தாய்மொழி காப்போம்/சமயத்தில் நட்ட தமிழ்

32. சமயத்தில் நட்டதமிழ்

அருளப்பன் என்னும் பேரான்
அப்துல்லா வானான் கண்டாய்!
கருப்பணன் என்பான் இங்கே
கபூரென ஆகி விட்டான்;
விருப்புள பொன்னன் கூட
விஜயனாய் மாறி விட்டான்;
வெறுப்புற ஜெகந்நாத் தானான்
வெள்ளையன் அந்தோ அந்தோ!

செல்லப்பன் இயல்பு மாறி
ஜீவபந்த் தாகி விட்டான்;
நல்லப்பன் கெட்டே போனான்
நண்ணினான் ஸ்ரீபா லாக;
சொல்லுக்கோர் அழகன் இங்கே
சொக்கினான் ஜோசப் பானான்;
அல்லலுக் காளாய் நின்றான்
அந்தோணி யானான் மெய்யர்.

தைத்திங்கள் பிறக்கும் நாளைத்
தமிழ்மகன் சங்கி ராந்தி
வைத்திங்குக் கூவி நின்றான்;
வளரிளஞ் சிறுவ ரெல்லாம்
மொய்த்திங்குக் கூடி ஆட
முயல்மகார்நோன்பை கூடக்
கைத்ததென் றொதுக்கி விட்டான்
கழறினான் தசரா என்றே.

திருமறைக் காடென் றோதும்
தீந்தமிழ்ப் பெயரும் செல்ல
வருமொழி வேதா ரண்யம்
வந்தது; வளங்கள் யாவும்
மருவிடும் தமிழின் அண்ணா
மலையெனும் பெயரும் மாறி
அருணமும் கிரியு மாகி
அய்யவோ ஓங்கிற் றம்மா!

தன்பெயர் மாற்றி வைத்தான்;
தனித்தமிழ் ஊரின் பேரை
என்பயன் கருதி னானோ
இயம்பினான் வேறு பேரால்;
முன்புள திருநாள் தன்னை
மொழிந்தனன் பெயரை மாற்றி;
புன்செயல் என்றே எண்ணான்
பொன்றினான் அடிமைப் பட்டே.

சமயத்தில் தமிழை நட்டான்
சாய்ந்துமே தளர்ந்த தம்மா!
இமயத்தில் கொடியை நட்டோம்
என்றெலாம் வீரம் பேசித்
தமிழைத்தான் கோட்டை விட்டான்
தமிழனென் றொருபேர் கொண்டான்
இமையைத்தான் விழிம றந்தால்
எப்படிப் புகல்வ தம்மா?

மதமெனும் பேய்பி டித்தே
மடமையுள் மூழ்கி நின்றான்;
கதவினைத் திறந்து வைத்தான்
கண்டவை புகுவ தற்கே;
எதனையும் தழுவிக் கொண்டான்
இவனைத்தான் மறந்தே போனான்;
பதரெனச் சொல்வ தல்லால்
பகர்ந்திட உவமை ஏது?

 

(27-9-1975)