திருக்குறள் கட்டுரைகள்/கயமை

கயமை


உடுப்பதூஉம் உண்பது உம் காணிற் பிறர்மேல்
வடுக்காண வற்றாகுங் கீழ்

என்பது திருக்குறளில் ஒரு குறள். இது கயமை என்ற அதிகாரத்தின் கீழ் வந்த ஒன்று.

பிற மொழிகளால் மொழி பெயர்க்க முடியாத தமிழ்ச் சொற்கள் பல. அவற்றுள் மகளின் இயல்பைக் குறிப்பிடும் சொற்கள் சில. அவற்றுள் ஒன்று ‘சான்றாண்மை’ என்று முன் கூறினோம்: மற்றொன்று ‘கயமை’.

‘சான்றாண்மை’ என்பது உயர்ந்த தன்மையின் முடிவான எல்லையையும், ‘கயமை’ என்பது இழிந்த தன்மையின் கடையான எல்லையையும் காட்டும். இதனைத் தமிழ் மக்கள் கண்ட அளவிற்குப் பிற மக்கள் காணவில்லை. தமிழ் கண்ட அளவிற்குப் பிற மொழிகள் காணவில்லை. அதனால் இவற்றை மொழிபெயர்க்கும் ஆற்றலை அவை இழந்து நிற்கின்றன. இது தமிழ் மக்களுக்கு, தமிழ் மொழிக்கு உள்ள ஒரு தனிச் சிறப்பாகும்.

இழிந்த குணத்திலும் ஓர் இழிந்த தன்மையையே வள்ளுவர் ‘கயமை’ என்று கூறுகிறார். கயமைக் குணம் உடைய மக்களையே அவர் கயவர் எனக் குறிப்பிடுகிறார். சயவர் யார்? என்பதை இக் குறள் காட்டுகிறது, காணுங்கள்.

கீழ் என்பது இரண்டே எழுத்துள்ள ஒரு சொல்! அஃது இக் குறளின் இறுதியிலிருந்து ஒரு தனியாட்சி செய்து கொண்டிருக்கிறது. இதன் வெளிப்படையான பொருள் கீழானவன், தாழ்ந்தவன், இழிந்தவன் கயவன் என்பன. இச் சொற்களால் கூறினாற் கயவனை ‘மனிதன்’ என ஒப்புக்கொண்டதாக ஆகிவிடுமாம். ஆகவே, அவ்வாறு கூற விரும்பாமல், வள்ளுவர் அதனைக் கீழ் என்று அஃறிணைப் படுத்தியே கூறிவிட்டார். பாவம்! இஃது இரங்கத்தக்க ஒன்றாகும்.

கயவனைக் ‘கீழ்’ என்றது இக்குறளில் மட்டுமன்று. இதனொடு தொடர்புடைய மற்றிரு குறள்களிலும் “கீழ்” வருகிறது. ஒரு கீழ், குறைந்த தீமை விளைவிக்கும் மக்களைக் கண்டதுமே அவர்களைவிடத் தீமை விளைவிப்பதில், ‘தான் உயர்ந்தது’ என எண்ணி இறுமாப்புக் கொள்ளுமாம். மற்றொரு கீழ் தன்னிடம் வந்து அழுது கெஞ்சி, உதவி கோரும் எவர்க்கும் எதுவும் கொடாமல் அடித்து உதைக்கவரும் முரடர்கட்கு நிறையக் கொடுத்து உதவுமாம். ஆனால் இக் குறளில் உள்ள கீழோ, பிறர் வாழ்வதைக் கண்டதுமே மனம் பொறுக்காமல் துடிக்குமாம். எப்படி இக்கீழின் இழிநிலை?

கயவனைக் “கீழ்” என்று ஒருமையில் மட்டும் குறிப்பிடவில்லை. பன்மையிலும் அவர்களைக் “கீழ்கள்” என்று மற்றொரு குறளிற் குறிப்பிட்டிருக்கிறார். இதிலிருந்து கீழ்கள் ஒரு கூட்டமாகச் சேர்ந்து வாழும் என நம்ப வேண்டியிருக்கிறது. இதுகளிடத்தில் ஒழுக்கம் என்பது அடியோடு இராது. எப்போதாவது சிறிது காணப்பெற்றால் அது அடி விழும் தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தினாலோ பொருள் முதலிய எதுவும் கிடைக்கும் என்ற ஆசையினாலோ இருக்குமேயன்றி அதன் இயல்பாக இராது” என்று கீழ்களுக்கு கூறும் இலக்கணமே ஒரு தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. .

ஏறக்குறைய 4300 சொற்களுள்ள குறளில் கீழ் என்ற சொல் 10இடங்களில் மட்டுமே வருகிறது. அவற்றில் இழி குணம் என்ற பொருளில் வந்த சொற்கள் நான்கே. இந்த நான்கிலும் எந்த ஒன்றையும் மக்களின் வேறு எந்தக் குணத்திற்கும் வழங்காமல், கயமைக் குணத்திற்கே வள்ளுவர் வழங்கிவிட்டது எண்ணி எண்ணி வியக்கக் கூடியதாகும்.

கயவர் வேறு, தீயவர் வேறு என்பது வள்ளுவர் கருத்து. தீயோர்கள், நல்லதோ கெட்டதோ ஒன்றைச் செய்யும் ஆற்றுல் படைத்தவர். கயவர்கட்கு அந்த ஆற்றலும் இராது. தீமையைச் செய்ய எண்ணுவார்கள். சொல்வார்கள். அவ்வளவுதான். அவர்களால் எதுவுஞ் செய்ய இயலாது. இவ்வுண்மையை “எற்றிற்கு உரியர் கயவர்?” என்பதனால் நன்கறியலாம். இதனால் இக் கீழ்களைத் “தீயோர்க்கும் கீழ்” என்று கூறியதாகவே கொள்ள வேண்டியிருக்கிறது.

எதற்கும் உதவாத இக்கீழினிடத்தில் ஒரு வலிமை மட்டுங் காணப்படுமாம். இதனை “வற்றாகும் கீழ்” என்ற சொற்கள் அறிவிக்கின்றன. வற்று-வலிமை! என்ன வலிமை? ஒருவர்மீது மற்றவரிடம் குறைகூறி, அதை அவர் நம்பும்படி செய்துவிடுவது. எப்படி இக்கீழின் வலிமை?

ஒருவர்மீது குறை கூறுவதற்கு அவர்கள் உண்மையாகவே தவறு செய்திருக்கவேண்டும் என்பதில்லை. ஏனெனில், பழிபாவங்களுக்கு அஞ்சி நடக்கவேண்டுமே என்ற கவலை எப்போதும் கீழுக்கு இராது. ஆகவே, அக்கீழ் ‘இல்லாத குறையைக்கூடக் கற்பனை செய்து கூறி, எவரையும் நம்பவைத்துவிடும்’ என்பது வள்ளுவர் கருத்து. இதனை இக்குறளிலுள்ள ‘வடு, காண’ என்ற இரு சொற்களும் அறிவித்துக் கொண்டிருக்கின்றன.

கயமை வேறு, பொறாமை வேறு. பொறாமைக்காரர்களுக்கு மற்றவர் எவரும் வண்டி, வாகனம், நீர், நிலம், பொன், பொருள் முதலியவைகளை வைத்து வாழ்வது பிடிக்காது. ஒன்றுமில்லாவிட்டாலும் பெருமூச்சு விட்டுப் பொறாமை அடைவதற்குப் பட்டாடையும், பாலுணவு மாவது கண்டாக வேண்டும். ஆனால் கயத்திற்கு அதுவுந்தேவையில்லை. வெள்ளைத்துணியை உடுத்தி, வெறுஞ்சோற்றை உண்பதைக் காண்பதே போதுமானதாம். உடனே குறை கூறத் தொடங்கி விடுமாம். இவ்வுண்மையை, ‘உடுப்பதுவும் உண்பதுவும் காணில்’ என்ற சொற்றொடர் அறிவிக்கின்றது. இதனால் இக்கீழ்களைப் பொறாமைக்காரர்களுக்கும் ‘கீழ் என்று கூறியிருப்பதாகவே கொள்ளவேண்டியிருக்கிறது.

உடுத்திய துணி உடற்புண்ணை மறைப்பதற்காக இருந்தாலும், உண்டது உணவாக இல்லாமல் மருந்தாக இருந்தாலும், அதைக் காணுகின்ற கயவர்கள் அவற்றை உணவும் உடையும் என்றே எண்ணி மனம் பொறுக்கார்களாம். இப்பொருளை இக்குறளிலுள்ள திருக்குறளிலுள்ள “காணின்” என்ற சொல்லே காட்டும். இன்றேல் அஃது “அறியின்” என்று இருந்திருக்கும். இதிலிருந்து இக்கீழ்களை அறியா மைக்கும் ‘கீழ்’ என்று கூறியதாகவே கொள்ளவேண்டியிருக்கிறது!

கொடியவர்கள் தங்கட்குப் பிடிக்காதவர்களிடம் நேரிற் சென்று வைதோ, அடித்தோ, வருத்தித் தமது வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்வார்கள். ஆனால் கயவர்கள் தங்கட்குப் பிடிக்காத மக்களிடம் நேரிற்செல்ல அஞ்சிப் பிறரிடஞ் சென்று குறைகூறிக் கொண்டேயிருப்பார்களாம். இதனால் இக் கீழ்களைக் கொடியர்க்கும் கீழ் என்று கூறியிருப்பதாகவே கொள்ள வேண்டியிருக்கிறது.

கருமித்தனம் வேறு: கயமைத்தனம் வேறு. கருமிகளுக்கு இலக்கணம் “எச்சில் கையாலுங் காகம் ஒட்ட மாட்டார்கள்” என்பதே. ஆனால் கயவர்களோ-உண்டு கழுவிய ஈரக் கையைக்கூட இரப்போர்முன் உதறமாட்களாம். காரணம், உதறினால் கையிலுள்ள தண்ணீர் இரப்போர்முன் சென்றுவிழும் என்பதே. இதனால் இக் கீழ்களைக் கருமிகளுக்கும் ‘கீழ்’ என்று கூறியிருப்பதாகவே கொள்ளவேண்டியிருக்கிறது. “ஈர்ங்கை விதிரார் கயவர்” என்பது வள்ளுவர் வாக்கு.

கொம்புளதற்கு ஐந்து முழம், குதிரைக்குப் பத்து முழம், யானைக்கு ஆயிரம் முழம் எட்டியிருக்க வேண்டும் என்பது ஒரு புலவரின் கருத்து. “காணின் துன்புறுத்துவர்” என்று இக் குறள் கூறுவதால், ‘கயவர்களின் கண் காணாத் தூரத்திலேயே வாழவேண்டும்’ என்பது வள்ளுவர் கருத்து என்று தெரிகிறது. இதிலிருந்த இக் கீழ்களை விலங்குகளுக்கும் “கீழ்” என்று கூறியிருப்பதாகவே கொள்ளவேண்டியிருக்கிறது.

கயவர்கள் யார்? அவர்கள் எப்படி இருப்பார்கள்? என்பதை நமக்கு விளக்கவந்த வள்ளுவர், அவர்கன் மனிதர்களைப் போலவே இருப்பார்கள் என்று கூறியிருப்பதிலிருந்து, ‘கயவர்கள் மனிதர்கள் அல்லர்’ என்பது வள்ளுவரது முடிந்த முடிவு என்பது நன்கு விளங்குகிறது. காரணம் அவர்கள் உருவத்தால் மக்களாகக் காணப்பட்டாலும், மக்கட்பண்பு அவர்களிடம் காணப்படாமையே யாகும்.

“பழிக்கு அஞ்சி நடக்க வேண்டும்” என்ற கவலையே நெஞ்சத்திலில்லாது வாழ்வதால், கயவர்கள் “புண்ணியர்”களைப் போலவும், ஏவுவார் அடக்குவார் எவருமின்றித் தம் மனம் போனபடியெல்லாஞ் செய்வதால் கயவர்கள் “தேவர்”களைப் போலவுங் காணப்படுவார்கள் என்று, வள்ளுவர் இக்கீழ்களைக் குறிப்பிடுவது நகைச்சுவையிலும் ஒரு புதிய சுவையை உண்டுபண்ணிக் காட்டுகிறது.

“காணின், காண,” என்ற இரு சொற்களும். இக் குறளிலிருந்து ஒரு விரைவைக் காட்டுகின்றன. “கயவர்கள் நலம் கண்டதுமே குறைகாண விரைவார்கள்” என்பது இதன் பொருள். கயவர்களின் விரைவை வள்ளுவரும் விரைந்து காட்டியிருப்பது நம் உள்ளத்தை யெல்லாம் மகிழ்விக்கிறது.

“உடையைக் கண்டு, உணவைக் கண்டு” என்று கூறாமல், உடுப்பதைக் கண்டு, உண்பதைக் கண்டு என்று வள்ளுவர் கூறியிருப்பது பொருள் அமைதியுடையதாகும், பின்னதற்குப் பெயர் ஆசையாகாமல், கயமையாகவே அமைவதைக் கண்டு களியுங்கள்.

“மக்கள் என்பவர் தம்மிடத்து உள்ள குறைகளையே காணத் துடிப்பவர். ‘கயவர்’ என்பவர் அவ்வாறு இல்லாமல், சும்மாவும் இராமற் பிறரிடத்து இல்லாத குறைகளையுங்காணத் துடிப்பவர்” என்பது இக் குறளின் கருத்து. இவ்வுண்மையை இக் குறளிலுள்ள “பிறர்மேல் வடுக்காண” என்பது நன்கு விளக்கிக் கொண்டிருக்கிறது.

பொறாமை, புறங்கூறல் தீமை முதலிய பல தீச் செயல்களை வெறுத்து ஒதுக்கக்கூடிய அறத்துப்பாலிலும் கயமையைப் பற்றிக் கூற வள்ளுவர்க்கு மனமில்லை யென்று தெரிகிறது. பொருட்பாலிலுங்கூட முதலில் இடையிற் கூறாமல் கடைசி அதிகாரமாகவே கூறியிருப்பதிலிருந்து, கயவர்களை வள்ளுவர் கீழ்களுக்கெல்லாம் மிக்க கீழாகக் கருதியிருக்கிறார் என்பது நன்கு விளங்குகிறது.

கயமைக்குணம் ஆண்களிடத்தில் மட்டுமின்றி பெண்களிடத்துங் காணப்படும். அவர்கள் கயவர்களல்லர்; கயத்திகள். கயவன், கயத்தி ஆகிய இருபாலரையுஞ் சேர்த்து வள்ளுவர் ‘கீழ்’ என்றார். நாலடி நூல் மிக நயமாக ‘கயம்’ என்கிறது. எங்கள் வீட்டுக் குழந்தை இதுகளை “108” என்கின்றனர். காரணம் இவ்வதிகாரத்தின் எண் “108” என்பதே.

கயத்தை எவ்வாறு தண்டிப்பது என்பதை ஆசிரியர் நல்லாதனார் ஆராய்ந்து கூறியிருக்கிறார் அஃது ‘இரும் பிற் பிணிப்பர் கயத்தைச் சான்றோரை நயத்திற்பிணித்து விடல்” என்பதே. இது கயத்தையும், நயத்தையுங் காட்டுவதோடு நமக்குள் ஒரு பயத்தையும் உண்டு பண்ணி விடுகிறது.

நூற்றியெட்டை மறவாதீர்கள். எப்போதும் விழிப்பாயிருங்கள். உங்கள் உள்ளத்தில் அதுகளை துழைய விடாதீர்கள். உங்கள் உள்ளத்தில் மட்டுமல்ல, வீட்டில், வீதியில், நாட்டில், நகரில் உள்ள எவ்விடத்திலுமே இக் கீழ்களை நுழையவிடாதீர்கள். எங்கேனும் கண்டு விட்டால் உடனே விலகுங்கள்.

கயமைக் குணம் உடையவரை வெறுக்கக் கற்றுக் கொள்ளுவதும், நம் உள்ளத்திலேயே அக் குணம் தோன்றுவதாக நமக்குத் தோன்றினால் வெட்கித் தலைகுனிவதும் ஒரு பண்பு ஆகும். நாடு நலம் பெற மக்கள் நல்வாழ்வு வாழ, நாம் அனைவரும் இந்நற்றொண்டைச் செய்தாக வேண்டும். இன்றேல் இவ்விரண்டுமே கீழ் ஆகிவிடும்.

கயம் நுழையும் உள்ளத்தில்
கயம் நுழையாது;
கீழ் வாழும் இல்லத்தில்
மேல் வாழாது!