1

சிங்கப்பூர் ‘சாங்கி’ விமான கூடத்தைக் காட்டிலும் சிறப்பான இன்னொரு கூடத்தை இப்போது கட்டி முடித்திருக்கிறார்கள். அது எங்கே என்றால் சிங்கப்பூரிலேயேதான். அதுவும் முதல் விமான கூடத்துக்குப் பக்கத்திலேயேதான். தூய்மையிலும், துல்லியத்திலும் அண்ணன் தம்பிக்குள் போட்டா போட்டி!

சிங்கப்பூரிலிருந்து பாங்காக் போய்ச் சேர மூன்று மணி நேரம் என்றால், பாங்காக் விமான கூடத்திலிருந்து ஹோட்டலுக்குப் போய்ச் சேர ஏறத்தாழ அவ்வளவு நேரம் ஆகி விடுகிறது. அப்படியொரு போக்குவரத்து நெரிசல், சாலை முழுதும் கார்களும் ஆட்டோக்களும், டிரக்குகளும் இரண்டு சக்கர ஹோண்டா வகையறாக்களும் நிரம்பி வழிகின்றன. எங்கள் டாக்ஸி டிரைவர் சரளமாய் இங்கிலீஷ் பேசினார்.

“தாய்லாந்தில் வாகனங்கள் அதிகமோ?” என்று அவரிடம் கேட்டேன்.

“ஆமாம்; வாகனங்களின் எண்ணிக்கைக்கு அடுத்தது புத்தர் சிலை பாபுலேஷன்!” என்றார் அவர்.

பாங்காக்கில் நீண்ட நெடிய கட்டிடங்கள் விண்முட்டி நிற்கின்றன. மொட்டையாக நிற்கும் அந்தக் கட்டிடங்களுக்கு இடையே கூர் கூரான புத்தர் ஆலயங்கள் உயர்ந்து நிற்கின்றன. தாய்லாந்து முழுதும் மொத்தம் 27000 புத்தர் ஆலயங்கள் உள்ளனவாம்!

இந்த ஊசிமுனைக் கூர்மைகள் இளநீர்க்காய்களிலும் பார்க்கலாம். அந்தக் காய்களை வெள்ளை வெளேரென்று ஒரு மினி கோபுரம் போல் சீவித் தருகிறார்கள். அதைப் போலவே நாட்டியப் பெண்கள் தலையிலும், கை விரல்களிலும் கூர்மையான அணிகள்தான்.

வரைபடத்தில் தாய்லாந்தின் அமைப்பைச் சற்று உற்றுக் கவனித்தால் அதுவும் கூராகவே தெரியும். அந்த நாட்டின் அமைப்பே யானையின் துதிக்கை வடிவத்தில் கூர்மையாக முடிகிறது.

புத்திக் கூர்மையிலும் தாய்லாந்து மக்கள் மற்றவர்களுக்கு இளைத்தவர்களல்ல. தாய்லாந்துப் பெண்களை கவியரசு கண்ணதாசன் ‘தாய்க்கிளிகள்’ என்று வர்ணிக்கிறார்.

சிறந்த கலாசாரம், பிரகாசமான சிவப்பு விளக்கு - இந்த இரண்டு முகங்களையும் கொண்டதுதான் தாய்லாந்து. பாங்காக்கில் சிவப்பு விளக்கின் ஒளி கொஞ்சம் அதிகமாகவே வீசுகிறது. என்னுடன் வந்த ராணிமைந்தனையும், புஷ்பா தங்கதுரையையும் அழைத்து, அந்தப் பகுதியை நீங்கள் இருவரும் கவனித்துக் கொள்ளுங்கள். எனக்கு ரொம்ப சின்ன வயசு, ஆகவே அந்தப் பகுதிக்கு நான் லாயக் ‘இல்லை’ என்று கூறி எய்ட்ஸ் பற்றி தாழ்ந்த குரலில் எச்சரித்து அனுப்பினேன்.

யானைத்தலை வடிவத்திலுள்ள அந்த நாட்டை விரிவாகச் சுற்றிப் பார்க்கக் குறைந்தது ஒரு மாத காலமாவது தேவை. ராமாயணத்தையும், இந்துக் கடவுளையும் தாய்லாந்து மக்கள் வழிபடுவது நம்மை வியக்க வைக்கிறது. ராமர் தெரு, சீதா டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயர்ப் பலகைகளும், பிரம்மா, விஷ்ணு, சிவன், விநாயகர் கோயில்களும் போகிற இடமெல்லாம் தென்படுகின்றன. ரத்னபுரி, காஞ்சனபுரி என்ற இரண்டு பெரிய ஊர்களுக்கும்போய் வந்தோம். நம்நாட்டில் காஞ்சிபுரம் என்றால் அங்கே காஞ்சனபுரி எங்கே போனாலும் இந்தியாவின் பழமையைப் பார்ப்பது போன்ற பிரமை.

டி.வி.யில் அடிக்கடி ராமாயணம் காட்டுகிறார்கள். நான் தங்கியிருந்த ஓட்டலில் கூட ஒரு நாள் ராமாயணத்தைச்சித்திரக் காட்சியாகப் பார்த்தேன்.

பாங்காக்கில் ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு அஸ்திவாரம் போடும் போது பூமிக்கடியில் பிரம்மாவின் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டதாம். அதை அந்த ஓட்டல் வாசலிலேயே (நாலு வீதிகள் கூடுகிற இடம்) கோயில் கட்டி வைத்திருக்கிறார்கள்.

தாய்லாந்தில் பிரம்மாக்கள் அதிகம் பிரம்மாவுக்கு வழிபாடும் அதிகம். இசை மூலம் வழிபடுகிறவர்களும் உண்டு.

சங்கீதக்காரர்கள் அங்கே கோயிலுக்கருகிலேயே தயாராக உள்ளனர். பணம் கொடுத்தால் பாடுகிறார்கள். அதே போல் நடனக்காரர்களும் இருக்கிறார்கள். பணம் கொடுத்தால் ஆடுகிறார்கள்.

பாங்காக்கில் எனக்கொரு நெருங்கிய நண்பர் இருக்கிறார். பெயர் ஹுமாயூன். ஹாங்காங் ‘ஜெம்’ மர்ச்செண்ட் டாக்டர் அயூப் அவர்களின் மூத்த சகோதரர். நான் மந்திர் என்றால் அவர் மஸ்ஜித், எங்களுக்குள் இருக்கும் நல்லுறவு இந்து முஸ்லிம் நல்லிணக்கத்துக்கு ஓர் எடுத்துக் காட்டு.

“இங்கே ஒரு அயோத்தி இருக்கிறதே, தெரியுமா?” என்று கேட்டார் ஹுமாயூன்.

"அயோத்தியா? இங்கேயா?” என்று திருப்பிக் கேட்டேன்.

“ஆமாம். இங்கேயும் ஒரு அயோத்தி இருக்கிறது. ஆனால் அதை ‘அயுத்தி’ என்று உச்சரிக்கிறார்கள். பாங்காக்கிலிருந்து அயோத்திக்கு எழுபது எண்பது மைல் தூரம்தான். படகு, ரயில், கார் மூன்றிலும் போகலாம். நான் ஒரு வேனுக்கு ஏற்பாடு செய்கிறேன். அதில் எட்டு பேர் போய் வர முடியும்” என்றார்.

மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. தயிர் சாதம், இட்லி, முறுக்கு, சீடை போன்ற உணவு சாதனங்களுடன் ஏழெட்டுப் பேர்பெரிய முஸ்தீபாய்ப் புறப்பட்டு விட்டோம். நண்பர் ஸ்ரீவேனுகோபாலன்,'ஆ'அயோத்தி! அயோத்தி! அங்கே என்னுடைய சரித்திரக் கதைக்கு வேண்டிய ஆதாரங்கள் நிறையக் கிடைக்கும்” என்று சொல்லிச் சொல்லிப் பரவசப்பட்டுக் கொண்டிருந்தார். ஏதோ பெரிய அட்வென்சர் செய்யப் போவது போல் ஒரு த்ரில்!

வேனில் போகும் போது, “அயோத்தியில் என்ன விசேஷம்?” என்று ஹுமாயூனிடம் கேட்டேன்.

“நம் நாட்டில் உள்ளது போல் இந்த அயோத்தியிலும் கோயில், மசூதி இரண்டும் உண்டு. ஆனாலும், இங்கு எந்த விதமான சண்டை சச்சரவும் கிடையாது. எல்லோரும் ஒற்றுமையுடன் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

“அந்த அமைதிக்கு என்ன காரணம் தெரியுமா?” என்று கேட்டேன் நான்.

“தெரியலையே!” என்றார்.

“பி.ஜே.பி.யும், அத்வானியும் இங்கே இல்லை; அதனால் தான்!” என்றேன்.

ஹுமாயூன் ‘குபுக்'கென்று சிரித்து விட்டார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்லாந்து/1&oldid=1058402" இலிருந்து மீள்விக்கப்பட்டது