தியாக பூமி/இளவேனில்/முல்லைச் சிரிப்பு
முல்லைச் சிரிப்பு
"நான் தான் சாருமதி" என்று சாரு சொன்னபோது அவளுடைய முகத்தில் குறுநகை தவழ்ந்தது. அதைப் பார்த்த உமாராணியின் முகத்திலும், சற்று முன்பு தோன்றிய சோகக் குறி மறைந்து புன்னகை மலர்ந்தது.
"அடி சமர்த்து! இங்கே வா! எல்லாரும் கிட்ட வாங்கோ!" என்றாள் உமா.
குழந்தைகள் எல்லாம் அவள் அருகில் வந்து சூழ்ந்து கொண்டன. அவர்களில் ஒரு பெண் "மாமி! உங்க வீட்டு தர்வான் இருக்கானே அவன் வந்து... எங்க மேலே..." என்று புகார் சொல்ல ஆரம்பித்தாள். சாரு உடனே அவளுடைய வாயைப் பொத்தினாள்!
"ஏம்மா அவளுடைய வாயைப் பொத்தறே! அவள் சொல்ல வந்ததைச் சொல்லட்டுமே?" என்றாள் உமா.
அதற்குச் சாரு, "இல்லை, மாமி! உங்க தர்வான் விளையாட்டுக் கோசறம் எங்க மேலே நாயை அவிழ்த்து விடறேன்னு சொன்னான். அதைப் போய் லலிதா உங்க கிட்டப் புகார் சொல்றாளே, அது சரியா?" என்றாள். இப்படிச் சொல்லிவிட்டுச் சாரு கடைக் கண்ணால் தர்வானைப் பார்த்தாள். அந்த தர்வானுடைய கடுவம் பூனை முகத்தில் கூட அப்போது புன்னகை தோன்றியது.
உமா அவனைப் பார்த்து, "ஏண்டா! குழந்தைகள் மேலேயா நாயை அவிழ்த்துவிடறேன்னு சொன்னே? சீ, போ!" என்றாள். தர்வான் வெட்கித் தலை குனிந்து கொண்டு கீழே சென்றான்.
பிறகு உமா, "எல்லாரும் எங்கேயம்மா வந்தேள்?" என்று கேட்டாள்.
அதற்கு லலிதா, "மாமி! எங்கள் பள்ளிக்கூடத்து பில்டிங் பண்டுக்காக ஒரு டிராமா போடப் போகிறோம். அதுக்கு டிக்கெட் இரண்டு ரூபாய், ஒரு ரூபாய், அரை ரூபாயில் இருக்கு. உங்களுக்கு எது வேணுமோ அது வாங்கிக்குங்கோ" என்றாள்.
அப்போது சாரு, "ஆனா, உங்களைப் பார்த்தால், நீங்க ஓர் இரண்டு ரூபாய் டிக்கெட்டுதான் வாங்கிக்குவேள் என்று எனக்குத் தோணுகிறது" என்றாள்.
உமா சாருவைப் பார்த்து, விஷமமாக 'அடே அப்பா! இரண்டு ரூபாய்க்கா டிக்கெட் வாங்கணும்? அப்படி என்ன அதிசயமான டிராமா போடப்போறேள்?" என்று கேட்டாள்.
சாரு, "கிருஷ்ண லீலா போடப் போறோம். நான் தான் கிருஷ்ண வேஷம். இப்ப என்னமோ போலே இருக்கேனேன்னு நினைக்காதீங்கோ. வேஷம் போட்டுண்டு வந்தேன்னா நீங்க பிரமிச்சுப் போயிடுவேள்" என்றாள்.
உமாவுக்குச் சிரிப்பு வந்தது. ஆனால், சிரித்தால் அந்தக் குழந்தை, பரிகாசம் என்று நினைத்துக் கொண்டு வருத்தப்படப் போகிறதென்று எண்ணிச் சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.
"இதுவரையில் எத்தனை டிக்கெட் வித்திருக்கேள்?" என்று கேட்டாள்.
சாரு, "ஒண்ணுகூட விக்கலை மாமி! எல்லாரும் ஏதாவது வேலையிருக்கு, கீலையிருக்குன்னு சாக்குப் போக்குச் சொல்றா. குழந்தைகள் டிராமாதானேன்னு அவாளுக்கு அலட்சியம் போலேயிருக்கு" என்றாள். இப்படிச் சொன்னபோது சாருவின் குழந்தை உள்ளத்தில் உண்மையாகவே துக்கம் பொங்கி வந்தது. அவள் கண்ணில் ஜலம் துளித்தது.
உமாவுக்கு இதைப் பார்க்கச் சகிக்கவில்லை. உடனே குழந்தையை வாரி எடுத்துக் கொண்டு முத்தமிட்டாள்.
"அவா கிடக்கா, நீ வருத்தப்படாதே, கண்ணு! பெரியவாள்ளாம் சுத்த அசடுகள். நீங்க தான் சமத்து. உங்ககிட்ட இருக்கிற டிக்கெட்டையெல்லாம் கொடுத்துடுங்கோ. நானே வாங்கிக்கிறேன். நீங்க இந்த வெயில்லே அலையாமே வீட்டுக்குப் போங்க" என்றாள். உடனே சாருவின் முகத்தில் மறுபடியும் மலர்ச்சி உண்டாயிற்று. மற்றக் குழந்தைகளோ உமா சொன்னதைக் கேட்டுப் பிரமித்துப் போனார்கள். லலிதாவுக்கு இன்னது செய்வதென்று தெரியவில்லை. அவளிடம் இருந்த டிக்கெட் புத்தகத்தை உமா வாங்கி பார்த்தாள். அதில் பல ரகங்களில் 20-டிக்கெட்டுகள் இருந்தன. மொத்தம் முப்பது ரூபாய் விலையாயிற்று.
உமா முப்பது ரூபாய் நோட்டு எடுத்து லலிதாவிடம் கொடுத்து, "பணத்தை ஜாக்கிரதையாய் எடுத்துண்டு போவயோன்னோ?" என்றாள்.
"ஓ! பேஷாய் எடுத்துண்டு போவோம்" என்றாள் லலிதா.
சாரு விஷமச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே உமாவைப் பார்த்து, "மாமி! உங்களை ஒன்று கேட்கட்டுமா?" என்றாள்.
"பேஷாய்க் கேளடி அம்மா!" என்றாள் உமா.
"நீங்க இருபது டிக்கெட் வாங்கிண்டிருக்கேளே இருபது ஸீட்டிலும் உட்காருவேளா?" என்று கேட்டாள்.
உமாராணி கலீரென்று சிரித்தாள்.
"இல்லேடி, குழந்தை! இருபது ஸீட்டிலும் உட்கார மாட்டேன். ஒரு ஸீட்டிலே தான் உட்காருவேன்."
"அப்படின்னா, எங்க பள்ளிக்கூடத்துக்கு ஒத்தாசை செய்யணும்னுட்டுத்தானே வாங்கிண்டேள்? ரொம்ப ரொம்ப தாங்ஸ்" என்றாள்.
லலிதா, "சரி! வாங்கடி போகலாம்" என்று அழைத்தாள். குழந்தைகள் எல்லாரும் கிளம்பினார்கள். சாருவும் கிளம்பினாள். ஆனால் அவள் நாலடி வைத்ததும் மறுபடி திரும்பிப் பார்த்து, "மாமி, நீங்க எங்க டிராமாவுக்கு மட்டும் கட்டாயம் வரணும். நீங்க வர்றேளான்னு பார்த்துண்டேயிருப்பேன்" என்றாள்.
உமா, "கட்டாயம் வர்றேண்டி, குழந்தை" என்றாள்.
குழந்தைகள் கீழே இறங்கிப் போனபோது, அங்கே தர்வான் நின்று கொண்டிருந்தான். சாரு, அவனை பார்த்து, "தர்வான்! நீ நல்ல தர்வான் தானே! எங்க மேலே நாயை அவிழ்த்து விடறேன்னு சொன்னயே, அந்த நாயைக் காட்டு பார்க்கலாம்!" என்றான்.
"போங்க, போங்க. இங்கே நாயும் இல்லை. ஒண்ணும் இல்லை" என்றான் தர்வான்.
அந்தச் சமயம் பார்த்து, ஒரு சின்னஞ் சிறு நாய் அங்கே ஓடி வந்தது. "பார்த்தயா, தர்வான்! பொய் தானே சொன்னே?" என்று சாரு சொல்லி, கீழே உட்கார்ந்து அந்த நாயைத் தடவிக் கொடுக்கத் தொடங்கினாள். நாய் சாருவின் முகத்தைப் பார்த்துக்கொண்டு நாக்கை நீட்டிற்று.
"என்ன நாக்கை நீட்டறே? உன் நாக்குத்தான் ரொம்ப நீளமோ?" என்று சாரு தன்னுடைய நாக்கை நீட்டினாள்.
இதற்குள் மற்றக் குழந்தைகள் கொஞ்ச தூரம் போய் விட்டார்கள். லலிதா திரும்பிப் பார்த்து, "சாரு, நீ வர்றயா இல்லையா? நாங்கள்ளாம் போறோம்" என்றாள்.
சாரு எழுந்து ஓடினாள். நாயும் பின்னோடு ஓடிற்று. தர்வான் அதை, "ஜில்லி! ஜில்லி!" என்று கூப்பிட்டான்.
மற்றக் குழந்தைகளுடன் சேர்ந்துகொண்டே சாரு "யமுனா, அந்த ஜில்லியின் மூஞ்சியைப் பார்த்தா, நம்ம பள்ளிக்கூடத்து ஹெட் மிஸ்ட்ரஸ் மூஞ்சி மாதிரியேயில்லை?" என்றாள். உடனே, எல்லாக் குழந்தைகளும் கலகலவென்று சிரித்தன. அந்தச் சிரிப்பின் சத்தம், மேலே ஹாலிலிருந்து ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த உமாராணியின் காதில் இனிமையாக ஒலித்தது.