திருக்குறளில் செயல்திறன்/பக்கம் 07-14

திருக்குறளில் செயல்திறன்


எண்ணங்களைக் கோடிக் கணக்கில் எண்ணுகிறோம்;
எழுத்துக்களை இலட்சக் கணக்கில் எழுதுகிறோம்;
பேச்சுக்கனை ஆயிரக் கணக்கில் பேசுகிறோம்;
கொள்கைகளை நூற்றுக் கணக்கில் கூறுகிறோம்;
திட்டங்களை பத்துக் கணக்கில் வகுக்கிறோம்;
செயலில் ஒன்றையாவது உருவாகச் செய்வதில்லை.


இதைத் திருவள்ளுவர் நன்றாக உணர்ந்திருக்கிறார் என்று தெரிகிறது. திருவள்ளுவர் தமிழகத்துச் சான்றோர்களில் தலைசிறந்த பேரறிஞர்.

மனிதன் மனிதனாகப் பிறந்தும் பறவையைப்போல வானத்தில் பறக்கக் கற்றுக்கொண்டிருக்கிறான்; மனிதன் மனிதனாகப் பிறந்தும் மீனைப்போலத் தண்ணிரில் நீந்தக் கற்றுக்கொண்டிருக்கிறான்; மனிதன் மனிதனாகப் பிறந்தும் மனிதனைப்போலத் தரையில் நடக்கக் கற்றுக் கொள்ளவில்லையே என்று வருந்தியிருக்கிறார். அதன் விளைவுதான் திருக்குறள். 

திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன. ஆனால் தலைப்புக்கள் 133 இல்லை, குறிப்பறிதலுக்கு இரண்டு தலைப்புக்கள்; நட்புக்கு ஆறு தலைப்புக்கள் (நட்பு, நட்பு ஆராய்தல், பழைமை, தீ நட்பு, கூடாநட்பு, சிற்றினம் சேராமை); செயல் திறனுக்குப் பன்னிரண்டு தலைப்புக்கள். இதிலிருந்து வள்ளுவர் செயல்திறனை மக்களாய்ப் பிறந்தவர்கள் கட்டாயம் பெற்றாக வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார் என நன்கு தெரிகிறது.

அத் தலைப்புக்களிலும் கால் பகுதியில் மூன்று ஆள்வினை உடைமை, இடுக்கண் அழியாமை, ஊக்கம் உடைமை—என்பன.

அரைப்பகுதியில் மூன்று; தெரிந்து செயல்வகை, தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல்—என்பன.

முக்கால் பகுதியில் மூன்று; வலியறிந்து செய்தல், காலம் அறிந்து செய்தல், இடன் அறிந்து செய்தல்— என்பன.

முழுப்பகுதியில் மூன்று; வினைத்தூய்மை, வினைத்திட்பம், வினை செயல்வகை—என்பன.

திருக்குறளில் எந்தப் பொருளுக்கும் இத்தனை தலைப்புக்களில்லை, இதிலிருந்து மக்களாய்ப் பிறந்தவர்களுக்குப் பெரிதும் வேண்டுவது செயல்திறனே என்று தெரிகிறது.

செயல்திறனைப் பன்னிரண்டு தலைப்புக்களில் நூற்று இருபது குறள்களில் மட்டும் வள்ளுவர் விளக்கவில்லை. "செய்" என்ற சொற்களும், அதைத்தழுவிய சொற்களுமாக 53 சொற்களை 215 குறள்களில் பதித்துச் செயல்திறனைப் புகுத்தியிருக்கிறார், அவையாவன:— “செய்” என்ற சொல்லின் குறள்கள் 110, 265, 455, 463, 466, 653, 663, 677, 972.
9


“செய” என்ற சொல்லின் குறள்கள் 446, 466, 1001, 1021
4


“செயப்பட்டார்” 105, “செயல்” 67, 316, 318, 409, 437, 470, 538, 634, 664, 672, 677, 832, 835, 894, 905, 975. 33, 333, 461, 471, 439, 516, 518, 637, 668, 673, 675, 676, 948. 949
31


“செயலின்” 679, “செயற்கு” 26, 375, 781
4


“செயற்கை” 637, “செயிர்” 330, “செயிரின்” 258, “செயிர்ப்பவர்” 880
4


“செயின்” 104, 109, 116, 120, 150, 175, 181, 308, 483, 484, 493, 494, 497, 537, 547, 586, 804 805, 808, 852, 881, 965, 1257, 1288
24


செயும்" 219, செய்க 36, 512, 669, 759, 893
6


செய்கலாதார் 26, செய்கலான் 848, செய்கிற்பாக்கு 515 செய்கை 631
4


செய்க 101, 102, 103, 109, 312, 1175, 1176, 1225
8


செய்தது 1240, 1279, செய்தபின் 313
3


செய்தல் 274, 843, 954, 1090, 1226, செய்தலால் 1201
6


செய்தலின் 182, 192, செய்தற்கு 489, செய்தற்பொருட்டு 81, 212
5


செய்தார் 208, 320, செய்தாரை 158, 314 செய்தார்கள் 1243
5
செய்தார்க்கு 658, 987, 1162
3


செய்து 118, 246, 289, 303, 314, 388, 551, 563, 660, 803, 815, 829, 878, 907, 934, 1025, 1028, 1035, 1073, 1275, 1294,
21


செய்ப 11, 95 செய்யப்படும் 335, செய்யவ 1086 செய்யவர் 167
4


செய்யற்க 205, 206, 327, 590, 655, 656
6


செய்யா 203, 548, 553, 558, 569
5


செய்யாக்கால் 987, செய்யாது 255, 219, 437, 538
5


செய்யாமல் 101, 313, செய்யாமை 157, 261, 297, 311, 312, 317, 655, 852
10


செய்யாமையால் 466, செய்யார் 164, 172, 173, 174, 320, 654, 699, 956, 962
10


செய்யான் 865, செய்யின் 157, 205, 319, 559, 590, 807, 1283
8


செய்யும் 57, 79, 232, 574, 803, 941, 249, 554, 572, 700, 735, 754, 1208, 631
14


செய்வார் 29, 266, 584
3


செய்வாரின் 295, செய்வார்கள் 909
2


செய்வார்க்கு 120, 462, 998, 1028
4


செய்வான் 520, 677, 758, 867
4


செய்வானேல் 655, செய்வானை 516; செய்வேன் 1221
3


ஆகச் சொற்கள் 53; குறள்கள் 215

திருவள்ளுவர் கருத்துக்களைக் கூறும் முறை ஒரு தனி முறை, அது ஒன்றை மிகமிக உயர்த்திக் கூறி மற்றொன்றால் அதை அழித்துக் காட்டுவது; இராவணனின் வீரத்தைப் புகழ்வதெல்லாம் இராமனின் வீரத்தை உணர்த்தவே என்பதுபோல.

       "ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
        சூழினுந் தான் முந் துறும்" (380)

வள்ளுவர் ஊழின் வலிமையை மிகமிக உயர்த்திக் காட்டியிருப்பதெல்லாம், முயற்சியின் அருமையையும் பெருமையையும் காட்டுதற்கே, இவ் வுண்மையை.

       "ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
        தாழாது உஞற்று பவர்" (620)

என்ற குறளால் அறியலாம்.

       "பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை" (247)

என்றும்,

       "பொருள் அல்லவரை ஒரு பொருளாகச் செய்யும்
        பொருள் அல்லது இல்லை பொருள்" (751)

என்றும்,

       "அறம் ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
        தீதின்றி வந்த பொருள்" (754)

என்றும், பொருட்செல்வத்தை மிகமிக உயர்த்திக் கூறியிருப்பதெல்லாம், அருட்செல்வத்தின் உயர்வைக் காட்டுவதற்காகவே,

       "அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
        பூரியார் கண்ணும் உள." (241)

என்ற குறளால் அருட்செல்வந்தான் மிகமிக உயர்ந்த செல்வம் ஆகும் என உணர்த்துகிறார். ஏனெனில் "பொருட்செல்வம் அயோக்கியர், பொய்யர், சூதர், கொலையர், மூடர் ஆகியோரிடத்தும் இருக்கும். அருட்செல்வம் ஒருக்காலும் அவர்களிடத்தில் போய்ச்சேராது; அவர்களைத் திரும்பியும் பார்க்காது" என்ற இக்குறள் பொருட்செல்வத்தின் உயர்வை அழித்துக் காட்டுவதை நன்கு அறியலாம்.

இவை போலவே, "சொல்லின்" அருமை பெருமைகளை,

       "சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
        இகல்வெல்லல் யார்க்கும் அரிது" (647)

என்றும்,

       "நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
        யாநலத்து உள்ளதூஉம் அன்று" (641)

என்றும், மிகமிக உயர்த்திக் கூறியிருப்பதெல்லாம், செயலின் வலிமையை உயர்த்திக் காட்டவே ஆகும். இதனை,

       "சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
        சொல்லிய வண்ணம் செயல்" (664)

என்ற குறளால் சொல்லின் பெருமையை அழித்துக் காட்டுவதால் நன்கு அறியலாம்.

ஆம்! மலையளவு பேசுவதைவிட கடுகளவு செய்வது நல்லது என்பது சான்றோர் கருத்து. கோடை இடிஇடிப்பதினாலேயே குளம் நிறைந்துவிடுவதில்லை. மழை பெய்தால்தான் குளம் நிறையும். இதை மற்றவர்கள் உணராவிட்டாலும் கோடையிடிப் பேச்சாளர்களாவது உணர்வது நல்லது!

"யார் பெரியர்?" என்பது ஒரு கேள்வி. இதற்குப் பலர் பலவாறு விடைகூறுகின்றனர். நாமே ஒருகாலத்தில் பணக்காரரைப் பெரியவர் என்று நினைத்தோம். அடுத்து நிலக்காரரைப் பெரியவர் என்று நினைத்தோம். பின் படித்தவர், பட்டம் பெற்றவர், பதவீயிலிருப்பவர் பெரியவர் என எண்ணினோம். கொஞ்ச காலத்துக்குமுன் எழுத்தாளரையும் பேச்சாளரையும் பெரியவர் எனக் கருதினோம். இப்போது வயதுமுதிர்ந்த கிழடுகள்தாம் பெரியவர்கள் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம். திருவள்ளுவர் உள்ளம் இவற்றில் எதையும் ஒப்பவில்லை. யார் பெரியர்? என்ற கேள்விக்கு அவர் கூறுகின்ற விடை பணத்தர் அல்லர்; நிலத்தர் அல்லர்; படித்தர் அல்லர்; எழுத்தர் அல்லர்; பேச்சர் அல்லர்; "செய்வார் பெரியர்" என்று கூறுகின்றார். இவ்வுண்மையை,

        "செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர்
         செயற்கரிய செய்கலா தார்" (26)

என்னும் குறளால் அறியலாம். இதிலிருந்து வயதில் பெரியவர்கள் ஆனாலும், செயல்திறன் இல்லாதவர்கள் சிறியவர்களே என்று தெரிகிறது.

மனுநீதியில் பிறப்பை முன்வைத்து உயர்வு தாழ்வு கூறி, பெரியவர் சிறியவரைச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒளவையார் அறத்தை முன் வைத்து "இட்டார் பெரியோர் இடாதார் சிறியோர்" எனக் கூறியுள்ளார். வள்ளுவர் செயல்திறனை முன்வைத்துச் "செய்வார் பெரியர் செய்யார் சிறியர்" எனக் கூறுகிறார். இது நம்மை மகிழ்விக்கிறது.

"செயற்கரிய செய்கலாதார்" எனும் இரண்டாவது அடியில் உள்ள "க" எழுத்திற்கு மாறாக "கு" என்ற எழுத்தை அமைத்தால், பொருள் இன்னும் நன்றாக அமையும். "செயற்கரிய செய்வார் பெரியர்" என்று சொல்லிவிட்டபொழுதே, அப்படிச் செய்யாதவர் சிறியர் என்ற பொருள் அடங்கிவிட்டது. மீண்டும் சிறியர் செயற்கரிய செய்யமாட்டார் என்று சொல்லவேண்டியதில்லை. இது கூறியது கூறல் என்ற குற்றத்தின்பாற்படும். திருவள்ளுவர் இத் தவறை ஒருபோதும் செய்திருக்கமாட்டார்.

கரையான்கள் செய்த பிழையோ, ஏடு எடுத்து எழுதியவர் பிழையோ, அச்சுக்கோப்பவர் பிழையோ இதில் புகுந்திருக்கிறது எனத் தெரிகிறது.

"செயற்கரிய" என்பதைச் "செயற்குரிய" எனக் "க" வைக் "கு" ஆக மாற்றியதும், எவராலும் செய்ய இயலாத பெரிய காரியத்தைச் செய்பவர்கள் பெரியவர்கள் என்றும், எல்லோராலும் எளிதாகச் செய்வதற்குரிய சிறிய காரியத்தையும் செய்ய முடியாதவர்கள் சிறியர் என்றும் பொருளாகிறது. இது செயல்திறனை நன்றாக விளக்கிக்காட்டுவதாக இருக்கிறது. அறிஞர் பெருமக்கள் விரும்பினால் இம் மாற்றத்தைச் செய்யலாம்.

திருக்குறளில் செயல்திறன் மிக விரிவாக, தக்க உவமைகளோடு காட்டப் பெற்றிருக்கிறது. திருக்குறளில் பல இடங்களில் உவமையாகப் பசு, புலி, மான், எலி, நாகம், அன்னம், ஆமை, சிங்கம், காகம், கூகை, முதலை, கொக்கு, புழு முதலியவைகள் வந்து விளையாடுகின்றன.