திருக்குறள் செய்திகள்/124
தலைவி கூற்று
“மலர் போன்று இருந்த என் கண்கள் சருகுபோல் உலர்ந்துவிட்டன.”
“கண்களும் கவின் இழந்து பிரிவுத்துயரைக் காட்டிக் கொண்டு இருக்கின்றன.”
“மணந்த நாள் பருத்த என் தோள்கள் தணந்த நாள் இப்பொழுது சிறுத்துவிட்டன; அவை தன் வெறுமையை மற்றவர்க்கு உரைத்துக்கொண்டு இருக்கின்றன.”
“தோள்களில் உள்ள அழகு தொலைந்துவிட்டது; கைவளையல்களும் நெகிழத் தொடங்கிவிட்டன”.
“கவின் இழந்த தோளும், நெகிழ்ந்துவிட்ட வளையல்களும் என் துயரைத் தெரிவித்துக்கொண்டிருக்கின்றன.”
“வளை நெகிழ்வும் தோள் மெலிவும்பற்றிப் பிறர் என் தலைவனைப் பழிப்பது எனக்கு வருத்தம் தருகிறது.”
“நெஞ்சே! நீ என் தோள் மெலிவை எடுத்துக் கூறு: தலைவர் உன்னைப் பாராட்டிப் பெருமைப்படுத்துவார்; சொல்ல உனக்குச் செய்தி உள்ளது.”
தலைவன் கூற்று
“முயங்கிய என் கைகள் சிறிது தயங்கிய போது பசலை வந்து அவள் நெற்றியைச் சூழந்துகொண்டது.”
“காற்று இடைப்புகுந்து சிறிது எங்களை வேற்றுமைப் படுத்தியது; அப்பொழுதே என் தலைவியின் கண்கள் பசலை பூத்துவிட்டன.”
“நெற்றியில் வந்து ஒற்றிய பசலையைக் கண்டு கண் வருந்தித் தானும் பசந்துவிட்டது.”