திருக்குறள் செய்திகள்/19
பிற அறங்களைக் கைவிடட்டும்; அறம் அல்லவையும் செய்யட்டும்; பிறனைப்பற்றி அவன் இல்லாதபோது அவனைப் பற்றிக் குறைகூறாமல் இருக்கட்டும்; அது போதும்.
அறத்தை அழித்துத் தீயவை செய்வதைவிட நேரில் பழகும்போது சிரித்துப் பேசிவிட்டு இல்லாத போது பழித்துக் கூறுதல் மிகவும் தீயது ஆகும். அவனைப்பற்றிக் குறைகூறாமல் இருக்கட்டும்; அது போதும். நட்புக்கே பொருள் இல்லாமல் போய்விடுகிறது.
அந்த நட்புப் பொய்யானதாகும்; புறங்கூறிப் பேசி விட்டு அவனை நேரில் காணும்போது பொய்யாக உறவாடுதல் கீழ்மையாகும்; அதனைவிடச் செத்துப் போகலாம்; தவறுகள் செய்யமாட்டான்.
நேரில் சந்திக்கும்போது கன்னத்தில் அறைந்தாற் போல நாலு சொல் சொல்லிக் கண்டித்துவிடு அது மேலானது ஆகும்; அவன் இல்லாதபோது அவனைப் பழித்துக் கூறாதே.
புறம்கூறி உன்னைத் தாழ்த்திக்கொண்டால் அறம் கூறும் நெஞ்சத்தன் அல்லன் என்று உன்னை இகழ்வார்கள்; நீ சொல்வதை யாரும் நம்பமாட்டார்கள்.
பிறன் குறையை அவன் இல்லாதபோது பேசிக் கொண்டே இருந்தால், அவனும் உன் குறைகளை அறிந்து வைத்து அவற்றைப் பலபேருக்கும் பரப்புவான். ஏன் இந்த வீண் வம்பு உனக்கு? சிரித்துப் பேசி நட்பை வளர்ப்பதை விட்டுப் பிரித்துப் பேசிப் பிளவை ஏற்படுத்துவது அறியாமையாகும்.
நெருங்கிப் பழகியவரிடத்தேயே குறைகளைக் கண்டு தூற்றும் ஒருவன் பழகாத புதுமையாளரோடு எவ்வாறு நடந்துகொள்வான்? அவனைக் கட்டுப்படுத்த முடியாது; உளறுவதே தொழிலாக்கிக் கொள்வான்.
புறங்கூறிப் பொய்த்து வாழ்பவனை அறம் நோக்கி இந்த மண் சுமக்கிறது என்றுதான் கூற முடியும். அது தன் கடமையைச் செய்கிறது. இவர்கள் வாழத் தகுதி உடையவர்கள் அல்லர்.
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை; பிறர் குற்றத்தை ஆராய்வதுபோல அவரவர் தம் குறைகளையும் எண்ணிப் பார்க்கவேண்டும்; குறையற்றவர் யாருமே இந்த மண்ணில் பிறக்க முடியாது என்பதை உணர்வர்.