திருக்குறள் செய்திகள்/50
எந்தத் தொழிலைச் செய்தாலும் அதன் வெற்றி, தேர்ந்து எடுக்கும் இடத்தை ஒட்டியே அமையும்.
வலிமை மிக்க படை இருந்தால் மட்டும் அரசர்க்கு அது வெற்றியைத் தந்துவிடாது. எந்த இடத்தில் இருந்து தாக்குவது தக்கது என்று முடிவு செய்துகொள்ள வேண்டும்.
அதே போலப் படை சிறிதாக இருந்தாலும் தற்காப்புக்கு இடம் தக்கதாக இருக்க வேண்டும். மதில்கள், அகழிகள் முதலியன தக்கபடி அமைத்துக்கொள்ள வேண்டும். இடம் தமக்குச் சாதகமாக இருந்தால் எளியவரும் வலியவரை வெற்றிகொள்ள முடியும்.
ஒவ்வொன்றுக்கும் ஓர் இடம் என்ற வரையறை உண்டு; நீரில் செல்ல வேண்டிய கப்பலை நிலத்தில் செலுத்த முடியாது; தேரைக் கடலில்விட்டுத் தெப்பத் திருவிழா நடத்த முடியாது; எலி வளைக்குள் யானை புக முடியாது; பெரிய படை இருந்தால் மட்டும் வெற்றி பெற்றுவிட முடியாது; இடத்துக்கு ஏற்ற வகையில் படை செயல்பட வேண்டும். நீரில் முதலை யானையையும் வெல்லும், தரையில் பிற விலங்குகள் அதனை வெல்லும். இடம் அறிந்து செயல்பட்டால் துணிவு ஒன்றே போதும்; மிக்க படை தேவையில்லை.
எதிரிக்கு மிக்க படைபலம் இல்லை என்றாலும் அவன் இடத்துக்குச் சென்று தாக்குவது தவறாக முடியும். அரசனுக்குத் தக்க பாதுகாப்பு, சொந்த இடத்தில் கிடைக்கும். எதிரி அங்குச் சென்றால் சோறு தண்ணிர் கூடக் கிடைக்காமல் போய்விடும்.
படைவீரனின் வேலுக்கு அஞ்சாத யானைகூடச் சேற்றில் அகப்பட்டுக்கொண்டால் சிறு நரிகளும் அதனைச் சூழ்ந்து கொன்றுவிடும்.
காலம், இடம் என்பவை புறப் பரிமாணங்கள்; அவற்றை அனுசரித்தே செயல்பட வேண்டும். சொந்த இடத்தில் எதனையும் சாதிக்க முடியும். பிழைப்புத் தேடி அந்நிய இடத்துக்கும் செல்ல நேரிடலாம்; அஃது ஒருவருக்குச் சாதகமாகவும் அமையலாம். எனவே எந்த இடமும் அவரவர் மேற்கொள்ளும் செயலுக்கு உகந்ததா என்பதை ஆராய்ந்து தெளிந்து செயல்பட வேண்டும்.