திருக்குறள் செய்திகள்/34
நேற்று நன்றாகப் பேசிக்கொண்டிருந்தான்; இன்று அவனைத் தூக்கிச் செல்கிறார்கள்; சாவு வெற்றி முழக்கம் செய்கிறது. யார் எப்பொழுது சாவார்கள் என்று கூற முடியாது; அதே போலத்தான் செல்வமும். கண்முன் பார்க்கும் போதே ஈட்டி வைத்த செல்வம் இவனுக்குக் கைகாட்டி விடுதலை பெற்றுக்கொண்டு அவனைவிட்டு நீங்குகிறது. அவனாக அழித்தாலும் ஆச்சு; மற்றவர்கள் ஏமாற்றிச் சுழித்தாலும் போச்சு.
மனிதன் தான் நிலைத்து நீண்டகாலம் வாழப் போகிறோம்; நம்மிடம் செல்வம் நிலைத்து இருக்கும்; நாம் அனுபவித்து மகிழ்ச்சியோடு இருக்கலாம் என்று நினைப்பான். அஃது இயலாது; நிலையாமை என்ற கோட்பாடு நம் வாழ்வில் ஊடுருவி நிற்கிறது. நீயே கால மெல்லாம் கொடிகட்டிக் கொண்டு பறக்க முடியும் என்று கனவு காண்பது வீண்.
சரி, சாகப்போகிறோம்; நம் பொருளும் நம்மைக் கைவிட்டு விடும்; இனி நாம் என்ன செய்ய வேண்டும்? வாழ்நாளை நல்ல வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; வீண் படுத்தக் கூடாது. செல்வம் இருக்கும் போதே அறம் செய்ய வேண்டும்; அறச் செயல்களைச் செய்து முடிக்க வேண்டும். ஆயுள் என்பது இறைவன் தந்த வரம்; அதனை நன்கு பயன்படுத்துவதே நாம் மேற்கொள்ளும் தவம்; நாள் காட்டி ஏடுகளை கிழித்துக்கொண்டே போகிறோம்; எஞ்சி நிற்கப் போவது வெறும் அட்டைதான். நாள் அது நம் வாழ்நாளை அறுக்கும் வாள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
உயிருக்கும் உடம்புக்கும் உள்ள உறவு நிலைத்தது அன்று; கூட்டைவிட்டுப் பறவை எப்பொழுது வேண்டு மானாலும் பறந்துவிடும்; அவ்வளவுதான் உயிருக்கும் உடம்புக்கும் உள்ள உறவு. உயிர் போனால் இந்த உடம்பு வெறும் கூடுதான்; அதுவும் சுட்டு எரிக்கப்படுகிறது. விஞ்ஞானிகள் எத்தனையோ கண்டுபிடிப்புகள் செய்து வாழ்வை வாழத் தக்கதாக ஆக்கிவருகிறார்கள்; என்றாலும் உயிர் வாழ்வை அவர்கள் தரமுடிவதில்லை. செத்தவர் செத்தவர்தான்; உடம்பில் உயிரை நிறுத்தி வைக்கும் வித்தையை இதுவரை யாரும் கற்கவில்லை. சாவும் தூக்கம் போன்றதுதான்; தூக்கத்தில் மறுபடியும் எழுகிறோம். இதில் மறுபடியும் விழிப்புக் கிடையாது. வேறுபாடு, இவ்வளவுதான். நிலையான உறக்கமே சாவாகும்; எனினும் அந்த அனுபவத்தை நாளும் அறிந்துவருகிறோம். காலையில் விழிக்கிறோம்; மாலையில் கண் மூடுகிறோம். அவ்வளவுதான் மனிதனின் கதை.