தாய்/பதிப்புரை

பதிப்புரை

உலக இலக்கியப் படைப்பாளிகள் வரிசையில் முன்னிற்பவர் மக்சீம் கார்க்கி, மக்சீம் கார்க்கியின் படைப்புகளில் முதன்மையானது - தலையாயது “தாய்”.

ரஷ்ய மன்னர் ஜார் ஆட்சியின் கொடுமைகளை எதிர்த்து 1905 ஆம் ஆண்டில் வெடித்தெழுந்த புரட்சி அடக்கி ஒடுக்கப்பட்டது. இப்புரட்சியின் உண்மையைப்பற்றி விளக்கிச்சொல்ல, ரஷ்யத்தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு நிதி திரட்ட, அமெரிக்க அரசு ஜார் மன்னனுக்கு ஆதரவு தராமலிருக்க உறுதிசெய்ய போல்ஷிவிக் கட்சி கார்க்கியை அமெரிக்காவுக்கு அனுப்பிற்று. இதற்கு ஓராண்டுக்கு முன், 1904 ஆம் ஆண்டில், கார்க்கியின் எண்ணத்தில் “தாய்” உருப்பெற்றது. அவருடைய வாழ்க்கைத்துணைவியாகிய ஏகடரினா பவ்லோவ்னா வோல்ழினா நல்ல இலக்கியவாதி. “சம்ரஸ்கயா கெசட்டா” என்னும் இதழின் அச்சுப்பிழை திருத்துபவராகத் திருமணத்திற்கு முன் பணிசெய்தவர். கருத்தில் உருப்பெற்ற “தாய்” புதினத்தைக் குடும்பத்தினருக்கு விளக்கிச் சொன்னார்.

அமெரிக்காவில் கார்க்கி இலக்கிய வரலாற்று மேதை எச். ஜி. வெல்ஸ், ஏர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு, மெய்யியல் வல்லுநர் வில்லியம் ஜேம்ஸ் ஆகியோருடைய நட்பைப் பெற்றார். அன்றைய அமெரிக்கா, பிரிட்டிஷ் மேலாட்சியை எதிர்த்துக் காலனி அமைப்பு முறையிலிருந்து விடுபட்ட பின்னர், அடிமை முறையை எதிர்த்து வெற்றிகண்ட பின்னணியில், மக்கள் முற்போக்கு விடுதலை இயக்கங்களையும் போராட்டங்களையும் ஆதரித்தனர். பணி முடித்து கார்க்கி நாடு திரும்பினார். ஓய்வெடுக்க மனைவியுடன் கேப்ரி (இத்தாலி) சென்றார்.

1906 ஆம் ஆண்டு டிசம்பரில் நியூயார்க்கிலிருந்து வெளியாகும் “ஆப்பிள்டன்” இதழில் தாய் மூதற்பகுதியின் முன்பாகமும் 1907ஆம் ஆண்டு தாய் முழுதும் வெளிவந்தன. கார்க்கியின் “தாய்” முதலில் வெளிவந்தது அமெரிக்காவில்தான். ரஷ்ய முற்போக்காளர்கள் ஆர்வத்துடன் வரவேற்றனர். லெனின் உறங்கிக்கிடக்கும் கோடானுகோடி உழைப்பாளிகளைத் தட்டி எழுப்பி ஆர்வவமும் வர்க்க உணர்வூட்டிப் போராட்டத்தில் தம்மையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல்படைத்தது தாய் என்று சொல்லிப் பாராட்டினார். உண்மையில் தாய் இந்தப் பணியை மூன்று தலைமுறைகளாகத் தொடர்ந்து செவ்வனே செய்து வந்துள்ளது.

மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் 1962 ஆம் ஆண்டில் கார்க்கியின் படைப்புகளைப் பத்துப் பகுதிகளாக ஆங்கிலத்தில் வெளியிட்டது.

கார்க்கியின் “தாய்” போல, கோடிக்கணக்கான மக்களை விழிப்படையச் செய்த நூல்கள் இவ்வுலகில் சிலவே. ரஷ்ய மொழியில் மட்டும் இருநூற்றுக்கு மேற்பட்ட பதிப்புகள் வெளிவந்துள்ளன. வேற்று மொழிகள் 127 மொழிகளில் நூற்றுக்கணக்கான பதிப்புகள் வந்துள்ளன. இவ்விவரமே “தாய்” சிறப்பை எடுத்துச் சொல்லப் போதுமானது.

தமிழ் மொழியில் முற்போக்கு இலக்கிய முன்னோடிகளில் ஒருவர் தெர்.மு.சி. ரகுநாதன். இவரே “தாய்” புதினத்தைத் தமிழில் ஆக்கியுள்ளார். முதல் பதிப்பை 1975-ஆம் ஆண்டு மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்டது. மூன்றாம் பதிப்பை 1987-ல் ராதுகா பதிப்பகம் வெளியிட்டது.

1990-க்குப் பிறகு சோவியத் நாடும் கிழக்கு ஐரோப்பிய மக்கள் ஜனநாயக சோசலிச நாடுகளும் சிதறிப்போன பின்னணியில் புதிய பொருளாதாரக் கொள்கையான உலகமயமாதல், தாராளமயமாதல், தனியார்மயமாதல் - கடுமையாக இந்நாட்டில் பின்பற்றப்படும் வேளையில் மீண்டும் “தாய்” வேண்டப்படுகிறாள்.

வழக்கம்போல் நல்லது பேணும் தமிழ் மக்கள் ஆதரவு உறுதி என்னும் நம்பிக்கையில் - எதிர்பார்ப்பில் - பெருமிதத்தில் நியூ செஞ்சுரி நூல் வெளியீட்டகம் தன்னுடைய முதல் பதிப்பாகத் “தாய்” புதினத்தை வெளியிடுகிறது. மக்சீம் கார்க்கியின் பணியையும் பெருமையையும் வாசகர்களுக்கு நினைவூட்டக் கார்க்கியின், வாழ்க்கைக் குறிப்பும் “தாய்” சுருக்கமும் இணைக்கப் பட்டுள்ளன.

- பதிப்பகத்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்/பதிப்புரை&oldid=1545463" இலிருந்து மீள்விக்கப்பட்டது