தியாக பூமி/இளவேனில்/ராஜி யோசனை
ராஜி யோசனை
சென்னைப்பட்டணம் 'கொல்'லென்றிருந்தது. உமா ராணியின் புருஷன் என்று சொல்லிக்கொண்டு ஒருவன் வந்திருக்கிறானாம் என்றும், அவன் உமாராணியின் பேரில் தாம்பத்திய உரிமைக்கு வழக்குத் தொடுக்கப் போகிறானாம் என்றும் செய்தி பரவிற்று. எங்கே பார்த்தாலும் ஜனங்கள் இதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். உமாராணியின் பூர்வ ஜீவியத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதில் ஏற்கெனவே ரொம்பப் பேருக்கு ஆவல் இருந்தது. அவளுடைய வாழ்க்கையில் ஏதோ மர்மம் இருக்கிறதென்று எல்லாருமே நினைத்தார்கள். அது என்னவாயிருக்கலாமென்று பலர் பலவிதமாய் ஊகம் செய்து கொண்டிருந்தார்கள். இப்போது உண்மை வெளியாவதற்கு ஹேது உண்டாகவே, நகரில் பிரமாதமான பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
கடைசியில், ஒரு நாள், பத்திரிகைகளில், கேஸ் தாக்கலாகிவிட்டது என்ற விவரம் வெளியாயிற்று. அந்தச் செய்தியைப் பெரிய தலைப்புக்களுடன் முக்கியமான இடத்தில் பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன:
கலியுக அதிசயம்!
திடீரென்று வந்தவர் தாம்பத்ய உரிமை கோருகிறார்! உமாராணியின் மேல் வழக்கு!
என்னும் இது போன்ற தலைப்புகள் பத்திரிகைகளின் இடத்தை அடைத்தன. 'போஸ்டர்' விளம்பரங்களிலும் இந்தக் கேஸ் விவரந்தான் காணப்பட்டது.
மறுநாள் காலையில், ஆபத்சகாயமய்யரின் பாரியை, கையில் ஒரு தமிழ்ப் பத்திரிகையுடன் அவருடைய ஆபீஸ் அறைக்கு வந்து சேர்ந்தாள்.
"ஏன்னா? இதென்ன அவமானம்? உங்க உமாராணி மேலே ஏதோ கேஸாமே?" என்றாள்.
"அதிலே உனக்கு என்ன வந்தது அவமானம்?" என்று வக்கீல் கேட்டார்.
"நீங்க அங்கே போயிண்டு வந்திண்டு இருக்கேளேன்னுதான்; இல்லாட்டா, ஊரிலே எந்த நாய் எப்படிப் போனா எனக்கென்ன? ஆமாம்; என்னமோ தாம்பத்திய உரிமைக் கேஸுன்னு போட்டிருக்கே, அப்படின்னா என்ன?"
"அப்படின்னா, 'Suit for Restitution of Conjugal Rights' என்று அர்த்தம்."
"போருமே பரிகாசம்! இப்படியெல்லாம் நீங்க கிருதக்காப் பேசறதைக் கேட்டாத்தான், எனக்கு எங்கேயாவது ஓடிப் போயிடலாம்னு தோணறது."
"நீ இப்பச் சொல்றயோல்லியோ? அந்த மாதிரி நிஜமாகவே ஒரு மனுஷனுக்கு அதிர்ஷ்டம் வந்து அவன் பெண்டாட்டி அவனை விட்டு ஓடிப்போயிடறாள்னு வச்சுக்கோ. அந்த மடையன் அது தனக்கு அதிர்ஷ்டம்னு தெரிஞ்சுக்காமே, அவளைத் தன்னோடு வந்து இருக்கச் செய்யணும்னு கோர்ட்டிலே கேஸ் போட்டான்னா, அதுக்குத்தான் தாம்பத்திய் உரிமை வழக்குன்னு சொல்றது."
"இதென்ன வெட்கக்கேடு? இப்படிக்கூட ஒரு கேஸ் போடறதுண்டா, என்ன?"
"பின்னே சட்டம், கோர்ட்டு எல்லாம் என்னத்துக்காக இருக்குன்னு நினைச்சுண்டிருக்கே? வக்கீல் ஆம்படையாளாயிருந்துண்டு இன்னும் இது தெரிஞ்சுக்காமே இருக்கயே?" "எனக்குத் தெரிஞ்ச மட்டும் போதும். உலகத்தைப் பத்தித் தெரிஞ்சுக்கத் தெரிஞ்சுக்க ஒண்ணும் தெரியாமலேயிருந்தாத் தேவலைன்னு தோணறது. போனாப் போகட்டும். அந்த உமாராணிக்கு நீங்க பாக்கி எல்லாத்துக்கும் வக்கீலா இருக்கறது போரும். இந்தக் கேஸுக்கு நீங்க போக வேண்டாம். எனக்கு அவமானமாயிருக்கு."
"சரியாப் போச்சு! கோர்ட்டிலே எல்லாரும் என்னைப் பார்த்து இந்தக் கேஸ் வந்ததுக்காக அசூயைப் பட்டிண்டிருக்கா, 'உன் பாடு யோகம்' என்று சொல்லிச் சொல்லி வயத்தெரிச்சல் படறா. நீயானா இப்படிச் சொல்றே. இந்தக் கேஸ் மட்டும் நடந்தா, 5000 ரூபாய்க்குக் குறையாமே வரும்படி வரும். கேஸிலே ஜயிச்சுட்டேனோ அப்புறம் அட்வகேட்-ஜெனரலுக்கு அடுத்தபடி நான் தான் பெரிய வக்கீல் இந்த ஊரிலே. கேஸை ஒப்புக் கொள்ளட்டுமா, வேண்டாமா சொல்லு!"
"அதென்னமோ, நீங்களும் உலக கோர்ட்டும் எப்படியாவது போங்கோ எனக்கு ஒண்ணும் புடிக்கலை" என்று சொல்லிவிட்டு வக்கீலின் மனைவி எழுந்து உள்ளே சென்றாள்.
ஆபத்சகாயமய்யர் தம்முடைய முடிவான அபிப்பிராயத்தைத் தெரிவிப்பதற்காக அன்று உமாராணியின் பங்களாவுக்குப் போனார். அவரைக் கண்டதும் உமாராணி, "என்ன வக்கீல் ஸார்! சட்டம் என்ன சொல்றது?" என்று கேட்டாள்.
"பார்த்தேன், அம்மா! ஜயிக்கிறதற்கு சான்ஸு இல்லைன்னு சொல்றதற்கில்லை. இந்த விஷயத்திலே சட்டம் சுவர் மேல் பூனை மாதிரி இருக்கு. இந்தப் பக்கம் குதிச்சாலும் குதிக்கும்; அந்தப் பக்கம் குதிச்சாலும் குதிக்கும். கடைசியிலே, ஜட்ஜினுடைய அபிப்பிராயத்தைப் பொறுத்தது."
"அவ்வளவு இடமிருந்தால் போதும். கேஸை நடத்தறதுக்கு வேண்டிய ஏற்பாடு பண்ணுங்கள். கேஸ் நமக்கு ஜயிக்கவே ஜயிக்காதுன்னாக்கூட, நடத்திப் பார்க்கறதுன்னு நான் தீர்மானிச்சுட்டேன்" என்று உமாராணி சொன்னாள்.
அப்போது வக்கீல் சிறிது தயக்கத்துடன், "ஒரு விஷயம் சொல்லணும்னு நினைக்கிறேன். அது என்னுடைய கடமை; நீங்க சொல்லச் சொன்னா, சொல்றேன்" என்றார்.
"பேஷாய்ச் சொல்லுங்கள், ஸார்! எப்பேர்ப்பட்ட சமாசாரமாயிருந்தாலும் என்னை ஒண்ணும் செய்யாது. என் நெஞ்சு அப்படிக் கல்லாகிவிட்டது" என்றாள் உமா.
"ஊரெல்லாம் அதுக்குள்ளே இந்தக் கேஸைப் பத்தியே பேச்சாயிருக்கு. கேஸ் ஆரம்பிச்சாயிடுத்துன்னா, பேச்சு இன்னும் ரொம்ப அதிகமாய்ப் போய்விடும். வெளியிலே நீங்க கிளம்பறதுக்கு முடியாதபடி ஆனாலும் ஆயிடும். நம்ம ஜனங்களின் சுபாவந்தான் உங்களுக்குத் தெரியுமே? இதையெல்லாம் யோசித்தால், ஏதாவது ஒரு விதமாய் ராஜியாய்ப் போயிடறதுதான் நல்லதுன்னு எனக்குத் தோணறது..."
அப்போது உமாவின் முகத்தில் உண்டான மாறுதலைப் பார்த்த வக்கீல், உடனே பரபரப்புடன், "நான் என்னமோ அவரோடு உங்களைப் போயிருக்கச் சொல்றதாக நினைச்சுக்கப்படாது. மிஸ்டர் ஸ்ரீதரனுடைய சுபாவம் எனக்கு இப்போ நன்னாத் தெரிஞ்சு போச்சு. ஏதாவது கொஞ்சம் பணங்கொடுத்தா வாங்கிண்டு போயிடுவார். நீங்க உத்தரவு கொடுத்தேள்னா, நான் போய் அவரைப் பார்த்துப் பேசிவிட்டு வர்றேன்" என்றார். உமா இலேசாகச் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் ஆத்திரமும் அருவருப்பும் கலந்திருந்தன.
"ராஜியாய் போறதா? பணங் கொடுக்கிறதா? என்னத்துக்காகப் பணங்கொடுக்கிறது, வக்கீல் ஸார்! மேலும் மேலும் இவர் பாப கிருத்தியங்களைச் செய்வதற்கா?" என்று உமா கேட்டுவிட்டு ஒரு நிமிஷம் பேசாமல் இருந்தாள்.
"என்மேல் இவர் கேஸ் போடுகிறதாம்! நான் பணங்கொடுத்து ராஜியாய்ப் போகிறதாம்! பேஷ்... ஒரு காலத்தில் இந்த மனுஷன் பேரில் வைத்த ஆசையினால் என் இருதயம் என்னமாய்த் துடித்திருக்கிறது. உங்களுக்குத் தெரியுமா? எத்தனை நாள் இவரை நினைத்து நினைத்து ராப்பகல் தூக்கமில்லாமல் கழித்திருக்கிறேன். தெரியுமா? எவ்வளவு நாள் கண்ணீர்விட்டு அழுதிருக்கிறேன். தெரியுமா? இப்போது கூட..." என்று சொல்ல வந்தவள், திடீரென்று நிறுத்தி, "அதையெல்லாம் பற்றி என்னத்திற்கு இப்போது பேச வேண்டும்? போங்கள், கேஸை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். இனிமே ராஜி கீஜின்னு எங்கிட்ட ஒண்ணும் பேச வேண்டாம்" என்றாள்.
இப்படிச் சொல்லிவிட்டு உமா வேறு பக்கம் திரும்பி, கைகளால் கண்களை மூடிக்கொண்டாள். அவளுடைய மனத்தில் பொங்கிய துக்கத்தை ஒருவாறு அறிந்து கொண்ட ஆபத்சகாயமய்யர், எழுந்திருந்து வெளியே போனார். வாசற்படி வரையில் போனவர் மறுபடியும் திரும்பி வந்து, "இன்னொரு சமாசாரம் சொல்ல மறந்துட்டேன். குழந்தை சாருவைப் பத்தி..." என்றார்.
உமா, கண்ணைத் துடைத்துக் கொண்டு, வக்கீலை நிமிர்ந்து பார்த்து, "என்ன?" என்று கேட்டாள்.
"சம்பு சாஸ்திரியும் சாருவும் இப்போது தஞ்சாவூர் ஜில்லாவிலே நெடுங்கரை என்கிற ஊருக்குப் போயிருக்காளாம்."
"நெடுங்கரைக்கா போயிருக்கா? - நெடுங்கரை - நெடுங்கரை - " என்று உமா தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். பிறகு, "இது உங்களுக்கு எப்படித் தெரிஞ்சது? இன்னும் அவாளைப் போலீஸார் கவனிச்சுண்டு வர்றாளா, என்ன?" என்று கேட்டாள்.
"அவர்களுடைய பிரசாரத்தினாலே கிராமாந்தரங்களிலெல்லாம் பெரிய குழப்பம் உண்டாகிறதாம். அதற்காக அவர் பின்னோடேயே சி.ஐ.டி. காரன் ஒருத்தன் போயிண்டிருக்கானாம். அவனுடைய ரிப்போர்ட்டிலேயிருந்துதான் அவர்கள் நெடுங்கரைக்குப் போயிருக்கிறது தெரிந்தது."
"சரி; உங்களுக்குக் கோர்ட்டுக்கு நேரமாச்சே. போய்விட்டு வாருங்கள்" என்றாள் உமா. வக்கீல் போன பிறகு, மேஜையைத் திறந்து, அதில் கிருஷ்ணன் வேஷத்தில் நடனக் கோலத்தில் தோன்றிய சாருவின் புகைப்படத்தை எடுத்தாள். அந்தப் படத்துக்கு முத்தம் கொடுத்துவிட்டு, "என் கண்ணே! இந்த மாதிரி உன் அப்பா பேரும் அம்மா பேரும் சந்தி சிரிக்கிறதைப் பார்க்க இங்கே இல்லாமற் போனாயே, நீ பாக்கியம் செய்தவள், சாரு!" என்று சொல்லி, படத்தை மார்பின் மீது வைத்து அணைத்துக் கொண்டு, கண்ணீர் உகுத்தாள்.