தியாக பூமி/மழை/அடைக்கலம்

அடைக்கலம்

அன்றிரவு சுமார் நடுநிசிக்கு, சம்பு சாஸ்திரியாரின் மாட்டுக் கொட்டகையில் ஒரே கலகலப்பாயிருந்தது. அந்தக் கொட்டகை நாலு பக்கமும் தாழ்வாரமும், நடுவில் பெரிய முற்றமுமாக அமைந்தது. ஒரு தாழ்வாரத்தில் நெல் குதிர்கள் வைத்திருந்தன. மற்ற மூன்று தாழ்வாரங்களில் எப்போதும் மாடு கட்டியிருப்பது வழக்கம். இன்று மேலண்டைத் தாழ்வாரத்திலேயே கொண்டு வந்து நெருக்கியடித்துக் கட்டியிருந்தார்கள். மாடுகளுக்கும் பாஷை உண்டு, அவை ஒன்றோடுடொன்று பேசிக்கொள்ளும் என்று சொல்வது உண்மையானால், சம்பு சாஸ்திரியாரின் மாடுகள் அப்போது பின்வருமாறுதான் பேசிக் கொண்டிருந்திருக்க வேண்டும்.

"ஹம்மா! இந்த மனுஷப் பிராணிகளைப் போலச் சுயநலம் பிடித்த பிராணிகளை நான் பார்த்ததேயில்லை."

"ஏற்கெனவே மழையிலும் குளிரிலும் அவஸ்தைப்படுகிறோம். பாதி நிசிக்கு வந்து நம்மைத் தூக்கத்திலிருந்து எழுப்பித் தொந்தரவு செய்கிறார்களே?"

"முற்றத்தின் வழியாக வந்தபோது மேலே மழை பெய்ததில் சொட்ட நனைந்து போனேன்."

"உனக்கென்ன கேடு! என் குழந்தைக்கு உடம்பு குளிரினால் நடுங்குகிறது, பார்!"

"உங்கள் கஷ்டத்தையே நீங்கள் சொல்கிறீர்களே தவிர, அந்த மனுஷர்களின் அவஸ்தையைப் பார்க்கவில்லை. முற்றத்தில் சற்று நனைந்ததற்கு இப்படிப் புகார் செய்கிறீர்களே? இவர்கள் ஆற்றங்கரை மேட்டிலிருந்து நனைந்து கொண்டே வந்திருக்கிறார்களே?"

"ஹாமாம்! இவர்கள் எதற்காக அங்கிருந்து ஓடி வந்திருக்கிறார்கள்?"

"இது தெரியாதா? இவர்கள் இருந்த கூரைக் குச்செல்லாம் மழையிலே விழுந்திருக்கும். நம்மைப் போல இந்த ஜனங்களுக்கு ஓடு போட்ட வீடு இருக்கிறதா, என்ன?"

"அதற்காக, பிச்சைக்காரன் குடிசையிலே சனீசுவரன் புகுந்தாற் போல், இவர்கள் நம்முடைய இடத்தைப் பங்கு போட்டுக் கொள்ள வந்து விட்டார்களாக்கும்?"

"காலையிலே எஜமான் வரட்டும். அவரிடம் நான் புகார் சொல்கிறேனா இல்லையா, பார்!"

"இவர்களாக ஒன்றும் வந்திருக்க மாட்டார்கள். எஜமான் சொல்லித்தான் வந்திருப்பார்கள்."

"போகட்டும்; இவர்கள் வந்ததுதான் வந்தார்கள். நம்முடைய இடத்தையும் பிடுங்கிக் கொண்டார்கள். எதற்காக இப்படிக் கூச்சல் போடுகிறார்கள்? இரையாமலிருந்து தொலைந்தால் நாம் தூங்கலாமல்லவா?"

"ஹொஹ்ஹோ! உனக்கு அது தெரியாதா? மனுஷ ஜாதியினிடத்தில் அதுதான் பெரிய குறை. அவர்களுக்குச் சத்தம் போடாமல் பேசவே தெரியாது. அவர்கள் மேல் குற்றம் இல்லை. சுவாமி அப்படி அவர்களைப் படைத்துவிட்டார்!"

மேற்கண்டவாறு மாடுகள் நிஜமாகவே பேசிக் கொண்டனவா என்று நமக்குத் தெரியாது. ஆனால் அப்போது உண்மையில் கீழண்டைத் தாழ்வாரத்தில் மட்டும் கூச்சல் பலமாகத்தான் இருந்தது. சேரி ஜனங்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் - அவ்வளவு பேரும் அங்கே இருந்தார்கள். சிலர் துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தார்கள். சிலர் பசியினால் கத்திய குழந்தைகளைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

பட்டிக்கார நல்லானும் அங்கே காணப்பட்டான். அவன் ஒரு குதிரின் இடுக்கிலிருந்து பெரிய சாக்குச் சுருள் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து, "ஏ பிள்ளைகளா! கொழந்தைகளைக் கொன்னுடாதீங்க. தலைக்கு ஒரு சாக்கை விரிச்சுப் போடுங்க!" என்றான். அந்தச் சமயத்தில், மாட்டுக் கொட்டகையின் வாசற் கதவு திறந்தது. சம்பு சாஸ்திரியும் சாவித்திரியும், கையில் ஹரிகேன் லாந்தருடனும் பீத்தல் குடையுடனும் உள்ளே பிரவேசித்தார்கள். அவர்களைக் கண்டதும் மாடு கன்றுகள் எல்லாம், "ஹம்மா! ஹம்மா!" என்று கத்தின. அவர்களை வரவேற்பதற்காகத்தான் அப்படிக் கத்தினவா அல்லது தங்களைத் தொந்தரவுபடுத்தியது பற்றி எஜமானனிடம் புகார் சொல்லிக் கொண்டனவா என்று நமக்குத் தெரியாது.

அதே சமயத்தில், கீழண்டைத் தாழ்வாரத்திலும் கலகலப்பு ஏற்பட்டது. "சாமி! சாமி! நீங்க மவராசரா இருக்கணும். இந்த மழையிலும் குளிர்லேயும் தங்க இடங் கொடுத்தீங்களே? இல்லாட்டா, எங்க கதி என்ன ஆயிருக்கும்? பிள்ளை குட்டிங்கள்ளாம் செத்துப் போயிருக்குமே?" என்று தலையாரி வீரன் சொன்னான். "சாமி! நீங்க நல்லாயிருக்கணும்!" என்று பல குரல்கள் ஏக காலத்தில் கூவின. சிலர் தரையில் விழுந்து நமஸ்காரம் செய்தார்கள்.

பட்டிக்காரன் நல்லான், "இந்தக் கழுதைகளுக்கு இடங் கொடுத்ததே பிசகுங்க. இப்பக்கூட விரட்டியடிச்சுடலாமான்னு தோணுது. 'பஜனை மடத்திலே சாஸ்திரி அய்யா இருப்பாரு, போய்க் காலிலே விழுங்க'ன்னு நான் சொன்னா, இதுங்க பஜனை மடத்துக்குள்ளேயே பூந்துட்டுதுங்களே! பெரிய எழவால்ல போச்சு!" என்றான்.

"நீ பின்னோட வந்திருக்க வேணும், நல்லான். பொம்பிளைகள் என்னத்தைக் கண்டார்கள்? அதிலும் இந்த மழையிலும் காத்திலும்? பாவம், ஒண்ணுமே தெரியாமே திகைச்சுப் போய் நின்றார்கள். அப்புறந்தான் எனக்கு இந்த யோசனை தோணித்து. ராத்திரி மாட்டுக் கொட்டாயிலே யிருந்தால், பொழுது விடிஞ்சு பாத்துக்கலாம் என்று..."

"இதுக்குக் கூட நம்ம அக்கிரகாரத்து ஐயாமாரெல்லாம் நாளைக்கு என்ன சொல்லப் போறாங்களோ?"

"ஒண்ணும் சொல்ல மாட்டார்கள், நல்லான்! ஆபத்துக்குத் தோஷமில்லைன்னு அவாளுக்குத் தெரியாதா? இல்லாட்டா, நடு ராத்திரியிலே இந்த ஜனங்கள் குழந்தைகளையும் குட்டிகளையும் வைத்துக் கொண்டு என்ன பண்ணுவார்கள்?"

இந்தச் சமயத்தில், குழந்தை ஒன்று 'வீல்' என்று கத்துகிற சத்தம் கேட்டது.

"ஏ காத்தாயி! ஏன் பிள்ளையைப் போட்டு அடிக்கிறே!" என்றான் நல்லான்.

"பின்னே என்னாங்க! உயிர் பிழைச்சதே புண்ணியம் இப்போ, வவுத்தைப் பசிக்குதுன்னா, நான் என்ன செய்றது?" என்றாள் காத்தாயி.

இதைக் கேட்ட சாவித்திரி, "அப்பா! நான் ஆத்துக்குப் போய் அவல் இடிச்சிருக்கே, அதிலே கொஞ்சம் எடுத்துண்டு வரட்டுமா? குழந்தைகள் பசி, பசின்னு கத்தறது பரிதாபமாயிருக்கே!" என்றாள்.

"சித்திக்குத் தெரிஞ்சால், 'லொள்ளு'ன்னு விழுவாளே, அம்மா! இருந்தாலும் பாதகமில்லை. போய்க் கொண்டு வா! ஜாக்கிரதையாய் சேத்திலே கீத்திலே விழுந்துடாமே வா!" என்றார்.

அப்போது பட்டிக்காரன் நல்லான், "நாளைக்கு இத்தனைக்கித்தனை ஊரிலே வம்பும் தும்பும் வந்து சேரப் போகிறது" என்று முணுமுணுத்துக் கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தியாக_பூமி/மழை/அடைக்கலம்&oldid=6285" இலிருந்து மீள்விக்கப்பட்டது