47. தெரிந்து செயல்வகை
(ஆராய்ந்து செய்யும் திறம்)

பெரியாரைத் துணைக்கொள்வதும் சிற்றினம் சேராமையும் அவரவர் தம் கடமைகளைச் செய்யவே ஆகும். தாம் மேற்கொண்ட செயல்களை எவ்வாறு திட்டமிட்டுச் செயல்படுத்துவது? அது தெரிந்து செயல்வகை எனப்படும். ஆராய்ந்து செயலில் ஈடுபடுதல் என்பது இத் தொடரின் பொருளாகும்.

ஒரு செயலைத் தொடங்குமுன் இதனால் ஆரம்பத்தில் நமக்கு ஏற்படும் இழப்பு யாது? ஆக்கம் யாது? என்று நிருணயிக்க வேண்டும். எந்தத் தொழிலும் தொடங்கும் போது அதிக இலாபம் எதிர்பார்க்க முடியாது. பின்னால் வரும் ஆதாயம் யாது என்பதையும் கணக்கில் இட வேண்டும்.

தொழில் தெரிந்த நண்பர் உதவியுடன் கலந்தாலோசித்து முடிவுசெய்ய வேண்டும்; அதனோடு நன்மை தீமைகளை ஆராய்ந்து செயலில் இறங்கவேண்டும். அவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.

இலாபம் வருகிறது என்று முதற்பொருளை இழக்கக் கூடிய செயல்களில் அறிவுடையவர் இறங்கமாட்டார்கள்; உறுதியாக நன்மை கிடைக்கும் என்று தெரிந்தால் அன்றி எந்தக் காரியத்திலும் இறங்கமாட்டார்கள்.

ஒரு செயலை எடுத்துக்கொண்டால் அதன் தன்மைகளை முழுவதும் ஆராய்ந்தே தொடங்க வேண்டும். சிறப்பாகப் போர்வினை தொடங்குவது என்றால் முன்கூட்டியே எல்லாவகையிலும் திட்டமிட வேண்டும். சேற்றில் காலை வைத்த பிறகு எடுக்க முடியாமல் திணற நேரிடும்.

ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குவார்; அது முற்றுப் பெற வேண்டிய அனைத்துச் செயல்களையும் விடாமல் செய்ய வேண்டும். செய்யத் தகாத முயற்சிகளைச் செய்தாலும் அது கெட்டுவிடும்; செய்ய வேண்டுவன செய்யாமையாலும் மேற்கொண்ட காரியம் பழுது ஆகிவிடும்.

ஒரு செயலை மேற்கொள்ளுமுன் நன்கு ஆராய்ந்து பின் தொடங்குவது என்று முடிவு செய்ய வேண்டும்; தொடங்கிய பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்பது கூடாது. திட்டமில்லாத எதுவும் வெற்றி பெறாது. தீர யோசித்தே ஒரு முடிவுக்கு வரவேண்டும். தொடங்கிவிட்டுப் பிறகு எப்படிச் செய்வது? இதனால் நன்மை உண்டாகுமா? என்று யோசித்துக் கொண்டிருப்பதனால் எந்தப் பயனும் விளையாது. எதனையும் முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டும்.

வழிவகை கண்டு தொடங்காத எந்த முயற்சியும் பலர் நின்று உதவினாலும் வெற்றி பெறாது; எடுக்கும் வினை வெற்றி பெறுமா? என்பதை எண்ணிப் பார்த்தே இறங்க வேண்டும்.

மேற்கொள்ளும் செயல் உன்னதமானதாக இருக்கலாம்; மிக நல்லதாகவும் இருக்கலாம்; வருவாய் தருவதாகவும் இருக்கலாம்; அதனை உடனிருந்து செய்பவர் எத்தகையவர் என்பதை ஒட்டியே அதில் வெற்றி அமையும். செய்பவரின் திறமை, பண்பு இவையும் அடிப்படை ஆகும்.

தனக்கு உகந்த தொழிலையே மேற்கொள்ள வேண்டும்; தொடர்பு இல்லாத தொழிலில் இறங்கினால் தோல்வியே ஏற்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/47&oldid=1106371" இலிருந்து மீள்விக்கப்பட்டது