திருக்குறள், மூலம்/குற்றம் கடிதல்
44. குற்றங் கடிதல்
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து. 431
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு. 432
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார். 433
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை. 434
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். 435
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு. 436
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும். 437
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று. 438
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை. 439
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல். 440