திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்?/மாநில சுயாட்சி — ஏன்?

மாநில சுயாட்சி — ஏன்?

மாநில சுயாட்சி வேண்டும் என்று நாம் கேட்கிறபோது "இப்படிப் பேசுவது மத்திய அரசைக் குலைப்பதாகும், நாட்டுக்குப் பெருத்த ஆபத்து வரும்" என்று காங்கிரசார் கூறுகின்றனர். இது பற்றிய எனது விளக்கத்தைக் கூறும் முன்பு, அவர்களிடம் பணிவன்போடும், உறுதியோடும் கேட்டுக் கொள்வேன்.

நாட்டுக்கு ஆபத்து வரும் என்று அறிந்து கூறவும், நாட்டை வலிமையுள்ளதாக ஆக்கும் உரிமையும் — வழி காட்டும் திறமையும் உங்களைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்று நினைத்துப் பேசிட முழு உரிமை யாரால் — எந்தக் காரணத்தால் — எப்போது — உங்களுக்கு அளிக்கப்பட்டது?

குழந்தை தெருவில் சென்றால் கார் வந்து மோதிவிடும்; அதற்கு ஆபத்து வரும் என்று உணர்ந்து அந்தக் குழந்தையைக் காப்பாற்றிட எல்லோருக்கும் உரிமையுண்டு; தேவையுமுண்டு. ஏதோ நாங்கள் பாதை தவறியவர்கள் போலவும் — அவர்கள் தான் காப்பாற்றும் உரிமை படைத்த பாதுகாவலர் போலவும் பேசுவது ஏன்?

காங்கிரஸ் தலைவர்கள் இப்படிப் பேசுவது 15 ஆண்டுகளுக்கு முன் அனுமதிக்கப்பட்ட தவறாக இருக்கலாம். 20 ஆண்டுகளுக்கு முன் மக்களுக்கு இவையெல்லாம் புரியாத காரணத்தால் சரி என்று கூறி ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் விழிப்படைந்த இந்தக் காலத்தில் கூட அப்படிப் பேசுவது — ஆணவத்திற்கு எடுத்துக்காட்டு என்றுதான் உலகம் கருதும். காங்கிரஸ்காரர்களைத் தவிர நாட்டின்மீது மற்றவர்களுக்கு அக்கறை இல்லை என்பது பொருளற்றது; பொருத்தமற்றது; ஒதுக்கித் தள்ளப்பட வேண்டியது.

ஆனால், மத்திய அரசின் வேலை என்ன? நாடக மேடையில் வரும் இராஜா, மந்திரியை அழைத்து, "மந்திரி நமது மாநகர் தன்னில் மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?" என்று கேட்பானாம். அதுபோல் மாதம் ஒரு முறை மாநில மந்திரிகளை மத்திய மந்திரி டில்லியில் கூட்டி "பள்ளிக்கூடங்களில் கல்வி எப்படி இருக்கிறது? காலரா நோய் தடுக்கப்பட்டு விட்டதா?" என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி தர்பார் பேச்சுப் பேசும் பொறுப்புதான் டில்லிக்கு இருக்கிறதே தவிர வேறு ஒன்றுமில்லை.

மக்களின் சுக துக்கத்தோடு பின்னிப் பிணைத்திருப்பது மாநில அரசு தானே தவிர — மத்திய அரசு அல்ல.

மக்கள் மீது அக்கறை இருக்கலாம் மத்திய அரசுக்கு. அது எப்படிப்பட்ட அக்கறை? குடிசைப் பகுதியில் தீப்பற்றியதும் மூன்றாவது மாடியிலுள்ள சீமான் — ஏதோ கரும்புகை தெரிகிறதே; பெரும் தீ விபத்துப் போலிருக்கிறதே என்று கூறுவானே, அதைப் போன்ற அக்கறைதான் அது.

ஆனால், குடிசைப் பகுதியில் தீப்பற்றியதும் பதறித் துடிப்பவர் யார்? அந்தக் குடிசைக்குப் பக்கத்தில் உள்ள குடிசைவாசிதான். அதைப் போல மாநில அரசினர்தான், மக்களின் குறைகளை நேருக்கு நேர் சந்திக்க வேண்டியவர்கள்.

அதிகாரம் தேவைக்கு அதிகமாக மைய அரசிலே குவிந்துவிட்டதால் என்ன நடக்கிறது? நான் அண்மையில் டில்லி உணவு அமைச்சகத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். எனக்குத் தொலைபேசியில் பேசும் சக்தி அதிகம் இல்லையாதலால் என்னுடைய நண்பரை விட்டுப் பேசச் சொன்னேன். உணவு அமைச்சர் ஜெகஜீவன்ராம் ஊரில் இல்லாததால் துணை அமைச்சர் ஷிண்டே என்பவர் பேசினார். கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலையில் இருந்து சர்க்கரையை வெளிக் கொணரும் உத்தரவு டில்லியில் இருந்து வராததால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்ற விஷயத்தை அவருக்குக் கூற முயன்றோம்.

கள்ளக்குறிச்சி என்ற பெயரைப் புரிந்து கொள்ள 15 நிமிடம் ஆயிற்று. பெயரைப் புரிந்துகொள்ள முடியாததற்காக அவர் மீது நான் குற்றம் சாட்டவில்லை. சர்க்கரை ஆலை இப்போது தமிழ்நாட்டில்; அதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் டில்லியில் என்று அதிகாரத்தைப் பிரித்துத் தந்தார்களே அவர்கள்தான் குற்றவாளிகள்.

ஆனால், மத்திய அரசின் வலிவு, அசாமிற்கு அச்சத்தைத் தர — தமிழ்நாடு தத்தளிக்க, கேரளத்திற்குக் கலக்கம் தருவதற்காகத்தான் என்றால், நமது சுதந்திரச் சிந்தனையைச் சிறுகச் சிறுக அழித்து சிந்திக்கும் திறனே இல்லாமல் ஆக்குவதற்குத் தான் என்றால்,

நமது கூட்டுச் சக்தியின் மூலம், நம்மில் ஒவ்வொருவருடைய வலுவையும் கொண்டு அந்த அக்கிரம வலிவைச் சிறுகச் சிறுகக் குறைப்பதுதான் எங்கள் கடமையாக இருக்கும்.

மத்திய அரசு பலமாக இருந்தது குப்த சாம்ராஜ்யத்தில்! மத்திய அரசு பலமாக இருந்தது மொகலாய சாம்ராஜ்யத்தில்! மத்திய அரசு பலமாக இருந்தது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில்! ஆனால், இன்று அந்தச் சாம்ராஜ்யங்கள் எங்கே?

சரிந்த சாம்ராஜ்யங்களுடன் — இப்போது இருக்கிற சாம்ராஜ்யத்தை ஒப்பிடுவதற்கு உள்ளபடியே வருத்தப்படுகிறேன். அந்த சாம்ராஜ்யவாதிகள் — தங்கள் சாம்ராஜ்யங்களுக்கு அதிகமான வலிவு தேட முயற்சி செய்த ஒவ்வொரு நேரத்திலும் சரிவு தான் ஏற்பட்டது என்பதைச் சரித்திரமுணர்ந்தவர்கள் அறிவார்கள்.

அவுரங்கசீப் காலத்தில் இருந்த வலிவான மத்திய ஆட்சிக்கு ஒப்பான மத்திய ஆட்சியைச் சரித்திரத்தில் காண முடியாது. ஆனால், அந்தச் சாம்ராஜ்யம் என்ன ஆயிற்று என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நமக்கிருக்கிற கவலை எல்லாம் — தூக்க முடியாத பாரத்தை மத்திய ஆட்சியினர் விரும்புகிறார்களே என்பதுதான். மத்திய அரசின் வலிவு என்பது மாநிலங்கள் ஒவ்வொன்றின் தனித்தனி வலிவையும் கூட்டியதால் ஏற்பட்ட மொத்த வலிவுதான் என்றால் வாதத்திற்கு ஏற்றது; அரசியலுக்கு நல்லது; காரியத்திற்கும் உகந்தது. ஆனால், மத்திய அரசுதான் எல்லா உரிமைகளையும், பலத்தையும் வைத்திருக்கும்; மாநிலங்கள் தத்தித் தத்தி நடக்கும் அதிகாரம் தான் வைத்திருக்கும் என்றால், அது எதற்கும் பொருத்தமுடையதல்ல.

மாநில அதிகாரங்களை எல்லாம் எடுத்து மத்திய அரசு குவித்து வைத்துக் கொள்வதால், மாநிலங்கள் பலவீனமடையும் என்பது மட்டுமல்ல, மத்திய அரசுக்கென்று புதிய வலிவு ஏதும் ஏற்பட்டுவிடாது.

நாட்டுப் பாதுகாப்புத் தவிர மற்ற அதிகாரங்கள் அனைத்தையும் பற்றிச் சிந்திப்போம். மாநிலங்களுக்குத் தேவையான அதிகாரங்களை மாநிலங்கள் எடுத்துக் கொள்ளட்டும். பின்னர் மாநிலங்கள் விரும்பித் தருகின்ற மீதியுள்ள அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக் கொள்ளட்டும்.

தற்போதுள்ள அரசமைப்புச் சட்டத்தை ஆராய்ந்து மாநில — மத்திய அரசுகளுக்குள்ள அதிகாரப் பங்கீடுகளை மாற்றி அதிக அதிகாரங்களை மாநிலங்களுக்குத் தர வேண்டும். அதற்கான ஒரு குழு நியமித்து ஆராயவேண்டுமென்று நிருவாகச் சீர்திருத்தக் குழுவிடம் நான் யோசனை தெரிவித்துள்ளேன்.

இன்றைய தினம் மாநில அரசுக்குள்ள வேலை என்ன? மக்களுக்குச் சோறுபோடுவது — வேலை வாய்ப்புத் தருவது — தொழில் நீதியை நிலைநாட்டுவது — சுகாதாரத்தைப் பேணுவது — கல்விச் செல்வத்தை வளர்ப்பது போன்ற எண்ணற்ற வேலைகளைச் செய்ய வேண்டியது மாநில அரசு.

பலமான மத்திய அரசு வேண்டும் என்று கூறுகிறார்கள். மத்திய அரசுக்குப் பலம் எதற்காக? அந்தப் பலம் யாருக்கு எதிராக? என்பதையும் நாம் சிந்தித்துப் பார்த்திட வேண்டும்.

பலம் என்பது தனிப்பட்ட ஆளுக்கு இருக்கலாம்; தனிப்பட்ட அமைப்புக்கு இருக்கலாம்; மாநிலத் துரைத்தனத்துக்கு இருக்கலாம்; மத்தியத் துரைத்தனத்துக்கு இருக்கலாம். ஆனால், அந்தப் பலம் யாருக்காக — எதற்காகப் பயன்படுத்துவது என்பது பற்றி விளங்கிக் கொள்ளாமலும் விளக்கிச் சொல்லாமலும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மத்திய அரசுக்கு வலிவு தேவை என்றால், நிச்சயம் அந்த வலிவைத் தேடித்தரத் தயார்.

இப்படி கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலையில் இருந்து, காட்பாடி சிறு தொழிற்சாலை வரை எல்லாவிதமான சிறு விஷயங்களிலும் மத்திய அரசே அதிகாரத்தை வைத்துக் கொண்டிருப்பதன் விளைவு, பெரிய விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும் என்பதால்தான், அதிகாரங்கள் டில்லியில் குவிக்கப்படக்கூடாது என்கிறோம்.

ஆகவே, வலிவான மத்திய அரசு தான் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்பது தவறு. மாநில சுயாட்சி தர தயக்கம் காட்டுவார்களேயானால், அளவுக்கு மீறிய அதிகாரங்களைத் தாங்கித் தாங்கிப் பாதுகாப்புப் போன்ற பெரிய விஷயங்களில் சோடை போய் விடுவார்களோ என்பதுதான் எங்கள் சந்தேகம்.

மேல் அதிகாரம் அனைத்தும் டில்லியில் இருப்பதை மாற்றிடத்தான், மாநில சுயாட்சித் தத்துவம் பிறந்துள்ளது.

(தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா அவர்கள் 28.7.1968 அன்று சென்னையில் ஆற்றிய உரை இது)

❖❖❖❖❖

ற்போதுள்ள அரசமைப்புச்
சட்டத்தை ஆராய்ந்து மாநில
மத்திய அரசுகளுக்குள்ள அதி
காரப் பங்கீடுகளை மாற்றி அதிக
அதிகாரங்களை மாநிலங்
களுக்கு தரவேண்டும்.

அதற்கான ஒரு தேசிய
குழு நியமித்து ஆராய
வேண்டுமென்று நிருவாகச்
சீர்த்திருத்தக் குழுவிடம் நான்
யோசனை தெரிவித்துள்ளேன்.

–அறிஞர் அண்ணா

(இந்நூல் பக்கம் 23)