132. புலவி நுணுக்கம்
(ஊடல் நுட்பம்)

தலைவி கூற்று

“உன் மார்பினை ஏனைய மகளிரும் கண்ணில் கண்டு பொதுவாகச் சுவைக்கின்றனர்; அதனால் அது பரத்தமை பட்டுவிட்டது. அதனால் யான் தழுவ விழையவில்லை.”

“ஊடி இருந்தோம்; அப்பொழுது அவர் சற்றுத் தும்மினார்; நீடுவாழ்க என்று வாழ்த்தினேன்; என்னைப் பேச வைத்துவிட்டார். இஃது அவர் சூழ்ச்சி.”

தலைவன் கூற்று

“பூப்பறித்து வந்து அவள் கூந்தலில் சூட்டினாலும் புலப்பாள்; வேறு ஒருத்தியை மனத்தில் ஒப்புமை கொண்டு அழகை ரசிக்கிறேன் என்று கருதுகிறாள்.”

“மற்ற யாவரையும்விட உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். யாவரையும்விட என்று கூறி விட்டதால் அவள் உடனே ஊடல் கொண்டுவிட்டாள்; ஒப்புமைக்காகக்கூட மற்றொருத்தியைக் குறிப்பிட அவள் சம்மதிக்கவில்லை.”

“இந்த இப் பிறவியில் உன்னைப் பிரியமாட்டேன் என்று கூறினேன்; உடனே கண்களில் நீர் பெருக்கினாள். ‘அடுத்த பிறவி?’ என்பது அவள் வினா.”

“உன்னை நினைத்தேன்’ என்றேன்; மறந்தால்தானே நினைக்க வேண்டி வரும் என்று காரணம் காட்டிக் கலுழத் தொடங்கினாள்.”

“முன்னர்த் தும்மியபோது வாழ்த்தினாள்; அவ்வாறே வாழ்த்துவாள் என்று நினைத்துத் தும்மத் தொடங்கினேன். பிடித்துக்கொண்டாள்; யாரோ உம்மை நினைத்துக் கொள்கிறார்கள்; அதனால்தான் தும்மினிர் என்றாள்.”

“அவளிடத்தில் பணிந்து பேசி ஊடலைத் தணிவிக்க முயன்றேன்; ‘இப்படித் தானே மற்ற மகளிரிடமும் பணிவீர்’ என்று கூறிச் சினந்துகொண்டாள்; அதுவும் ஊடலுக்கு ஒரு காரணம் ஆகிவிட்டது.”

“அவளை நிதானித்து அழகை ரசித்தாலும் காய்கிறாள்; ‘யாரையோ மனத்தில் வைத்து ஒப்புமை காண்கிறீர்’ என்று குற்றம் காண்கிறாள்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/132&oldid=1107186" இலிருந்து மீள்விக்கப்பட்டது