தாய்மொழி காப்போம்/தமிழ் காப்போம்
3. தமிழ் காப்போம்
எண்ணுடையாள், எழுத்துடையாள், காலங் காணா
எழிலுடையாள், இளைமையினாள், கோலங் கண்டு
கண்ணுடையார் எனவாழ்ந்தோம்; ஆனால் இன்று
கண்ணொன்றை இழந்து விட்டோம்; கீழ்வாய் என்னும்
எண்ணறிவார் எவருள்ளார்? தமிழர் கண்ட
எண்வடிவம் மறைந்துவரும் நிலைமை கண்டோம்
புண்ணுடைய நெஞ்சுடையோம்; மாற்றார் ஆட்சி
புகுந்தமையால் விளைந்தவொரு தீமை யன்றோ?
எஞ்சியுள் எழுத்தேனும் முன்னோர் கண்ட
இயல்புடனே நிலைத்திடுதற் குறுதி யில்லை;
வஞ்சமனம் படைத்தவர்தாம் வேற்று நாட்டு
வரிவடிவைப் புகுத்துதற்கு முயலு கின்றார்;
நெஞ்சமிதை நினைந்துவிடின் வெந்து போகும்;
நெறிகெட்ட இம்முறைதான் என்று சாகும்?
அஞ்சுவது கெஞ்சுவது மடமை யாகும்;
ஆர்ப்பரித்துக் கேட்பதுதான் கடமை யாகும்
இந்நாட்டிற் குரியனவென் றியம்பு கின்ற
ஈரேழு மொழிகளுக்கும் உரிமை வேண்டும்
வெந்காட்ட ஒருமொழியும் அதன்மே லேறி
வீற்றிருக்க ஒருமொழியும் வேண்டா! வேண்டா!!
என்னாட்டிற் கலைக்கூடம் ஆட்சி மன்றம்
எத்துறையும் தமிழ்மொழியின் ஆட்சிவேண்டும்;
இந்நாட்டம் நிறைவெய்த வில்லை என்றால்
இருந்தென்ன வாழ்ந்தென்ன சாவே மேலாம்.
இவ்வண்ணம் தமிழ்காக்க முனைவோர் தம்மை
இழிமொழிகள் சொலலன்றி ஆட்சி செய்வோர்
செய்வண்ணம் அறியாராய்ப் புலம்பு கின்றார்;
தேர்தலிலே நாற்காலி பற்று தற்கே
இவ்வண்ணம் தமிழ்தமிழென் றியம்பு கின்றார்
என்றுரைப்பர் நாற்காலிப் புத்தி கொண்டோர்;
உய்வண்ணம் அவர்க்குரைக்க வல்லார் யாரோ?
உரைத்தாலும் கேட்கின்ற நல்லார் யாரோ?
(வெந்-முதுகு)
எப்படியோ அரசிருக்கை கிடைத்து விட்டால்
எடுபிடிகள் ஆளம்பும் அமைந்துவிட்டால்
அப்படியே ஒட்டிக் கொண் டகல மாட்டார்,
அடுக்கடுக்காய்ப் பழிவரினும் இறங்க மாட்டார்,
எப்பொழுதோ ஒருநாளில் வெறுத்தாற் போல
இப்பதவி வேண்டேனென் றெழுந்து நிற்பர்,
அப்பொழுதே மீண்டுமதில் அமர்ந்து கொள்வர்,
அவர்நம்மை எள்ளிஉரை யாடு கின்றார்.
காலந்தான் இவர்தம்மைத் திருத்த வேண்டும்
கடுகிவரும் அணுகிவரும் தேர்தல் என்னுங்
காலந்தான் இவர்க்கறிவு புகட்ட வேண்டும்;
கண்திறந்து தமிழரென உணர்வர் அந்நாள்;
ஞாலந்தான் இவர்க்குரிமைச் சொத்தா என்ன?
நமக்குமதில் உரிமையிலை என்றா எண்ணம்?
கோலந்தான் கலையாதோ? இவர்கள் செய்யும்
கொட்டந்தான் அடங்காதோ? அடங்கும் நாளை!
ஈன்றெடுத்த தாய்மொழிக்கு வாழ்வு வேண்டி
எடுத்துரைக்க முனைந்ததுமோர் குற்றம் ஆமோ?
ஆன்றவிந்த கொள்கையினார் தமிழ்மொ ழிக்கே
அரசுரிமை வேண்டியதும் குற்றம் ஆமோ?
ஏன் புகுந்தார் சிறைக்கூடம்? ஆசா னாக
இருந்தசிலர் பதவியையும் ஏனி ழந்தார்?
நான்றுணிந்து கூறிடுவேன் பதவி என்ன
நற்றமிழின் உயர்ந்ததுவோ சீசீ தூசி
மாநிலத்து மொழிகாணாப் புதுமை கண்டு
வகைப்படுத்தி அகம்புறமாப் பொருளைச் சொல்லித்
தேனிகர்த்த சுவைப்பாவால் பத்துப் பாட்டும்
தித்திக்கும் தொகை எட்டும் பாடி வைத்த
பாநலத்தைப், பொருள்வளத்தை, நுகர்ந்த உள்ளம்
பணியாது; பெருமிதத்தால் நிமிர்ந்து நிற்கும்;
கானகத்துப் புலிப்போத்தாய் வீரங் காட்டும்;
கவிதைக்கு விளைநிலமாய்க் காட்சி நல்கும்.
கண்ணகிக்கு வரப்போகும் இடர்நி னைந்து
கண்ணீரை நிறைத்துடலம் தோன்றா வண்ணம்
வண்ணமலர் பலகொண்டு மறைத்துச் சென்றாள்
வையையெனும் குலக்கொடிஎன் றிளங்கோ சொல்வார்;
அண்ணலெனும் இலக்குவனார்க் குற்ற துன்ப
[1]அவலநிலை கண்டுள்ளம் நொந்து நொந்து
மண்மிசையே வரஅஞ்சி மணலுட் புக்கு
மறைந்துகொண்டாள் அவளென்று நான்பு கல்வேன்;
சிறைசெல்லப் புலவர்சிலர் வேண்டும் இன்று;
செந்தமிழின் உயர்வுதனை வேண்டி நின்று
முறைசெய்ய பதவிதனை இழப்ப தற்கும்
முனைந்துவரும் புலவர்சிலர் வேண்டு மின்று;
குறைசெய்யும் ஆள்வோரின் கொடுமைக் காளாய்க்
குருதியுடன் உயிரீயப் புலவர் வேண்டும்;
நிறைசெய்ய உயிரீயும் புலவர் தம்முள்
நிற்குமுதற் புலவன்நான் ஆக வேண்டும்;
பிறந்தநிலம் ஒன்றுண்டு வணங்கல் வேண்டும்
பேகமொழி ஒன்றுண்டு போற்றல் வேண்டும்
சிறந்தபொருள் இவற்றின்மேல் ஒன்றும் இல்லை
சிந்தித்தே இவைகாக்க முனைவோம் வாரீர்!
கரந்துவரும் பகையுண்டு நினைவிற் கொள்க!
காலமெலாம் அடிமைசெய விழைதல் வேண்டா!
இறந்தபினும் தலைமுறைகள் நம்மை வாழ்த்த
ஏற்றசெயல் ஈதொன்றே காப்போம் வாரீர்!
(மதுரை எழுத்தாளர் மன்றத்தில் நடை பெற்ற கவியரங்கில்)
- ↑ பேராசிரியர் இலக்குவனார் பதவிநீக்கம் செய்யப்பட்ட அவலம்