திருக்குறள் செய்திகள்/41
கல்வி கல்லாத மூர்க்கரும் உலகில் உளர்; கண் விழித்துப் பார்க்காத குருடரும் உண்டு. கல்வி அறிவு பெற்றுத் திகழாதவர்கள் கல்லாதவர்கள் என்று பொதுவாகக் குறிப்பிடப்படுவார்கள்; இங்குக் கல்லாதவர்கள் என்பது எழுத்து அறிவு இல்லாதவர்களை அன்று. கற்ற கல்வியே போதும் என்று நூலறிவை மேலும் மேலும் பெருக்கிக் கொள்ளாதவரே கல்லாதவர் என்று குறிப்பிடப்படுகின்றனர். தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்க வேண்டும்; கற்றவர்முன் திறம்படப் பேசும் தகுதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
சூது ஆடச் சென்றாலும் அதற்கும் காயும் கவறும் வேண்டும்; ஆடுவதற்கு வட்டப் பலகையும் வேண்டும். அதே போலச் சபைக்குச் சென்று நாலுவார்த்தை பேச வேண்டுமென்றாலும் நூலறிவு வேண்டும்; படிக்காமல் எதனையும் பேசிவிடமுடியாது. கல்லாதவன் கற்றவர் மத்தியில் பேசத் தொடங்குவது பருவம் அடையாத இளம் பெண் ஆடவரைக் கவர நினைப்பது போன்றது ஆகும்.
நூல்களைக் கற்று அறிவை வளர்த்துக்கொள்ளாத ஒருவன், அறிவுள்ள கருத்துகள் ஒருசில வெளியிட முற்படலாம். அவை சரியானவை என்று பட்டாலும் அறிவுடையார் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; நூற் சான்றுகள் காட்டாமல் எதனைக் கூறினாலும் ஏற்க மாட்டார்கள். சட்டம் படிக்காமல் வழக்கு மன்றத்தில் வாதாட முடியாது; இயற்கை அறிவுமட்டும் போதாது; கல்வி அறிவு மிக்கு வேண்டும். அவர்களால்தாம் வாதங்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியும்; இல்லையென்றால் தோல்வியை அடைந்துவிடுவார்கள். இவர்கள் பேச்சுக்கும் விவாதத்துக்கும் ஈடுகொடுக்க இயலாது; வெறும் களர் நிலம் போல்வர் எனக் கருதப்படுவர்.
மேற்போக்காகக் கல்வி கற்று இருக்கலாம்; அதனால் ஒருவன் தன்னைக் கற்றவன் என்று கூறிக்கொள்ள முடியாது; மண்பொம்மை நிறம் தீட்டப்பெற்று இருக்கலாம்; அதனால் அதற்கு உயிர் உண்டு என்று கூறமுடியாது; அதனை வாரி எடுத்து அணைத்துக்கொள்ள முடியாது. நுண்மையான அறிவும், நிறைந்த புலமையும் உடையவரே கற்றார் எனப்படுவர்.
கல்விச் செல்வம் இருந்தால்தான் தற்காப்போடு வாழ முடியும்; வறுமை இருந்தாலும் செம்மையாக வாழ முடியும்; அதற்கும் கல்வி வேண்டும்; பொருட்செல்வம் இருந்தால் அதனைப் போற்றிக் காக்கவேண்டும்; ஞான சூனியராக இருந்தால் எளிதில் ஏமாற்றம் அடைந்துவிடுவர். நூல் பல கல்லாதவன் விலங்குகளுக்கு நிகரானவன்.