தியாக பூமி/மழை/பஜனை

பஜனை

அக்கிரகாரத்தின் மேலண்டைப்புறத்தில், பெரிய தெருவையும் சின்னத் தெருவையும் சேர்க்கும் பாதை ஒன்று இருந்தது. அந்தப் பாதைக்கு மேற்கே விசாலமான படித்துறைக்குளம் காணப்பட்டது. குளத்தின் வட கரையில் பாதையை யொட்டி பஜனை மடம் இருந்தது.

இந்தப் பஜனை மடத்தில் அன்று இரவு ஏழு மணிக்கு ஜனங்கள் வந்து கூட ஆரம்பித்தார்கள். சங்கரநாராயண தீக்ஷிதர், சாமா ஐயர், ரமணி ஐயர், ராமய்யா வாத்தியார், முத்துசாமி ஐயர் எல்லாரும் வந்தார்கள். குழந்தைகளும், ஸ்திரீகளுங்கூடச் சிலர் வந்து சேர்ந்தார்கள்.

சங்கர தீக்ஷிதர் வந்ததும், கையில் ஓர் ஓட்டை விசிறியுடன் சம்பு சாஸ்திரியிடம் வந்து, "எங்கணும், சாஸ்திரி! ரொம்ப இறுக்கமாயிருக்கே! வேர்க்கிறதோ இல்லையோ?" என்று கிறுதக்காகச் சொல்லிக்கொண்டு, சாஸ்திரியின் மேல் விசிறினார். இந்த மாதிரி விளையாட்டுக்கெல்லாம் சாஸ்திரியின் பதில் புன்னகைதான். அந்தப் பதிலையே இப்போதும் அளித்தார். உடனே தீக்ஷிதர், "ஓய், இன்னிக்குத் திவ்ய நாம சங்கீர்த்தனம் எல்லாம் வைத்துக் கொள்ள வேண்டாம். சீக்கிரமாய் உட்கார்ந்தபடியே நாலு பாட்டுச் சொல்லிப் பஜனையை முடிச்சுடும். மழை பலமாய்ப் பிடிச்சுக்கறதுக்கு முன்னாலே, அவாவாள் வீட்டுக்குப் போய்ச் சேரலாம்" என்றார்.

"அப்படித்தான் உத்தேசம் பண்ணியிருக்கேன். இந்த மழையிலே நீங்கள்ளாம் வந்தேளே, அதுவே பெரிய காரியம்!" என்றார் சாஸ்திரியார்.

ஆனால், சங்கர தீக்ஷிதரின் எண்ணம் பலிக்காமற் போவதற்கே தானோ என்னவோ, பஜனை ஆரம்பித்த சற்று நேரத்துக்கெல்லாம் மறுபடியும் மழை பலமாய்ப் பிடித்துக் கொண்டது.

பஜனை மடத்தின் சுவர்களின் மீதும் கதவுகளின் மீதும் மழையும் புயலும் தாக்கியபோது உண்டான சப்தம் பஜனையின் சப்தத்தையும் மூழ்க அடிப்பதாயிருந்தது. இடையிடையே கதவுகள் படீர் படீர் என்ற சப்தத்துடன் திறப்பதும் மூடுவதுமாயிருந்தன.

அதே சமயத்தில் சம்பு சாஸ்திரியின் வீடும் அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. அடிக்கடி திறந்து கொண்ட ஜன்னல் கதவுகளின் வழியாகக் காற்றும் மழையும் புகுந்து அடித்தன. அந்த வருஷம், கல்யாணச் சந்தடி காரணமாக சாஸ்திரியாரின் வீடு ஓடு மாற்றப்படவில்லை. இதனால் சில இடங்களில் ஏற்கெனவே சொட்டுச் சொட்டென்று சொட்டிக் கொண்டிருந்தது. இப்போது அடித்த பெருங்காற்றிலும் மழையிலும் ஓடுகள் இடம் பெயர்ந்தபடியால், சில இடங்களில் தண்ணீர் தாரையாகக் கொட்டிற்று.

பாவம்! சாவித்திரி, சுண்டல் எடுத்துக்கொண்டு போவதற்காக வந்தவள், வீட்டுச் சாமான்கள் நனையாமல் காப்பாற்றுவதற்குப் பெருமுயற்சி செய்தாள். முகத்தில் வந்து அடித்த மழையைப் பொருட்படுத்தாமல் ஜன்னல் கதவுகளைச் சாத்தினாள். அப்பாவின் புஸ்தகங்கள், கணக்கு நோட்டுகள் முதலியவற்றை எடுத்துப் பத்திரப்படுத்தினாள். ஜலம் தாரையாகக் கொட்டிய இடங்களில் அண்டா, தவலை முதலிய பெரிய பாத்திரங்களைக் கொண்டு வைத்தாள். தரையில் தேங்கியிருந்த ஜலத்தை விளக்குமாற்றால் பெருக்கித் தள்ள முயன்றாள்.

அந்தச் சமயத்தில் அவளுடைய மனம், 'தீவாளிக்கு இவாள் வர்றபோது இப்படியே மழை கொட்டிண்டிருந்தா என்ன பண்றது? இந்த வீட்டைப் பார்த்துட்டுப் பரிகாசம் பண்ணுவாளே? அதற்குள்ளே மழை நின்று போகணுமே, ஸ்வாமி!' என்று வேண்டிக் கொண்டிருந்தது.

அந்தச் சமயம், மங்களம் சமையலறையிலிருந்து கையில் ஒரு கிழிசல் குடையுடன் வந்து, 'ஏண்டி, சாவித்திரி! உங்க அப்பாகிட்டச் சொல்லி இந்தக் குடையை ரிப்பேர் பண்ணி வைக்கறதற்குக்கூட விதியில்லையா? பாக்கிக்கெல்லாம் மட்டும் வாய் கிழியறதே!" என்று சொல்லிக் குடையைத் தொப்பென்று கீழே எறிந்தாள்.

பகவானுடைய பக்தியில் ஈடுபட்டவர்கள் தங்களுடைய குடும்ப காரியங்களைச் சரியாகக் கவனிப்பதில்லையென்பது நமது நாட்டில் தொன்றுதொட்ட சம்பிரதாயமாயிருந்து வந்திருக்கிறது. அந்தப் பரம்பரையில் வந்த சம்பு சாஸ்திரி மட்டும் இந்த வழக்கத்துக்கு விரோதமாயிருக்க முடியுமா? ஆகவே, மங்களம் அவர்மேல் எரிந்து விழுவதற்குக் காரணம் இல்லாமற் போகவில்லை. ஆனாலும், சாவித்திரி விட்டுக் கொடுக்காமல், "அப்பா கிட்டச் சொன்னேன், அவருக்கு ஞாபகம் இல்லைபோல் இருக்கு. நாளைக்கே ரிபேர் பண்ணிவிடலாம், சித்தி!" என்றாள். பிறகு, அந்தப் பேச்சு வளராமல் இருக்கும் பொருட்டு, "பஜனை முடியற சமயம் ஆச்சே, சித்தி! விநியோகத்துக்கு எல்லாரும் காத்திண்டிருப்பாளே! சுண்டலை எடுத்துண்டு போவமா?" என்று கேட்டாள்.

மங்களம், "உனக்கும் வேலையில்லை, உங்க அப்பாவுக்கும் வேலையில்லை. மழையிலேயும் இடியிலேயும் பஜனை என்ன வேண்டியிருக்கு பஜனை! நான் வல்லை சுண்டலை எடுத்துண்டு. நீயே, தொலைஞ்சுட்டு வா!" என்றாள். இப்படிச் சொல்லிக்கொண்டே உள்ளே போய், சுண்டல் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வந்து, தரையில் 'நக்'கென்று வைத்தாள்.

அதே சமயத்தில் வானத்தில் ஒரு பேரிடி உண்டாகி நாலு திசையும் குமுறும்படி இடித்தது.

சாவித்திரி, அப்பா சொல்லிக் கொடுத்திருந்தபடி "அர்ச்சுனப் பல்குனப் பார்த்தனக் கிரீடி..." என்ற மந்திரத்தை மனத்தில் ஜபித்த வண்ணம் சுண்டல் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, அந்த ஓட்டைக் குடையைப் பிரித்துக் கொண்டு பஜனை மடத்துக்குக் கிளம்பினாள்.

பஜனை மடத்தில் சம்பு சாஸ்திரி கலைந்துபோன தம்புராவைச் சுருதி கூட்டிக் கொண்டிருந்தார். பஜனையிலிருந்து எழுந்து வந்து மடத்தின் தாழ்வாரத்தில் சங்கர தீக்ஷிதரும் இன்னும் நாலைந்து பேரும் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

சில வருஷங்களுக்கு முன்னால், சம்புசாஸ்திரி பஜனை ஆரம்பித்த புதிதில், ஊரில் எல்லாரும் அதில் சிரத்தையுடன் ஈடுபட்டார்கள். நாளடைவில் சாஸ்திரியாரைத் தவிர மற்றவர்களுக்குப் பஜனையில் சிரத்தை குறைந்து வந்தது. இப்போதெல்லாம் பெரும்பாலும் பொழுது போக்குக்காகவும், சுண்டல் வடை விநியோகத்தை உத்தேசித்துமே பஜனைக்கு வந்தார்கள் என்று சொல்லலாம். இப்போதைக்குக் குழந்தைகளுக்குத்தான் பஜனையில் அதிக சிரத்தையிருந்தது. பெரியவர்களோ ஒரு பக்கம் பஜனை நடந்து கொண்டிருக்கும்போது தாங்கள் பாட்டுக்கு வம்பு வளர்த்துக் கொண்டிருப்பார்கள்.

அதிலும் இன்று மழையும் காற்றும் பிரமாதமாக அடித்துக் கொண்டிருந்தபடியால், யாருக்குமே பஜனையில் மனம் செல்லவில்லை. இன்னும் ஏன் சுண்டல் வரவில்லையென்றுதான் எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தீக்ஷிதர், பொடி டப்பியைத் தட்டி, பொடி எடுத்து உறிஞ்சிவிட்டு, "என்னடா இது? இந்தச் சம்பு சாஸ்திரி இலேசிலே பஜனையை நிறுத்தாது போல் இருக்கே! சட்டுப்புட்டுனு முடிச்சா, சுண்டலை வாங்கித் தின்னுட்டுப் போகலாம்னு பார்த்தா..." என்று இழுத்தார்.

சாமாவய்யர், அப்போது அங்கே வந்த வைத்தியைப் பார்த்து, "அடே வைத்தி! உங்க அத்திம்பேர் கிட்டச் சொல்லிச் சீக்கிரம் பஜனையை நிறுத்தச் சொல்லேண்டா! இந்த மழையிலேயும் இடியிலேயும் பஜனை என்னடா, வேண்டியிருக்கு?" என்றார்.

"நான் தானே? வந்து நாலு நாள் தான் ஆச்சு!" என்றான் வைத்தி.

தீக்ஷிதர், "நாசமாப் போச்சு! அவனுக்குச் சாதாரண நாளிலேயே காது கேக்காது. இந்த மழையிலும் இடியிலும் காது கேட்டாப்பலேதான்!" என்றார்.

"ஏண்டா வைத்தி! வாசலிலே இடி இடிக்கிறதே! உன் காதிலே விழறதா?" என்று ராமய்யா வாத்தியார் உரத்த குரலில் கத்தினார்.

அதற்கு வைத்தி, "பிரஸாதந்தானே? சுண்டலும் வடையுந்தான். எனக்குத் தெரியாதா, என்ன? எங்க அக்காதானே பண்ணினாள்?" என்றான். எல்லாரும் சிரித்தார்கள்.

முத்துசாமி ஐயர், "ஏன், ஸ்வாமி? குடமுருட்டியிலே பிரமாத வெள்ளம் வந்திருக்காம். உடப்பு எடுத்துக்கும் போலிருக்காமே, வாஸ்தவமா? யாருக்காவது தெரியுமா?" என்று கேட்டார்.

"குடமுருட்டிதான் உடைச்சுக்கட்டும், மானமே இடிஞ்சு விழட்டும். இந்தச் சம்பு சாஸ்திரி மட்டும் பஜனையை நிறுத்தாது போலிருக்கு" என்றார் தீக்ஷிதர்.

இந்தச் சமயத்தில் சாவித்திரி, சுண்டல் பாத்திரத்துடன் உள்ளே வரவே, "சரி, சரி, பிரஸாதம் வந்துடுத்து, பஜனையை முடிக்கச் சொல்லலாம்" என்று கூறிக் கொண்டு, எல்லாரும் அவரவர்கள் இடத்துக்குப் போனார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தியாக_பூமி/மழை/பஜனை&oldid=6281" இலிருந்து மீள்விக்கப்பட்டது