தாய்மொழி காப்போம்/உளங்கவர் புலவர்

42. உளங்கவர் புலவர்

கண்ணுக்கு விருந்தாகும் இயற்கைக் காட்சி
காளையரும் கன்னியரும் விழைந்து தங்கள்
கண்ணுக்கு முதன்மைதரும் காதற் காட்சி
கருவிழியை விழித்திமையார் முகத்தும் மார்பும்
புண்ணுக்கு விழைந்திருக்கும் வீரக் காட்சி
புலவருக்குப் புரவலரும் பணிந்து நின்று
பண்ணுக்கு விழைந்திருக்கும் காட்சி எல்லாம்
பாடிவைத்த சங்கத்தார் கவர்ந்தார் நெஞ்சை

அகச்சமையம் புறச்சமையம் என்று கூறி.
அளப்பரிய சமையங்கள் படைத்து நின்று,
பகைக்குணமே கொண்டுழன்ற மாந்த ருக்குப்
பகவனென ஒருபொருளை உணர்த்திப் பாவில்
மிகச்சிறிய குறட்பாட்டால் அறத்துப் பாலும்
மேன்மைபெறும் பொருட்பாலும் இன்பப் பாலும்
தொகுத்தறங்கள் உரைத்தவன்யார்? அவனே யன்றோ
தொன்னாள்தொட் டுளங்கவர்ந்த கவிஞன் ஆவன்;

கற்புடைய மாதர்தமை உலகம் போற்றக்
கலைக்கோயில் எழுப்பியருள் சேரன் நல்ல
பொற்புடைய அறச்செல்வி பசிநோய் நீக்கப்
பூண்டிருந்த தொண்டுளத்தை விளக்கும் வண்ணம்
சொற்புதுமை காட்டியொரு நூல ளித்த
தொல்புதல்வன் மதுரைநகர் வாழும் சாத்தன்,
பற்பலவாம் மணம்புணர்ந்த சீவ கற்குப்
பாமாலை தொடுத்ததிருத் தக்க தேவன்.

தமிழ் மொழியின் சொற்களெலாம் முன்னே நின்று
தவம்புரிந்தே இடம்பெறுவான் முந்தி நிற்க
அமிழ்தனைய பாடலுக்குள் வரிசைநல்கி
அவைதமக்கு மாற்றுயர்ந்த அணிகள் நல்கித்
தமியனெனச் சொற்சிலம்பம் ஆடுங் கம்பன்,
தரணியிலோர் நிகரில்லாப் பரணி பாடி
நமையெல்லாம் மயக்குறுத்தும் வீர மூட்டி
நாப்பறையால் போர்ப்பறைகள் ஆர்த்த நல்லோன்.

பொன்விளைந்த களத்தூரன் வெண்பாப் பாடிப்
புகழேந்தும் ஒருகவிஞன் தமிழுக் காக்கம்
முன்விழைந்து நூல்செய்து காலங்கண்ட
முத்தமிழ்க்குத் தொண்டுசெயும் கவிஞ ரெல்லாம்
என்விழைவுக் கிலக்கானோர்; அவர்தம் பாட்டின்
இனிமைக்கும் தனிமைக்கும் அடிமை யானேன்;
இன்பளைந்த அவர்திறத்தை நுவலக் கேட்பின்
என்பெல்லாம் நெக்குருக மகிழும் உள்ளம்.

மாசகன்ற வீணையென வெம்மை நீக்க
மாலைவரும் மதியமென, உளஞ்சி லிர்க்க
வீசுகின்ற தென்றலென, உயிர்கள் வேட்கும்
வீங்கிளமை வேனிலென, மலரில் வண்டு
மூசுகின்ற பொய்கையென உவமை சொல்லி
முழுமுதலை விளக்கிநின்ற நாவின் வேந்தன்
பேசுகின்ற தமிழ்ப்பாட்டால் இறையைக் காட்டும்
பெரும்புலவன் கவராத உள்ளமுண்டோ?

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் நல்ல
குளிர்தருவாய். தருநிழலாய், நெஞ்ச மென்னும்
மேடையிலே வீசுகின்ற தென்றற் காற்றாய்,
மென்காற்றின் விளைசுகமாய் கருணை என்னும்
ஓடையிலே ஊறிவரும் தெண்ணீ ராகி
உகந்தமண மலராகி, சிறுவ னாக
ஆடையிலே எனைமணந்த இராம லிங்க
அடிகளவர் உளங்கவர்ந்த வள்ள லாவர்.

பாமரராய் விலங்குகளாய்ப் பான்மை கெட்டுப்
பகுத்தறிவும் அற்றவராய்ப் பிறந்த நாட்டைப்
பூமிதனில் அயலவர்க்கே அடிமை யாக்கிப்
புழுவினைப்போல் பூச்சியைப்போல் கிடந்த நாளில்
தேமதுரத் தமிழ்ப்பாட்டால் புரட்சித் தீயைத்
திசையெல்லாம் மூட்டியவன் உரிமை எல்லாம்
நாமடைய வேண்டுமென்ற உணர்வு தந்த
நற்கவிஞன் எனதுள்ளம் கொள்ளை கொண்டான்;

தென்னாட்டின் விடுதலைக்கே வாழ்வு தந்தோன்;
தீந்தமிழின் உரிமைக்கே பாடல் தந்தோன்;
இந்நாட்டில் பிறமொழிகள் படையெ டுத்தால்
எழுந்தார்க்கும் பாவேந்தன் எதிரி கோடிப்
பொன்காட்டி யழைத்தாலும் இகழ்ந்து தள்ளிப்
புகழ்மிக்க தமிழினத்தின் மேன்மை காக்கத்
தன்பாட்டைப் படைத்தளித்தோன் என்றும் மாறாத்
தன்மான இயக்கத்தான் உளங்க வர்ந்தான்;

எளிமைக்குப் பிறப்பிடமாய், இனிய சொல்லின்
இருப்பிடமாய் ஆசையிலா மனத்த னாகி,
ஒளிமிக்க புத்தனுக்கும் பார சீக
உமருக்கும் புகழோங்கும் வண்ணம் செய்த
களிமிகுத்த பாவலனாய்ச், சிறுவர் உள்ளம்
கனிவிக்கும் கவிமணியாய், உண்மை நேர்மை
தெளிவிக்கும் ஓருருவாய் வாழ்ந்த எங்கள்
தென்புலத்தான் திருவடியை நெஞ்சிற் கொள்வேன்.

எத்துணைதான் இடுக்கண்கள் நேர்ந்த போதும்
எதிர்த்தெழுந்து நகைத்துநின்று வெற்றி கண்ட
முத்தமிழ்க்குப் புகழ்படைத்த புலவர் பல்லோர்
முன்னாளில் வாழ்ந்திருந்தார்; என்றன் உள்ளம்
நத்துகின்ற புலவர்சிலர் பெயரை இன்று
நாம்நினைதல் நலம்பயக்கும்; நினைந்து வாழ்த்தும்
அத்திறத்தால் தமிழ்காக்கும் எண்ணம் நெஞ்சில்
அரும்புவிடும்; மலராகும்; மணம்ப ரப்பும்.

குன்றக்குடி கவியரங்கம் - 16.1.1965