தாய்மொழி காப்போம்/பாடிக் கொண்டேயிருப்பேன்

52. பாடிக்கொண்டேயிருப்பேன்

பாடிக்கொண் டேயிருப்பேன் - என்
பைந்தமிழைச் செந்தமிழை நான் (பாடிக்)

ஒடிக்கொண் டேயிருக்கும் ஊறுஞ்செங் குருதி
ஓடா துறைந்தே ஓய்ந்திடும் நாள்வரை (பாடிக்)

கடும்பிணி கொடுஞ்சிறை கடுகி வந்தாலும்
கலக்கிடும் வறுமைகள் காய்ந்திடும்போதும்
இடும்பைகள் வந்தெனை எற்றிடு மேனும்
எதையும் அஞ்சிடேன் என்றுமே துஞ்சிடேன்
(பாடிக்)

பதவியும் பட்டமும் பணங்களுங் காட்டிப்
பகட்டினும் எதற்கும் பணியேன் கைநீட்டி
முதுமொழி என்மொழி முத்தமிழ் மொழியை
மொய்ம்புறக் காத்திட முனைந்திடும் வழியைப்
(பாடிக்)



(இக்கவிதையைப் படிக்கக் கேட்டவாறே கவியரசரின் உயிர் பிரிந்தது.)

(Upload an image to replace this placeholder.)