தாவிப் பாயும் தங்கக் குதிரை/15
தேன்கதலி நாட்டின் அரசர் வெற்றிவேலனின் திறமையை மனத்திற்குள் பாராட்டினார். ஆனால், தன் நாட்டில் ஒரு பெருஞ் செல்வமாய் இருக்கும் தங்கக் குதிரையை இந்த வெற்றிவேலன் கொண்டு போய்விடுவானோ என்ற அச்சம் அவர் மனத்தில் குடிபுகுந்து விட்டது. முந்தியநாள் வரையில் அவர் அதைப் பற்றிக் கவலைப்படாமலே இருந்தார். இப்போது அந்தக் கவலை ஏற்பட்டுவிட்டது. இருந்தாலும் தன் பீதியை வெளிப்படுத்திக் கொள்ளாமல், வெற்றி வேலனைப் பாராட்டிப் பேசினார்.
“இளவரசனே! உன்வீரத்தையும்அறிவுத் திறமையையும் அஞ்சா நெஞ்சத்தையும் பாராட்டுகிறேன். நீ தங்கக் குதிரையை அடைவதற்கு இன்னும் ஒரு செயல் செய்யவேண்டியதிருக்கினது. அதை நாளைக் காலையில் செய்து முடித்தாயானால், தங்கக் குதிரையை மட்டுமல்ல என் மகளையும் உனக்கே கட்டித் தருகிறேன்!” என்று கூறினார். அவர் இப்படி யெல்லாம் கூற வேண்டும் என்று நினைக்கவேயில்லை. ஆனால், வெற்றிவேலனின் கள்ளமற்ற இனிய முகத்தைப் பார்த்தவுடன் அவருக்கு மனத்தில் ஓர் அன்பு சுரந்துவிட்டது. இரண்டு போட்டிகளில் அவன் வெற்றி பெற்றுவிட்டான் என்று கண்டபோதே அவனை ஒரு மாவீரனாக அவர் மனம் மதிக்கத் தொடங்கிவிட்டது. அதனால்தான் இப்படிப்பட்ட சொற்கள் அவர் வாயிலிருந்து புறப்பட்டன.
வெற்றிவேலன் மகிழ்ச்சியுடன் தன் தோழர்களை அழைத்துக்கொண்டு மரக்கலத்திற்குத் திரும்பினான்.
மறுநாள் காலையில் மக்கள் கூட்டம் நான்கு காணி நிலத்தைச் சுற்றிக்கூடவில்லை. அந்த நான்கு காணி நிலம் சுடுகாடுபோல் காட்சியளித்தது. மாயப் பாம்புப் பற்களிலிருந்து முளைத்த வீரர்களின் எலும்புகளும் தோலும் நினமும் இரத்தமுமாகக் காட்சியளித்த அந்த நிலத்தில் கழுகுகளும் பருந்துகளும் காக்கைகளும் தான் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.
தங்கக் குதிரை இருந்த மரத்தைச் சுற்றித் தான் மக்கள் கூடி நின்றார்கள். அங்குக்காவல் நின்ற வேதாளம், என்றுமில்லாதபடி அன்று மக்கள் தன்னைச் சுற்றிக் கூடியிருப்பதைக் கண்டு பெருங்கோபம் கொண்டது. யாரும் மரத்தடியை நெருங்காதபடி அது அவர்களைப் பயமுறுத்தி விரட்டிக்கொண்டு நின்றது. எல்லோரும் தூரத்திலேயே நின்று கொண்டிருந்தார்கள்.
அரசரும் அவர் மகள் மேகமாலையும் மகன் கார்வண்ணனும் அந்த மரத்தடிக்குவந்து அங்கிருந்த மேடை ஒன்றின்மீது அமர்ந்தார்கள். வேதாளம் அவர்கள் எதிரில் வந்து நின்று வணங்கியது.
“ஏ, வேதாளமே! உன்னுடன் சண்டை செய்ய ஓர் இளம் வீரன் வருகிறான். எச்சரிக்கை!” என்று கூறினார் அரசர்.
வேதாளம் இதைக் கேட்டவுடன் ஆங்காரத்துடன் எழுந்து தங்கக் குதிரையின் அருகிலே போய் நின்றுகொண்டது.
சிறிதுநேரத்தில் வெற்றிவேலன் அங்கு வந்து சேர்ந்தான். கூடவந்த ஐம்பது வீரர்களையும் துரத்திலேயே நிற்க வைத்துவிட்டு அவன் தன்னந்தனியாக வேதாளத்தை நோக்கிச் சென்றான். வேதாளம் ஆவேசமாக அவனை நோக்கிப் பாய்ந்தோடி வந்தது. உடனே வெற்றிவேலன் தன் கையில் இருந்த ஒரு மாயப் பொடியை அதன் முகத்தில் தூவினான். அந்த வேதாளம் அந்த இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்தது. உடனே அவன் தன் வாளினால் அதன் தலையை வெட்டி உடலைக் கூறுகூறாகத் துண்டித்துப் போட்டான். கூடி நின்ற மக்கள் குதுகலத்துடன் ஆரவாரித்தார்கள். அரசரும் அவனுடைய திறமையைப் பாராட்டினார்.