திருக்குறள் செய்திகள்/130
“அவர் நெஞ்சு அவரைவிட்டு இங்குப் பாய்வ தில்லை; கட்டுக்குள் அடங்கி இருக்கிறது. நீ மட்டும் ஏன் சொன்ன பேச்சுக் கேட்கமாட்டேன் என்கிறாய்! இங்கேயே அடங்கி இரு என்றால் இருக்கமாட்டாய்; அவரை நாடிச் செல்கிறாய்.”
“அவர் நம்மிடம் அன்பு காட்டவில்லை; அழையாத வீட்டுக்குள் நீ ஏன் நுழைகிறாய்! விழைந்து உன்னை வரவேற்பார் என்று கருதிச் செல்கிறாய்; உன் முயற்சி வீண் முயற்சி ஆகும்.”
“கெட்டுப் போனவர்க்கு நண்பர்கள் உதவ வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையால் தனித்து இருக்கும் அவருக்குத் துணையாக நீ செல்ல நினைக்கிறாயா!”
“ஊடல் செய்து அவரிடம் ‘பிகு’ பண்ணிக்கொள்ள வேண்டும் என்று மன உறுதியோடு இருக்கும் என்னை மாற்றிவிடுகிறாய்; அவர் பக்கம் சாய்ந்துவிடுகிறாய்; நீ என் கட்சியைவிட்டு எதிர்கட்சியில் சேர்ந்துவிடுகிறாய்; உன்னை நம்பி உன்னோடு எதனையும் கலந்து ஆலோசிப்பதால் என்ன பயன்?”
“கவலைக்கே காவல் செய்யும் அவலநிலைக்கு நீ ஆளாகிறாய்; அவரை அடையாதபோது அதற்காகக் கவலைப்படுகிறாய். அடைந்த பிறகு அவர் பிரிந்துவிடக் கூடும் என்று அஞ்சுகிறாய்; உன்னை எப்படித் திருத்துவது என்பதே தெரியவில்லை?”
“என் தனிமையில் நீ எனக்குத் துணை இருப்பாய் என்று நினைத்தேன்; என்னைப் பிய்த்துத் தின்கிறாய் அவரை அடைய வேண்டும் என்று; நிம்மதியாக என்னை விட மறுக்கிறாய்.”
“அவரை மறக்க முடியாத பாழ் நெஞ்சோடு சேர்ந்து நான் என் நாணத்தையும் மறந்துவிட்டேன்; அதனைப் போலவே அவரிடம் தாவ விழைகின்றேன்.”
“காதலை உயிராக மதிக்கும் என் நெஞ்சு அவரை மறக்க முடியாமல் அவரையே நினைத்து வேதனைப் படுகிறது; இதனைத் தடுக்க முடியாது.”
“துன்பத்திற்கு யாரே துணையாக முடியும்? அவரவர் நெஞ்சுதான் உற்ற துணையாக இருந்து உதவ முடியும்!”
“நம் நெஞ்சமே தக்க துணையாக இல்லாதபோது அயலார் வந்து உதவுவார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?”