தாய்மொழி (வி. ராமலிங்கம்)
(நாமக்கல் வி. ராமலிங்கம் பிள்ளை எழுதிய தாய்மொழி (வி. ராமலிங்கம்) என்னும் கட்டுரை, இது இசைத்தமிழ் என்ற நூலில் காணப்படுகிறது)
தாய் மொழி என்றால் தாயார் புகட்டிய மொழி. தாயின் உடலிலிருந்துதான் நம்முடைய உடல் உண்டாயிற்று. அவள் ஊட்டிய அமுதத்திலிருந்து தான் நம் உடல் வளர்ந்தது. அவள் சொன்ன சொற்களிலிருந்து நமக்கு அறிவு ஆரம்பித்தது. பின்னால் நாம் எத்தனை பாஷைகளைப் படித்தாலும் அவற்றிலுள்ள அறிவுகளை நம்முடைய தாய்மொழியில் பெயர்த்துச் சொன்ன பிற்பாடுதான் புரிந்து கொண்டோம்.
பின்னால் நாம் தாய்மொழியையே முற்றிலும் மறந்துபோக முடியுமானாலும்கூட நமக்கு இந்தப் பிறமொழி அறிவையும் தந்தது தாய்மொழிதான். ஆகையால் தாய்மொழி உறவு தள்ள முடியாதது. எந்த அறிவும் தாய்மொழி மூலமாகத் தான் வளரமுடியும். ஒரு தமிழ்க் குழந்தை, பேச்சையறிவதற்கு முன்னால் பெற்ற தாயையிழக்க நேர்ந்து, ஒரு தெலுங்கு செவிலித் தாயால் வளர்க்கப்பட்டு, அந்த செவிலித்தாய் அக்குழந்தைக்குத் தெலுங்கிலேயே பேசப் பழக்கி விடுவாளானால், அந்தக் குழந்தைக்குத் தாய்மொழி தெலுங்குதான். அம்மொழியிற் சொன்னால்தான் அக்குழந்தை அறிந்து கொள்ள முடியும்.