திருக்குறள் செய்திகள்/17
அழுக்காறு என்பது பொறாமையைக் குறிக்கும் சொல்லாகும்; அது கூடாது என்பதே இங்குக் கூறப்படுகிறது; எதிர்மறைச் சொல்லாகும். பொறாமை என்பது பிறர் நன்கு வாழ்வதனைக் கண்டு மனம் அழுங்குதல்; அது கூடாது என்று அறிவிக்கவே அழுக்காறாமை என்ற தலைப்புத் தரப்பட்டுள்ளது.
பிறர் செல்வமும் நல்வாழ்வும் கண்டு நீ புழுங்கினால் உன் மனம் அழுக்குப் படிகிறது; வெளிச்சம் மறைந்து விடுகிறது. அதனால் நீ இருட்டில் தடுமாறுகிறாய்; உன் சொந்த முயற்சியும் குறைகிறது; மற்றவனைக் கெடுக்கும் தீய எண்ணங்களும் மலர்கின்றன. அத்தீயில் நீ கருகிவிட வாய்ப்பு உள்ளது.
அழுக்காறு அதனை உடையவனை அழித்துவிடும். காற்றும் மழையும் வந்தால் முன்னெச்சரிக்கையாகத் தடுத்து நிறுத்த முடியும்; படகு கவிழாது; நமக்குத் தெரியாமல் செல்லரித்துக்கொண்டே போனால் படகில் ஒட்டைவிழும்; அதனைக் கவனிக்கமாட்டார்கள்; வெளிப்பகையைத் தாக்குப் பிடிக்க முடியும்; உட்பகையைத் தடுத்து நிறுத்த முடியாது; பொறாமை உடையவர்க்கு அதுவே போதும் அதனை உடையவனை அழிக்க; வெளியே இருந்து பகைவர்கள் வரத்தேவை இல்லை.
அழுக்காறு உடையவன் பிறர் செல்வம் கண்டு புழுங்கிக் கொண்டே இருந்தால் அவன் தேறவே மாட்டான். வறுமை அவனை இறுகப் பற்றும்; அவன் சுற்றத்தவரும் அவனை நம்பி வாழ்பவரும் அவனோடு சேர்ந்து அழிந்துவிடுவர்.
அந்த வீடு சோம்பல் தங்கும் இடமாக மாறிவிடும்; தரித்திரம் தாண்டவம் ஆடும்; அங்குத் திருமகள் எட்டியும் பார்க்கமாட்டாள்; அவள் தமக்கை மூதேவியை அனுப்பி வைத்துவிட்டுத் தான் வெளியேறிவிடுவாள்; அவன் வாழ்க்கை பொலிவு இழந்துவிடும்.
அதே போலப் பொறாமை என்னும் பேய்க்கு இடம் கொடுத்தால் அது வீட்டில் உள்ள பொருள்களை எல்லாம் நாசம் செய்துவிடும்; அவனைத் தீய வழிகளில் கொண்டு சென்று அவனையும் அழித்துவிடும். அழுக்காறு என்னும் பேய் எந்தப் பாவமும் செய்யத் துணியும். பாவத்துக்குக் காரணமான இந்தப் பொறாமையை அகற்றுவதுதான் தக்க செயல் ஆகும்.
ஒருசிலர் பொறாமை உடையவர்கள் முன்னுக்கு வந்திருக்கலாம்; நேர்வழியில் வாழ்கிறவர் சரிந்தும் போய் இருக்கலாம். இவர்கள் எல்லாம் நமக்கு உதாரண புருஷர்கள் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. அவர்கள் விதிவிலக்குகள் என்று கொள்க. நேர்வழியும் விடாமுயற்சி யும் பொறாமை இன்மையும் ஒருவனை உயர்த்தும்; அவன் செல்வமும் நல்ல நிலையும் பெற்று உயர்வது உறுதி. அழுக்காறு உடையவன் வழுக்கி விழுவது உறுதி.