திருக்குறள் கட்டுரைகள்/சொல்லும் செயலும்
சொல்லும் செயலும்
இன்னாசிமுத்து உபதேசியார் என்றால் ஈச்சம்பட்டி மக்கள் அனைவர்க்கும் நன்கு தெரியும். அவருக்கு பைபிள் மனப்பாடம்; எந்த வசனத்தையும் அவர் பாராமல் ஒப்புவிக்கும் ஆற்றல் படைத்தவர். சிற்றூர்களுக்குச் சென்று பாமர மக்களுக்கு பைபிளைப் போதித்து வர ஒரு உபதேசியார் தேவை என்று சாண்டகிரின் பாதிரியார் அந்த வட்டத்து ‘நாட்டய்யர்’ அவர்களிடம் கூறியிருந்தார். ஆதலால் அவருடைய பரிந்துரையின்பேரில் அந்த வேலை இன்னாசி முத்து உபதேசியாருக்கே கிடைத்து விட்டது.
அவர் ஒரு நல்ல பேச்சாளி; அவருடைய உணர்ச்சி கலந்த பேச்சு எவருடைய உள்ளத்தையும் உருக்கிவிடும். அவரது அருமையான தொண்டு காரணமாக ஊர்மக்கள் பலரும் கிறிஸ்து சமயத்தைப் பற்றி நன்கறிந்து கொண்டார்கள். சிலர் கிறிஸ்தவராகவும் மதம் மாறினர். சிலர் மதம் மாறும் நிலையிலும் இருந்து வந்தனர்.
இந்த நிகழ்ச்சி பனைமரத்துப்பட்டியிலுள்ள பரம சிவம் பிள்ளைக்கு ஒரு கலக்கத்தை உண்டு பண்ணி விட்டது. அவர் சிவபக்தியுள்ள ஒரு பெரிய நிலக்கிழார். இன்னாசிமுத்து உபதேசியாரின் பேச்சால், பிரசாரத்தால், இந்து மதமே அழிந்து போய்விடும் என்ற பயமும் அவருக்கு வந்து விட்டது. ‘இதற்காக என்ன செய்ய லாம்?’ என ஆலோசித்தார். கூட்டினார் ஊர்க் கூட்டத்தை.
இறுதியாக சென்னையிலிருந்து ஒரு நல்ல பேச்சாளியை வரவழைப்பதென்றும், அவரைக் கொண்டு எல்லாக் கிராமங்களிலும் திருக்குறள் பிரசாரம் செய்வது என்றும், அவருக்குக் கொடுக்க வேண்டிய சம்பளத்தைப் பனைமரத்துப் பட்டி பரமசிவம்பிள்ளையே கொடுப்பது என்றும் முடிவு செய்யப் பட்டது-அடுத்த நாளே யாவும் திட்டப்படி நடை பெறத் தொடங்கிவிட்டன.
பட்டினத்திலிருந்து வந்த பழனியப்ப முதலியாருக்கு ‘திருக்குறள் பிரசங்கியார்’ என்ற மறு பெயரும் உண்டு எல்லாப் புலவர்களையும்போல அவரும் வறுமை வாய்ப்பட்டு வாடி வருந்தி வந்தவர். இருந்தாலும் பரமசிவம் பிள்ளையின் ஆக்கமும் ஊக்கமும், அவருக்கு ஆறுதலும் தேறுதலும் அளித்தன அவர் பல்வேறு கிராமங்களுக்கும் சென்று, தனது வேலைகளை மிகத் திறமையாகச் செய்து வந்தார்.
ஈச்சம்பட்டியைவிட்டு இன்னாசிமுத்து உபதேசியார் ஏழெட்டு ஊர்களுக்குச் சென்று வந்தால், பனைமரத்துப் பட்டியைவிட்டு பழனியப்ப முதலியார் பத்துப்பதி னைந்து ஊர்களுக்குப் போய் வருவார் உபதேசியார் பைபிளைப் பற்றியும் பிரசங்கியார் திருக்குறளைப் பற்றியும் தகுந்த மேற்கோள்களுடன் அழுத்தந் திருத்தமாய்ப் பேசி, கிராம மக்கள் மனதில் நன்கு பதியவைத்து வந்தனர்.
காலப் போக்கில் பிரசாரம் போட்டிப் பிரசாரமாக மாறிவிட்டதால், ஒருவர் பேச்சை மற்றொருவர் கண்டித்துப் பேசுவது இயல்பாகவே நடைபெறத் தொடங்கிவிட்டது. இதற்காகப் பிரசங்கியார் பைபிளையும், உபதேசியார் திருக்குறளையும் ஆழ்ந்து படித்து ஆராயத் தொடங்கினர். அந்த ஆராய்ச்சி அவர்களின் பேச்சுக்குப் பெருந்துணையாக இருந்து வந்தது.
“இரு பேச்சர்ளிகளும் எந்த ஊரிலும் நேருக்கு நேராகச் சந்திக்கவில்லை. வாது புரியவுமில்லை. ஒருவரை ஒருவர் அறியார்” என்பது தான் ஊராரின் நம்பிக்கை. உண்மையில் உபதேசியாரின் பேச்சுமுறை எப்படி? என்பதைப் பிரசங்கி யாரும், பிரசங்கியாரின் பேச்சுப்போக்கு எத்தகையது? என்பதை உபதேசியாரும் ஒளிந்திருந்து பலமுறை கேட்டிருக்கிறார்கள் என்பதை ஊரார்கள் எப்படி அறிவார்கள்?
ஒருவர் பேச்சை ஒருவர் கேட்டப்பிறகு பேசத் தொடங்கியதால், அவர்களின் பேச்சு முறையிலேயே ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டுவிட்டது. திருக்குறள் பிரசங்கியார் தமது பேச்சில் திருவள்ளுவர் கூறிய நீதிநெறிகளையே அதிகமாகப் பேசுவார் என்று தெரிந்ததும், இன்னாசிமுத்து உபதேசியார் ஏசுபெருமான் கூறிய நீதிநெறிகளை ஏராளமாகக் கூறத் தொடங்கி விட்டார். இதனால், கிராமங்களிலுள்ள பொதுமக்கள் இவர்கள் இருவரையும் நன்கு வரவேற்று வந்தார்கள். “எந்த மதமானால்தான் என்ன? எந்தப் பிரசங்கமானால் தான் என்ன? கிராமத்தில் உண்மையும், ஒழுக்கமும், நிதியும், அன்பும் நிலைபெற்றாற் போதும்” என்பதே பொதுமக்களின் எண்ணமாக இருந்துவந்தது. சில கிராமத்தினருக்கு இப்பேச்சுகளைக் கேட்பது ஒரு பொழுது போக்காகவுங்கூட இருந்து வந்தது அதற்காக ஒவ்வொரு கிராமத்தினரும் தங்கள் ஊருக்கு எந்தப் பிரசங்கியார் வந்தாலும் மகிழ்வோடு வரவேற்று அன்போடு உபசரித்து அனுப்புவார்கள் அதிகமாகக் கூறுவானேன்? அடுத்த ஊருக்குப் போய்ச் சேர்வதற்கு என்று கட்டுச் சோறு கட்டிக் கொடுத்தனுப்புவது கூட, சில கிராமத்தினரின் வழக்கமாய்ப் போய்விட்டது.
பட்டப்பகல் 12 மணி, பங்குனி வெயில், நடந்த களைப்பு, பசி மயக்கம் இத்தனையும் சேர்ந்து வாட்டியது இன்னாசிமுத்து உபதேசியாரை. ஈச்சம்பட்டி போய்ச் சேர இன்னும் 3 கல் நடந்தாக வேண்டும் நடக்கவும் முடியவில்லை. நாவறட்சி வேறு என்ன செய்வார்? பாவம் கண்ணுக்கு எட்டிய தொலைவில் தினைச் செடிகளையும், தென்னை மரங்களையும் கண்டார். அங்குக் கட்டாயம் கிணறு இருக்கும் என நம்பித் தள்ளாடிச் சென்றார். அவர் எண்ணம் வீண்போகவில்லை கிணறும் இருந்தது. கிணற்று மேட்டில் திருக்குறள் பிரசங்கியார் தமது கட்டுச் சோற்றை அவிழ்த்து வைத்து உண்டு கொண்டிருந்தார். சோற்றையும், திருக்குறள் பிரசங்கியாரையும் கண்டதும் கட்டாயம் தமக்குச் சோறு கிடைக்கும், களைப்பும் ஒழிந்து விடும் என்று இன்னாசிமுத்து உபதேசியார் நம்பி, ஒருவாறு ஆறுதல் அடைந்தார். காரணம் தான் ஒளிந்திருந்து கேட்ட பிரசங்கத்தில் திருக்குறள் பிரசங்கியார் விருந்தின் பெருமையை எடுத்து விரிவாக விளக்கிப் பேசியிருந்தார் என்பதேயாகும்.
கட்டுச்சோறு கரைந்து கொண்டேயிருந்தது. திருக்குறள் பிரசங்கியார் இன்னாசிமுத்து உபதேசியாரை உணவு உண்ண அழைக்காதது மட்டுமல்ல, பாராமற்கூட உண்டு கொண்டேயிருந்தார். தான் வந்திருப்பது ஒரு வேளை அவருக்குத் தெரியாதோ? என எண்ணி அருகிற் போய் நின்றார். ஒரு கனைப்பும் கனைத்துப் பார்த்தார். என்ன செய்வது? இன்னும் ஐந்தாறு உருண்டைகளே எஞ்சியிருந்தன.
அதாவது கிடைத்தால் களைப்பு நீங்குமே என்றெண்ணிக் கட்டுச் சோற்றுக்கு எதிரிற் போய் உட்கார்ந்து பார்த்தார். இரண்டே உருண்டைகள் தானிருந்தன, இதுவும் போய்விட்டால். எப்படி ஊர்போய்ச் சேர்வது? என்ற கவலை இன்னாசிமுத்து உபதேசியாரை வாட்டி வதக்கியது. அறிமுகம் இல்லை. பேசவும் நாவெழவில்லை. கேட்கவும் வெட்கம் பசி மயக்கமும் மற்றொரு பக்கம். என்ன செய்வார்? திருக்குறளையாவது ஞாபகப்படுத்திப் பார்க்கலாம் என்று நினைத்து.
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற் பாற்றன்று
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன் றெரிவார்
எனக் கூறி நீட்டினார்.
எதிர்பாராத இச்செயலைக் கண்ட உபதேசியார் வெட்கிப் போனார். கிணற்றில் தட்டுத்தடுமாறி இறங்கி நீரருந்திக் களைப்பை மாற்றிக்கொண்டு, எவ்வாறோ ஈச்சம்பட்டிக்குப் போய்ச் சேர்ந்துவிட்டார்.
எண்ணி இருபத்தெட்டாம்நாள் திருக்குறள் பிரசங்கி பட்டினம் பழனியப்ப முதலியார் எங்கெங்கோ சுற்றி விட்டு, பகல் 1 மணிக்குப் பசிக்கு உணவு கிடைக்கும் என எண்ணிப் பயற்றம்பாறைக் கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். அன்று அவ்வூரில் திருவிழா ஆதலின், தேர் நிலைக்குப் போய் நின்ற பிறகுதான் அவ்வூரார்கள் சோறுண்டார்கள் என்றும், அது மாலை 4 மணி ஆகும் என்றும் தெரிந்ததனால், அங்கும் சிறிதும் நிற்காமல், மணல்மேடு கிராமத்திற்குப் போய்விடலாம் எனப் புறப்பட்டுவிட்டார். வழியில் களைப்பும், மயக்கமும் கலந்து கால்களைத் தள்ளாடச் செய்தன; “இன்னும் கால்மைல் தூரம் சென்றாலும் ஒரு காட்டாறு வரும்: அதில் ஊற்று இறைத்தேனும் நீரருந்தலாம்” என நம்பி, உயிரைப் பிடித்துக்கொண்டு உருண்டும் எழுந்ததும் ஒருவாறு போய்ச் சேர்ந்தார். கடைசியாக ஒரு ஆள் காட்டாற்றில் ஊற்று இறைத்துவைத்து அதனருகில் உணவு உண்பதையும் கண்டுவிட்டார். ‘உயிர் பிழைத்தோம்’ என எண்ணி. அவ்விடத்திற்கு மகிழ்ச்சியோடு ஓடிச் சென்று பார்த்தார்.
ஆம். அவர் இன்னாசிமுத்து உபதேசியார்தான். அவர் கட்டுச்சோற்றை அவிழ்த்துத் தமது வேலையைச் செய்து கொண்டிருந்தார். கதை எதற்கு? கடைசிலாவது தமக்குக் கொஞ்சம் சோறு கிடைக்கும் என நம்பி அந்தச் சுடுமணலிற் சுருண்டும், தவித்தும், துடித்தும், கிடந்தும், பார்த்தார். திருக்குறளாரைப் பார்த்தும் பாராதது போலப் பைபிளார் சோற்றை உண்டுகொண்டேயிருந்தார். ஒரே ஒரு உருண்டைதான் மீதியிருந்தது.
அதுவும் போய்விட்டால் ஆபத்தாகிவிடுமே! எனப் பயத்த பழனியப்பர், இன்னாசியாரின் எதிரில் உட்கார்ந்து,
- தன்னைப்போல் பிறரையும் நேசிப்பாயாக!
என்று கூறி, ஏசு பெருமான் கட்டளையை நினைவூட்டினார். என்ன செய்வார் இன்னாசியார்? அந்தச் சோற்றையும் அள்ளி வாயிற் போட்டுக்கொண்டு,
- பிறர்பொருளை இச்சியா திருப்பாயாக!
என்று கூறிவிட்டு, துண்டை உதறித் தோளிற் போட்டுக் கொண்டு போய்விட்டார்.
தனது சொல்லுக்கும் செயலுக்கும் திருக்குறளில் ஆதாரம் தேடி வைத்திருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்த திருக்குறளார். இன்னாசிமுத்து உபதேசியாரும் அப்படிப் பைபிளில் தேடி வைத்திருக்கிறார் என்பதைக் கண்டதும், வெட்கப்பட்டு விரைந்து சென்றார்.
கதை எப்படி? ‘நல்ல கதை? நகைச்சுவைக் கதை’ அப்படித்தானே? உங்களுக்குச் சிரிப்புக்கூட வந்திருக்கும் ஆம். கதை எழுதுவதும் சிரிக்கத்தான்! படிப்பதும் சிரிக்கத்தான்! ஏன் பத்திரிகைகளைச் சிலர் நடத்துவதுங் கூடச் சிரிக்கந்தான்! நம் நாட்டில் இருக்கிற துன்பங்களை, துயரங்களைச் சிரித்து ஆற்றுவது என்பது ஒரு வழி. அதைத்தவிர வேறு வழியில்லை என்பதைக் கண்ட பிறகுதான், சில பத்திரிகாசிரியர்கள் சிரிப்பாய்ச் சிரிக்கிற கதைகள் பலவற்றை எழுதி வெளியிட்டு வருகிறார்கள்.
கதையை அல்ல; கருத்தை உணருங்கள். கதையை நினைத்தால் சிரிப்புத்தான் வரும். கருத்தை நினைத்தால் கண்ணீரே வரும். இந்த உபதேசியாரைப் போலவும், பிரசங்கியாரைப் போலவும் எத்தனை மக்கள் இன்று நம் நாட்டில் இருந்து வருகின்றனர்! இத்தகைய மக்களின் வாழ்வு நமது நாட்டின் நலனுக்குக் கேடு தரும் அல்லவா அதனை எண்ணியே திருவள்ளுவர்,
கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்று கட்டளையிட்டிருக்கிறார்.
“படி! நன்றாகப்படி? படிக்க வேண்டியவைகளைப் படி? பிழையறப் படி படித்தபின் அதன்படி நடந்து ஒழுகு!” என்பதே இதன் கருத்து. எல்லாவற்றையும் கற்ற இந்த இருவரும் இதைக் கற்றவர்களா? கற்றிருந்தால் பிறருக்குப் போதிப்பவைகளில் சிலவற்றையாவது தங்கள் செயலில் காட்டியிருப்பார்கள் அல்லவா வள்ளுவர் இம்மட்டோடு நிற்கவில்வை. இத்தகைய இழிந்த மக்களைக்கண்டு வருந்திச் சிறிது அதிகமாகக் கடிந்துங் கூறி, நம்மை எச்சரிக்கையும் செய்கிறார்.
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு
என்று, “சொல் வேறு செயல் வேறுபட்டவர்களோடு தொடர்பு கொள்ளாதே! கொண்டிருந்தால் விழித் திருக்கும் போது மட்டுமல்ல; உறங்கும்போது மட்டுமல்ல; கனவிலுங் கூட அது உன்னைத் துன்புறுத்தும்” என்பது இதன் கருத்து.
பனைமரத்துப்பட்டிப் பரமசிவம் பிள்ளைக்கு இந்தக் கதை தெரிந்தது இன்னாசிமுத்து உபதேசியார் தன்னைக் காப்பாற்றாமல் காட்டாற்றில் தவிக்கவிட்ட செய்தியைப் பரவசிவம் பிள்ளையிடம் திருக்குறளார் கூறிவிட்டார். பரமசிவம் பிள்ளை மிகவும் வருந்தி, இச்செய்தியை ஈச்சம்பட்டிப் பாதிரியாருக்குத் தெரிவித்தார். ஈச்சம்பட்டிப் பாதிரியார் இன்னாசிமுத்து உபதேசியாருடன் பனைமரத்துப்பட்டி பரமசிவம் பிள்ளையிடம் வந்து நடந்ததை விசாரிக்கச் சொன்னார். அவர் தென்னை மரத்தடியில் பனைமரத்தளவு சோறு தந்த திருக்குறள் பிரசங்கியாரின் செயலைத் தெளிவாக எடுத்துக் கூறினார் உண்மைகள் விளங்கி விட்டன.
பரமசிவம் பிள்ளையும், பாதிரியாரும் ஒன்றுபட்டுத் தனித்தும் பேசினார்கள். இத்தகைய திருக்குறள் சொற்பொழிவாளர்களைக் கிராம மக்களிடம் தலைகாட்டவிடுவது நாட்டிற்கே கேடாகும் என்றார் பரமசிவம் பிள்ளை. இத்தகைய உபதேசியார்களை ஏசுபெருமான் மன்னிக்கவே மாட்டார் என்றார் பாதிரியார். கடைசியாக இருவரும் அவரவர்க்குரிய சம்பளத் தொகைகளை அவரவர்களிடம் கொடுத்து "மக்களைச் சீர்திருத்தியது போதும், இனி நீங்கள் உங்களையே சீர்திருத்திக் கொள்ளுங்கள்" என்று கூறி அனுப்பிவிட்டார்கள். கருத்தக் கலங்கினார் திருக்குறளார்: கண்கலங்கினார் இன்னாசியார் இருவரும் ஒன்றுகூடி வழி நடந்தார்கள். வரும் வழியில், “அண்ணே திருக்குறளில் எல்லாம் இருக்கிறது என்று அன்று கூறினீர்களே! நம்முடைய இந்த நிலைபற்றியும் அதில் ஏதும் இருக்கிறதா?” என்றார். உபதேசியார்.
“ஆம்” படித்தும், அறிந்தும், பிறர்க்கு உபதேசம் செய்தும், தான்மட்டும் அதன்படி நடந்தொழுகாத மூடனை விடச் சிறந்த மூடன் உலகத்தில் ஒருவனுமில்லை யென்று நன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது அண்ணே” என்றார் திருக்குறளார்.
“குறளைச் சொல்லமாட்டீர்களா?” என்றார் இன்னாசியார்.
“ஓதி உணர்ந்தும், பிறர்க் குரைத்தும், தானடங்காம் பேதையிற் பேதையாரில்” என்றார் பழனியப்பர்.
“அண்ணே! இதைக் காட்டாற்றங்கரையிலேயே நினைவூட்டக்கூடாதா?” என்றார் உபதேசியார்.
“தென்னைமரத்து நிழலிற்கூட, இது என் நினைவிற்கு வரவில்லையே! என் செய்வது?” என்றார் பிரசங்கியார்.
தம்பி! கட்டுரையைப் படித்தாயா? எப்படி இருக்கிறது? நன்றாயிருக்கிறது என்று நினைத்தாயா? இன்னும் நன்றாக எழுதலாமே என்று நினைக்கிறாயா? அதுதான் கூடாது. படிப்பது எழுதுவதற்காக என்றும், பேசுவதற்காக என்றும் நினைக்கிற நினைப்புத்தான் நம் நாட்டு மக்களைக் குட்டிச்சுவராக்கிவிட்டது. படிப்பது நடப்பதற்காக என்ற எண்ணம் நம் நாட்டில் வளர வேண்டும்! இன்றைக்கு நீயும் அந்த முடிவுக்குத்தான் வரவேண்டும்.
படி! நன்றாகப் படி பிழையறப் படி! எது நல்லது? என்று ஆராய்ந்து உணர்! நல்ல முடிவுக்கு வா! உடனே செய்! பிறரையும் செய்யச் சொல்! தீர ஆராய்ந்து சொல்! செய்வதற்காகச் செய்ய வேண்டியதைச் சொல். செய்து கொண்டே சொல்!
சொல்வேறு செயல்வேறு பட்டவர்களுடைய கூட்டுறவி லிருந்து விலகு; உடனே விலகு! ஏனெனில் அது நல்வாழ்விற்கு ஏறறதொரு நல்ல வழி!