52. தெரிந்து வினையாடல்
(ஆராய்ந்து செயற்படுதல்)


பந்தாடச் சென்றாலும் அதனை உதைக்கத் தெரிந்திருந்தால் மட்டும் போதாது; விதிமுறைகளுக்கு உட்பட வேண்டும். அப்பொழுதுதான் அதனை ஆட்டம் என்று கூறுவர். அதனைக் கோட்டத்திற்குள் போடவேண்டும்; அப்போதுதான் அவன் வெற்றியடைந்தான் என்று ஆகும்.

நீ தேர்ந்து எடுத்துக்கொள்ளும் வினையும் அத்தகையதே. தொடங்கிவிட்டால் போதாது; அதனைச் செம்மையாகச் செயல்படுத்த வேண்டும். ‘எங்கள் வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்’ என்று ஒரு தொழிலைத் தொடங்கிவிட்டு அங்குப் போய்க்கொண்டு இருந்தால் போதாது.

இதனை இப்பொழுது எடுத்துச் செய்தால் அதற்கு விற்பனைச் சந்தை இருக்கிறதா? விற்பனை ஆகுமா? போட்டியில் வெல்ல முடியுமா? தொழிலாளர் கிடைப்பார்களா? கருவிகள் அமையுமா? தொழில் தொடங்கும் இடம் சரிதானா? என்று எல்லாம் கவனித்துச் செய்ய வேண்டும். இலாபம் கருதி அதனை அடைய முடியாமல் முதல் இழக்கும் வினையை யாரும் செய்ய மாட்டார்கள்.


இந்தத் தொழிலைச் செய்வதற்கு நீ தேர்ந்து எடுக்கும் ஆள், அவன் தகுதிகள், யோக்கியதை எல்லாம் ஆராய்ந்து தக்கவனைப் பணிசெய்யத் தேர்ந்து எடுக்க வேண்டும்.

அடிப்படையில் அவன் அன்பாகப் பழகுகிறானா? மற்றவர்களை வெறுக்காமல் நடந்துகொள்வானா? மனித நேயம் உடையவனா? ‘சிடுசிடு’ என்று இல்லாமல் சுமுகமாகப் பழகுவானா? இவற்றை அறிக.

அவன் தொழில்அறிவு உடையவனா? பொது அறிவும் உள்ளவனா? புத்திசாலியாகச் செயலாற்றுவானா? தெளிவான மனநிலை உள்ளவனா? பதற்றம் இல்லாமல் எதையும் செய்வானா? என்பனவற்றையும் கவனிக்கவும்.

தொழிலில் தேர்ந்த ஞானம் உள்ளதா? அதன் நுட்பங்களை அறிவானா? பழுதுபட்டால் அவற்றைச் சீர்செய்து கொள்ளும் திறமை உள்ளதா? என்பதனையும் ஆராய்க.

தொழில்மேல் கவனம் இல்லாமல் பேராசை கொண்டு சதா நச்சரிப்பானா? சுருட்டுவானா? பண ஆசை மிகுதியாக உடையவனா? இவை எல்லாம் பார்க்கவும்.

மற்றொன்று; ருசி கண்ட பூனை திருடாமல் இருக்காது. வந்து உள்ளே புகுந்தபின் நெளிவுசுளிவுகளை அறிந்து மெல்லச் சுருட்டத் தொடங்குவதும் செய்வான். அவன் நிலையாகத் தவறு செய்யாமல் இருக்கிறானா? சந்தர்ப்பங்களில் கெடுகிறானா? கவனிக்கவும்.

அவன் தனிப்பட்ட முறையில் விற்பன்னனாக இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட தொழில் செய்வதற்கு அவனுக்குத் திறமை உள்ளதா? கவனிக்கவும்.

மூன்று முனைகள் சந்தித்தால்தான் முக்கோணம் ஏற்படும். தொழில், காலம், ஆள் மூன்றும் பொருத்தமாக இருந்தால்தான் தொழில் செம்மை பெறும்.

‘இன்னான் இன்ன தொழில் செய்வதற்குத் தகுதி’ என்று ஆராய்ந்து அதனை அவனிடம் ஒப்படைப்பது தக்கது ஆகும். அதற்குப் பிறகு அவனைச் சந்தேகிக்காதே.

தொழிலாளி அடிக்கடி வந்து காசு கேட்பான்; பெண்டாட்டிக்குப் பிரசவம் என்பான்; “அதனால் உனக்கு என்ன? “ என்று கேட்டுக்கொண்டு இராதே; பணம் கொடுத்து உதவி செய்க. அவன் வீட்டில் நிம்மதி இருந்தால் தான் மனம் ஒன்றி வேலை செய்வான்; அவன் நன்மை உன் நன்மை எனக் கருதுக; உயர்வு தாழ்வு கருதாதே; அவனை நன்கு அறிந்து பழகுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/52&oldid=1106380" இலிருந்து மீள்விக்கப்பட்டது