தான்பிரீன் தொடரும் பயணம்/மீண்டும் திப்பெரரி
15
மீண்டும் திப்பெரரி
1920ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தான்பிரீனுடைய காயம் குணமடைந்து வந்ததால் அவன் சென்ற ஆண்டின் நிகழ்ச்சிகளைப் பற்றிச் சிந்தனை செய்யப் போதிய ஓய்விருந்தது.
ஸோலோஹெட்பக்கில் போடப்பட்ட வித்து முளைவிட்டு வளர்ந்து பலன் கொடுத்து வந்தது. புரட்சிக் காரியங்களைப் பற்றி மக்களும் தொண்டர்களும் நன்றாய்த் தெரிந்துகொள்வதற்கு அரசாங்க அறிக்கைகள் மிகவும் உதவி புரிந்தன. அயர்லாந்தில் செய்யப்பட்ட குற்றங்கள் என்று பிரிட்டிஷ் சர்க்கார்வெளியிட்ட அறிக்கைகளில் புரட்சிக்காரருடைய செய்கைகளே வர்ணிக்கப்பட்டிருந்தன. சர்க்கார் குற்றங்கள் என்று கூறிய பகுதிகள் தொண்டர்களுடைய சூரத்தனங்களை விவரித்தன.
இங்கிலாந்து வெளியிட்ட அறிக்கையில் தன்னுடைய பட்டாளங்களும் போலிஸும் செய்த குற்றங்களையும் கொடுமைகளையும் சிறிது கூட வெளியிடவில்லை. எத்தனை நிரபராதிகளுடைய வீடுகள் நள்ளிரவில் சோதனையிடப்பட்டன. ஒருபாவமும் அறியாத மக்கள் எத்தனைபேர் சிறையிடப்பட்டனர்! துன்புறுத்தப்பட்டனர் எத்தனை ஊர்களில் ராணுவச்சட்டம் அமுல் செய்யப்பட்டது. எத்தனை சங்கங்களும் கூட்டங்களும் சட்ட விரோதமானவை என்று கூறப்பட்டன. இவற்றையெல்லாம் சர்க்கார் உலகிற்கு அறிவிக்க வெட்கப்பட்டு மெளனமாக இருந்துவிட்டது. அயர்லாந்தின் உண்மைப் பிரதிநிதித்துவமுள்ள மாபெரும் சபையான டெயில் ஐரான் சட்டவிரோதமான சபை என்று விளம்பரப்படுத்தப்பட்டது! கெயிலிக் மொழி அபிவிருத்தி சங்கம், பெண்களின் தேசிய சங்கம், ஐரிஷ் தொண்டர்படை, ஐரிஷ் வாலிபச் சாரணர்படை முதலிய யாவும் சட்டவிரோதமான சபைகள் என்று விளம்பரப்படுத்தப்பட்டன. சுருக்கமாய்ச் சொன்னால் ஐரிஷ் தலைவர் ஆர்தர்கிரிபித் கூறியது போல் ஐரிஷ் ஜனசமுகம் முழுமையும் சட்டவிரோதமான கூட்டம் என்று விளம்பரப்படுத்தப்பட்டது!
மேற்சொல்லப்பட்டதில் இருந்து பிரிட்டிஷ் சர்க்கார் அயர்லாந்தில் சகல கொடுமைகளையும் செய்து தீர்த்துவிட்டதாக எண்ணிவிடவேண்டாம். மேலும் பல கொடுமைகளை அவர்கள் செய்யாமல் பாக்கி வைத்திருந்தனர். பின்னால் படிப்படியாக அவர்கள் எதற்கும்.துணிந்து முன்வந்து விட்டார்கள்.
1929ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தான்பிரீன் மலோனுடைய வீட்டிலிருக்கும் பொழுதெ முதலாவது ஊரடங்குச்சட்டம் அமுலுக்கு வந்தது. அவ்வருடம் பிப்ரவரி மாதம் ஒருநாள் நள்ளிரவில் ஒரு போலிஸ்காரன் ஐரிஷ் தொண்டர்களை எதிர்த்ததால் கிராட்டன் தெருவில் சுட்டுக்கொல்லப்படட்டான். உடனே பிரிட்டிஷார், பட்டாளத்தைத்தவிர வேறெந்த மக்களும் இரவு 12 மணிக்கும் காலை 5 மணிக்குமிடையில் வீட்டை விட்டு வெளியேறக் கூடாதென்று உத்தரவிட்டார்கள். சில மாதங்களில் அந்த உத்தரவு தென் அயர்லாந்திலுள்ள பல கிராமங்களிலும் நகரங்களிலும் அமுலுக்கு வந்துவிட்டது. அத்துடன் அது நாளுக்கு நாள்மிகக் கடுமையாகவும் செய்யப்பட்டது. லிமெரிக்கில் இரவு 7 மணிக்கு மேல் யாரும் வெளியேறக்கூடாது என்று உத்தரவுவிடப்பட்டது. கார்க் நகரில் கொஞ்சகாலத்திற்கு மாலை 4மணிக்கு மேல் உத்தரவு அமுலில் இருந்து, தெருக்களில் யார் சென்ற போதிலும் அதிகாரிகள் அவர்களைச் சட்டுத்தள்ளி வந்ததார்கள். இவ்வாறு 1920 - 21ல் நூற்றாண்டுக்கணக்கான ஆடவரும், பெண்டிரும் குழந்தைகளும் நடுத்தெருக்களில் படுகொலை செய்யப்பட்டனர். பட்டாளத்தார் செய்த அக்கிரமங்களை யாரும் தெரிந்து கொள்ள முடியாமலிருந்தது. ஏனெனில் கொலைகள் நடக்கும் பொழுது ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தது.
1920 - ஆம் வருஷம் வசந்தகாலத்தில் தான்பிரீனுக்கு ஒரு பெரும் பாக்கியம் கிடைத்தது. எப்பொழுதும் சாரல் துளிகள் விழுந்து குளிர்ச்சியாயுள்ள தாரா மலைப்பிரதேசத்தில் அவன் சில நாள் தங்க நேர்ந்தது. மிக நெருக்கமான டப்ளின் நகரத்தின் கிராட்டன் தெருவில் வசித்ததற்கும் மலையடிவாரத்தில் வசித்ததற்கும் மிகுந்த வேற்றுமை இருந்தது. தாரா மலையிலுள்ள பசுந்தோட்டத்தில்தான் பழைய ஐரிஷ் அரசர்கள் வசந்தகாலத்தில் தங்குவது வழக்கம். தான்பிரீன் அங்கு சென்ற முதல்நாளே குன்றின் மேல் ஏறி அதன் உச்சியில் ஒரு மணி நேரம் நின்று சுற்றிலுமிருந்த இயற்கையின் வனப்பைக் கண்ணாரப் பருகிக் கொண்டிருந்தான். அந்நேரத்தில் பழைய ஐரிஷ் வீரர்களைப் பற்றியும் சுதந்திரரத்துடன் கொலுவீற்றிருந்த வணங்காமுடி மன்னர்கள்களைப் பற்றியும், அயர்லாந்தில் தேசியக்கொடி பகைவர்களை வெற்றி கொண்டு ஆகாயத்தில் துலங்கிக் கொண்டிருந்ததைப் பற்றியும், பின்னால் அயர்லாந்தின் மக்கள் அடிமை விலங்குகளால் பிணைப்புண்டு கிடந்ததைப் பற்றியும் ஆகாயத்தில் வீசிய காற்றிலும் அடிமைத்தனத்தின் துர்நாற்றம் நாறியதைப் பற்றியும் அவன் உள்ளத்தில் அலை அலையாகப் பல எண்ணங்கள் எழுந்தன, அக்குன்றின் மேல் பழம் பெருமையைக் காட்டக்கூடிய ஒரு பொருளும் காணப்படவில்லை. மன்னர்கள் வசித்த அரண்மனைகள் மணல் மேடுகளாகிவிட்டன. எல்லாம் மறைந்தொழிந்து விட்டன. ஆனால், அயர்லாந்தை எதிர்த்து வெற்றி கொண்ட ஆங்கிலப் பகைவர்களின் சிப்பாய்கள் அவ்விடத்தி, போராடி இறந்ததற்கு அறிகுறியாக ஒரு சிலுவை மட்டும் நடப்பட்டிருந்தது. அவ்விடத்தில் 1898-ஆம் ஆண்டு அயர்லாந்தின் சுதந்திரத்தைக் காப்பதற்காக எத்தனையோ ஐரிஷ் வீரர்கள் பகைவர்களை எதிர்த்துப் போராடி உயிர் நீத்தனர். அவர்களுக்கும் அச்சிலுவையே ஞாபகக் குறியாக விளங்கியது. தான்பிரீன் அவ்விடத்தில் முழங்காற் பணியிட்டுக் கொண்டு பழைய ஐரிஷ் வீரர்களுடைய கனவு நிறைவேற வேண்டும் என்றும், அதை விரைவில் நிறைவேற்றுவதற்குத் தனக்கு வலிமையும் வீரமும் பெருகவேண்டும் என்றும் இறைவனைத் துதித்தான்
மலையடிவாரத்தில் பழைய சிங்காரமான மாளிகைக்குப் பதிலாக நாட்டைப்பிடித்துக் கொண்ட அந்நியருடைய கோட்டைகளே காணப்பட்டன. அங்கு குடியானவர்களேயில்லை. இடையிடையே தொழிலாளர்களுடைய குடிசைகள் சில மைதானங்களின் மத்தியில் இருந்தன வீதிகளில் மக்களுடைய நடமாட்டமேயில்லை. அரசர்களுக்கும் குடியானவர்களுக்கும் பதிலாகக் கொழுத்த மாடுகளே அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தன. அந்த மாடுகளும் ஆங்கிலேயரின் உணவுக்காக வளர்க்கப்பட்டவை!
கோடைகாலம் நெருங்கி வந்துகொண்டிருந்தது. தான்பிரீன் உடம்பு முற்றிலும் குணமாகி மீண்டும் வேலைக்குத் தயாவிட்டான். தேசத்தில் நெருக்கடி அதிகமாகிவிட்டது. பத்திரிகைகளில் மனம் பதறக்கூடிய பல செய்திகள் வெளிவந்தன. அச்சமயத்தில் அவன் போராட்டத்தின் மத்தியில் நில்லாது மலையடிவாரத்தில் பொழுது போக்கவிரும்பவில்லை. ஐந்தாறு மாதங்களுக்கு முன்னால் டப்ளினில் லார்ட் பிரெஞ்சைச் சுடுவதற்காகப் பலசமயம் தான்பிரீனுடன் காத்துக் கொண்டிருந்த கார்க் நகர மேயரான, டாம் மக்கர் டெயின் என்பவர் அவருடைய வீட்டிலேயே அவரது மனைவி, முன்னால் பிரிட்டிஷாரால் கொலைசெய்யப்பட்டார். தர்லஸ் நகரிலும் இதுபோல் இரண்டு மூன்று கொலைகள் செய்யப்பட்டன. இவற்றை கேட்ட பொழுது தான்பிரீனுடைய ரத்தம் கொதித்தது. போர்! போர்! என்று அவனுடைய உள்ளம் துடித்தது. உடனே டப்ளினுக்குச் சென்று, பல நண்பர்களையும் கண்டு மீண்டும் கெரில்லாச் சண்டையை ஆரம்பிக்க வேண்டும் என்று வற்புறுத்தினான். டிக் மக்கீ, பீட்டர் கிளான்ஸி முதலியோர் அவனை ஆதரித்தனர். ஆனால் டெயில் ஐரோனோ, தொண்டர் படையின் தலைமை அதிகாரிகளோ தான்பிரீனை ஆதரிக்கவில்லை. மைக்கேல் காலின்ஸ் மட்டும் கொஞ்சம் ஆதரவு காட்டினார்.
உண்மை என்னவென்றால் தலைவர்களுக்குத் தீவிரமான எந்த வேலையும் பிடிக்கவில்லை. தொண்டர்கள் தங்களுக்கும் அவர்களுக்கும் இருந்த வேற்றுமைகளைப் பகைவர்களுக்குத் தெரியும்படியாக வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
பொது மக்களும் யுத்தத்தை விரும்பவில்லை. 1918ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவர்கள் கொடுத்த வாக்கினாலேயே குடியரசை ஏற்படுத்துவதற்கு முடிந்தது என்பதை அவர்கள் மறந்துவிட்டனர். போலிஸாரைத் தாக்குவதால் சட்ட விரோத உத்தரவுகளும், கைது செய்வதும் மேலும் அதிகரிப்பதைக் கண்டு அவர்கள் அஞ்சினார்கள்.
தான்பிரீன் டப்ளினில் அதிக நாள் தங்க விரும்பவில்லை. விரைவாகத் திப்பெரரிக்குச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்தான். அங்கு தொண்டர்கள் எதற்கும் தயாரயிருந்தபோதிலும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஒரு தலைவன் வழிகாட்ட வேண்டிய அவசியம் இருந்தது. ஆதலால் தான்பிரீனும் டிரீஸியும் நூறுமைல்கள் சைக்கிளில் பிரயாணம் செய்து திப்பெரரியையடைந்தனர். பன்னிரண்டு மாதங்களுக்குப் பிறகு தான்பிரீன் அப்பொழுதுதான் திப்பெரரியை மீண்டும் கண்ணுற்றான்.