரோ வெளியில் தட்டிக் கொண்டிருந்த சப்தம் கேட்டது. தான்பிரீன் வாய் திறக்கவேயில்லை. டிரீஸி அண்டையில் நின்ற அவன் வலக்கையைப் பற்றிக் குலுக்கிவிட்டு, 'வந்தனம் அன்பா இனி மேலுலகில் சந்தித்துக் கொள்வோம்' என்று கூறினான்.

அந்த நிமிஷத்தில் வெளிக்கதவின் வழியாக இரண்டு குண்டுகள் சரேலென்று உள்ளே பாய்ந்தன. உள்ளிருந்தவர்களும் உடனே சுட ஆரம்பித்தனர். அறைக்குள்ளே குண்டுகளின் ஒளியைத் தவிர வேறு வெளிச்சமில்லை. வெளியே ஒர் ஆங்கிலேயன் தன் பாஷையில் ரியான் எங்கேயிருக்கிறான்? ரியான் எங்கே யிருக்கிறான்? என்று கூவினான்.

எல்லாப் பக்கங்களிலும் குண்டுகள் பாய்ந்து கொண்டிருந்தன. அறைக்கதவு சிறிது திறந்திருந்தது. தான்பிரீன் கதவை நோக்கிச் சென்றான். அவனது வலது கைப் பெருவிரலிலே ஒரு குண்டுபட்டு இரத்தம் பெருகிக் கொண்டிருந்தது. ஆனால் அவன் வலியைச் சிறிதும் உணரவில்லை. வெளியே யாரோ ஒருவன் வழுக்கி விழுந்த ஓசை கேட்டது. அந்நேரத்தில் டிரீஸியின் ரிவால்வரில் ஏதோகோளாறு எற்பட்டுச் சுடமுடியாது போயிற்று. தான்பிரீன் அவனை பின் புறத்து ஜன்னலைக் கவனித்துக் கொள்ளும்படி கூறிவிட்டு வாயிற்கதவைத் தாண்டி வெளியேற முயன்றான். அப்பொழுது ஒரு குண்டு உள்ளே வந்து உடைகள் வைத்திருந்த இடத்தில் பாய்ந்தது. மாடிப்படியிலிருந்து சுடும் ஒசை திடீரென்று சிறிது நேரம் நின்றுவிட்டது. சிப்பாய்கள் மடமடவென்று கீழே இறங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் அறையின் பின்புறத்தில் குண்டுகள் வெடித்த வண்ணமாயிருந்தன.

தான்பிரீன் அறைக்கு வெளியே சென்று மாடிப்படிகளை உற்று நோக்கினான். கீழேயிருந்து ஆறு சிப்பாய்கள் மின்சார விளக்குகளை ஏந்திக் கொண்டு மீண்டும் மேலே போராடவந்து கொண்டிருந்தனர். அவர்களுடைய விளக்கொளியில் தான்பிரினுடைய உருவம் வெகு தெளிவாய்த் தெரிந்தது. அவன் பகைவர்கள் தன்னை எளிதில் குறிவைத்துக் கொன்றுவிடுவார்கள் என்பதையறிந்து விரைவாக அவர்களை நோக்கிக் குண்டுக்கு மேல் குண்டாகப் பொழிந்து கொண்டிருந்தான். வீட்டைச்சுற்றிப்பட்டாளத்தார் நின்ற விஷயமும், அவன் அவர்கள் அனைவரிடமிருந்தும் தப்பிச்செல்வது எளிதல்ல என்பதும் அவனுக்கு நன்றாய்த் தெரியும். ஆயினும் அவன் அஞ்சவில்லை. மரணம் நிச்சயம் என்று தோன்றிய போதிலும், எதிரிகளில் எத்தனை பேரை வதைக்க முடியுமோ அத்தனை பேரையும் தீர்த்து விட்டுத்தான் மடிய வேண்டும் என்று வீராவேசம் கொண்டு நின்றான்.

அவன் படிக்கட்டை நோக்கிச் சுட்டுக் கொண்டே சென்ற பொழுது சிப்பாய்கள் கீழிறங்கி ஓட முயன்றனர். சிலர் கீழ் வீட்டிலுள்ள அறைகளுக்குள் பதுங்கிக் கொண்டனர். மற்றும் சிலர் ஒருவர்மேலோருவர் விழுந்துகொண்டு தெருவுக்கு ஓடிச்சென்றனர். தான்பிரீனுடைய குண்டுகளுக்கேற்ற பகைவன் எவனையும் காணோம். பின்புறத்தில் மட்டும் இடையிடையே ஒரு குண்டோசையும் காயப்பட்டவருடைய புலம்பலும் கேட்டன.

முன்னால் வேறு சிப்பாய்களைக் காணாமையால் தான்பிரீன் அவசரமாக அறையை நோக்கித் திரும்பினான். அறையின் வாயிற்படியில் இரண்டு பட்டாள அதிகாரிகள் செத்துக்கிடந்தனர். ஒரு சிப்பாய் குற்றுயிராயிருந்தான். தான்பிரீன் அவர்களை மிதித்துக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. அவர்களை வழியைவிட்டு வெளியே இழுத்துத் தள்ளிவிட்டு அவன் உள்ளே சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டான். முதலில் அறையை விட்டு வெளியே சென்றபோது அவன் இந்தப் பிரதங்களைப் பார்க்கவில்லை. அதற்குக் காரணம் சண்டையின் வேகத்திலே அவனுக்கெதுவும் நன்றாய்ப் புலப்படவில்லை.

சிறிதும் ஓய்திருக்க முடியவில்லை. ஏனென்றால் பட்டாளத்தார் நூற்றுக் கணக்காய் வந்திருந்ததால் மீண்டும் ஒரு முறை வந்து தாக்குவார்கள் என்று அவன் எதிர்பார்த்து ஜன்னலருகில் சென்றான். பின்புறத்திலிருந்து மின்சார விளக்கின் வெளிச்சம் அறைக்குள் வீசியதும் கண்ணாடிக் கதவுகளை உடைத்துக் கொண்டு பல குண்டுகள் ஜன்னல் வழியாக உள்ளே பாய்ந்தன. அவற்றில் சில அவனுடைய பல அங்கங்களிலும் காயப்படுத்திக்கொண்டு சென்றன.

ஜன்னலின் கீழ்ப்பாகம் திறந்து கிடந்தது. அதைக் கண்டவுடன் தான்பிரீன், டிரீஸி அதன் வழியாகத் தப்பியோடியிருக்க வேண்டு மென்று யூகித்து அதன் வழியாக வெளியேறி, நாற்றுக் கூடத்தின் கூரையின்மேல் குதித்தான். அங்கிருந்து பார்த்தபொழுது, வீட்டைச் சுற்றி எண்ணிறந்த உருக்குத் தொப்பிகள் அவன் கண்களுக்குப் புலப்பட்டன. ராணுவத்தார் யாவரும் நாற்றுக் கூடத்தின் கூரையை நோக்கிச்சுட ஆரம்பித்தனர். தான்பிரீனுடைய நிலைமை அபாயகர மாயிற்று. எந்த நிமிஷத்திலும் குண்டு பட்டுக்கீழே சுருண்டு விழக்கூடிய நிலையில் அவன் துப்பாக்கிகளுக்குக் குறியாய்க் கூரையின் மேல் தனியாக உட்கார்ந் திருந்தான். கூரையை விட்டுக் கீழே இறங்கினால் துப்பாக்கிக் காட்டைத் தாண்டாமல் வெளியேற முடியாது. அந்நிலையில் அவன் இடது கையிலே துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டு கூரை ஓட்டைப்பார்த்துச்சுட்டான். கூரையில் ஒரு பெரிய துவாரஞ்செய்து கொண்டு அதன் வழியே உட்புகுந்து உத்திரக்கட்டையைப் பிடித்துக் தொங்கிக் கொண்டிருந்தான். அத்துடன் இடையிடையே வெளியே தலைநீட்டி எதிரிகளை நோக்கிச் சுடுவதையும் அவன் நிறுத்தவில்லை. அவன் கூரைக்குள் மறைந்திருந்ததால் எதிரிகளின் குண்டுகள் அவனைப் பாதிக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் திடீரென்று சகல பட்டாளத்தாரும் அவ்விடத்தை விட்டு மறைந்து போயினர்.

பகைவர்களைக் காணாமையால் அவன் மெதுவாக மீண்டும் கூரைமேலேறி அங்கிருந்து தரையின் மீது குதித்தான்.

அச்சமயத்திலெல்லாம் அவனுடைய ஞாபகம் முழுவதும் ஸீன் டிரீஸியைப் பற்றித்தான். அந்த உயிர் தோழன், எங்கேயிருந்தான், என்ன செய்தான் என்ற ஒரு விசயமும் புலப்படவில்லை. அவனுடைய அறிகுறிகளே தென்பட வில்லை. 'டிரீஸீ! டிரீஸீ! என்று அவன் பன்முறை கூவிப்பார்த்தான். பதிலில்லை எங்கேனும் பகைவர்கள் மறைந்திருந்து தன்னைச் சுட்டுவிடாமல் இருப்பதற்காக அவன் தரையின் மேல் படுத்துக் கொண்டு, தோழா! எங்கு சென்றாய்? என்று வினாவினான். பதில் சொல்வார் யாருமில்லை. அவன் மனம் அனலிடப்பட்ட மெழுகுபோல் வருந்திற்று.

கீழே கவிழ்ந்து கிடக்கும் பொழுதுதான் தேகத்தின் பலவீனம் அவனுக்கு நன்றாய்த் தெரியவந்தது. உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை பற்பல புண்களிலிருந்தும் இரத்தம் பெருகிக்கொண்டிருந்தது. குறைந்தது ஆறு இடங்களிலாவது குண்டுகள் புதைந்திருந்தன. அவனுடைய தொப்பியும், மேற்சட்டையும், பூட்ஸுகளும் அறைக்குள்ளே கிடந்தன. உறங்கிக் கொண்டிருந்தவன் திடீரென்று எழுந்து போராட நேர்ந்ததால், அவசரத்தில் அவற்றை எடுத்துக்கொள்ள முடியவில்லை. போதிய ஆடையில்லாமையால், அவன் துன்புற நேர்ந்தது. ஆனால் அங்கு தாமதித்திருப்பது அபாயம் என்பதையுணர்ந்து மெய் வருத்தத்தையும் மெலிவையும் பொருட்படுத்தாது எப்படியாவது தப்பிவிடலாம் என்று அவன் தைரியங்கொண்டு எழுந்தான்.

தப்பிச் செல்வதற்கு வழி தேடிக்கொண்டிருக்கையில் பல வெடி குண்டுகள் நாற்றுக் கூடத்திற்குப் பக்கத்தில் வெடித்தன. அவன் தைரியத்தைக் கைவிடாமல் மெதுவாகச் சென்று அருகேயிருந்த தாழ்ந்த தோட்டச்சுவரைக் கண்ணுற்றான். அறிஞர் கரோலன் ஆதியிலேயே அந்தச் சுவரைக் கட்டி வைத்திருந்தார். அது ஆபத்திற்கு உபயோகமாயிருந்தது. நாற்றுக் கூடத்திற்கு அருகே தோட்டத்தில் இரண்டு படை வீரருடைய பிரதேங்களைத் தான்பிரீன் கண்டான். அவற்றிலிருந்து டிரீஸி அந்தப் பாதையின் வழியாகவே சென்றிருக்கவேண்டும் என்று தீர்மானித்தான். ஆனால், டிரீஸி அங்கே தப்பியிருந்தாலும் தோட்டத்தின் மத்தியிலே கொல்லப்பட்டிருந்தல் கூடும் என்றும் அவன் சந்தேகித்தான்.

அவன் சுவரின் அடியில் சென்றவுடன் சுவருக்கு மறுபக்கத்திலிருந்து ஒரு சிப்பாய் மெதுவாகத் தலை நீட்டினான். சிப்பாய் துப்பாக்கியை அவனுக்கு நேராக வைத்துக்கொண்டு குறிபார்த்து, 'யாரது? நில் அங்கே! என்று உத்தர விட்டுச் சுட்டான். அந்தக் குண்டு குறிதவறிப்போய் விட்டது. உடனே தான்பிரீனும் பதிலுக்குச் சுட்டுவிட்டுச் சுவரிலேறி மறுபுறம் குதித்தபோது அந்தச் சிப்பாப் கீழே சுருண்டு கிடந்ததைக் கண்டான்.

வேறொரு சிப்பாய்க் கூட்டத்தார்.அப்பால் நின்று கொண்டு அவனைக் குறி பார்த்துச் சுட்டனர். அவன் தன் துப்பாக்கியை அவர்களுக்கு நேராகப் பிடித்துப் பல குண்டுகளை மழையாகப் பொழிந்துகொண்டே, அடுத்த தோட்டத்திலிருந்த மற்றொரு சுவரையும் தாண்டி வெளியே தெருவில் குதித்தான். அவன் குதித்ததுதான் தாமதம். எங்கிருந்தோ ஒரு ராணுவக்கார் வேகமாய் வந்து அவன் அண்டையில் நின்றது. அதிலிருந்தவர்களும் அவனைப் பார்த்துச் சுட ஆரம்பித்தனர். தான்பிரீன் உயிரை வெறுத்து நின்றதால், காரிலுள்ளவர்கள் நன்றாய்க் குறிபார்க்கு முன்பே எதிர்த்துச் சுடலானான். காரிலிருந்த ஒரு சிப்பாய் குண்டு பட்டுச் சாய்ந்தான். தான்பிரீன் வெகு வேகமாய் ஓடிப் பகைவரின் குண்டுகள் தன்னுடம்பில் பாயாதவாறு தப்பி மறைந்து கொண்டான். குண்டுகள் நாலா பக்கத்திலும் பறந்து கொண்டிருந்தனவேயன்றி அவன்மேல் படவில்லை; சுவர்களிலும் மரங்களிலுமே பாய்ந்துகொண்டிருந்தன. தான்பிரீன்தான் நின்ற தெரு கரோலனுடைய வீட்டுக்கும் டிரம்கொண்டரா பாலத்திற்குமிடையேயுள்ளது என்று கண்டான். அவ்வழியே சென்றால் ஆங்காங்கே நிறுத்தப்படிருந்த பட்டாளத்தாருடைய கையில் சிக்கும்படி நேரும் என்பதை உணர்ந்து, வலது பக்கமாய்த் திரும்பிச் சென்றான். சிறிதுதுரத்தில் செயின்ட் பாட்ரிக் கலாசாலை யிருந்தது. அதன் முன்புறத்தில் சுமார் 18அடி உயரமுள்ள பெரிய சுவர் உண்டு. அவன் அந்தச் சுவரைத் தாண்டிவிட்டால், சிப்பாய்களின் வலையில் அகப்படாமல்

127

தப்பி விடலாமென்று ஆவலுடன் எண்ணமிட்டான். ஆனால் பிறர் உதவியில்லாமல் அந்தச் சுவரை எப்படித் தாண்டுவது? அவன் கால்களில் பூட்ஸுகளும் இல்லை. வலது கால் பெருவிரலோ குண்டுபட்டு ஒடிந்து வேதனை கொடுத்து வந்தது. இவற்றோடு உடம்பு முழுவதும் குண்டு பட்ட புண்கள் ஆனால், உயிருக்காகப் போராடுகிற ஒரு மனிதனுக்கு எங்கிருந்தோ தைரியமும் வலிமையும் வந்து விடும் எப்படியோ அவன் ஒரே மூச்சில் அச்சுவரிலேறி அப்பால் குதித்துவிட்டான். இது பெரிய விந்தைதான். தான்பிரீன் பிற்காலத்தில் பாட்ரிக் கலாசாலைப் பக்கம் செல்லும்பொழுது எல்லாம் அந்தப் பெரிய கவரைத் தான் தாண்டியது உண்மைதானா என்று ஆச்சரியப்படுவது வழக்கம். கலாசாலைக்குள்ளே சென்றதும், அவனுக்குக் கொஞ்சம் மனஅமைதி ஏற்பட்டது. ஆயினும் அந்த இடமும் கரோலுடைய வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்ததால் சிப்பாய்கள் எந்த நேரத்திலும் அங்கு வந்து விடக்கூடும் என்பதை யறிந்து அவன் மெதுவாகச்சந்தடி செய்யாமல் ஊர்ந்து சென்றான்.

அவன் நடந்து செல்லும்பொழுது இடையே டோல்காநதி குறுக்கிட்டது. தங்குவதற்கு அப்பக்கத்தில் வேறு இடமில்லாததால், அவன் ஆற்றைக்கடந்து செல்லவேண்டியிருந்தது. எப்படியும் பட்டாளத்தார் நின்ற இடத்திலிருந்து வெகுதூரம் தள்ளிக்சென்று விடவேண்டியிருந்தது. வீதி மார்க்கமாய்ச் சென்றால், ஆற்றைத் தாண்டப் பாலம் இருக்கும். ஆனால் வீதியில் பட்டாளத்தாரும் இருப்பார்கள் அல்லவா? எவ்வளவு குளிராயிருந்தாலும் நதியில் விழுந்து நீந்தி அக்கரை செல்லவேண்டுமென்று தான்பிரின் துணிந்தான். ஆற்றில் குதித்துவிட்டான். நீந்துகையில் கால்களில் குண்டுகளால் துளைக்கப்பட்டிருந்த துவாரங்களில் ஒரு பக்கமாய்த் தண்ணிர் புகுந்து மறுப்பத்தால் வெளியே சென்றது. அத்தனைக் கொடுந்துன்பத்திலும் அவனுக்குத் தண்ணீருடைய தண்மை அதிகமாய்த் தெரியவில்லை. இத்தகைய சந்தர்ப்பத்தில் நெருப்புச் சுடாது, நீரும் குளிராது, இயற்கை உணர்ச்சியே அற்றுப்போய்விடுமல்லவா மனத்திலே ஒரு பெரும் உணர்ச்சி குடிகொண்டிருக்கும் பொழுது, அற்பமான துன்பங்களும் இன்பங்களும் ஒருவனைப் பாதிக்கமாட்டா. எனவே கைகளையும் கால்களையும் அடித்துக் கொண்டு தான்பிரீன் எப்படியோ அக்கரைசேர்ந்தான்.

ஆற்றின் மறுகரையில் சமீபத்தில் சில வீடுகளிருந்தன. அவையிருந்த இடம் மரங்களடர்ந்த பொட்டனிக் அவினியூ என்று அவன் தெரிந்து கொண்டான். அவன் நின்றது வீடுகளின் பின்புறத்தில். மேற்கொண்டு அவனால் நடக்கமுடி யவில்லை. அவனுடைய உடம்பிலிருந்து இரத்தம் வழிந்த வண்ணமாயிருந்தது. மேற்கொண்டு வெளியே தங்கினால் வெறுங்களைப்பினாலேயே இறந்து விழநேரும். ஆதலால் ஏதாவது ஒரு வீட்டிற்குச்சென்று இளைப்பாற வேண்டு மென்று அவன் விரும்பினான்.

யாதொரு யோசனையுமில்லாமல், அவன் திடீரென்று சென்று ஒரு வீட்டின் கதவைத் தட்டினான். அன்றிரவு அவன் எந்த வீட்டைத் தட்டியிருந்தாலும், அவன்பாடு அன்றோடு தீர்ந்து போயிருக்கும். அந்நேரத்தில் (காலை 3 அல்லது 4 மணிக்கு) தலைவிரி கோலமாய், உடம்பெல்லாம் இரத்தம் பெருகி, உடை யெல்லாம் நனைந்து, அவன் நின்றுகொண்டிருந்த நிலையை யார் கண்டாலும் திடுக்கிட்டு போயிருப்பர்.

எந்தத் தெய்வமோ வழிகாட்டியது என்று சொல்லும்படியாக, அவன் அந்த வீட்டின் கதவைத் தட்டினான்.

ஒரு முறை தட்டியதில் ஒருவரும் ஏனென்று கேளாததால், அவன் மீண்டும் தட்டினான். ஒரு மனிதர் வந்து கதவைத் திறந்து எதிரே நின்று கொண்டிருந்த் உருவத்தைக் கண்டார். தான் பிரீன் மெய்மறந்த நிலையில், வாய் குழறிக் கொண்டே தனக்குத் தங்க இடம் வேண்டுமென்று வேண்டினாான். அவ்விட்டுக்காரர் அவனை யாரென்றும், எவ்வாறு காயமுற்றான் என்றும் கேட்க வில்லை. உள்ளே வாருங்கள் எங்களால் என்ன உதவி செய்ய முடியுமோ அதைச் செய்யக் காத்திருக்கிறோம் என்று வரவேற்று உள்ளே அழைத்தார்.

அவரும் அவர் மனையும் தான்பிரீனைப் படுக்கையில் படுக்கவைத்து, உடனே அருகே வசித்துக்கொண்டிருந்த லாங் என்ற தாதிப்பெண்ணை அழைத் துவந்தனர். அவர்கள் அவனுடைய புண்களுக்கு மருந்திட்டு, உற்சாகமளிக்கும் பானமொன்றையும் குடிக்கக் கொடுத்தனர். அந்தப் பானம் தாதிப் பெண்ணால் வெளியிலிருந்து வாங்கிக் கொண்டுவரப்பட்டது.

தான்பிரீனை ஆதரித்து வீடு கொடுத்து உதவிய கணவான் பிரெட் ஹோம்ஸ் என்பவர். அவருக்குப் புரட்சியில் அபிமானமில்லாததோடு ஆங்கிலேயரிடமே அனுதாபமுண்டு. ஆயினும், அவரும் அவர் பத்தினியும் தான்பிரீனைத் தங்கள் சொந்தப்பிள்ளையைப் போலும், சகோதரனைப்போலும் பாவித்துச்சிகிச்சை செய்தனர். தான்பிரின் தனக்குக் காயங்கள் எப்படியேற்பட்டன என்பதைச்சொல்லாம லிருப்பினும், அவர்கள் வேண்டிய உபசாரம் செய்து உயிரைக்காப்பாள்றினர்.

நன்றாக விடிந்த பிறகு தான்தான்பிரீன் அவர்களிடம் தான் யாரென்பதைக் கூறினான். ஹோம் அவனைத் தேற்றி நன்றாகக் குணமடையும்வரை தாங்கள் பாதுகாப்பதாயும், பின்னால் வேறு பந்தோபஸ்தான இடத்திற்கு அனுப்பி, வேண்டிய உதவி செய்வதாயும் வாக்களித்தனர்.

மறுநாள் தோழர்கள் தான்பிரீனை ஒரு காரில் வைத்து, மேட்டர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துக் சென்றனர். வழியில், சார்லஸ் தெருவில் டிர்லி அவனைக் கண்டு உயிர்தப்பிவந்த விபரத்தைச் சொன்னான்.

வைத்திய சாலையில் டாக்டர்கள் தான்பிரீனுக்கு மிகுந்த அன்புடன் சிகிச்சை செய்து வந்தனர். ஆனால் அங்கு அடிக்கடி பட்டாளத்தாருடைய சோதனை நடந்து வந்தது. அப்படி அக்டோபர் மாதம் 14ஆம் தேதி வெடிகுண்டினால் காயமடைந்த ஒரு பையனைத் தேடி ஒரு சோதனை நடந்தது. அதனால், நேர்ந்த விபரீதத்தை அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.