தாய்மொழி காப்போம்/பதிப்புரை

பதிப்புரை

"ஆங்கில மொழிப்பற்றால் நம் தாய்மொழியைக் கீழ்நிலைக்குக் கொண்டுவந்து விட்டோம். நம் மொழியை கேலிக்குள்ளாக்குவதன் மூலம் நம்மை நாமே கேலிக்குள்ளாக்கிக் கொள்கிறோம். மேலை நாடுகள் செல்லுகின்ற இந்தியர்கள் நம் மொழியை மறக்கின்ற பழியினைச் செய்ய வேண்டாம். இந்தியநாடு விடுதலை பெறுவதற்கான வழிகளில் ஒன்று ஆங்கிலத்தை ஒழிப்பதாகும்." காந்தியடிகள் சொன்ன வரிகளை இந்த நேரத்தில் தமிழர்கள்முன் நினைவூட்டுகிறோம்.

உலக மக்கள் பலரும் தம் கையெழுத்தைத் தாய்மொழியில் போடுகின்றனர். அந்தோ! தமிழர்கள் தம் கையெழுத்தை ஆங்கிலத்தில் போடும் விந்தையை இங்கன்றி எங்கும் காணோம்.

மறஉணர்ச்சியும், உரைநயமும், சொற்செறிவும், சொல் இனிமையும்,சொல் வளமும், சொல் சுருக்கமும், சொல் தெளிவும் ஒருசேர அமைந்த சிறப்புமிக்க மொழி என்று உலக அறிஞர்களால் பாராட்டப்பட்ட மொழி நம் தாய்மொழியாம் தமிழ்மொழி. தமக்கெனத் தாமே எழுத்துகளை வகுத்துக்கொண்டமொழி தமிழ்மொழி.

வடமொழியும், இலத்தின் மொழியும், பாலி மொழியும், கிரேக்க மொழியும், அரபிக்மொழியும் (ஹீப்ரு மொழி) எனும் இப்பழம்பெரும் மொழிகள் அனைத்தும் சிதறிப்போன நிலையில், சிதையாசிரிளமைத்திறத்துடன் வாழும் நம் தாய்மொழி தமிழ்மொழி என்பதனை தமிழர்களே அறியாமல் வாழும் அவலத்தையாரிடம் சொல்லி அழுவது?

தன் மொழியையும், தன் இனத்தையும், தன் நாட்டையும், தன் பண்பாட்டையும், தன் நாகரிகத்தையும் உயர்வாகக் கருதிய எந்த இனமும் உலகில் உயர்ந்துநிற்கும் காக்கத்தவறிய எந்த இனமும் உயர்ந்ததாக வரலாறு இல்லை. சிறந்த மொழியை பெற்றவர்கள் தமிழர்கள். அத்தமிழர்கள் அம்மொழியில்பேசவும், கற்கவும், கையெழுத்திடவும் தயங்குவதுகண்டு உலகம் நம்மைப்பார்த்து சிரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந் நூலுக்கு அணிந்துரை நல்கி பெருமைப்படுத்திய திராவிட இயக்கக் கொள்கைகளில் ஆழமான பிடிப்புக் கொண்டவரான புலவர் இளஞ்செழியன் அவர்களுக்கு எம் நன்றி.

பாவேந்தர் பாரதிதாசன் பரம்பரையின் முன்னோடிப் பாவலரும், திராவிட இயக்கக் கொள்கைகளில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டவரும் பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் பெரியார் இவர்களின் கொள்கை வழிநின்று தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு மேன்மையுற வாழ்நாள் முழுவதும் உழைத்தவர் திராவிட இயக்க முதுபெரும்பாவலர் முடியரசன் ஆவார்.

"கெடல் எங்கே தமிழின் நலம்.
அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க"

எனும் பாவேந்தர் வரிகளை நினைவூட்டி மொழி அழிந்தால் இனம் அழியும் உணர்வினை முன்வைத்து 'தாய்மொழி காப்போம்' எனும் இந்நூலினை தமிழர்களின் கைகளில் தவழவிடுகிறோம்.

கோ. இளவழகன்