தியாக பூமி/பனி/சதியாலோசனை

சதியாலோசனை

ராஜாராமய்யரும் அவருடைய நண்பர்களும் நடத்திய ஆவி உலகச் சோதனை அகால மரணத்துக்கு உள்ளான விஷயத்தை நாம் துயரத்துடன் தெரிவிக்க வேண்டியதாயிருக்கிறது. மேஜை ஒரு முழ உயரம் கிளம்பியதற்கு மேல் அவர்களுடைய சோதனையில் வேறு எவ்விதப் பலனும் ஏற்படவில்லை. ஆகவே, எல்லோரும் ஒருவாறு சலிப்பு அடையும் தருணத்தில், இங்கிலாந்திலிருந்து மிஸ் மேரியா ஹாரிஸன் என்னும் பெண்மணி வந்து சேர்ந்தாள். இவள் ஒரு பிரசித்தி பெற்ற 'மீடியம்'; அதாவது, ஆவி உலகவாசிகளைத் தன்னுடைய தேகத்தின் மீது ஆவிர்ப்பவிக்கச் செய்யக்கூடிய சக்தி வாய்ந்தவள். ராஜாராமய்யர் - பீடர்ஸன் சங்கத்தார் இந்த 'மீடியம்' அம்மாளுக்கு வரவேற்பு அளித்தார்கள். இவர்களுடைய ஆராய்ச்சியில் அந்த அம்மாள் மிகவும் சிரத்தை காட்டி, தானே அவர்களுக்கு உதவி செய்வதாகவும் சொன்னாள்.

பலநாள் முயற்சிக்குப் பிறகு ஒரு நாளைக்கு அந்த அம்மாள் தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றக்கூடிய நிலைமை ஏற்பட்டது. அதாவது, அவள் பேரில் ஆவிகள் ஆவிர்ப்பவித்து, கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லலாயின. ஆனால், பதில் வாயினால் சொல்லவில்லை; 'மீடிய'த்தின் கையைப் பிடித்துப் பதில்களை எழுதிக் காட்டின.

முதலில், மிஸ்ஸஸ் பீடர்ஸனுடைய ஆவி ஆவிர்ப்பவமாயிற்று. பீடர்ஸன் துரை பூலோகத்தில் தங்களுடைய வாழ்க்கையைப்பற்றிக் கேட்டதற்கு, "அதெல்லாம் எனக்கு மறந்து போய்விட்டது; இந்த உலகத்துக்கு வந்த பிறகு பூலோக விஷயங்கள் ஒன்றும் ஞாபகம் இருப்பதில்லை" என்று ஆவி சொல்லிற்று. பிறகு, தான் இருக்கும் உலகம் அற்புதமான அழகு வாய்ந்தது என்றும், எங்கே பார்த்தாலும் புஷ்பக் காட்சியாயிருக்கிறது என்றும், வானவில்லின் வர்ணங்கள் எங்கும் காணப்படுகின்றன என்றும், எப்போதும் சுகந்தம் வீசுகிறது என்றும், இப்படிப்பட்ட ஆச்சரிய உலகத்துக்குப் பீடர்ஸன் துரையும் சீக்கிரத்தில் வந்து சேரவேண்டுமென்றும் எழுதித் தெரிவித்தது.

இந்த எழுத்து ஒருவாறு தம் மனைவியின் கையெழுத்தைப் போல் இருக்கிறதென்று பீடர்ஸன் துரை சொன்னார்.

பிறகு, ராஜாராமய்யருடைய தகப்பனார், 'மீடியம்' அம்மாளின் மீது ஆவிர்ப்பவித்தார். அவர் எழுதிய கையெழுத்து மிஸ்ஸஸ் பீடர்ஸனின் எழுத்துக்கு முற்றும் மாறாக, ஆண்பிள்ளைக் கையெழுத்தைப் போல் இருந்தது. இதைப் பார்த்ததுமே அங்கே கூடியிருந்தவர்களெல்லாம் அதிசயப்பட்டுப் போனார்கள். ஆனால் ராஜாராமய்யருக்கு அதைவிட ஆச்சரியம் அளித்தது என்னவென்றால், தம்முடைய தகப்பனார் ஓர் அட்சரங்கூட இங்கிலீஷ் தெரியாதவராயிருந்தும், இப்போது இவ்வளவு சுத்தமான் இங்கிலீஷ் எப்படி எழுதுகிறார் என்பது தான். மேலும் வைத்தீசுவரய்யர் தாம் வசிக்கும் உலகத்தைப் பற்றி வர்ணித்ததும், மிஸ்ஸஸ் பீடர்ஸன் வர்ணித்ததும், ஏறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. மேலும் அவர், "இந்த உலகத்தில் சாதி, மத வித்தியாசம் ஒன்றும் கிடையாது. கிறிஸ்தவர்களும், ஹிந்துக்களும் ஒன்றுதான். எல்லாரும் பர மண்டலத்திலுள்ள ஏசு பிதாவைத்தான் வணங்குகிறோம்" என்றார். தம் தகப்பனார் உயிர் வாழ்ந்த போது, அவர் கிறிஸ்தவர்களைப் பற்றி எவ்வளவு கேவலமாக நினைத்தார் என்பது ராஜாராமய்யருக்கு ஞாபகம் வந்தபோது, பரலோகத்தில் அவருடைய மாறுதல் ஆச்சரியமாய்த்தான் இருந்தது. ஆனால் இது எல்லாவற்றையும் விட, அவரை அதிசயத்தினால் திகைக்கப் பண்ணிய விஷயம் வேறொன்று: "வருஷாவருஷம் நான் தங்களை உத்தேசித்து சிராத்தம் பண்ணுகிறேனே, அன்று தாங்கள் பூலோகத்துக்கு வருவதுண்டா?" என்று ராஜாராமய்யர் கேட்டதற்கு, வைத்தீசுவரய்யரின் ஆவி எழுதிய பதிலாவது:-"ஆமாம்; வருஷம் ஒரு தடவை நான் என்னுடைய கல்லறைக்கு வருகிறேன். அங்கே நீ போட்டிருக்கும் புஷ்பங்களின் சுகந்தத்தை உட்கொண்டு விட்டுத் திரும்புகிறேன்!" ராஜாராமய்யர் தம் தகப்பனாரின் உடலுக்குக் கொள்ளி வைத்துக் கொளுத்தியதுமல்லாமல், அவருடைய எலும்புகளைப் பயபக்தியுடன் கொண்டுபோய்க் கங்கையில் போட்டுவிட்டு வந்தவர். எனவே, அவருடைய தகப்பனாரின் ஆவி, "என்னுடைய கல்லறைக்கு வருகிறேன்" என்று சொன்னதும், ராஜாராமய்யருக்கு அளவிலாத வியப்பு உண்டாயிற்று. அதை நினைக்க நினைக்க, இந்த ஆவி உலகச் சோதனையிலே அவருடைய நம்பிக்கை சிதறுண்டு போயிற்று.

இதற்கு நேர்மாறாக, பீடர்ஸன் துரையின் நம்பிக்கை அதிகமாயிற்று. அவர் தம்முடைய மனைவி வசிக்கும் உலகத்துக்குத் தாமும் சீக்கிரம் போகவேண்டுமென்றும் அதற்கு முன்னால் தாம் ஜன்ம தேசத்தையும் ஒரு தடவை பார்த்துவிட வேண்டுமென்றும் தீர்மானித்து உத்தியோகத்திலிருந்து விலகிச் சீமைக்குப் பிரயாணமானார்.

அவர் போன பிறகு, ராஜாராமய்யரின் ஆவி உலக ஆராய்ச்சியும் சமாப்தி அடைந்தது.

இப்போது ராஜாராமய்யர் தமது முழுக் கவனத்தையும் மனோதத்துவ ஆராய்ச்சியில் செலுத்தியிருந்தார். ஹிப்னாடிஸம் என்கிற மனோவசியம், டெலிபதி என்கிற மானிடத் தந்தி ஆகிய கலைகளைப் பற்றி ஏராளமான நூல்களைப் படித்தார். அந்த அப்பியாசங்களைச் செய்வதற்குப் பூர்வாங்கமாக இப்போது காந்த சக்தி தேடிக் கொள்வதில் ஈடுபட்டிருந்தார். தமது அறையின் ஒரு சுவரில், வட்டவடிவமான ஒரு பெரிய கறுப்புப் புள்ளியை எழுதிக் கொண்டு, அதைக் கண் கொட்டாமல் உற்றுப் பார்த்தவண்ணம், "இதோ என் கண்கள் காந்த சக்தி பெற்றுவிட்டன" என்று ஜபிப்பார்.

பிறகு, கண்களை மூடிக் கொண்டு, "இதோ எனக்குக் காந்த சக்தி உண்டாகிறது. என்னைச் சுற்றிலுமுள்ளவர்கள் எனக்குக் கட்டுப்படுகிறார்கள். நான் எது சொன்னாலும் உடனே கேட்கிறார்கள். ஸ்ரீதரா! நான் கட்டளையிடுகிறேன்; நீ கீழ்ப்படிகிறாய்! தங்கம்! நான் சொல்கிறேன்; நீ கேட்கிறாய்!" என்று இந்த மாதிரி திருப்பித் திருப்பிச் சொல்வார்.

இவ்வாறு ஒரு நாள் சாயங்காலம் அவர் மாடி அறையில் காந்த சக்தி அப்பியாசத்தில் ஈடுபட்டிருக்கும் போது தான், வாசலில் கார் வந்து நின்று பலமாக ஹாரன் அடிக்கும் சத்தம் கேட்டது. ராஜாராமய்யர் தமது அப்பியாசத்தை நிறுத்தி ஜன்னல் பக்கமாக வந்து பார்த்தார்.

வாசலில், ஒரு 'ஸ்போர்ட்ஸ் மாடல் கார்' நின்றது. அதில், டிரைவர் ஸ்தானத்தில் ஸ்ரீதரன் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு அருகில், ஸுஸி அமர்ந்திருந்தாள். அப்போது வீட்டுக்குள்ளிருந்து வேலைக்காரன் வரவே, ஸ்ரீதரன் அவனிடம் தான் ஆபீஸுக்குக் கொண்டு போகும் கைப்பெட்டியைத் தூக்கிக் கொடுத்தான். உடனே, வண்டி விர்ரென்று கிளம்பிப் போய் விட்டது.

ராஜாராமய்யருக்கு இது ஒன்றும் அதிசயம் அளிக்கவில்லை. ஏனென்றால், தீபாவளியின் போது ஸ்ரீதரன் கூட்டிக் கொண்டு வந்த சிநேகிதன் உண்மையில் சிநேகிதி என்பது சீக்கிரத்திலேயே தெரிந்து போயிற்று. தகப்பனாரும் தாயாரும் எவ்வளவு புத்தி சொல்லியும் பயன்படவில்லை. அதைப் பற்றிப் பேச்சு எடுத்தால் ஸ்ரீதரன் உடனே, "நீங்கள் என் சம்மதத்தைக் கேளாமல் பலவந்தமாக ஏன் கல்யாணம் பண்ணி வைத்தீர்கள்? நான் என் இஷ்டம் போல்தான் இருப்பேன்" என்று ஒரே அடியாய் அடித்துவிட்டுப் போய்விடுவான். ஸ்ரீதரனை எப்படி நல்ல வழிக்குத் திருப்புவது என்று ராஜாராமய்யர், தங்கம்மாள் இரண்டு பேருக்கும் ஒரே கவலையாயிருந்தது.

ராஜாராமய்யர் முக்கியமாக அதற்காகவே காந்த சக்தி சம்பாதிக்கும் அப்பியாசத்தில் ஈடுபட்டிருந்தார். தங்கம்மாளும் தனக்குத் தெரிந்த வழியில் என்னவெல்லாமோ யோசனை செய்து கொண்டிருந்தாள்.

இன்று சாயங்காலம், ஸ்ரீதரன் வாசலில் நின்றுவிட்டு, வீட்டுக்குள் வராமல் கூடப் போய்விட்டதும், தங்கம்மாள் மேலே ராஜாராமய்யரைத் தேடிக் கொண்டு வந்தாள்.

"ஏன்னா? இப்படி எத்தனை நாளைக்கு இந்தப் பிள்ளையைக் கேள்வி முறையில்லாமே விட்டிருக்கிறது? நீங்களும் ஒரு புருஷாள்னு உட்கார்ந்துண்டு எல்லாத்தியும் பாத்திண்டிருக்கயளே?" என்றாள்.

"அதுக்கு என்னை என்ன பண்ணச் சொல்றே! அவன் அப்பா பிள்ளையாயிருந்தான்னா நான் சொன்னத்தைக் கேட்பான். ஆரம்பத்திலிருந்தே அவனை அம்மா பிள்ளையாய்ப் பண்ணியாச்சு! இப்ப முட்டிண்டு என்ன பிரயோஜனம்?"

"நான் ஒண்ணும் இப்ப முட்டிக்கலை. அப்பவே கூடத்தான் முட்டிண்டேன். கல்கத்தாவிலே நாம் இருந்து வாழ்ந்ததெல்லாம் போதும். குழந்தைக்காவது நம்ம பக்கத்திலே வேலை பண்ணி வைங்கோன்னு சொன்னேன் கேட்டாத்தானே!"

"ஆமாம்; நம்ம பக்கத்திலே உன் பிள்ளைக்கு உத்தியோகம் கொடுக்கிறேன்னு காத்துண்டிருந்தா-நான் வேண்டான்னுட்டேனாக்கும்! உத்தியோகந்தான் போகட்டும்; நம்ம ஊர்ப்பக்கமாப் பார்த்து நீ கல்யாணம் பண்ணிவச்சயே? அது என்ன ஆச்சு?"

"எல்லாம் சரியாத்தான் ஆச்சு. கல்யாணம் பண்ணினதிலே என்ன குறைவாப் போச்சு? நான் ஊருக்குப் போய் மூவாயிரம் ரூபாயோடே அந்தப் பொண்ணை அழைச்சுண்டு வராமல் போனா, என் பெயர் தங்கம்மா இல்லை!"

"குஷாலாய்ப் போய் அழைச்சுண்டு வா! பிள்ளையோடே மல்யுத்தம் பண்ணு!"

"மல்யுத்தம் பண்ணுவானேன்? மாட்டுப் பொண்ணு வந்துட்டா, இவனுக்கு இந்தச் சட்டைக்காரிப் பைத்தியம் கட்டாயம் போயிடும். நீங்க மட்டும் இவன் கிட்ட இப்போ ஒண்ணும் சொல்லி வைக்காதேங்கோ!"

"நான் என்னத்துக்குச் சொல்றேன்? பைத்தியமா?"

"இந்த மாதிரி நான் நரசிங்கபுரத்துக்கு வர்றேன், அங்கே வந்து என்னைப் பார்க்கறதுன்னுட்டு, சம்பு சாஸ்திரிக்கு ஒரு கடுதாசி எழுதுங்கோ."

"அது மட்டும் என்னாலே முடியாது. நீயாச்சு, உன் பிள்ளையாச்சு, மாட்டுப் பொண்ணாச்சு! எப்படியாவது போங்கோ."

ராஜாராமய்யருடைய பிடிவாதத்தை அறிந்திருந்த தங்கம்மாள், அதே தெருவில் குடியிருந்த இன்னொரு தமிழ்நாட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த பையனை அழைத்துக் கொண்டு வந்து சம்பு சாஸ்திரிக்குக் கடிதம் எழுதச் செய்தாள். தான் சீக்கிரத்தில் நரசிங்கபுரத்துக்கு வருவதாகவும் மாட்டுப் பெண்ணைக் கல்கத்தாவுக்குக் கூட்டிக் கொண்டு போகும் உத்தேசம் இருக்கிறதென்றும், ஆனால் சம்பு சாஸ்திரி முதலில் நரசிங்கபுரத்திற்கு வந்து தன்னைப் பார்த்தால் நேரில் எல்லாத் தகவலும் தெரிவிப்பதாகவும் எழுதுவித்துத் தபாலிலும் போட்டாள்.