தாவிப் பாயும் தங்கக் குதிரை/11
வெற்றிவேலனும் அவனுடன் சென்ற வீரர்களும், வழியில் பல இக்கட்டுகளுக்கு ஆளாகிக் கடைசியில் தேன்கதலி நாட்டை அடைந்தார்கள். அந்த ஊர்க் கடற்கரையில் அவர்கள் இறங்கியவுடனேயே நேரே அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். தேன்கதலி நாட்டை அப்பொழுது வில்லழகனின் கொள்ளுப் பேரனாகிய ஓர் அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஒரு பெண்னும் பிள்ளையும் இருந்தார்கள். பெண், பருவ வயதை யடைந்திருந்தாள்; அவள் பெண்களுக்குரிய பல கலைகளையும் அறிந்திருந்ததோடு, மாய மந்திர வித்தையும் தெரிந்து வைத்திருந்தாள். பையனோ அப்போது ஒரு சிறுவனாகவே யிருந்தான்.
வெற்றிவேலனும் மற்ற வீரர்களும் அரண்மனை போய்ச் சேர்ந்தபொழுது, அரச சபையில் சிங்காதனத்தின்மீது அமர்ந்து கொண்டிருந்தான், தேன்கதலி நாட்டின் அரசன். அவனுக்கு இருபுறத்திலும் அவன் மகள் மேகமாலையும் மகன் கார்வண்ணனும் அமர்ந்திருந்தார்கள். வெற்றிவேலனும் வீரர்களும் எதிரில் அழைத்து வரப்பெற்றதும், அவர்களை நோக்கித் தேன்கதலி நாட்டரசன், அவர்கள் எதற்காக அங்கு வந்தார்கள் என்று கேட்டான்.
“அசே, தங்கள் நாட்டில் தங்கக் குதிரை ஒன்று இருப்பதாகக் கேள்விப்பட்டோம்.அதை எங்கள் நாட்டுக்கு எடுத்துச் செல்லவே இங்கு வந்தோம்” என்று உறுதி குன்றாத குரலில் மறுமொழி கூறினான் வெற்றிவேலன்.
“வீரனே, தேவர்களே நெருங்கப் பயப்படுவார்கள் அந்தத் தங்கக் குதிரையை இன்ப வள நாட்டிலிருந்து எங்கள் பாட்டனை ஏற்றிக் கொண்டு வந்தது அந்தத் தங்கக் குதிரை. அதை அடைபவன் உண்மையிலேயே பெரும் வீரனாக இருக்க வேண்டும். நீங்கள் அதை அடைவது அரிது என்றே நான் நினைக்கிறேன்” என்றான் அரசன்.
“அரசே, தங்கக் குதிரையில்லாமல் தாயகம் செல்வதில்லை” என்ற உறுதியான முடிவுடன் வந்திருக்கிறேன். எப்படியும் அதை அடைந்தே தீருவேன்” என்றான் வெற்றிவேலன்.
“வீர இளைஞனே, உன் உறுதியை நான் போற்றுகிறேன். ஆனால், அது வீரம் ஒன்றினால் மட்டும் அடையக் கூடியதல்ல. நான் சொல்லும் மூன்று அருஞ்செயல்களைச் செய்து முடித்தால்தான் அந்தப் பெருமைக்குரிய தங்கக் குதிரை கிடைக்கும்” என்றான் அரசன்.