தாவிப் பாயும் தங்கக் குதிரை/2

மாயக்காரி வசீகர சுந்தரி

இன்பவள நாட்டின் அரசர், அரசி முகிலியைத் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கை நடத்தத் தொடங்கியபோது, அவள் பிரிவைப் பொறுத்துக் கொண்டார். ஆனால் மீண்டும் மீண்டும் ஒவ்வோர் ஆண்டும் அவள் பிரிந்து சென்றதை அவரால் பொறுக்க முடியவில்லை. அதுவே நாளடைவில் அவள்மீது வெறுப்பாக மாறிவிட்டது.

அந்த ஊரில் வசீகர சுந்தரி என்று ஒருத்தி இருந்தாள். அவள் அந்த நாட்டைச் சேர்ந்தவள் அல்ல. வடக்கே மிகத் தொலைவில் இருக்கும் ஒரு நாட்டிலிருந்து வந்தவள். அவள் மிக அழகானவள். அரசர் உலாவரும்போது ஒரு நாள் வசீகர சுந்தரியைக் கண்டுவிட்டார். அவள் அழகு அவரை மயக்கமடையச் செய்தது. வசீகர சுந்தரி சாதாரணப் பெண் அல்ல. அவள் ஒரு மாயக்காரி. அரசர் தன்னை விரும்புகிறார் என்று தெரிந்து கொண்டவுடன் அவள் அவரைத் திருமணம் செய்துகொண்டுவிடவேண்டும் என்று திட்டமிட்டாள். அரசி முகிலி இல்லாத நாட்களில் அடிக்கடி அரண்மனைக்குப் போய் வந்தாள். தன்னுடைய மாயவித்தைகளைக் காட்டி அரசரை மயக்கினாள். கடைசியில் அரசி முகிலி இல்லாதபோது, அரசர் அவளை மறுமணம் செய்து கொண்டுவிட்டார். மாயக்காரியை அரசர் மணம் புரிந்தது, அந்த நாட்டு மக்களையெல்லாம் வெறுப்படையச் செய்தது.




எங்கிருந்தோ வந்த அவள் இன்பவள நாட்டின் அரசியாகி விட்டாள். அரசியானவுடன் அவள் அரண்மனையிலேயே தங்கினாள். அவளுக்கு இளவரசன் வில்லழகனையும், இளவரசி பொன்னழகியையும் பார்க்கவே வெறுப்பாயிருந்தது. அவர்கள் நல்ல பிள்ளைகளாய் இருப்பதைக் கண்டு அவள் கோபித்துக் கொண்டாள். அவர்கள் அழகாய் இருப்பதைக் கண்டு அவள் அருவெறுப்புக் கொண்டாள். எப்போதும் அவர்கள் உண்மை பேசுவதைக் கண்டு எரிந்து விழுந்தாள். அவர்கள் சிரித்து விளையாடுவதைப் பார்த்து அவளால் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை.

அவர்களை அடித்து உதைத்து அடிமைகளைப்போல் வேலை வாங்கினாள். கடுகடுத்துப் பேசி அவர்களைக் கண்கலங்க வைத்தாள். கடைசியில் அவர்கள் உடுத்தியிருந்த பட்டாடைகளைப் பறித்துக் கொண்டு அரண்மனையை விட்டே விரட்டிவிட்டாள்.

பஞ்சம், பசி, பட்டினி

தன்னந்தனியாகச் சென்று கொண்டிருக்கும் அந்தச் சின்னஞ்சிறு பிள்ளைகளை ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஓர் இடையன் கண்டான். அவர்கள் மேல் இரக்கம்கொண்டு, அவன் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். கஞ்சியும் கூழும் ஊற்றி அவர்களை வளர்த்து வந்தான். அன்புள்ளங் கொண்ட அந்த இடையனுக்கு ஆடுமேய்க்கும் வேலையில் அவர்கள் ஒத்தாசையாக இருந்தார்கள்.

ஒரு மலைக்குன்றின் அடிவாரத்தில் அவர்கள் ஆடுமேய்க்கும் பச்சைப் புல்வெளியிருந்தது. ஆட்டுக் குட்டிகளோடு போட்டி போட்டுக்கொண்டு கள்ளமில்லாத உள்ளங் கொண்ட அந்தச் சிறு பிள்ளைகள் ஓடியாடி விளையாடுவார்கள். கஞ்சி குடித்தாலும் அவர்கள் நெஞ்சில் இன்பம் நிறைந்திருந்தது. மாயக்காரியின் கொடுமைகள் இல்லாத அந்த மலையடிவாரம் அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் இடமாக இருந்தது.

அம்மா அருகில் இல்லையே என்ற ஒரு துன்பத்தைத் தவிர வேறு எவ்விதத் துன்பமும் இல்லாமல் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள்.

நாட்டை விட்டுப்போன அரசி முகிலி, திரும்பி வரவேயில்லை. தானிருக்க வேண்டிய இடத்தில் ஒரு மாயக்காரி இருக்கிறாள் என்று கேள்விப்பட்டுத்தான் அவள் திரும்பி வரவில்லை என்று மக்கள் பேசிக் கொண்டார்கள்.

காலம் மாறியது. கார் காலம் வந்தது. ஆனால், கார்மேகங்கள் வானில் கூடவில்லை. கோடை காலத்தினும் கொடுமையாக வெயிலடித்தது. நாளாக நாளாக வெயிலின் கடுமை ஏறிக்கொண்டு போனதே தவிர ஒரு துளி மழைகூட வரவில்லை, அரசி முகிலிக்குக் கோபம் வந்து விட்டதால் தான் மேகங்கள் கூடவில்லை என்று மக்கள் பேசிக் கொண்டார்கள்.

பஞ்சம் நீடித்தது. வயல்கள் விளையவில்லை. மரங்களும் செடி கொடிகளும் கருகிப் போயின. உணவு ஒன்றும் இல்லாமல் மக்கள் வாடினார்கள். பட்டினிச் சாவு அதிகரித்தது.

தெய்வங்களுக்கு ஏதோ கோபம் ஏற்பட்டு விட்டது என்று அரசன் நினைத்தான். பக்கத்து நாட்டிலே ஒரு பெரிய மடாதிபதி இருந்தார். அந்த மடாதிபதி தெய்வங்களோடு அடிக்கடி பேசுவார் என்று அரசன் கேள்விப்பட்டிருந்தான். அவருக்கு முன் காலத்தையும் பின் காலத்தையும் அறியக்கூடிய சக்தி இருந்ததென்று அரசனிடம் பலர் கூறியிருந்தார்கள். ஆகவே, அரசன் தன் அதிகாரிகள் சிலரை அந்த மடாதிபதியிடம் அனுப்பினான். தன் நாட்டில் மழை பொய்த்துப் போனதற்குக் காரணம் என்ன என்றும், அதற்கு மாற்றுக் கழுவாய் என்ன என்றும், கேட்டறிந்து வரும்படி அவன் அந்த அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டான்.

இதையறிந்த வசீகர சுந்தரி ஒரு தந்திரம் செய்தாள். மடாதிபதியிடம் அனுப்பப்பட்ட அதிகாரிகளை அவள் தனியாகச் சந்தித்தாள். அவர்களுக்கு நிறையப் பொன்னும் பொருளும் தருவதாகச் சொல்லி, அவர்களை மடாதிபதியிடம் போகாமல் இருக்கும்படி கேட்டுக் கொண்டாள். அவர்கள் அவள் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டார்கள். அவர்கள் வேறு எங்காவது போய்த் திரும்பி வந்து, மழை பெய்யாமல் இருப்பதற்குக் காரணம் வில்லழகனும் பொன்னழகியும் உயிருடன் இருப்பதுதான் என்றும், அவர்களைக் கொன்றால், தெய்வங்களின் கோபம் தீர்ந்து மழை பொழியும் என்றும் மடாதிபதி கூறியதாகக் கூறவேண்டும் என்றும் அவள் தன் திட்டத்தை விளக்கினாள்.

ஆசைபிடித்த அந்த அதிகாரிகள் அவ்வாறே செய்தார்கள். அரசாங்கச் செலவில் உல்லாசமாகப் பல ஊர்களில் சுற்றித் திரிந்து விட்டுத் திரும்பி வந்தார்கள். வில்லழகனையும் பொன்னழகியையும் வெட்டிப் பலியிட்டால் தான் தெய்வ கோபம் தீர்ந்து, மழை பொழியும் என்று மடாதிபதி கூறியதாகச் சொன்னார்கள்.

மூட நம்பிக்கையுடைய அந்த அரசன் அவர்கள் கூறியதை உண்மை என்று நம்பினான். ஆனால், தன்மக்களைத் தானே எப்படிக் கொன்று பலியிடுவது என்று தயங்கினான். ஆனால் வசீகர சுந்தரி அவனுடன் பல விதமாய்ப் பேசி அந்தச் சிறு பிள்ளைகளைத் தெய்வபலி கொடுப்பதற்கு அரசன் ஒப்புக் கொள்ளும்படி செய்து விட்டாள்.